அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஆர்.கே.எஸ். மறைவு!

நாட்டின் பொருளாதாரச் சீர்கேட்டை நன்குணரவும், அதற்கேற்பப் பொருளாதாரச் சீர்குலைவைச் செம்மைப்படுத்தவும் வல்லவராய் விளங்கிய ஒரு அரசியலறிஞரை நாடு இழந்துவிட்டது டாக்டர் ஆர்.கே.சண்முகம் அவர்கள் இரத்தக் கொதிப்பினாலும் இருதயக் கோளாறினாலும், 5-5-53ல் கோயமுத்தூரிலுள்ள அவரது இல்லத்தில் 61வது வயதில் இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி கேட்டதும், எவருக்கும், அதாவது அரசியல் தொடர்புள்ள அனைவருக்கும் நாம் மேலே குறிப்பிட்டிருக்கும் சொற்றொடர்கள்தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவர் அரசியர் உலகிலே – பொருளாதாரத்துறையிலே வல்லுநராய் இருந்தார். பல இடங்களில் அவருடைய சேவை, நல்ல பயனை அளித்திருக்கிறது என்று கூறுவது, மிகையாகாது.

எதிர்க்கட்சிக்காரர்கள்கூட அவருடைய அறிவைக் கடன் வாங்கிக் கொள்ளுமளவுக்குத் திறமைசாலியாக இருந்தார். ஆங்கிலேயர் ஆட்சி முடிந்து, வடவரின் ஆட்சி, அதாவது காங்கிரசாட்சி இவ்வுப கண்டத்தில் ஏற்பட்டதும், காங்கிரஸ்காரர்கள், அரசியல் அனுபவமும் திறமையும் இல்லாத காரணத்தால், அதில் திறமைசாலிகளாக இருந்த பல எதிர்க்கட்சிகாரர்களைக் கடன்வாங்கி அரசியலமைப்பை வகுத்தார்கள் அப்படிக் கடன் வாங்கப்பட்டவர்களில் ஆர்.கே. சண்முகம் அவர்களும் ஒருவர்.

டில்லி அரசாங்கத்தின் நிதி அமைச்சகத்தில் மறைந்த டாக்டர் சண்முகம் அவர்களும், சட்ட அமைச்சராக டாக்டர் அம்பேத்கார் அவர்களும் சிலகாலம் பணியாற்றி உதவி புரிந்துள்ளார்கள். பின்னர் அவர்கள் இருவருமே காங்கிரஸ் அரசாங்கத்தின் பதவிப் பிடியிலிருந்து விலகிக் கொண்டார்கள்.

மறைந்த தோழர் சண்முகம் அவர்களின் அரசியல் பொருளாதார அறிவு கடல்கடந்து செல்லுமளவுக்குத் திறமையுடையதாக இருந்தது. ஓட்டாவா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் முதலான இடங்களுக்கு டாக்டர் சண்முகம் அவர்கள் பொருளாதார நிபுணர் என்ற முறையில் அனுப்பப்பட்டு, வெற்றி கண்டார்.

கொச்சியில் அவர் திவானாக இருந்தபோது, அவரால் செய்யப்பட்ட பல காரியங்களை இன்னும் கொச்சியிலுள்ள மக்கள் பாராட்டுகின்றனர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அவருடைய அரசியலறிவு கிடைக்கும் வாய்ப்பு அவ்வளவாக ஏற்படவில்லை என்ற போதிலும், தமிழ் மக்கள் அவரை எப்போதும் பாராட்டிப் புகழ்ந்தே வந்திருக்கிறார்கள். அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டதும், தமிழகம், தான் பெற்றெடுத்த ஒரு அரசியலறிஞரை இழந்தவிட்டதே என்ற ஏக்கம் எம்மையெல்லாம் கப்பிக் கொண்டு துன்பத்திலாழ்த்திற்று.

அவரது பிரிவால் வருந்தும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், நமது ஆழ்ந்த ஆறுதல் மொழிகளை உரித்தாக்குகிறோம்.

திராவிட நாடு – 10-5-53