அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கருஞ்சட்டையும் தடை உத்தரவும்

ஆறுமுகநேரியில் 144 தடைவிதிக்கப்பட்டதும், நம் தோழர்கள் தடையை மீறி சிறை சென்றதும், பேச்சுரிமையில் நம்பிக்கை கொண்டோர் நெஞ்சு குளிர்வித்த நிகழ்ச்சிகள்.

தடையை மீறியவர்கள். எம்.எஸ்.சிவசாமி, எம்.இரத்தினம், சாது, தியாகராசன், மணிமொழியன், சண்முகசுந்தரம், தனசேகரன், திலகராசன், சோமு ஆகிய ஒன்பது இயக்க வீரர்கள்.

9.9.51ல் கைது செய்து 24.9.51 வரை தோழர்களைச் சிறையில் பூட்டியிருந்தனர். பிறகு வழக்கு பதிவு செய்துள்ளனர்.

29.9.51ல் வழக்கு தொடங்கியிருக்கிறார்கள்.

ஆளவந்தார் அணையும் ஜோதியின் கடைசி வெளிச்சம் போலவே காட்சி தருகிறார்கள்! ஆனால் அதற்கு மக்கள் அஞ்சவில்லையென்று எடுத்துக்காட்டியுள்ளார்கள் நம் கழகக் காளைகள்.

ஆளவந்தாரின் அநியாய அடக்குமுறைகளை எதிர்த்திட ஒருபடை எப்பொழுதும் தயாராக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது ஆறுமுகநேரி. அங்கு அக்கிரமவெறிக் கூத்தாடிய ஆளவந்தார் இந்த உண்மையை உணரட்டும்! அவர்களாகவே உணராவிட்டால், மக்களே உணர்த்துவிக்கும் நாள் நெருங்கிவிடும்!

(திராவிடநாடு 7.10.51)