அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஆரியக் கடவுள்கட்கு ஓர் அறைகூவல்!

மூவரே! தேவரே! சூரியசந்திராதியரே! இந்திரனே, வாயு வருண அக்னியாதிகளே! கந்தா, விநாயகா! காளி! வீரபத்திரா! நாரதா! மற்றுமுள்ள ஆரியக் கடவுள்களே! உங்கள் அனைவரையும், சுயமரியாதைக்காரர்கள், கண்டிக்கிறார்கள், மூடமதியிலே முளைத்த காளான்கள் என்று கூறுகின்றனர், ஆரியருக்காக கற்பிக்கப்பட்ட கரையான்கள் என்று செப்புகின்றனர், மக்களுக்குள் பேதத்தையும் பிளவையும் உண்டாக்கி, ஓர் இனம் உண்டு கொழுத்து ஊராள உற்பத்தி செய்யப்பட்ட உதவாக்கரை கருத்தோவியங்கள், என்று உங்கள் அனைவரையும் உரைக்கின்றனர்.
உங்களுக்கும் உக்கிரம் பிறக்கக்கூடுமானால், ஓடி வாருங்கள் பூலோகத்துக்கு, காளைமீது ஏற, கருடனைத் தேடு, அன்னத்தை நாடு, மயிலைப்பிடி, காக்கையைக் கூப்பிடு, என்று உங்கள் ஒவ்வொருவருக்கும் உள்ள வாகனாதிகளை வர்ணிக்க இங்கு காகிதாதிகள் இல்லை. ஆகவே, தத்தம் வாகனமேறி தயக்கமின்றி வாருங்கள்! பாருங்கள், அசாமிலே குண்டு விழுந்து விட்டது! நீங்களோ, நெருப்பைக் கக்கும் கண், நீண்ட சூலம், சக்கரம், கதை தண்டம், வாளாயுதம் வேலாயுதமாகிய ஏதேதோ தாங்கி நிற்பதாக ஏடுகள் கூறுகின்றன. எடுங்கள் உமது ஆயுதத்தை, விடுங்கள் ஜப்பானியர் மீது! ஆமாம்! பிரிட்டிஷாருக்கும், அமெரிக்கருக்கும், சீனருக்கும், இந்நாட்டுச் சேனையினருக்கும், ஏன் வீண் சிரமம், கிளம்பி வாருங்கள், வானவீதியிலே நின்று உமது ஓங்காரக் கூச்சலைக் கிளப்புங்கள், ஓட்டுங்கள், வேட்டுக்காரரை!

இல்லையேல், பிரிட்டிஷ் அமெரிக்க சீன, இஸ்லாமிய, திராவிட நாட்டவரின் வேட்டுகள் வேலைசெய்து, அதன்பின்னர் விரோதி ஓடிய பிறகு, நீங்கள், அதிர்வேட்டு கிளப்பு, அக்கார வடிசல் போடு, ஆடும் அணங்குகளைக் கொண்டுவா, ஆறுகால பூசையைச் செய்து வா, ஆனைவாகன உற்சவம் செய், ஆபரணாதிகளைப் பூட்டு, என்று மட்டும் கேட்டு, ஆரியரை எதிரிகளை ஓட்ட என்ற அவசரத் தபாலை எழுதி, தரலோகம், பிரம்மலோகம், இந்திர லோகம், கைலாயம், வைகுண்டம் என்ற விலாசமிட்டு தபால்களிலே சுயமரியாதைக்காரர்கள் போட்டால், இப்படி ஊர்களும் இல்லை, பேர்களும் கிடையாது என்று போஸ்ட் மாஸ்டர் கூறி, குப்பையில் போட்டார் கடிதத்தை. ஆனால் குளித்து முடித்ததுமோ, குளத்தங்கரைக்குப் போகும்போதோ, குளிக்கும் முன்போ, குடல்சரியத் தின்றபிறகு “சம்போ மகாதேவா! முருகா! விநாயகா!” என்று அவரே அழைக்க அப்படி ஓர் ஆசாமியும் இல்லை, இருப்பதாகக் கூறப்படுவதும் கிடையாது என்பது அறியாமையா? என்று சுயமரியாதைக் காரன் கேட்பல் வேதசாஸ்திர இதிகாசங்கள், படித்துவாழும் வேதியக்கூட்டம் என்ன பதில் கூறும்?
(திராவிடநாடு - 8.11.1942)