அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஆங்கிலம் இருந்த இடத்தில் இந்தியாம்!

ஆங்கிலேயர்கள் நூற்றைம்பது ஆண்டு களுக்கு மேலாகவே நம் நாட்டை ஆண்டார்கள் என்றால், நாட்டை மட்டும் அவர்கள் ஆள வில்லை. நம்மையும் ஆண்டார்கள் என்று கூறும்போது, ஒரு நாட்டை ஆள்பவர்கள் என்றால்- அந்நாட்டு மக்களை ஆள்பவர்கள் என்றுதானே பொருள். இதில், நாட்டை ஆண்டார்கள்- நம்மையும் ஆண்டார்கள் என்று பிரித்துக் கூறுவதில் என்ன பொருள் இருக்கிறது என்று சிலர் நினைக்கக் கூடும். இந்த நினைப்பைச் சிலர் கொள்வதற்குக் காரணமாக இருந்ததும் ஆங்கில ஆட்சி முறைதான். நாம், நம்மை ஆள்வதற்கும், பிறர் நம்மை ஆள்வதற்கும் இடையே உள்ள வேறுபாட்டைக் கூட நம்மிற் பலரால் அறிந்து கொள்ள முடியாத அளவுக்கு ஆங்கில ஆட்சி முறை நம்மை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. சுருங்கச் சொன்னால் ஏற்படும் நலன்கள் ஆள்பவர்களுக்கா, அல்லது ஆளப்படுபவர்களுக்கா என்பதைக் கூடப் பலரால் அறிந்து கொள்ள முடியாதபடி ஆங்கி லேயர் தங்கள் ஆட்சி முறையை அழகாக அமைத்துக் கொண்டிருந்தனர்.

ஆங்கிலேயர் மட்டும் நம்மை ஆள வில்லை. அவர்களுடைய மொழியும் நம்மை ஆண்டது- ஆண்டு கொண்டிருக்கிறது- இன்னும் ஆளும்- ஆள வேண்டும்- ஆளத்தான் போகிறது என்று ஆங்கிலேயர்களை விரட்டிய வர்களே துணிந்து கூறும் அளவுக்கு ஆங்கில மொழி இங்கே இடம் பெற்று வேரூன்றி விட்டது. அடுப்பங்கரையில் இருந்து அரச மன்றம் வரை ஆங்கில மொழி இங்கு ஆட்சி புரிகின்றது. ஆங்கில அரிச்சுவடி தெரியாதவர்களைக் கூட அது அடிமைப்படுத்தி விட்டது. பட்டணங்களில் இருப்பவர்களை மட்டுமல்ல, பட்டிக்காடுகளில் இருப்பவர்களைக்கூட ஆங்கிலம் தன்வயப் படுத்தி விட்டது. புகைவண்டி நிலையம் என்றால் அதன் பொருள் அறியாத பலருக்கு, ரயில்வே ஸ்டேஷன் என்றால் என்ன என்பது நன்கு தெரியும். இவ்வாறே, டிரைவர், கண்டக்டர், கார்ட், டிக்கெட் கலெக்டர், டிக்கட், எஞ்சின், கார், பஸ், சைக்கிள், ஏரோப்ளேன், ரிக்ஷா, பென்சில், பேப்பர், சிலேட், நீட், லேட், மிஸ்டேக், பிஸ்கட், மார்க்கெட், ரோட், லயிட், ஷாப், டீ, காப்பி, ஐஸ், லெமினட், கிரஷ், ஆரஞ்சு, சோடா, மேச், சிக்கரெட், ஆபீஸ், பியோன், மாஸ்டர், கிளார்க், ராஸ்கல், சோப், மெஷின், டெயிலர், கிளப், ரேஸ், கவர், கார்ட், போர்ட்,ஸ்டாம்ப், இங்க், சினிமா, டிராமா, சர்க்கஸ், சேர், பெஞ்ச், கோர்ட், போலீஸ், ஜட்ஜ், இன்ஸ்பெக்டர், சர்க்கிள், கோட், ஷர்ட், பாடி, ஜாக்கெட் சொற்கள் ஆங்கிலம் படித்த வர்களால் மட்டும் கையாளப்படுகின்றன என்று எண்ணி விட வேண்டாம். ஆங்கிலம் என்றால் என்ன? அதற்கு எத்தனை எழுத்துக்கள்? அது யாரால் பேசப்படுவது? எங்குப் பேசப்படுவது என்பன போன்ற உண்மைகளைக் கூட அறி யாத- எழுத்தறிவற்ற மக்களால் குற்றால நீர் வீழ்ச்சி போலத் தங்கு தடையின்றி கையாளப் படும் சொற்கள். இவர்களுக்கு இந்தச் சொற்களை எந்தக் கணக்காயரும் (உபாத்தியாயரும்) கற்றுக் கொடுக்கவில்லை. இவர்கள் இந்தச் சொற்களைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்பியது மில்லை. இவர்களுக்கே கூடத் தெரியாது. இந்தச் சொற்களை நாம் எப்படித் தெரிந்து கொண்டோம்- இவை எங்களுடைய மொழியா அல்லது பிறர் மொழியா என்பன போன்ற உண்மைகள் இவர்களாவது அறியாமையின் காரணமாக- அயலானுக்கு அடிமைப்பட்டதன் காரணமாக- இந்தச் சொற்களைக் கையாளும் இரங்கத்தக்க நிலைக்கு ஆளானார்கள் என்று கூறலாம். ஆனால், தங்கள் சொந்த மொழியோடு ஆங்கில மும் கற்றுத் தெளிந்தவர்கள்- அறியாமையை அகல விரட்டியவர்கள்- தாங்கள் பிறருக்கும், பிறர் மொழிக்கும் அடிமையாகவே இருக்கிறோம் என்பதை உணர்ந்தார்கள்- அப்படிப்பட்டவர்கள் பேசுவதைப் பார்த்தால் மிக மிக வேடிக்கையாக இருக்கும்.

``என்ன சார், இன்னிக்கு என்னமோ ரொம்ப டல்லாய் இருக்கு. உவைவ்விடம் ஒரு கப் காப்பி காட்டாய்ப் போடச் சொல்லிச் சாப்பிட்டுப் பார்த்தேன், அதில்கூட ஒண்ணும் பெட்டர் ஆகவில்லை. பெட்டிலே போய்ப் படுத்துப் பார்த்தேன். ஏதேதோ தாட்ஸ் வந்து பிரெயினைக் குழப்பிக்கொண்டே இருக்கிறது. கொஞ்சம் வென்டிலேஷனாவது வரட்டும் என்று நெனைச்சு வெளியே வந்து வராண்டாவிலே உக்காந்தேன். அன் எக்ஸ்பெக்டட்லி யூ கேம், வர்ரீங்களா சார், ஏதாவது சினிமா, டிராமாவுக்காவது போய் அப்படி ஜாலியாய் வரலாம். கொஞ்சம் ரிக்ரியேஷனாவது உண்டாகும், அல்லது கார்ட் பிளே பண்ணலாமா? உங்களுக்கு என்ன பிளே சார் தெரியும்? எனக்கு திறீ அண்ட்றட்டன் போர் தெரியும். டிக்கிளேர் ஆடுவதில் நான்தான் எக்ஸ்பர்ட் என்று என்னுடைய பிரெண்ட்ஸ் சொல்லுவாங்க. ஆனா, எனக்கு பிரிட்ஜ் பிளே பண்ணுவதிலேதான் ரொம்ப டேஸ்ட். பை- தி- பை, ஐ எண்டயர்லி பார்காட்டூ டெல் யூ உவண் இம்பார்ட்ண்ட் மேட்டர், நேற்று, கெட் ஆல் தி டிப்பார்ட்மெண் டில் இருந்து எனக்கு ஒரு லெட்டர் வந்திருக் கிறது. அதில் என்னை இங்கிருந்து ட்ரான்ஸ்பர் செய்யப்போவதாக எழுதப்பட்டிருக்கிறது. என்னுடைய பொஸ்ஸிஷன்தான் உங்களுக்குத் தெரியுமே. வீட்டிலே உவைவ் பிரக்னைண்ட், பாதர் பெட்லேயே கிடக்கிறார். எல்டஸ்ட் சன்னை டூ வீக்ஸ்க்கு முந்தித்தான் யாராரையோ பிடித்து கெஞ்சிக் கூத்தாடிக் காலேஜில் அட்மிட் செய்தேன். செகண்ட் டாட்டருக்கு நெக்ஸ்ட் மந்தில் மேரீஜ்க்கு ஏற்பாடு செய்து விட்டேன். பாமிலி ட்ரபிள்கள் ஒண்ணுக்கு மேல் ஒண்ணு வந்து கொண்டே இருக்கிறது. அட் திஸ் ஸ்டேஜ், ஐ ரிசீவ்ட் எ லெட்டர, தட் ஐ வில் டிரான்ஸ்வேட், வாட் கேன் ஐ டு? நீங்களே சொல்லுங்க சார்?''

என்று இவ்விதமாக இருக்கும் இவர்களில் பெரும்பாலோர், தாங்கள் ஆங்கிலம் படித்திருக் கும் காரணத்தாலேயே வேண்டுமென்றே இவ் விதம் பேசுவதில்லை. அவர்களையும் அறியாம லேயே சிற்சில ஆங்கிலச் சொற்களும், சொற் றொடர்களும் அவர்களுடைய தாய்மொழியோடு அழைப்பின்றி நுழைந்து, சேர்ந்து விடுகின்றன. இன்னும் சிலர் இருக்கிறார்கள். தாங்கள் பேசும் மொழியோடு ஆங்கிலத்தையும் சேர்த்துப் பேசினால்தான் பெருமை- மதிப்பு என்று எண்ணு பவர்கள். என்னுடைய நண்பர் ஒருவர்- நிறைந்த செல்வம் உள்ளவர்- ஆங்கிலம் தெரியாது என்ற போதிலும், எப்பொழுதும் அவர் கையில் ஏதாவதொரு ஆங்கிலச் செய்தித்தாள் இருக்கும்- அதைப் படிப்பதாகவும் பாவனை செய்து கொள்வார். அவர் ஒரு மர வணிகர். ஒரு சமயம் அவருக்கு ஒரு தந்தி வந்தது. அப்பொழுது நானும் கூட இருந்தேன் அந்தத் தந்தியில்.

``பர்மாவில் இருக்கும் அவருடைய மகன் இறந்துவிட்டார்'' என்று இருந்தது. ஆனால், தந்தியைப் பிரித்துப் பார்த்ததும் என்னுடைய நண்பர் என்ன சொன்னார் தெரியுமா?

பர்மாவில் இருந்து ஒரு கப்பலில் தேக்கு மரம் வருவதாக தந்தி வந்திருக்கிறதென்று கூட இருந்தவர்களிடம் கூறியதோடு மட்டும் நின்று விடாமல், தம்முடைய ஆட்கள் சிலரை கூப்பிட்டு, தேக்கு மரங்களை இறக்குவதற்குரிய ஏற்பாடு களைச் செய்யும்படியும் சொன்னார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்குத் தூக்கிவாரிப் போட்டது போல் ஆகிவிட்டது. இவருக்குத்தான் ஆங்கிலம் தெரியாதே! இவர் எப்படித் தந்தியைப் படித்தார் என்ற எண்ணம் எனக்கு. எண்ணிய தோடு மட்டும் நான் நிற்கவில்லை. ``ஆங்கிலம் படியாமலேயே தந்தியைப் படித்துத் தெரிந்து கொள்ளக்கூடிய அளவு ஆங்கிலத்தில் பயிற்சி பெற்று விட்டீர்களே!'' என்று நட்பு முறையில் நயமாகவே கேட்டேன். அதற்கு அவர், ``ஏதோ தாங்கள் போன்ற ஆங்கிலம் தெரிந்தவர்களின் நட்பினாலும் ஆசிர்வாதத்தினாலும் கொஞ்சம் தெரிந்துகொண்டேன்'' என்றார். நானும் அவர் கூறியதை உண்மை என்றே நம்பினேன். இரண்டு நாட்கள் கழித்து அவர் வீட்டில் பலர் கூடி அழுவது கேட்டது. ஏன் அழுகிறார்கள் என்பது பின்னர் தெரியவந்தது. என்னுடைய நண்பரின் இளையமகன் (பள்ளி மாணவன்) தந்தையின் சட்டைப் பையில் ஏதாவது சில்லறை இருக்குமா என்று தேடியபோது, பர்மாவில் இருந்து வந்த தந்தியைப் பார்த்துவிட்டான். அதில், அவனுடைய அண்ணன் பர்மாவில் இறந்துவிட்டதாகக் காணப் பட்டது. உடனே அவன் அன்னையிடம் ஓடி, அண்ணன் இறந்துவிட்ட செய்தியைக் கூறி ஐயோ என அழுதான்- அன்னையும் அலறி அழுதாள்- அங்கிருந்த அனைவரும் அழுதனர். அப்பொழுது வெளியே சென்றிருந்த என் நண்பர் அங்கு வந்தார். அவருடைய இளைய மகன் ஓடோடிச் சென்று தந்தையிடம் தந்தியைக் காண்பித்து, ``அப்பா! என் அருமை அண்ணன் இறந்துவிட்டார் என்று தந்தி வந்திருக்கிறதே! அதை எங்களிடம் சொல்லவில்லையே!'' என்று சோர்ந்து விழுந்து புரண்டழுதான். இதைக் கேட்ட தந்தை திடுக்கிட்டு, மறுவினாடி சமாளித்துக் கொண்டு, ``அடே, கண்ணே நீயுமா அந்தத் தந்தியைப் பார்த்துவிட்டாய்? நான் அதைப் பார்த்தவுடனே என் நெஞ்சு வெடித்துவிடும் போல் இருந்ததடா! இந்தக் கொடுமையை வீட்டில் எப்படிக் கூறுவது? அன்னையின் அடி வயிறு பற்றி எரியுமே! உன்னுடைய இள உள்ளம் பாகாய் உருகிவிடுமே! என்றெண்ணி, என்ன செய்வ தென்று தெரியாது, அங்குமிங்கும் அலைந்து, திரிந்து கொண்டிருந்தேனடா கண்ணே'' என்று கூறிக்கொண்டு, அவரும் அங்கிருந்தவர்களுடன் சேர்ந்து அழத் தொடங்கினார். இந்நிகழ்ச்சி கட்டுக் கதையல்ல. இருபதாண்டுகளுக்கு முன் மாதம்பை என்ற இடத்தில் என்னுடைய நண்பர் ஒருவர் வீட்டில் நடந்த உண்மை நிகழ்ச்சியாகும்.

இந்நிகழ்ச்சி கற்பிக்கும் பாடம் என்ன? பிறமொழிக்கு ஒருவன் அடிமையானதால், அவனுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட பேரிடி போன்ற துன்பத்தையும் சாதாரணமாகக் கருதும் அளவுக்கு அறியாமையும், தெரியாத ஒன்றைத் தெரிந்ததுபோல் பாசாங்கு செய்யும் ஆண வத்தையும் அன்றோ இந்நிகழ்ச்சி புடம் போட்டுக் காட்டுகின்றது. இது எதனால் ஏற்பட்டது? ஒரு மொழிக்கு, அளவுக்கு மீறிய செல்வாக்கும், மதிப்பும் உண்டாகி, அதனைக் கையாள்வது ஒரு தனிப்பட்ட- சிறந்த பெருமை என்ற தவறான- தகுதியற்ற எண்ணம் நமக்கு ஏற்படுத்தப்பட்ட தாலன்றோ இந்த நிலை ஏற்பட்டது.

இனி, ஆங்கிலேயருக்கும், அவர் தம் மொழிக்கும் நாம் அடிமைப்பட்டதோடு மட்டும் இந்தக் கொடுமை நிற்கவில்லை. அவர்களுடைய கலாச்சார- பழக்க வழக்கங்களும் நம்மை ஓரளவுக்கு அடிமை கொண்டுவிட்டது என்பது வெட்கத்துடனும், துக்கத்துடனும் குறிப்பிட வேண்டிய ஒன்றாகும். இன்று நம்மவரிற் சிலர், தங்கள் கலாச்சார- பழக்க வழக்கங்கள் அனைத் தையுமே கைவிட்டு ஆங்கில முறையையே பின்பற்றி நடப்பது கண்கூடு. நடை, உடையில் காற்சட்டையும், தொப்பியும், டையும், சாப்பாட்டில் கத்தியும், முள்ளும், கரண்டியும், கோப்பையும், மேசையும், நாற்காலியும் இன்னும் இவை போன்ற பல தமிழரின் கலாச்சார- பழக்க வழக்கங் களுக்கு முற்றிலும் புறம்பான முறைகளையே நம்மவரிற் சிலர் விடாப்பிடியாகக் கொண்டுள்ளனர்!

இனி, ஆங்கில மொழிக்கு, நாம் அடிமை யானதற்குக் காரணம் அதனுடைய சிறப்பை எண்ணியல்ல, அதன் செல்வாக்கை எண்ணிய நாம் அதற்கு அடிமையானோம். அதன் சிறப்பை யும், அம்மொழியின் வாயிலாகப் பிறந்த அறிவு நுட்பங்களையும் நாம் எண்ணி அதற்கு உண்மை யாகவே அடிமைப்பட்டிருந்தோமானால், இன்று நம்முடைய வீடுகளில் அகல் விளக்கும், கலப்பை யும், கட்டை வண்டியும் இராது. ஆங்கிலம் நம்மை ஆளும் மொழி, நம் அடிமைப் பிழைப்புக்கு ஆதரவாய் நிற்கும் மொழி என்ற அளவோடு நாம் நின்றுவிட்டதாலேயே - நிற்கும்படி செய்து விடப்பட்டதாலேயே நாம் ஆங்கில மொழியால் பெறக்கூடிய- பெற வேண்டிய நன்மைகளைப் பெறாமல் வறிதே அதற்கு அடிமையானோம்.

நாம் ஆங்கிலத்தைப் பொதுமொழியாகக் கொண்டதைப் போலவே, வேறு பல நாடுகளிலும் அது பொது மொழியாக வைத்து வழங்கப் படுகின்றது. ஆனால் நமக்கும் அவர்களுக்கு முள்ள வேறுபாடு மிகப் பெரியது. எடுத்துக் காட்டாக, அமெரிக்காவில் ஆங்கிலம் கையாளப் படுவதற்கும், நாம் அதனைக் கையாள்வதற்கும் உள்ள வேறுபாடு மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாட்டைவிட மிகப் பெரியதாகும். அமெரிக் கர்கள், தாங்களும் ஆங்கிலேயரின் இனம்தான் என்பதற்காக மட்டும் ஆங்கிலத்தைக் கையாள் வதில்லை. ஆங்கிலமொழி, அமெரிக்க மக்களின் அடிப்படைக் கலாச்சாரத்தை விளக்குவதில் இருந்து, அணுக்குண்டு செய்வது வரை உதவி செய்கின்றதென்ற காரணத்தாலேயே, அங்கு அது. அவர்களின் சொந்த மொழியாகக் கருதப் படுகின்றது. ஆனால், இங்கு நாம் அதனை அரை வயிறு கஞ்சியாவது வளர்க்காதா என்று கேவல மான காரணத்துடனே தான் அம்மொழியைக் கற்றுக் கொண்டோம்- அதற்கு அடிமையா னோம். எனவேதான் நாம், ஆங்கிலேயர்களால் ஆளப்பட்டோம்- அவர்களுடைய மொழியால் ஆளப்பட்டோம்- அவர்களுடைய கலாச்சார- பழக்க வழக்கங்களால் ஆளப்பட்டோம் என்று கூறுகின்றேன்.

ஆங்கிலேயரின் ஆட்சி முறை நம் நாட்டை விட்டு விரட்டப்பட்ட இன்றைய நிலை யில், அவர்களின் ஆட்சி முறையைப் பற்றியும், மொழியைப் பற்றியும், கலாச்சார பழக்க வழக்கங்களைப் பற்றியும் ஏன் இப்பொழுது குறிப்பிடுகிறோம் என்றால், இந்த நிலைமையை அண்மையில் சென்னைக்கு வந்து போன பண்டித நேரு அவர்கள் உண்டாக்கிவிட்டார். எப்படி யென்றால், அவர் இந்திமொழியைப் பற்றிப் பேசியபொழுது,

``ஆங்கிலம் இவ்வளவு காலமும் நமது பொதுமொழியாக இருந்தது. இப் போது ஆங்கிலம் இருந்த இடத்தில் இந்தி பொது மொழியாக இருக்க வேண்டு மென்று விரும்புகிறோம்.''

என்று கூறியுள்ளார். எனவே, ஆங்கிலம் இருந்த இடத்தில் இந்தி இருக்க வேண்டும் என்று கூறும் பண்டிதர் அவர்கள் எந்தப் பீடத்தில் இருந்து கொண்டு இதனைக் கூறுகிறார்? ஆங்கிலேயர் கள் தங்கள் மொழியை நாம் கற்றுக் கொள்ள வேண்டுமென்று எந்தப் பீடத்தில் இருந்து கொண்டு கூறினர்? ஆங்கிலேயர்கள், தாங்க ளாகவே ஏற்படுத்திக் கொண்ட எதேச்சாதிகார பீடத்தில் இருந்துகொண்டு, ஆங்கிலம் கற்றால் உங்களுக்கு வேலை தரப்படும்- இல்லையேல் வேலை கிடையாதென்று கூறினர். ஆனால், பண்டிதர் வீற்றிருக்கும் பீடம், அவர் தானாகவே ஏற்படுத்திக் கொண்டதல்லவே! மக்களன்றோ அவருக்கு அந்தப் பீடத்தை ஏற்படுத்தித் தந்தனர். மக்களின் பீடத்தில் அமர்ந்திருக்கும் ஒருவர். மக்களின் விருப்பப்படியும், அவர்களின் தேவைக்கேற்பவும் காரியங்களை நடத்தாமல், பழைய எதேச்சாதிகார முறையில், நாங்கள் சொல்கிறோம்- நீங்கள் கேளுங்கள்- நாங்கள் சொல்கிறபடி தான் நீங்கள் நடக்க வேண்டும்'' என்றா கூறுவது? இதற்காகவா இவர்கள் எதேச் சதிகார ஆட்சியை முறியடித்து மக்கள் ஆட்சியை ஏற்படுத்திக் கொண்டது? ஆங்கி லேயன் ஆங்கிலத்தைக் கற்கச் சொன்னான். நாங்கள் ஆங்கிலத்துக்குப் பதில் இந்தியைக் கற்கச் சொல்கிறோம் என்று கூறுவதில் ஜனநாயகம் என்ற மக்களாட்சி முறை எங்கே எந்த வடிவத்தில் எந்தத் தன்மையில் காட்சி யளிக்கிறதென்று கேட்கிறேன்.

இனி, ஆங்கிலத்துக்குப் பதில் இந்தியைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்று கூறிய பண்டி தரே மேலும் கூறியுள்ளார். ஆங்கிலம் இங்கு இருக்கும்- இங்கு இருக்க வேண்டும்- இங்கிருந்து போகாது என்று. இது மட்டுமல்ல அவர் கூறியது. ``ஆங்கிலத்தோடு பிரஞ்சு, ஜெர்மன், ஜப்பான், சீனம் முதலான மொழிகளை யும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்'' என்றும் கூறியிருக்கிறார். பண்டிதர் அவர்கள் கூறும் வெளிநாட்டு மொழிகளின் பயிற்சி, நாம் அந்நாட் டவரோடு வியாபாரத் துறையில் தொடர்பு வைத்துக் கொள்வதற்கு ஒரு வேளை தேவைப் படலாம். அதுவும், அந்தத் துறையில் ஈடுபடுபவர் களுக்கு மட்டும் அம்மொழி தேவைப்படலாம். மற்றவர்களுக்கு, அவை அறிவுத் துறைக்கன்றி வேறு வகையில் தேவைப்படா. ஆனால், இந்தியை நாம் அனைவரும் கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டுமென்று பண்டிதர் அவர்கள் கூறுவது எதறக்hக என்பதுதான் விளங்கவில்லை. என்றாலும் அவர் ஒரு காரணம் கூறுகின்றார். அதாவது, இந்நாட்டு மக்கள் அனைவரும் ஒருவரோடொருவர் தொடர்பு வைத்துக் கொள் வதற்கு ஒரு பொது மொழி வேண்டும்- அதற்கு இந்தியே உகந்தது என்று.

இந்தி ஒன்றுதான் இந்நாட்டுக்குப் பொது மொழியாக இருக்க உகந்தது என்று கூறப்படு வதில் உண்மை எதுவும் இல்லை என்பதை மொழித் துறையில் ஆராய்ச்சி செய்த அறிஞர்கள் எல்லாருமே கூறிவிட்டனர். அது மட்டுமல்ல, இந்திய, இந்துஸ்தானியா இந்நாட்டுப் பொது மொழி என்பதில் அவர்களுக்குள்ளேயே இருந்து வரும் சச்சரவு இன்னும் தீர்ந்தபாடில்லை. பண்டித நேரு அவர்கள், இந்துஸ்தானிதான் பொது மொழி என்று கூறுகிறார். அவருடைய நண்பர்களும், மத்திய சட்டசபை உறுப்பினர்களுமான சிலர், இந்திதான் பொது மொழியாக இருக்க முடியு மென்றும், இந்துஸ்தானி அதற்கு அருகதையற்ற தென்றும் கூறி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஆனால், இத்துறையில் நாம் ஆராய்ச்சி எதுவும் செய்ய வேண்டியதில்லை. காரணம், நமக்கு இந்தியும் உடன்பாடல்ல, இந்துஸ்தானியும் உடன்பாடல்ல என்பதுதான் என்றாலும் இங்கு ஒன்றை மட்டும் குறிப்பிடாமல் இருக்க முடிய வில்லை. அதாவது, இந்நாட்டுக்கு ஒரு பொது மொழி தேவை என்று கூறுபவர்களுக்கிடையே, அதற்கு உகந்தது இந்திதானா? அல்லது இந்துஸ் தானிதானா என்பது முடிவு செய்யப்படுவதற்கு முன்னரேயே, நமது மாகாணக் கல்வி அமைச்சர் இந்தியை இங்குக் கட்டாயப் பாடமாக்கி விட்டார். இங்குக் கட்டாயப் பாடமாக்கப்பட்டிருக்கும் மொழி பண்டித நேரு அவர்கள் கூறும் இந்துஸ் தானிதானா? அல்லது அவருடைய நண்பர்கள் கூறும் இந்திதானா? என்பது தெரியவில்லை. இந்த இரண்டில் எதனைக் கட்டாயப் பாடமாக்கி இருக்கிறோம் என்பது கல்வி அமைச்சருக்கே கூடத் தெரியாது.

அதுமட்டுமல்ல, இங்குக் கற்றுக் கொடுக் கப்படும் `பொது மொழி' இந்துஸ்தானியா அல்லது இந்திதானா என்பது அதனைக் கற்றுக் கொடுக் கும் ஆசிரியருக்கோ கற்றுக் கொள்ளும் மாண வர்களுக்கோ கூடத் தெரியாதென்றே நினைக்கி றேன். அவ்வளவு குழப்பம் இந்தப் பொது மொழியைப் பற்றி, ஒரு பொதுமொழி தேவை என்று சொல்லிக் கொள்பவர்களுக்கிடையே இருக்கிறது. இந்தக் குழப்பம் தெளிவடையும் என்று கூடச் சொல்வதற்கில்லை. காரணம், இந்தி- இந்துஸ்தானி என்ற குழப்பம், வடநாட்டில் ஏற்பட்டுள்ள வகுப்பு வேற்றுமை காரணமாக உண்டாக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதனைப் பண்டித நேரு அவர்களே தம்முடைய சென்னைச் சொற்பொழிவில் சாடையாகக் குறிப்பிட்டுமுள்ளார்.

இந்தக் குழப்பமான நிலையில், நமது கல்வியமைச்சர் இங்கு இந்தியையோ இந்து ஸ்தானியையோ கட்டாயப் பாடமாக்கியது எப்படி யிருக்கிறதென்றால், ஒரு பெண்ணுக்கு மாப் பிள்ளை தேடியவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுத்தவர் களுக்கிடையே தங்கள் பெண்ணுக்குத் தேர்ந் தெடுத்த இருவரில் யாரை மணம் முடித்து வைப்பதென்ற முடிவு ஏற்படவில்லை. பெண்ணுக்கு நெருங்கிய சொந்தக்காரராகத் தம்மை உரிமை பாராட்டிக் கொள்பவர் ஒரு மாப்பிள்ளையைக் குறிப்பிடுகிறார். ஆனால் அவருடைய உறவினர்கள் இன்னொரு மாப் பிள்ளையைக் குறிப்பிடுகின்றனர். இந்த நிலை யில் மேற்சொன்ன இரு சாராருக்கும் தாம் நண்பர் என்று கூறிக் கொள்ளும் ஒருவர். அவ்விரு சாராராலும் தாம் நண்பர் என்று கூறிக் கொள்ளும் ஒருவர். அவ்விரு சாராராலும் தேர்ந்தெடுக்கப் பட்ட இரண்டு மாப்பிள்ளைகளும், அழகிலும், குணத்திலும், வடிவத்திலும் வேறுபாடு காண முடியாமல் இருந்ததால், அந்த இருவரில் ஒருவரை, `இவன்தான் இவளுக்கேற்ற மாப் பிள்ளை'யென்று கூறி மணம் முடித்து வைத்து விடுகிறார். இப்படி நடைபெறும் ஒரு புதுமையான நிகழ்ச்சிக்கும், இப்போது நமது கல்வியமைச்சர், செய்திருக்கும் பொது மொழிக் கட்டாயக் கல்விக்கும் யாதாயினும் வேறுபாடு காண முடியுமா? பொதுமொழிப் பிரியர்களே! பொது அறிவைச் சிறிது பயன்படுத்திக் கூறுங்கள்.

இனிப் பண்டிதர் அவர்கள், இந்நாட்டு மக்கள் ஒருவரோடொருவர் தொடர்பு வைத்துக் கொள்வதற்காகவே ஒரு பொதுமொழி வேண்டு மென்று கூறுகின்றோம் என்பதிலும் ஒரு சிறிதும் உண்மையாயிருப்பதாகத் தெரியவில்லை. எப்படியென்றால், பொதுமொழி ஒன்று அனை வருக்கும் வேண்டப்படாமலேயே இந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள பலதிறப்பட்ட மொழிகளைப் பேசும் மக்கள் பன்னெடுங் காலமாகவே ஒருவரோடொருவர் தொடர்பு வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சென்னை நகரிலுள்ள சவுக்கார்ப்பேட்டையிலும், பிற இடங்களிலும் இருக்கும் வடவர்கள்- மார்வாடிகள் தமிழ்நாட்டுக்கு வருமுன், இந்நாட்டு மொழியான தமிழைக் கற்றுக் கொண்டா வந்தனர்? அல்லது இங்கிருந்து ஐதிராப்பாக்கம், பாம்பே, பூனா முதலான இடங்களுக்குப் போய் அங்கு வாணிபம் செய்யும் தமிழ் மக்களாவது அந்தந்த நாட்டுமொழிகளைக் கற்றுத் தெரிந்து கொண்ட பின்னரா அங்குப் போனார்கள்?

கல்கத்தாவில் இருந்து வந்த தோழர் சவுத்ரி என்ற வடகாளி ஒருவர்தான் காஞ்சிபுரத்தில் மின்சார இலாக்காத் தலைவராக இருக்கிறார். இவர் இங்கு பேசப்படும் தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டு வரவில்லை. ஆனால், இங்குள்ள தமிழ் மக்களோடு தொடர்பு வைத்துக் கொண்டுதான் இருக்கிறார். இதுபோலவே, கல்கத்தா, டில்லி முதலான இடங்களுக்குச் சென்று அரசாங்க அலுவல்களில் சில தமிழ் மக்கள் (பல பார்ப்பனர்கள் உள்பட) அமர்ந் திருக்கின்றனர். இவர்களும் இங்கிருந்து போவ தற்கு முன் இந்தி கற்றுக் கொண்டு போகவில்லை. ஆனால் இவர்கள் அங்குள்ள இந்தி பேசுவோ ரோடும், வங்காளி பேசுவோரோடும் நல்ல விதமான தொடர்பு வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவ்வாறு, வாணிக (வியாபாரத்) துறையிலும், அரசியல் அலுவல் (உத்தியோகத்) துறையிலும் இந்நாட்டு மக்கள் அனைவரும், ஒரு பொதுமொழியின் இன்றியமையாமை இல்லாம லேயே ஒருவருக்கொருவர் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கின்றனர். எனவே, இந்நாட்டு மக்கள் அனைவரும் ஒருவரோடொருவர் தொடர்பு வைத்துக் கொள்வதற்கு ஒரு பொது மொழி வேண்டுமென்று பண்டித நேரு அவர்கள் கூறுவதில் பொருளே இல்லை.

இந்த நிலையில் இன்னொரு உண்மையை யும் இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். அதாவது இப்போது, தென்னாட்டவருக்கும் வட நாட்ட வருக்கும் இருந்து வரும் தொடர்பு இனி அறுபட வேண்டுமென்ற முறையில் நாட்டுப் பிரிவினை யின் இன்றியமையாமை வற்புறுத்தப்பட்டு, அத்திட்டம் நடைமுறைக்கு வரவேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டும் வருகின் றன. எனவே, இந்த நிலை ஏற்படும்போது- ஏற்பட்டே தீரும், அப்போது, இப்போதிருக்கும் அளவு வடநாட்டுத் - தென்னாட்டுத் தொடர்பு இருக்க முடியாது. பண்டிட் விஜயலட்சுமி அம்மையார் ரஷ்யாவில் இருப்பதுபோல்- தோழர் கிரி அவர்கள் இலங்கையில் இருப்பது போல், இரண்டொருவர், வடநாட்டிலுள்ளவர்கள் இங்கும், தென்னாட்டிலுள்ளவர்கள் அங்கும் இருக்கும் நிலைமைதான் ஏற்படும். ஆகையால், இதற்காக இந்நாட்டவர் அனைவரும் ஒரு பொது மொழியைக் கற்றுக் கொள்ளத்தான் வேண்டு மென்று பண்டிதர் அவர்கள் கூறுவதிலும் பொருள் இல்லை.

இனி, அறிவுத் துறைக்காக இந்தியோ அல்லது இந்துஸ்தானியோ படிக்க வேண்டு மென்று கூறவும் முடியாது. ஏனென்றால், இம்மொழிகளுக்கு இலக்கியச் சிறப்போ, இலக்கண அமைப்போ இல்லை என்று இம் மொழிகளைக் கற்க வேண்டுமென்று வற்புறுத்திக் கூறும் பண்டிதர் அவர்களும் மற்றும் அவரு டைய நண்பர்களுமே உறுதியாகக் கூறி விட்டனர்.

எனவேதான், ஆங்கிலம் இருந்த இடத்தில் இந்தி மொழியை உட்கார வைப்பது உண்மை யான ஜனநாயக அடிப்படையில் செய்யப்படும் காரியமல்லவென்றும், இங்ஙனம் செய்வது ஆங்கிலேயர்களின் தன் முனைப்பு ஆட்சியை விட மிகவும் ஆணவ பலம் வாய்ந்த சுயநல ஆட்சியென்றும் கூறுவதுடன், தமிழ்நாட்டில் இந்தியோ அல்லது இந்துஸ்தானியோ புகுத்தப் படுவது அடாத- தேவையற்ற காரியம் என்றும், மீறிப் புகுத்தினால் எதிர்ப்பதென்றும் முடிவு செய்து, அம்முடிவை 10-8-48ல் இருந்து நடைமுறைக்குக் கொண்டு வருவதென்றும் தீர்மானித்து, அதன்படி காரியங்கள் நடைபெற்று வருகின்றன என்பதைத் தெரிவித்துக் கொள் கிறேன்.
(திராவிட நாடு - 8.8.48)