அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஆர்ப்பரிப்பு - கடைசிக்கட்டம்!
ஆர்ப்பரிப்பு - கடைசிக்கட்டம்!
வாள் இல்லையா - எடுத்து வீசு!
வேல் கொண்டு குத்து!
தடிகொண்டு தாக்கு!
நெருப்பிலே பிடித்துத்தள்ளு!
மலைமீதிருந்து கீழே உருட்டு!
நஞ்சுகொடு, பருகட்டும்!
நாகத்தைவிடு, கடிக்கட்டும்!
தேர்ச் சக்கரத்தின் கீழே தள்ளு!
கண்ணைத் தோண்டி ஏடு!
கைகால்களை ஓடித்துப்போடு!
நாக்கை அறுத்தெடுத்துவிடு!

ஆதிக்காரன், ஆத்திரமேலிட்டு தன் நிலையைக் குலைக்கும் விதமானதோர் புதிய சக்தியை, புரட்சிச் சக்தியை மூட்டிவிடத் துணிபவரைக் கண், வெகுண்டு வறிய சுடு சொற்கள், மேலே, பொறிந்துள்ளவை. புதிய சக்தி, முழு உருவெடுத்தால், தன் ஆதிக்கம் அழிந்துபடுமே என்ற அச்சம், இத்தகைய ஆர்ப்பரிப்பைக் கிளம்பிவிடுகிறது. என்ன மறையைக் கையாண்டாகிலும், எவ்விதமான கொடுமையைச் செய்தாகிலும், அரும்பும் புதிய சக்தியை அழித்திட வேண்டும் என்ற எண்ணம், வெறி அளவுக்கு ஏற்படுகிறது. பகை படமெடுத்தாடுகிறது! பழி பாவத்துக்கு அஞ்சாது, எதைச் செய்தேனும், தன் ஆதிக்கத்தைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் பிறந், ஆதிக்கக்காரனை, ஆட்டிப்படைக்கிறது. அவன், குருவாக இருப்பினும் சரி, கோல் கொண்டோனாக இருப்பினும் சரி, பணந்தேடியாக இருப்பினும் சரி, எந்த வகையான ஆதிக்கம் பெற்றவனாயினும், வேறோர் சக்தி கிளம்புகிறது, தன் ஆதிக்கத்தை அழிக்க என்று தோன்றியதும், முறைகளைப் பற்றித் துளியும் யோசியாமல் எதிர்ப்பை அழித்தே தீருவது என்று துணிந்து, இழிசெயலோ இம்சையோ, எதைச் செய்தேனும், வெற்றிபெற வேண்டும் என்பதிலேயே, முனைந்து நிற்கிறான். சாது, முரடனாவான்! பூனை, புலியாகும்!
****

துவக்கத்திலே, துரைத்தனம் நடத்துபவன், தன்னை எதிர்க்கும் துணிவு யாருக்குமே ஏற்படாது என்று ஆணவமாகவே எண்ணுவது வாடிக்கை. பிறகோ, அவன் செவிக்கு அங்கு கொஞ்சம் இங்கு கொஞ்சமாகக் கிளம்பும் எதிர்ப்பொலி வந்து சேரும் - அலட்சியமாக இருப்பான். தன் வீரப்பிரதாபங்களையும், வெற்றிச் சிந்துகளையும், எரே முழக்கிக் கொண்டிருக்கும் போது, இந்த அற்ப எதிர்ப்பொலி, என்ன பலன் தரப்போகிறது. என்றே, எண்ணுவான். ஆணவத்துடன், உறவு கொண்டாட வரும், அலட்சியபுத்தி, எதிர்ப்பொலி, தானாக மங்கி மடிந்துபோகும் கவனிப்பாரற்று என்று கருதுவான். ஆதிக்கக்காரன் விழாக்களிலும், விருந்துகளிலும், கூட்டுத்தோழர்களுக்குப் பரிவு காட்டுவதிலும், குளிர் மொழி பேசுவோரிடம் குலவுவதிலும், காலங் கழித்தவண்ணம் இருக்கும்போது, எங்கோ கிளம்பிய எதிர்ப்பு, அங்கிங்கெனாதபடி எங்கும் பரவி, அரண்மனையின் ஆனந்த அமளிச் சத்தத்தையும் அடக்கிவிடும் அளவுக்கு வளரும். அலட்சியம் மடியும், ஆத்திரம் பிறக்கும் - குறும்புச் சிரிப்பு மறையும், கொக்கரிப்பு ஆரம்பமாகும். புருவத்தை நெரிப்பான் - பற்களை நறநறவெனக் கடிப்பான் - ஐனோ தானோவென்று இருந்துவிட்டோமட், நாம் கவனியாமிலிருந்து விட்டதால், எதிர்ப்பு வளர்ந்துவிட்டது, முளையிலேயே கிள்ளி எறிந்திருக்கவேண்டும் - செய்தோமில்லை - ஆயினும் என்ன, நமது சக்திக்கு முன்பு, இந்த எதிர்ப்பு எம்மாத்திரம்! ஒரு விநாடியிலேயே இதனை நசுக்கிப் பொசுக்கி, கருக்கிவிட முடியாதா என்ன! - என்று ஆர்ப்பரிப்பான் - அந்த ஆர்ப்பரிப்பு, தன்னை ஆடுத்து வாழ்வோர், ஆண்டிப் பிழைப்போர், ஏடுபிடி ஏவலர், பல்லிளித்துப் பவிஷ÷ பெறுவோர், பாதந்தாங்கிகள் பாராக்குக் கூறுவோர் ஆகிய கூட்டத்தாருக்குத் தைரியம் எட்டப் பயன்படும் ஆர்ப்பரிக்கும் ஆதிக்காரனுக்கு ஆண்டிப் பிழைக்கும் கூட்டம், தூபமிடும் - எதிர்ப்பை ஒரு நொடியிலே அடக்கிவிடும் ஆற்றல் உமக்குண்டு, அதற்கான அருந்திறன் கொண்ட ஆட்களும் கருவிகளும் உண்டு, ஐயனே! அவைகளை ஏவி, எதிர்ப்பை ஒழித்துக் கட்டுக! எமது உள்ளத்தைக் குளிரச் செய்க! என்று கூறுவர் - ஆதிக்கக்காரன், கட்டவிழ்த்து விடுவான், அடக்குமுறையை - தாக்குதல் ஆரம்பமாகும் - ஆனால், எதிர்ப்பு, நேர்மையாகவும் நீதிக்காகவும், மக்களின் நலனையே குறிக்கோளாகக் கொண்டதாகவும் இருப்பின், அடக்குமுறை ஓங்க ஓங்க, எதிர்ப்புச் சக்தியும் ஓங்கும்! ஒரு நொடியிலே அடக்கி விடலாம் என்ற பேச்சு, கவைக்குதவாததாகி விடும். அடக்குமுறை கூர்மழுங்கும் இவ்வளவு எதிர்ப்பு இருக்குமென்று ஆதிக்காரனை. இந்த ஆயுதம் பயன்படுமா, வேறு தேவையா, இம்முறையில் தாக்குவது பயனளிக்குமா, வேறுமுறை வகுக்கவேண்டுமா, என்றெல்லாம், பாசறையிலே பேச்சுக் கிளம்பும். ஆணவம், அலட்சியம், ஆர்ப்பரிப்பு, அடக்குமுறை, ஆயாசம், ஆகிய கட்டங்களைத் தாண்டி, ஆதிக்கக்காரன், அச்சம் எனும் கட்டம் வந்துசேருவான்.அதுபோதுதான், வாள், வேல், தடி, நஞ்சு, நாகம், நெருப்பு, என்று பலப்பல கொடுமைக் கருவிகளைத் தேடுவான் - தன் ஆதிக்கத்தைக் காப்பாற்றிக் கொள்ள, கடுமையான நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்ற நிலைமைக்கு வந்து சேருவான் - அவனியிலே, பல்வேறு நாட்டு வரலாற்றுகளிலே காணப்படும் பாடம், அவனுக்கு அப்போது புரிவதில்லை, அவன் அறிவதில்லை, தான், கடைசிக் கட்டத்திலே வந்துநிற்கிற உண்மையை! அலட்சியப் படுத்தப்பட வேண்டியதாக ஒரு காலத்திலே தோன்றிய எதிர்ப்பு, இன்று, தன்னிடமுள்ள அடக்குமுறைச் சாதனங்கள் அனைத்தையும் வீசியும் கூட, ஆணையாக பெருநெருப்பாக, மாறிவிட்டதைக் கண்டு, கலக்கமடைகிறான் - கலக்கம், அவனுடைய கருத்தை மேலும் குழுப்புகிறது - காட்டிலுலவும் மிருகமாகிறான்.

மக்களாட்சி முறை மலராமுன்னம் ஆதிக்கக்காரர்கள் நாம், முதலிலே, குறிப்பிட்ட கருவிகளைக் கொண்டே, எதிர்ப்பை ஒழிக்க முனைவர் - கடைசி நேரத்தில், மக்களாட்சி மலர்ந்தபிறகோ, வாள், வேல், கொண்டு தாக்குவது, நெருப்பில் தள்ளுவது, யானைக்காலில் போடுவது போன்ற முறைகளுக்குப் பதிலாக, பல்வேறு, விதமாகவும் வகையாகவும் குற்றங்களை வகுத்து, இன்னின்ன வகையான குற்றத்துக்கு, இன்னின்ன விதமான தண்டனை என்று குறித்திருக்கும், சட்டம், ஏற்பட்டது. இந்த சட்டம் தூக்குத்தண்டனை முதற்கொண்டு, சிறு தொகை அபராதம் கட்டுவது வரையிலே, வழிவகை செய்து தந்திருக்கிறது எனினும், நாம், மேலே குறிக்கோளாகக் கொண்ட எதிர்ப்பு சக்தித இந்தச் சட்டம் தரும். சவுக்கடியைப் பொருட்படுத்தாமல், வளர ஆரம்பிக்கிறது. ஆதிக்காரர், அச்சம்கொண்டு, எதிர்ப்பைக் கருவறுக்க, புதுப்புதுச் சட்டங்கûப் போடவும், புதியவிதமான தண்டனைகளைக் கண்டு சேர்க்கவும், முனைகிறார். வெள்ளம் வந்த பிறகு, ஆணைபோடும் திட்டம் போலாகிறது. இந்த முயற்சி, அடக்குமுறையை அவிழ்த்துவிட்டுப் பார்த்துச் சலித்தப்போகும் நிலை பிறக்கிறது. வேட்டை நாய்கள், குடலலுத்துத் திரும்புகின்றன. முயலோ, தப்பிவிடுகிறது! வல்லூறு இறகொடிந்து கீழே விழுகிறது, சிட்டுகள், பறந்து போய் விடுகின்றன! - என்பதுபோல, எதிர்ப்புச் சக்தியின் மீது, ஏவப்படும், கருவிகள், எதிர்பார்த்த பலனைத் தராமல், போய்விடுகின்றன! மமதை மடிந்து, மருட்சி மூண்டுவிடுகிறது. ஆதிக்கக்காரர் மனதில்.
****

இம்முறையிலே, உலகவரலாற்றிலே எண்ணற்ற போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. மதங்கள் ஒன்றோடொன்று போட்டியிட்டு, நெருப்பையும் புகையையும் கக்கின! மண்டலங்களுக்குள்ளே மாச்சரியங்கள், மூண்டு, கொடுமைகள் தலைவிரித்தாடின! அரசுமுறையிலே மாற்றம் காண்பதற்கான போராட்டங்கள், அறிவுத்துறையிலே, பழைய கோட்பாடுகளை நீக்கிப் புதுக்கோட்பாடுகளைப் புகுத்துவதற்கான முயற்சியின் போது மூண்டுவிடுகிற போராட்டங்ள், எனும் பல்வேறு வகையான சமயங்களின் போதும், ஆதிக்ககாரர்கள், எதிர்ப்புச் சக்தியினரை ஒழிக்க, எண்ணற்ற ஆயுதங்களை உபயோகித்தனர் - புதிய ஆயுதஙக்ளைக் கூட உண்டாக்கினர். எனினும் சூதுமதியினரும் சுரண்டிப் பிழைப்போரும், சுகவாழ்வுக்காகப் பிறரைக் கசக்கிப் பிழிவோரும், ஜாதி வெறியரும் பிறரும் வெற்றி பெறவில்லை - அவர்களின் பயங்கர ஆயுதங்கள், வெற்றியை அவர்களுக்குத் தரவில்லை. மண்ணிலே தியாகிகளின் இரத்தம் சிந்தச் செய்தன ஆக்கருவிகள் - பூமியைப் புனிதபுரியாக்கவே, உதவின! சிலருடைய வாழ்வை வதைக்க முடிந்தது. வஞ்சகர்களால், ஆனால், குறிக்கோளைக் கெடுத்தொழிக்க முடியவில்லை. இது தெரிந்திருந்தும், தெளிவு பெறாத சிலர், இன்றைய நாட்களிலே, அறிவுத் துறையிலே, ஆதிக்கக்காரருக்கும் அவர் தம் போக்கை எதிர்ப்போருக்கும் இடையே மூண்டுவிட்டு மனப்போராட்டத்தின், தன்மையை உணர முடியாமல், காட்டுமிராண்டிக் காலத்திலே இருந்தவர்கள் கூவியதுபோல, எதிரப்பாளர்களை விட்டுவைப்பதா! ஒழிக்காமலிருப்பதா! வளரவிடுவதா! என்று பேசியும் ஒழிப்பதற்கான திட்டங்களைத் தீட்டிக்காட்டியும் வருகின்றனர்.
****

முதல் முறையாகக் குடைப்பிடித்துக் கொண்டு சென்றவன் மீது மூடமதியினர், கற்களை வீசினராம்! பாபி! கடவுளின் விரோதி! என்ற ஐசினராம்.

“நான், என்னபாபம் செய்தேன்? ஆண்டவனை நான் ஒரு நாளும் மறுத்ததில்லையே, ஏன் என்னை இம்சிக்கிறீர்கள்” என்று அவன் கேட்க “அடப்பாவி! அஞ்சாது பாபச் செயலைப் புரிந்து கொண்டு, கூசாமல் பொய்பும் பேசுகிறாயா? கெடுமதியாளனே, உன் கரத்திலே இருப்பது என்ன?” என்று கேட்டனர், கயவரால் தூண்டிவிடப்பட்ட கசடர்.

“இது, நிழல்பெறும் கதிரோன் காய்கிறான் - மண்டை ஏரிகிறது! வெப்பம் ஏன் உச்சியைத் தாக்காதபடி நிழல்பெற, இந்தச் சாதனம், குடையை உபயோகிக்கிறேன் - இதிலே குற்றம் என்ன?” என்று கேட்டான், குடையைப் பயன்படுத்தியவன்.

குறைமதியினர், “ஆடபாதகா! சூரியன், ஆண்டவன் படைப்பல்லவா! கதிரோனின் தன்மை, காய்வதுதானே! ஆண்டவன், அளித்த அந்த வெப்பத்தைத் தடுக்கத் துணியும் நீ, தூர்த்தன் தானே! தேவனின் திட்டத்தை, நீ, உன் புதுத் திட்டத்தால் கெடுக்கிறாயே! சூரியனைத் தந்த ஆண்டவன், மனிதனுக்கு; தேவை என்று கருதியிருந்தால், குடையையும் படைத்திருப்பாரே! அவர் படைக்காதிருக்கும்போது அவர் படைத்த சூரிய வெப்பத்தைத் தடுக்க குடையைக் கண்டு பிடித்தாயே! இதன் பொருள் என்ன? ஆண்டவனின் செயலை ஆகழ்கிறாய், பழிக்கிறாய், எதிர்க்கிறாய், என்பதுதானே! நாத்திகப் பயலே! இந்த அக்ரமம் ஆடுக்குமா?” என்று ஐசி, கற்களை வீசி, தமது பக்தியைக் காட்டிக் கொண்டனராம்! இவ்வளவு மூடமதியையும் எதிர்த்து, அதன் பயனாக ஏற்படும், கொடுமைகளைச் சகித்துக் கொண்டதாலேதான், உலகு, இன்று, குறிப்பிடத்தக்க அளவு, முன்னேறிற்று எனினும், மூட மதியினரைச் சூது மதியனிர், தூபமிட்டு ஏவிவிடும் சதிச் செயல், நம் நாட்களில் நின்று போகவில்லை. புதுப் புது உருவெடுத்து வருகிறது!
****

நம் நாட்களிலே, அறிவுத்துறையிலே, பெரியதோர், புரட்சி, ஏற்பட்டுக் கொண்டு வருகிறது. இதன் காரணமாக, ஆதிக்கக்காரர்களுக்கு, அச்சம் பிறந்திருக்கிறது. முதலிலே, அவர்கள் அலட்சியமாகத்தான் இருந்தனர் - இன்று அஞ்சுகின்றனர். அச்சம் காரணமாக அவர்கள் மனம் குழம்பிப் போய் ஏதேதோ எண்ணுகிறார்கள் - எதை எதையோ கூறிக் கதறுகிறாரக்ள்.

இதுகள் பேச்சை, யார் கேட்கிறார்கள், என்ற காலம் போய்விட்டது!

இதுகளுக்கு என்ன தெரியும் பேச! - என்று கூறிய காலம் போய் விட்டது.

இதுகள் பேசி, என்ன சாதிக்கப் போகின்றன - என்று பேசிய காலமும் போய்விட்டது.

ஆயிரம் காக்கைகள் கூடிக் கத்தினாலும் ஒரு கல்லின் முன் எதிர் நிற்குமோ, என்ற பழமொழிப்படி, இதுகள் ஆயிரம் காரணம் காட்டிப் பேசினாலும், நமது மூதாதையரின் மணி மொழிகளிலே ஒரு வாசகத்தின் முன்பு இவர்களுடைய பேச்சு நிற்குமோ! என்று வீம்பு பேசிய நாட்களும் போய்விட்டன.

இந்த ஜனங்கள் ஏன் இப்படி, கும்பல் கூடி, அந்தக் குதர்க்கவாதிகளின் பேச்சைக் கேட்கின்றன? என்று அலட்சியமாகப் பேசிய நாட்களும் போய்விட்டன.

இப்போது, இதுகள் வளர்ந்துவிட்டன - இப்போது தக்க நடவடிக்கை எடுத்து அழிக்காவிட்டால், இதுகள், பேராபத்தை உண்டாக்கிவிடும் - ஆகவே, ஆட்சியாளர்களே! ஆண்மையாளர்களே! அலட்சியமாக இருக்க வேண்டாம்! கிளம்புங்கள், கிளம்புங்கள் அழியுங்கள், அழியுங்கள் - என்று முறையிடும் காலம் பிறந்துவிட்டது.

மக்கள், எந்தக் கும்பலின் பேச்சுக்குச் செவி சாய்க்கவே மாட்டார்கள். சட்டை செய்யவே மாட்டார்கள் என்று இவர்களால் கூறப்பட்டதே, அந்தக் கும்பலின், பேச்சு, எப்படி இருப்பதாக, இப்போது இவர்கள், கூறுகிறார்கள்! இதோ, இவர்களில் ஒருவர் பாடும், அச்ச அகவலில் சிறு பகுதி.

“சென்ற வாரம் சென்னை நகரத்தில் கோமளீஸ்வரன் பேட்டையில் திரவிடர் கழகத்தார் ஒரு கூட்டம் நடத்தினார்கள். பஜார் தெருவில் மக்கள் குழுமியிருந்தார்கள். ஒலி பெருக்கி, ஒரு மைல் தூரம் கேட்குமாறு, கதறிக்கொண்டிருந்தது. வண்டிகள் போக முடியவில்லை. வெகுதூரத்தில் நின்றுகொண்டு திராவிடர் கழகத்தார் செய்யும் பிரசங்கத்தைச் சற்றுநேரம் கேட்க நேரிட்டது.”
இதுகள் பேசுவதை இவர்கள் கூடக் கேட்க நேரிட்டுவிடுகிறது!!

காலம் இப்படி மாறிவிட்டது!

ஆதிக்க ஆசை, சுலபத்திலே, மடியுமா! முதலிலே, இதுகள் - கத்துதுகள் - விதண்டாவாதிகள் - குதர்க்கம் - நிரீஸ் வரவாதம் - நாசகாலிகள் - என்று சொன்னால் போதும், என்றுதான், இந்த இவர்கள் எண்ணினார்கள்! இப்போதோ இதுகள் போடுகிற போடு இவர்களின் ஆதிக்கத்தின் அடிப்படையையே ஆட்டுவிக்கிறது - எனவே இதுகளிடம் இவர்களுக்கு இலேசாக, அச்சமும் தட்டிவிட்டது!

அச்சத்துக்குக் காரணம் இல்லை, அறிவுலகப் புரட்சிப் பிரசாரம், எந்த வகையிலும் பலாத்காரத்தைக் கொண்டது அல்ல! இதை ஆயிரமாயிரம் தடவை தெளிவு படுத்தியதுடன், இந்தப் பிரச்சாரத்தின் பலனாக, ஒரு நாளாவது ஒரு இடத்திலாவது “கோலாப்பூர்” நடந்ததில்லை - தமிழகத்தில் - அதாவது ஒரு வகுப்பாரைத் தாக்கும் தீய காரியம் நடைபெற்றதில்லை.

இருந்தும், எவர்கள் நம்மை இதுகள், கத்துதுகள், யார் சட்டை செய்வார்கள், என்று கேவலமாகப் பேசினரோ, அவர்களே இப்போது, நம்மால் தமது சமுகத்துக்கு ஆபத்து வரும், என்று தாம் அஞ்சுவதாக அழுகிறார்கள்.

அன்றைய அலட்சியம், அதற்கு முன்னாலிருந்த ஆணவம், ஆண்டும் தேவையற்றன. என்பது போலவே, இன்றைய அச்சம், அழுகுரல் ஆகியவையும், தேவையற்றன பொருளற்றன.

“திராவிடக்கழத்தின் துவேஷப் பிரசாரம் வலுத்து வருகிறது, சில இடங்களில் அவர்களுடைய பலாத்காரத்திற்கு அஞ்சி, சில வகுப்பினர் பத்திரமாக வெளியே செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.”
என்று திட்டும் அளவுக்கு வீண் அச்சம், குடி புகுந்து அவர்களைக் குடைகிறது.

இந்தப் பேராபத்தைப் போக்கக் காமராஜர் முயற்சிக்கிறாராம் - உவகையுடன் கூறிப் பூரிக்கிறார். ஜாதி குலக்கட்டுகள் எனக்கு இல்லை என்று கூறிக்கொள்ளும் அன்பர்.

“மந்திரிகள் சம்பளத்தை வாங்கிக் கொண்டு தூங்குகிறார்கள். ஸ்ரீ காமராஜ் ஆல்லும் பகலும் அலைகிறார் மக்கள் அல்லலைத் தவிர்க்க”
என்று புகழுரையைத் தருகிறார்.

பழியும் சுமத்துகிறார். முதலமைச்சர் மீது :
“திராவிடக்கழகத்தாருக்கு ஓமந்தூராரிடம் அனுதாபம் இருக்கிறது. அவர் தங்களுடைய பிரதிநிதி என்றே நினைக்கிறார்கள். அதேமாதிரி ஓமந்தூராருக்கும் கழகத்தினர் கொள்கையில் நம்பிக்கையில்லாவிட்டாலும், அதன் தலைவர்களிடத்தில் அபிமானம் இருக்கிறதோ என்று சந்தேகிக்கவேண்டிருக்கிறது.

என்றும் தீட்டிவிட்டு, சந்தேகப்படவேண்டி நேரிட்ட காரணத்தையும் விளக்குகிறார்.

“பல ஜாதியினரிடையே பரஸ்பர சகோதர பாவமும் ஒற்றுமையும் இருக்கவேண்டியதைத் தடுக்கும் கழகத்தார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏன் அப்படிச் செய்யவில்லை என்றால், சட்டம் இடம் கொடுக்கவில்லை, என்று பதில் கூறுகிறார்.”

இதுதான் சந்தேகத்துக்குக் காரணம்! திராவிடர் கழகத்தாரை, ஏன், அழிக்காமலிருக்கிறீர்! அவர்களின் பேச்சுக்கு நாட்டிலே இடம் கிடைத்துவிட்டதே! எங்கள் கதி என்ன இவது? பலகாலமாக இருந்துவந்த ஆதிக்கம் என்ன இவது? என்று ஆலறுகிறார் உலகம் திருந்திய வகையையும், அறிவுத் துறையிலே புரட்சி ஏற்பட்ட வரலாறுகளையும், படித்திருக்கும் நண்பர் நாராயண ஐயங்கார் - மன்னிக்க வேண்டும் - ஐயங்கார் என்று கூறிக் கொள்ள விரும்பாதவர்! அவர் மனமே, இப்படி என்றால், ஐயங்கார் ஐயர், என்ற பட்டம், பிறரை அடக்கி ஆள்வதற்காக ஆண்டவன் ஆட்ட சட்டம் என்று நம்பும் குளத்தங்கரைகளின் மனம், எப்படி இருக்கும்! கூறவா வேண்டும்!

என்ன தேவையாம் இப்போது இவர்களுக்கு? திராவிடர்கழகத்தின் நாக்கை ஆறுக்கவேண்டும் - எப்படியாவது, யாராவது - எத்தகைய கருவி கொண்டாவது, ஓமந்தூரார் சொன்னது போல, சட்டம் இடம் தரவில்லையே என்று கூறுபவர்கள் கூடாது ஆட்சிப்பீடத்தில்! ஆம்! கத்தி கூராக இல்லையா தீட்டு, தீட்டு, நன்றாகத் தீட்டு!! சட்டம் இடம் தரவில்லையா? சரி சட்டத்தை, இடம் தருகிற மாதிரி திருத்து, புதுப்பி - என்று கூறுகிறார்கள்.

ஆதிக்ககாரர்களின் மனதிலே ஒரு காலத்திலே, மனு வகுத்திருந்த சட்டங்களெல்லாம், நினைவிற்கு வருகின்றன போலும்!!

இந்தச் சட்டம் போதவில்லையானால், புதிய சட்டம் இயற்று.

இந்த மந்திரிகளால் முடியவில்லையானால், புதிய மந்திரிகளைக் கண்டுபிடி!

எதையோ செய் - யாரையோ ஐவு! எப்படியாவது, திராவிடர் கழகத்தாரை, ஒழித்தாக வேண்டும்.

இந்த நிலைக்கு வந்துவிட்டார்கள், புருவத்தை நெரித்து, உதட்டைச் சிறிதளவு பிரித்து “யார் பேசறா! சூனாமானாவோ? காக்கைக் கூட்டம் ஏராளமா இருக்கும்! மனுஷா இருக்கமாட்டேளே” - என்று பத்தாண்டுகளுக்கு முன்பு கூடப் பரிகாசம் செய்த, பரப்பிரம்மங்கள்.

இருக்கட்டும், இந்த முறை மாற்றத்தினாலே, இவரக்ள் என்ன பயனைக் காணப்போகிறார்கள் - அடக்கு முறைக்கருவிகளை மாற்றுவதாலே என்ன பலனைக்காணப்போகிறார்கள்! சித்தம் குழம்பியவர்களே! கொடுமையான சட்டங்களை வீச வீசத்தான். கழகத்தின் உரமும் திறமும், ஓங்கி வளரப் போகிறது. அலட்சியப்படுத்தினீர்கள்! கழகம் வளர்ந்தது! கேலி செய்தீர்கள்! கழகம் வளர்ந்தது! அரசியல் அரங்கிலே நிறுத்தி வைத்து அடித்த வீழ்த்தினீர்கள்! கழகம் வளர்ந்தது! பழி சுமத்தினீர்கள்! கழகம் வளர்ந்தது! சிறையிலே கழகத்தோழர்கள்! போலீசுக்கு மார் காட்டி நின்று தடியடிப்படக் கழகத்தோழர்கள்! கல்லூரிகளிலே கழகத்தோழர்கள்! காங்கிரஸ் கமிட்டிகளிலே கழகத் தோழர்கள்! வளர்ச்சி குன்றவில்லையே, வாட்டி வதைத்தபோது, இனி புதியமந்திரிகளை ஏவியோ, புதிய ஆயுதங்களை வீசியோ, என்ன காணப்போகிறீர்கள்? அதிலும், அடக்குமுறையைக் கண்டு கண்டு பழக்கப்பட்ட நிலையில்! புரட்சிச் சக்தியை முற்றும் உணரும் நிலையில்லா - உள்ளத்தோரே! ஒவ்வொருநாளும், கழக ஏட்டிலே, நாங்கள் என்ன செய்தியைப் படிக்கிறோம். “இன்ன ஊரிலே கழகத்தோழர் சிறை சென்றார் - இன்ன தோழர், விடுதலையானார்” - என்ற செய்தியைத் தானே!

ஏறக்குறைய அறுபதினாயிரம் குடும்பங்கள், இன்று வீட்டிலே இருக்கும் மகன், நாளையதினம் சிறைக்குள் தள்ளப்படுவானோ, சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டுவானோ? என்ற எண்ணம் ஏழும்பியபடி உள்ள பாசறைகளாகிவிட்டன! நிலையை உணராமல் நிமிர்ந்துநில்! புதிய பாணத்தைவீசு! - என்று கூறுகிறாய் ஆட்சியாளர்களுக்கு பயனற்ற யோசனை! அதையும் செய்து பார்த்துவிடுங்கள் - அந்த ஆசையும் தீர்ந்து போகட்டும், ஆனால், நெருப்பு ஆணையாது!
என்றுதான், நேர்வழி மறந்தவர்களுக்குக் கூறுகிறோம்.

சட்டத்திலே இடமேயா இல்லை, இவர்களை ஒடுக்க, என்ற ஆளவோடு சமரச போதனையைப் படித்திருக்கும், இந்துஸ்தான் இதழாசிரியர் கேட்கிறார். வேறோர் அன்பர். நம் கட்டுரைத் துவக்கத்திலே குறிப்பிட்டபடி, இதோ வாள், இதோ வேல், இதோ தடி, இதோ நெருப்பு என்று எடுத்தெடுத்துத் தருவரு போல், “இந்து” பத்திரிகையிலே, இன்றைய சட்டத்திலே என்னென்ன, “செக்ஷன்களை” திராவிடர்கழகத்தார் மீது வீசலாம், என்பதற்கான யோசனையைத் தீட்டியிருக்கிறார்.
****

153
298
292
505
107
144
295
என்னும், இவ்வளவு செக்ஷன்களின்படியும், திராவிடர்கழகத்தார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமாம். எவ்வளவு கருணையுள்ள மனம்! எவ்வளவு அறிவாராய்ச்சி! சட்ட நிபுணத்துவம்! இவ்வளவு ஆயுதங்களும் போதவில்லையானால். 1931-ம் வருடச்சட்டத்திலே, 23-வது பிரிவு இருக்கிறதாம், கழகத்தை வதைக்க! அதுவும போதாது என்றால், 1867ம் வருடச்சட்டம் இருக்கிறதாம்! இவ்வளவு இடம் சட்டத்திலே இருக்கும் போது, ஏன் திராவிடர் கழகத்தாரைச் சும்மாவிட்டிருக்கிறீர்கள் - என்று கேட்கிறார் இராமச்சந்திரன் என்ற பெயர்படைத்த புண்யவான் “இந்து” இதழ் மூலம்.
****

அந்த நாட்களிலே, வாள் வேல், தடி, என்று கொக்கரித்ததுபோல, இன்று, 153, 298, 292 என்று கூவுகிறார்கள்! எல்லாச் செக்ஷன்களும் ஒன்றுகூடித் தாக்கினாலும், மேலும் பல புதிய சட்டங்கள் உண்டாக்கப்பட்டு, தாக்குதல் நடத்தினாலும், ஓமந்தூராரின் கரம் சரியில்லை என்று எண்ணி காமராஜர் கரத்திலே கொடுத்துத் தாக்குதலை நடத்தச் சொன்னாலும், விளைவு ஒன்றே ஒன்றுதான் - உயர்போகும் அவ்வளவுதான்! - இன்று நடைபெறும் அறிவுப் புரட்சித்துறைக் காரியம், உயிரைப் பற்றிய கவலையைக் கடந்தவர்களின் முயற்சி! என்று உறுதியுடன் உரைக்கும் இளைஞர்கள், ஆயிரமாயிரம் கழகத்தில் உள்ளனர். தங்கள் நாட்களிலே செய்யப்படும் காரியம், பிற்காலச்சந்ததியாருக்காக, என்ற பெரு நோக்கம் கொண்டவர்களின் முயற்சி! உடனடிப் பலனை எதிர்பாராமல், பணிபுரியும் பண்பினரின் முயற்சி! உருட்டல் மிரட்டல்களுக்கு அஞ்சும் பஞ்சைகளல்ல, சாபம், தூபம், இரண்டுக்குமே, பயப்படாமல், துவக்கப்பட்ட முயற்சி! காதறுத்த காலம், கண்ணைத் தோண்டிய காலம், கட்டிக் கொளுத்திய காலம் ஆகியவைகளைப் பற்றி, உலக வரலாற்று ஏடுகளிலே, படித்துப் படித்து, உள்ளத்தில் உரம் ஏற்றிக் கொண்டுள்ள, ஊழியர்களின் முயற்சி! ஏடுவாளை, என்று கூறியோ, வீசு 153-வது செக்ஷனை என்று மிரட்டியோ, வருகிறார் காமராஜர் என்று பேசியோ, அந்த முயற்சியை முறியடித்துவிட முடியாது. சொல்கிறோம் - சிந்தனைத் திறத்திலே மிச்சமீதி இருக்கும்போதே, எண்ணிப் பார்க்கட்டும். சீறிப்போரிட்டு, நம்மை அழித்தே தீருவதென்று சல்லடம் கட்டிவிட்டார்களானால், அதையும் செய்து, அவர்கள் ஆசையைத் தீர்த்துக்கொள்ளட்டும், துவக்கப்பட்டு வேகமாக வளர்ந்து, வியக்கத்தக்க வெற்றிகளைப் பெற்றுத் தந்த இயக்கம் அழிந்துபடாது, அது, ஆணையா விளக்கு!!
(திராவிடநாடு 20.3.49)