அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஆதித்தன் கனவு
படமல்ல - பாடம்
“தாலமுத்து! நடராஜா! நடராஜா! தாலமுத்து!” இந்த ஒலி உள்ளத்திலிருந்து பீறிட்டுக்கொண்டு வெளியே கிளம்பிற்று - உடலிலிருந்து பீறிட்டுக்கொண்டு வரும் இரத்தத்தின் பொருள் விளங்கிற்று, போலீசுக்கும், பொதுமக்களுக்கும். ஆனால் இருசாராரில் பலருக்கும். அந்த ஒலியின் பொருள் விளங்கவில்லை.

அவர்கள், எதிர்பார்த்த ஒலி “ஒயோ! அப்பா! ஆடடா! ஐயயோ!” என்பன. வேறு சிலர் எதிர்பார்த்தது, பாவிகளே! பாதகர்களே! என்ற சொற்கள். ஆனால், குடந்தையில், பட்டப்பகலில் நடுவீதியில் நிற்கவைத்துத் தடியால் தாக்கப்பட்ட தோழர்களோ, ஒயோ என்றும் ஆழவில்லை, பாவி என்றும் தூற்றவில்லை, தாலமுத்து! நடராஜா! என்று கூறினார் - இரு காகைளின் பெயர் கூறி நின்றனர் - காளைகளின் பெயர் மட்டுமா அவை, இலட்சியச் சொற்கள் - முன்னம் ஆச்சாரியார் ஆட்சியின்போது தாய்மொழியைக் காக்க ஆவியை ஆர்ப்பணித்த அருந்திறல் வீரர்களின் பெயர், வெறும் பெயரா, ஆற்றலூட்டும் சொற்கள்! தியாகப்பாதைக்கு வழிகாட்டிகள்! அடிபட்டபோது, அலறி அழவேண்டியவர்கள், இந்நாட்டிலே வழக்கமாக, இதுபோன்ற சமயங்களிலே கிளம்பும் முழக்கம் போல, போலீஸ் அட்டூழியம் ஒழிக, என்று ஆர்ப்பரித்திருக்க வேண்டியவர்கள், கேட்பரின் நெஞ்சைப் பிளக்கும் ஓர் வசீகரச் சக்தி படைத்த குரலில், தாலமுத்து! நடராஜா! என்று கூறினர் - கூறினாரா - அல்ல - அழைத்தனர் அழைப்புக்கூட அல்ல கவனப்படுத்தினர்.

தடியால் தாக்குகிறீர்கள், தமிழ் காக்கும் எம்மை! தகாத செயல்களுக்குட்பட்ட மக்களின் ஆட்சிக்குக் கட்டுப்பட்டு. ஆனால், தாக்குதலால் தகர்ந்துபோவோம் என்று எண்ணாதீர், நாங்கள் அறிவோம், நீவிர் அறிய அதனைக் கூறுகிறோம். முன்னம் நடைபெற்ற மொழிப்போராட்டத்தின்போது, இரு இளைஞர்கள் தமது இன்னுயிரையே உந்தனர் - அவர் தம்பெயர், தாலமத்து - நடராஜன் என்பதாகும், அந் வீரர்கள் எந்த அணிவகுப்பில் இருந்தனரோ, அதில் உள்ளவர்கள் நாங்கள், அவர்கள் எந்த அளவுக்குக் கஷ்ட நஷ்டம் ஏற்கும் உள்ள உரம் கொண்டிருந்தனரோ, அந்த அளவுக்கு உள்ளம் உரம் கொண்டவர்கள் நாங்கள் - எனவே, அடியுங்கள் இளவந்தார்களின் தூதுவர்களே! சாகடியுங்கள் - என்று கூறினர் - கேட்போரின் கல்மனமும் கரையும் விதத்தில்.

தமிழகம் எதிர்பாராத சம்பவம் குடந்தைப் போராட்டம் - நடத்திப் பார்த்துத் தெளிவுபெறும் வரையில் நம்மிலேயே பலருக்கு, நம்பிக்கை ஏற்படவில்லை- எனினும் போர் நடைபெற்றது. நமது நண்பர்கள் தமது உள்ள உரத்தை, நாட்டுக்கு நன்கு விளக்கிவிட்டன. வீம்பு பேசிய மாற்றுக் கட்சித் தோழர்களும், ஆச்சரியப்படும் விதத்திலே, நடந்துகொண்டனர்.

திராவிடர் கழகமா! பேசுவர் - போரிடுவரோ? அடக்குமுறையைத் தாங்க அவர்களால் முடியுமோ? தடையை மீறும் துணிவு உண்டோ? தாக்குதலைத் தாங்கும் திறமை உண்டோ? அவர்கள் சர்கக்ôர்தாசர்கள் போர்க்குணம் கொண்டவர்களல்ல! - என்றுதான், காங்கிரசிலுள்ள இளைஞர்கள், திராவிடர் கழகத்தாரைப் பற்றிக் கருதிவந்தனர் - அதற்கேற்றபடி கேலியும் பேசினர்.

நாட்டு விடுதலைப் போரின் போது நாங்கள் பட்டதடியடி இவர்களால் படமுடியுமா? - என்று அறைகூவும் விதத்திலே பேசினர்!

அநியாயச் சட்டங்களை மீறி, அடக்குமுறைகளை எதிர்த்து முறியடிக்கும் ஆற்றல் இவர்களுக்கு எது? இவர்கள், இராஜ பக்தி பாடுபவர்கள்! சட்ட பூஜைக்காரர்கள்!! உரிமைப்போர் புரியும் பண்பும் பயிற்சியும் ஆற்றவர்கள் ஊதாவக்கரைகள்! என்று கண்டித்துப் பேசினர்.

நாம், சட்டமும் சமாதானமும் நிலைநாட்டப்பட வேண்டும், கிளர்ச்சிகளின் காரணமாக அவை குலைக்கப்படக்கூடாது, அமைதி அழிந்துபடக் கூடாது, வரம்பு கட்டிப் பணிபுரியவேண்டும் என்று நல்லுரை கூறியபோதெல்லாம், பார்! பார்! சிறைக்கு அஞ்சும் பேர்வழிகளை! அடக்குமுறைக்கு அஞ்சும் ஆற்றலவற்றவர்களை! - என்று ஐளனம் செய்தனர்.

பொறுப்புணர்ச்சி காரணமாக நாம், சட்டத்திட்டம் மதிப்புக் காட்டுகிறோம், பொதுமக்களை வீண் கஷ்டத்துக்கு ஆளாக்கக்கூடாது என்ற காரணத்துக்காக, நாம் அமைதியை ஆதரிக்கிறோம், என்று அறிந்து கொள்ள அவகாசமும் அறிவுத் தெளிவும் ஆற்றவர்கள், நம்மை நையாண்டி செய்தனர் - படுத்துறங்கும் புலியை, வேலியில் உள்ள ஓணான், கேலியாகப் பார்ப்பது போல!

உரிமைக்காப், போரிடும்பண்பு, நம்மிடம் கிடையாது என்று கருதியவர்களெல்லாம், குடந்தைப் போராட்டத்தின் மூலம், ஓரளவு தெளிவு பெற்றுவிட்டனர் உணர்ச்சியற்றவர்களல்ல, அடக்கு முறைகண்டு அஞ்சி ஓடுபவரல்ல, பயந்து விலகுபவருமல்ல, மார்பைக் காட்டுபவர்கள், மறத் தமிழர்நாம், என்பதைக்குடந்தை காட்டிற்று - ஒருநாள், இரு நாள் அல்ல, ஒரு வாரகாலத்துக்கு மேலாக!

குடந்தையிலே, விசித்திரமான ஓர் காரணம் காட்டி, 144 வீசினர் - இந்திய எதிர்த்தும் பேசலாகாது. ஆதரித்துப் பேசக்கூடாது. ஏனெனில், இருசாராரின் பேச்சும் நடைபெற்றுக் கொண்டிருந்தால், கலவரம் ஏற்படுமாம்!

கலவரம் ஏற்பட்டால் தடுக்க, போலீஸ் இருக்கிறது, பேச்சாளர்கள், தூண்டும் முறையிலோ பலாத்கார முறையிலோ, பேசினால் அவர்கள்மீது வழக்குத் தொடர வழிவகை இருக்கிறது. எனினும், இந்த நியாயமான பாதையை மறந்து, 144 போட்டனர்.

144! நாட்டிலே, அனைவருக்கும் இந்தச் செக்ஷன், மிகமிக நன்றாகத் தெரியும், இதனைக் கண்டித்துப்பேசிடாத காங்கிரஸ் தலைவர் இருக்கவே முடியாது.

வாய்ப்பூட்டுச் சட்டம் என்றனர் இதனை - இன்னும் ஓர் வாய்வல்லுநர், இதனை, நாக்கறுப்புச்சட்டம் என்றார். ஏகாதிபத்யம் இந்தச் சட்டம் மூலம், தேசீயவாதிகளின் நாக்கையும், பொதுமக்களின் செவியையும் அறுத்து விடுகிறது என்று ஆர்ப்பரித்தார் இன்னொருவர்.

144! மிகமிக அளவிலே மீறப்பட்டு மீறப்பட்டு மதிப்பிழந்த முறை! இதனை மீறாத பெருந்தலைவர் இல்லை! பெரிய நகரமெங்கும் இது மீறப்பட்டிருக்கிறது.

144! இதனைக் கண்டித்துப் பேசாத கண்ணியர்கள் இல்லை! பொதுமக்கள், இதனை ஏள்ளி நகையாடினர், பல ஆண்டுகளாக!

பாரய்யா வீராதி வீரனை! அவனிடம் போலீஸ் இருக்கிறது. இராணுவம் இருக்கிறது, தடியிருக்கிறது துப்பாக்கி ரவை இருக்கிறது, ஆலிபுரம் இருக்கிறது அந்தமான் இருக்கிறது, இவ்வளவு இருந்தும், இந்தப் பிரிட்டிஷ் சிங்கம், நமது, தேசபக்தரின் பேச்சைக் கேட்டால், கிடுகிடுவென்று நடுங்குகிறது. இடிகேட்ட நாகமாகிறது - பேசாதே! பேசாதே! என்று பீதிகொண்டு தடைபோடுகிறது - என்று கேலி பேசினார். இந்த 144-வது செக்ஷனைப் பற்றி.

ஏன் நாட்டில், ஏன் மக்களுக்கு, ஏன் மனதில்பட்டதை எடுத்துச் சொல்லுவதைத் தடுக்கும் வல்லமை, யாருக்கும் இல்லை - பிரிட்டிஷ் சிங்கமானாலும்சரி, வெள்ளைக் கரடியானாலும்சரி, ஏன் பேச்சுரிமையைத் தடுக்கமுடியாது. பேச்சுரிமை பிறப்புரிமை! நாமார்க்கும் குடியல்லோம் - நமனை அஞ்சோம் என்றார் நாயனார் - நாமா, இந்தச் சீமை ஓநாய்களுக்கு அஞ்சுவோம் 144க்கு அடங்குவோம், என்று வீரம் சொட்டச் சொட்டப் பேசினர் - பல ஊர்களில்.

சுதந்திரம் கிடைத்தால், இந்த நாக்கறுப்புத் திட்டம் இராது என்று வாக்களித்தனர். பேச்சுரிமை அனைவருக்கும் உண்டு என்றனர். அந்தக் குணாளர்கள்தான் ஆட்சி செய்கிறார்கள், நமக்கோ.

தூத்துக்குடி
கோயில்பட்டி
மதுரை
திருவாரூர்
திருக்கோயிலூர்
நன்னிலம்
கொடவாசல்
பேரளம்
விழுப்புரம்
வேலூர்
கும்பகோணம்
கல்லக்குறிச்சி
இங்கெல்லாம் 144!

பட்டி கண்டு, வெட்கப்பட வேண்டாமா, பரங்கி இதைச் செய்தபோது, பாதாளத்திலிருந்து பதங்களைப் பெயர்த்தெடுத்து ஆண்டம் சென்று முட்டவிடுவது போல, ஆர்பரித்துப் பேசிய, அருமைக் காங்கிரஸ் நண்பர்கள்.
இவ்வளவுக்கும், இலட்சம் பேர் கூடும் மாநாடக இருந்தால்கூட இந்துவிலோ ஒருவரி இராது, மற்றவைகளிலேயும் இருட்டடிப்புதான் இருக்கும் - அது இல்லாதபோது, கயிறுதிரித்தல்! இருக்கும். அவ்வளவு கட்டுப்பாடாக, நமது கழகப் பிரசாரத்தைப் பொது மக்களின் கண்களுக்குத் தெரியவிடாதபடி தடுக்கும், சாதனங்கள், உள்ளன, கங்கிரசிடம் ரேடியோ இருக்கிறது! எம்.எல்.ஐக்கள் உள்ளனர்! தியாகிகள் உள்ளனர்! நாட்டிலே, காங்கிரஸ் தவிர வேறு ஒருகட்சியே கிடையாது என்று மக்கள் நம்பும் விதமாகப் பிரசாரம் செய்ய!

எனினும், திராவிடர்கழகக் கூட்டத்துக்கு 144, இவ்வளவு நகர்களில் பட்டி வளர்ந்தபடி இருக்கிறது! ஏன் இந்தப் பீதி ஏற்பட்டது? கலக்கம் வரக்காரணம் என்ன? இருட்டடிப்பைப் பிய்த்துத் தள்ளிவிட்டு, திராவிடர் கழகக் கோட்பாடுகள் எங்கும் பரவியபடி உள்ளன.

ஆளவரிசியைக் காணும்போது, இடைக்கடையைப் பார்க்கும்போது, பல்லாங்குழி போலுள்ள பாதையிலே செல்லும்போது, பாலமற்ற ஆறுகளை, பாதையற்ற கிராமங்களை, பள்ளிகளற்ற இடங்களை, பள்ளிகளில் வாழ்வின் சுவை காண முடியாத ஆசிரியர்களைக் காணும்போது, முதலாளியின் மிடுக்கு, மிராசுதாரனின் வாழ்வு, ஆலையில் வேகும் பாட்டாளியின் பரிதாபம், உழவனின் அல்லல், ஆகியவைகளைப் பார்க்கும்போது, சட்டசபûயிலே சாய்ந்தபடி தூங்கும் சற்குணர்களையும், விழித்தெழுந்ததும் வேக வேகமாகச் சென்று, பெர்மிட்டுக்குப் பெருந்தவம் இருக்கும் போக்கையும் பார்க்கும் போது - ருங்கக் கூறினால், இன்றைய ஆட்சியாளர்களின் போக்கின் விளைவுகளான அல்லல்களை, ஆலங்கோலங்களைக் காணும்போ தெல்லாம், காண்பவர் மனக்கண்முன், ஒரு வெண் தாடிக்கிழவர் நிற்கிறார், அவர்களின் செவியிலே திராவிடர்கழகப் பேச்சுக் குடைந்துகொண்டு செல்கிறது!

திராவிடர் கழகக் கூட்டமென்றால், திரண்டுவிடுகின்றனர் - மாநாடுகள், திருவிழாக்களாகின்றன! திகைப்பு உண்டாகிறது, இளவந்தார்களுக்கு!

எங்கிருந்து கிளம்பிற்று இந்தச் சக்தி? எப்படித் திரட்டமுடிந்தது, பிரசாரசாதன பலமற்ற இவர்களால்! எவ்வளவோ எதிர்ப்புகள் உள்ளனவே, எங்ஙனம், அவ்வளவையும் மீறி, இவர்கள், மக்களின் நெஞ்சிலே, தங்கள் கொள்கைக்கு இடம் பெற்றுவிட முடிந்தது? எண்ணினர், ஐக்கத்துடன்! எதிர்ப்பிரசாரம் செய்ம் பார்த்தனர், புது எக்கத்துடன், பயன் எதும் காணாததால், பழைய முறையை சிறந்தது என்று எண்ணினர், வீசினர் 144! எங்கும் 144! அங்கே, இங்கே எங்கெங்கே திராவிடர்கழகக் கூட்டம் நடைபெறுகின்றன என்று பார்த்துப் பார்த்து வீசுகின்றனர். நாக்கறுப்புச் சட்டத்தை!

சிறையில் தள்ளுவோம்! என்று மிரட்டிப் பார்த்தனர் - சென்ற ஆண்டு வரையில் அவர்கள் சிந்து அதுதான்.

ஓராண்டு முடிவதற்குள், புதுத்தெளிவு பெற்றனர், சிறைக்கஞ்சாதாரே திராவிடர்கழகம் - சீமான்களும் சிங்கார புருஷர்களும் சேலமாகிவிட்டனர், இப்போது உள்ளவர்களோ, இலட்சிய வெற்றிக்காக, எந்த விலையும் கொடுக்கக் கூடியவர்கள் - இவர்களைச் சிறையிலிடுவது என்றால், திறந்த கதûவு மூடவும் நேரமிராது, கட்டியபடி இருக்கவேண்டும் புதுப்புதுச் சிறைகளை - சிறைச்சாலைகள் திராவிடர்கழக அறச்சாலைகளாகிவிடும், என்பதைக் கண்டனர் - ஓற்றர்கள் தந்த சேதி அவர்களுக்கப் புதியதோர் பீதியை உண்டாக்கி விட்டது. மீண்டும் யோசிக்கலாயினர்! சிறை, போதாது சிறைப்படுத்திப் பயன்காண முடியாது, சிங்கார வாழ்வினர் என்று எண்ணினோம் இவர்களை, இவர்களோ நாட்டைக்காக்க வீட்டைத் துறந்து விட்ட வீரர்களாகிவிட்டனர்! இவர்களை அடக்க, வேறுவழி காணவேண்டும், என்று எண்ணினர் - பழைய அடக்குமுறை, அசட்டுச் சிரிப்புடன், இள வந்தார்களின் முன்புவந்து நின்றது - அடியேனை ஐவுக! என்றது - சென்றுவா! வெற்றியுடன் திரும்பிவா - என்று இசிகூறி அனுப்பினர், அது, குடந்தையிலே, ஆதித்த உருவில் வந்து நின்றது ஆற்றலைக்காட்டி, ஒய்ந்தது.

குடந்தையில் நாம் துவக்கிய உரிமைப் போராட்டத்தை ஒடுக்கும், பொறுப்பை, ஏற்றுக் கொண்டவர், சர்க்கார் தரப்பில் - போலீஸ் உதவி சூப்பரிண்டு, தோழர் ஆதித்தன் அவர்கள்! கருவி - விசையல்ல! எனினும் அவர் பெயர்மிகமிகப் பிரபல்யமடைந்துவிட்டது. மறைந்துகிடந்த சக்தியைத் திரட்டிக் கொண்டு கிளம்பினார், மகத்தான பொறுப்புணர்ச்சியுடன் - அவர் அறிவார். ஆனால் ஆட்சியாளர்களிடம் கூறமுடியாது அவரால் - அவர் நன்கு அறிவார், சர்க்கார், தேர்ந்தெடுத்திருக்கும், இரண்டாவது கருவியான அடக்குமுறை, எந்த அளவுக்குப் பயன்தரும் என்ற சூட்சமத்தை!

தடையை மீறிக் குடந்தையில் தாறுமாறான முறையிலே, காரியங்களைச் செய்ய முயல்வர் திராவிட கழகத்தார் - உடனே நாம், கலவரம் ஏற்பட்டுவிட்டது. அமைதி அழிகிறது, பலாத்காரம் தலைதூக்குகிறது, என்று கூறிவிட்டு, இருதயத்தை ஒரு இரண்டு நாளைக்கு விட்டு இலட்சியவாதிகளை அடக்குமுறைக்கு ஆளாக்கினால், காட்டுக் கூச்சல் அதிகமாகும். கழகச் செயல்கள் கட்டுக்குமீறிச் செல்லும் பிறகு சுலபத்திலே, அடக்கி விடலாம் என்று எண்ணினார் - பலாத்காரமுறை தலைவிரித்தாடிய கிளர்ச்சிகளைமட்டுமே கண்டு பழக்கப்பட்ட, அந்தப்போலீஸ் அதிகாரி இதைத்தான் நாம், ஆதித்தன் கனவு என்கிறோம்.

உரிமைப் போர் துவக்கப்படுவதற்கு முன்னால் இரவு, ஆதித்தன் கனவு காணாதிருந்திருக்க முடியாது.

பெருந்திரளைக் காண்கிறார்! மூலைக்கு மூலை அவரக்ள் ஓடக் காண்கிறார்! காட்டுக் கூச்சலைக் கேட்கிறார்! போலீஸ் ஒழிக, என்று தூற்றுவது கேட்கிறது! போலீஸ் விரட்டுகிறது பொதுமக்களை! பொதுமக்கள் கலைய மறுக்கிறார்கள்! வேட்டை இடுகின்றனர் போலீசார்! விர் விர் என்று கற்கள் பறக்கின்றன போலீசை நோக்கி! அதிகாரிகள்மீது வீழ்கின்றன! புன்னகை தவழ்கிறது அவர்முகத்தில்! ஐந்தே நிமிஷம் அவகாசம் தருகிறோம், கலைந்து போகாவிட்டால் துப்பாக்கிப் பிரயோகம் என்கிறார் கலையவில்லை. மக்கள்! துப்பாக்கி பேசுகிறது! பிணங்கள் கீழே! மெடல்கள் மார்பிலே- இப்படி ஓர் கனவு.

மறுதினமோ, அவர் கண்டகாட்சி வேறு! அறப்போரின் முழு இலட்சணப்படி நடக்கிறது கிளர்ச்சி.

இந்தி ஒழிக! - தமிழ் வாழ்க! என்று முழக்கமிட்ட வண்ணம் செல்கின்றனர் பத்துத் தொண்டர்கள் - ஆர்ப்பரிப்பு இன்றி, அமைதியாக போலீஸ் தடுக்கிறது - நிற்கிறார்கள் தடை உண்டு அறிவீரோ, என்று கேட்கின்றனர். அறிந்தே வந்தோம் என்கின்றனர் - அடிப்போம் என்கின்றனர். உங்கள் இஷ்டம் என்கின்றனர் - அடிக்கின்றனர் தடிகொண்டு, தாலமுத்து, நடராஜா என்று அழைக்கின்றனர் - அதிகாரிகள் திகைக்கின்றனர்!

எதிர்பார்த்தது நடக்கவில்லையே அமளியை எதிர்பார்த்தோம் இவர்கள் அறப்போரன்றோ நடத்துகின்றனர், கட்டுக்குலையும், பிறகு சுட்டுத்தள்ளலாம் என்று எதிர்பார்த்தோம், இவரக்ளோ, அமைதியைக் காக்கின்றனர். என்ன விந்தை என்று எண்ணித் திகைத்தனர்.

உண்மையிலேயே, பொதுமக்களையும், கிளர்ச்சியில் உடுபடும் தோழர்களையும், எவ்வளவு அதிகமாகவும், விரைவிலும், ஆத்திர மூட்டுமுடியுமோ அவ்வளவையும் துவக்கத்திலேயே செய்துவிட்டனர், அதிகாரிகள்.

முன்னிரவே, பெரியாரைக் கைதுசெய்தனர் - குடந்தைக் தலைவர்கள் நீலமேகம், பொன்னுசாமி, முத்துதனபால், எஸ்.கே. சாமி ஆகியோரைச் சிறையில் தள்ளினர் - நகரெங்கும் போலீஸ் மயமாக்கிக் காட்டினர் - ஆத்திரமூட்டக்கூடிய இவ்வளவு சம்பவங்கள் நேரிட்டுவிட்டதால், மறுதினம், அமைதி இராது. கட்டுப்பாடு இராது, அறப்போருக்குப் பதில் மிருகத்தனம் தோன்றிவிடும், தோன்றினால், தீர்த்துக்கட்டிவிடலாம் என்று கனவு கண்டனர்.

ஆனால் நமது அருமைத்தோழர்களின் அமைதி, அவர்களைத் திகைக்கச் செய்துவிட்டது - ஆற்போர் வீரர்கள் காட்டிய உயர்பண்பு கண்டு உள்ம் பூரிக்கிறோம். புதியதோர் நம்பிக்கை கொள்கிறோம் - அணி வகுப்பிலே, இனிப் பீதி கிளப்ப, கலாம் விளைவிக்கமுடியாது என்பதை அந்தச் சீலர்கள் நன்கு விளக்கிவிட்டனர், செயலால் ஒரு கடுமையான பார்வை உண்டா? சுடுசொல் ஒன்று கூறினரா? ஆர்ப்பரிப்பு உண்டா? இல்லை! இல்லை! அதிகாரிகள் நன்கு அறவிர் இதனை பல ஆயிரக்கணக்கான மக்கள் - இடையே இப்பதின்மர் - இவர்களைச் சூழ்ந்து போலீஸ் - அவர்களிடமெல்லாம் தடி - எனினும் ஒருசிறு ஆத்திர அறிகுறியும் எழவில்லை! கேள்விகளுக்குப் பணிவான, ஆனால் உறுதி குலையாத பதிலளித்தனர்! மிரட்டல்களின்போது புன்சிரிப்பைக் காட்டினர்! அடித்த போது இரத்தத்தைச் சொட்டவிட்டனர்! நாம் பெருமைப்படுகிறோம், நமது வீரர்கள் காட்டிய பொறுமை உணர்ச்சியை, பொறுப்புணர்ச்சியைக் கண்டு!

இத்தகு, போராட்டங்கள் பல நடாத்திப் பழக்கப்படட்வர்களல்ல நாம்! தடியடி பெற்றனர் நமது தோழர்கள் - கலங்கினார் இல்லை, கதறினார் இல்லை, காட்டுப் போர்க் கொள்ளவில்லை. கடமைக்குக் கிடைக்கும் பரிசு, உரிமைக்காகக் கொட்டும் குருதி என்று எண்ணினர் - ஏறுகள் வாழ்க! இலட்சிய வீரர்கள் நீடூழி வாழ்க!!

வீதியிலே வீழ்ந்தனர் - அடிபட்டு! ஆஸ்பத்திரியிலே கிடந்தனர், பலமான அடிபட்டு ஊருக்கு வெளியே இருபது மைல் தொலைவிலே, கொண்டுபோய்விட்டனர். நாதியற்றவர்கள் போல்! இவ்வளவுக்கும், ஒரு சிறு சீற்றக்குறி காட்டினாரில்லை, அமைதி நிலவிய வண்ணம் இருந்தது! அறம் ஆட்சி செய்தது! விலா முறிந்தால் என்ன, அடிப்பவர் யாராக இருந்தால்தன் என்ன, விடுதலைப் போரிலே இவை நடைபெறத்தானே வேண்டும் - ன்று எண்ணிக் கடமையைச் செய்தனர் நம் காளைகள்!

அமைதி குயைலாதது கண்ட அதிகாரிகள், பொதுமக்களைக் கண்டபடி தாக்கித் துரத்தினால், பீதிகொண்ட மக்கள், பாதிமதியுடன் ஏதேனும் சிறு செயல்புரிவர், பிறகு நமது வேலை எளிதிலே முடியும் என்று எண்ணினர் - பொது மக்களுக்குத் தடியடி! ஓடினர் ஓடினர், இங்கும் அங்கும்! ஓடும்போது வீழ்ந்தனர் சிலர் - வீழ்ந்தவர் மீது வீழ்ந்தனர் சிலர்! பாதை ஓரத்தில் பதுங்கினர் - சிறுசந்துகளில் நுழைந்தனர். கடையை மூடினர் சிலர் - காய்கறிக் கூடையைக் கவிழ்த்துக் கொண்டனர் சிலர், ஓடும்போது, பொதுமக்களின் மனதிலே, தோன்றிய எண்ணங்கள் யாவை? தடியடி தர்பார் நடக்கிறது தர்மராஜ்யத்தில்! வேட்டையாடுகிறார்கள் பொதுமக்களை, ஓட்டுவேட்டை முடிந்துவிட்டதால்! அடக்கு முறையை அவிழ்த்துவிட்டனர், ஆங்கிலேயரைக் கண்டித்தவர்கள்! - என்று எண்ணாதவர் இருக்க முடியுமா? பேயாட்டம் வெறியாட்டம் - வீணாட்டம் - ஆர்ப்பாட்டம் என்று பலப்பல கூறினர், பதைத்தனர் - சிலர், அடிபடும் தொண்டர்களைக் கண்டு கண்ணீரும் சொரிந்தனர். எனினும் அமைதி குலையவில்லை. நமது கழகத் தோழர்கள், பொதுமக்களைப் பணிவுடன் வேண்டிக்கொண்டனர். அமைதியை நிலைநாட்டினர்.

“பாழாய்போன பொதுமக்களும்” இவ்விதம் இருக்கின்றனரே, என்ன செய்வது, என்ற ஐக்கம் மிகுந்துவிட்டது அதிகாரிகளுக்கு மீண்டும் யோசித்தனர் - மற்றோர் முறை தோன்றிற்று.

திராவிடர் கழகத்தார், மிகவும் ரோஷ உணர்ச்சிகாரர்கள் - பேச்சில் வல்லவர்கள் - அவரக்ள் எவ்வளவு கஷ்டத்தையும் தாங்கிக் கொள்வர். ஆனால் ஒரு சில இழிசொல் கேட்கவும் ஆசையார், அவர்களின் இயல்பு அதுதானே, எனவே அவர்களை இழிமொழி கூறி ஏசுவோம். ஐசிடின் அவர்கள் எதிர்த்துப் பேசுவர். பேசிடின் நமக்கு நல்ல வாய்ப்புக் கிடைக்கும் என்று எண்ணினர் - திட்டப்படி செய்தும் பார்த்தனர். அறப்போர் வீரர்களை ஆபாச மொழிகளால் தூற்றினார்! வீரர்களை வெறியர்கள் என்றனர்! தாய்மொழி காத்திடுபவர்களை தடியா, மடையா என்றனர்! மாலைகளைப் பிய்த்து எறிந்தனர் - சட்டைகளைப் பறித்தனர் - ஆனால் நமது தோழர்களோ, ஆங்கிலப் பெருங்கவி ஒருவர் கூறியதுபோல “எதையுந் தாங்க இந்த இதயம் உண்டு” என்று இருந்தனர்.
தூற்றினோம், துடித்தெழவில்லை! தாக்கினோம், தாறுமாறான நிலை பெறவில்லை! துரத்துகிறோம் அடித்து, பீதிகொள்ளவில்லை! ஓயவில்லை கலங்கவில்லை - இரத்தம் சிந்துகின்றனர் - எத்தனை நாளைக்கு நாம் இந்த முறையைக் கொள்ள முடியும் - எத்தனை நாளைக்குத்தான், இதயத்தை இரும்பு நிலையில் வைத்திருக்க முடியும், எத்தனை நாளைக்குத்தான் கண்ணீரை மறைக்க முடியும். ஒரு சுடுசொல் பேசக்கூடாதா, பிறகு நெஞ்சிலே பாரமின்றி, நமது காரியத்தைச் செய்து முடிக்கலாú! இப்போதோ, அந்த இளைர்களின் பார்வை, நமது இயத்தை துளைக்கும் உட்டியாகிறதே, அவர்கள் காட்டும் அமைதி நமது உறுதியைக் குலைக்கிறதே, அவர்களின் தியாக உணர்ச்சி, நமக்குத் திகைப்பை உண்டாக்கி விடுகிறதே, எப்படி, இந்தக் கஷ்டமான நிலையிலிருந்து விடுபடுவது, என்று விசாரத்திலாழ்ந்தனர், வீராவேசமாகக் கிளம்பிய அதிகாரிகள் நாளுக்கு நாள் நகர் பேசுகிறது, அதிகமாக, அதிகமாக - நாடு கவனிக்கிறது - கட்டுப்பாடு மிகுந்த அறப்போரின் மாண்பு பற்றி இவ்வளவுக்கும் முன்னின்று நடத்த வேண்டிய முக்கியமான தலைவர்கள் சிறையில்! ஏன் செய்வர்! இனி எம்மால் இயலாது என்று கூறிவிட்டனர் - சர்க்காரிடமா? அல்ல! - கூறமுடியாதல்லவா!! - பொதுமக்களிடமா? ஆமாம்! எப்போது? பேச்சின் மூலம் அல்ல, செயலின் மூலம் தடியடி தர்பாரை நிறுத்திக்கொண்டனர்! அந்தமுறை பலன் தரவில்லை, இயக்க வேகத்தைக் குறைக்கவில்லை, என்பதை உணர்ந்தனர் தடியடி தர்பாரைக் கைவிட்டனர். உரிமைப்போர் வழக்கப்படி நடந்த வந்தது, ஆனால் தடியடி தர்பார் நின்றுவிட்டது! தயாளர்களாகிவிட்டனர்! ஏன்? நமது தோழர்கள், காட்டிய வீரமும் அமைதியும், அவ்வளவு மேலான முறையிலே அமைந்திருந்தது. ஒருநாள் இரண்டு நாள் மூன்று நான்கு நாட்கள் உரிமைப்போர் நடந்து கொண்டே இருக்கிறது. ஊக்கிரசேனர்கள் சாந்தமூர்த்திகளாகிவிட்டனர். தடியடி, இல்லை - செல்லடியும் இல்லை! புயலை எதிர்த்துச் சென்றனர் - புயல் ஒய்ந்தது - ஓயமட்டும் சளைக்காது சென்றனர் தமது தோழர்கள்!!

144!! மீறுவோர் தண்டிக்கப்படுவர் - அதுதான் சட்டம்! - தண்டனையில், வழக்கமாக தண்டனை, சிறை! விசித்திர சித்தர்களின் ஆட்சியிலே, ஜெயிலிலே இடமில்லை, எனவே, 144-வது வட்டத்தை மீறினவர்களுக்குச் சிறைத் தண்டனை இல்லை! அதற்குப் பதில், வேறு கொடுமையான தண்டனை தந்து வந்தனர். தடியடி - பிறகு, அதனையும் கைவிட்டனர்! 144 அமுலில் இருக்கிறது. ஆனால் உரிமைப் போர் வீரர்கள் ஒவ்வொர் நாளும் மீறுகின்றனர் - எனினும், சட்டம் சக்தியிழந்து கிடப்பது போல, அவர்களுக்கு தண்டனை இல்லை!

என்னையா செய்கிறது 144 - மக்கள் கேட்கின்றனர்.

ஆதோ மீறுகிறார்களே - தெரியவில்லையா? என்றும் மக்கள் கேட்கின்றனர்.

144ஒ மீறும் உரிமைப்போர் வீரர்களையும் மக்கள் காண்கின்றனர். அவர்களை எதும் செய்யாமல், சட்டத்தின் காவலர்கள் நிற்கவும் காண்கின்றனர் என்ன எண்ணுவர்! 144 தோற்றுவிட்டது! மீறப்படுகிறது! எனினும் மீறுவோர் மீது, எவ்வித நடவடிக்கையும் எடுத்துக்கொள்ளாமல் அதிகாரிகள் உள்ளனர் - துவக்க முதல் இவ்விதம் இரந்தனரா? இல்லை - அவசர அவசரமாக வேலை செய்து பார்த்தனர் - சிலரைச் சிறைப்படுத்தினர் - ஆதோ தோழியர் மணி சிறையில் - நண்பர் நடராசன் காவலில் - இந்த முறையைப் பிறகு கைவிட்டனர் - இப்போது எதும் செய்யாதுள்ளனர். ஏனெனில், சட்டத்தை மீறுபவர்களைத் தண்டிக்க, சிறையும் தடியடியும், இருமுறைகள் இரண்டும் கையாண்டு பார்த்துக் தோற்றுவிட்டனர் - வேறு ஓர் முறையும் இல்லை, ஆகவே 144வது செக்ஷன், தங்கள் கண் முன்பாகவே மீறப்படுவதைக் கண்டும், வாளாவிருக்கின்றனர்! இதுதானே, பொதுமக்கள் தரும் தீர்ப்பாக இருக்கமுடியும்! வேறென்ன பொருள் கூறமுடியும், வீராவேசத்தை அடக்கிக் கொண்டது கண்டு! திராவிடர்கழக நிர்வாகக் கமிட்டி, இந்தப் புதிய நிலைகண்டு மகிழ்ச்சியடைந்து அடக்குமுறை உட்டியின் கூர் மழங்கும் அளவுக்கு அறப்போர் நடத்தி வெற்றி கண்ட வீரர்களைப் பாராட்டி 30ந் தேதிவரை உரிமைப் போர் நடத்தி, முடித்துக் கொள்வதென்று தீர்மானித்தது.

குடந்தைப் போராட்டம் நமது கழகத்தக்கு உள்ள தாங்கும் சக்திக்கு ஓர் எடுத்துக்காட்டு அமைதிக்கும் கட்டுப்பாட்டுக்கும் உள்ள உண்மையான பலத்தை அறவிக்கும் மகத்தான பாடம் திராவிடர்கழகம் எத்தகைய அணிவகுப்பு என்பதை இளவந்தார்களுக்குத் தெரிவிக்கும் சம்பவம். குடந்தைப் போராட்டம் ஓர் பயிற்சிக்கூடம்! நமது வீரர்களுக்கு நிலாச்சோறு அளவுதான் இது, என்றபோதிலும், நாம், கொண்டுள்ள உள்ள உறுதியை ஊராளவந்தவர்களுக்கு அறிவிக்கும் அற்புதநிகழ்ச்சி கருத்துள்ளோர் காணட்டும், இதனுள் புதைந்துள்ள பாடத்தை, இளவந்தாரக்ளின் அடக்கு முறைத்திட்டம் அறப்போரை அழித்துவிடாது என்பதையும், ஆதித்தன் கனவு பலிக்காது போனது போலவே, இளவந்தார்கள் தயாரிக்கும் எந்தப் புதுவித அடக்குமுறையும் வெற்றி தராது என்பதையும், காட்டும் மகத்தான பாடசாலையாயிற்று குடந்தை! வாழ்க, உரிமைப் போர்வீரர்கள்! வளர்க அவர்தம் தொகை! வீழ்க அடக்குமுறை!
(திராவிடநாடு - 2.1.1949)