அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஆயிரம் கோடி!
1943 டிசம்பர் மாதம் வரையிலே, இற்தியாவுக்கு வெளி உலகிலிருந்து வரவேண்டிய பணம், சுமார் 853 கோடி ரூபாய் என்ற கணக்கெடுத்திருககின்றனர். இந்தப்போர் முடியுமுன், ஆயிரங்கோடி ரூபாய், எனும் அளவினதாக இத்தொகை வளரக்கூடும். போரின் காரணமாக நமது மக்கள், எவ்வளவோ கஷ்டங்களைச் சகித்துககொண்டுள்ளனர். இவ்வளவு கஷ்டத்திற்கும் பலன் ஏற்படாது கோகவில்லை. நாட்டு விடுதலைக்கு நாம் தகுதிபெறகிறோம், நாட்டுப் பாதுகாப்புக்கான போர்த்திறனைப், பல இலட்சக் கணக்கான மக்கள் பெறுகின்றனர். வெளிஉலகத் தொடர்பு உன்னதமான விதத்திலே வளருகிறது, இவ்வளவுடன் கோர்க்குத் தோவையான பொருள்களை விற்ற வகையிலே, இந்தியாவுக்கு ஆயிரம் கோடி ரூபாய், கிடைக்கம் நிலைமையும், புதியபல தொழில், வளமாகக் கூடியவகையும் ஏற்படுகிறது. வாழ்க்கையின் கஷ்டத்தால் சிந்திய கண்ணீரும், போரிலே பெருகிடும் இரத்தமும், இந்தப் புதிய நிலைக்குக் காரணம். ஆனால், போருககுப் பிறகு, இந்தப் புதிய நிலைக்குக் காரணம். ஆனால், போருக்குப் பிறகு, இந்தப் பெருநிதியைச், சிறுமதியுடன் பயன் படுத்தினால், பலன் இல்லை. இதை உணர்ந்து, இப்போதே பொருளாதாரப் புலவர்களும், வடநாட்டு வாணிபர்களும், இப்பொருந்தொகை, திருப்பிக் கொடுக்கப்படும் வகை எவ்விதமிருக்க வேண்டும் என்பது பற்றிய பிரச்சனையிலே, அக்கரை கொண்டுள்ளனர் - திராவிடம் நீங்கலாக!

ஆயிரம் கோடி ரூபாயும், ஆர்கண்டி ஜாக்கட்டாகவோ அணில் மார்க் சிகரெட்டாகவோ, சந்திரகாந்தச் சோப்பாகவோ சுந்தரிகளுக்கேற்ற சீப்பாகவோ, திருப்பித் தரப்படும் முறை, போக போக்கியத்தை மட்டுமே கருதும் புல்லரின் விழி, இதனால் நாட்டுப் பொதுவளம் பண்படவோ, செல்வம் செழிக்கவோ, தொழி வளரவோ, மார்க்கமிராது. ஆடம்பரத்தோடு சரி. ஆனால் இந்தப் பெருந்தொகைக்கு, இங்கு நவீன, விஞ்ஞான முறைக்கேற்ற தொழில் அமைப்புகளுக்குத் தேவையான இயந்திரங்களையும் நுட்பமான விஞ்ஞான விளைவுகளையும், வெளியிலிருந்து வரவழைத்தால், பொது வளம் வளரும, பலகோடி மக்களுக்கு வாழ்க்கை வழி கிடைக்கும், உயிர்நாடி போன்ற பல பொருள்களுக்குக் கடலைக் கடந்து கைநீட்டி நிற்கும் நிலைமாறும், இதனை அறிந்தே, போருக்குப் பிறகு, புதிய இயந்திரங்களை, புதிய தொழிற்சாலை அமைப்புகளுக்கு அவசியமான சாதனங்களை வரவழைக்கவேண்டும், என்று நிபுணர்கள் கூறுகின்றனர். திட்டம் தீட்டுகின்றனர், புள்ளிவிவரம் சேர்க்கின்றனர், தொழிமுறை வகுக்கின்றனர். இந்தத் துறையிலே திராவிடநாட்டுத் தலைவர்கள் இன்றுவரை துளியும் அக்கரை காட்டவில்லை. சர்.இராமசாமி முதலியார் அவர்கள், இரண்டோர் திங்களுக்கு முன்பு சென்னை வந்தபோது கூட இங்குள்ள வியாபாரத் துறையினர், விலைக் கட்டுப்பாடு எப்போது குறையும், சர்க்கார் தலைடு எப்போது நீக்கப்படும், சரக்குகளின் நடமாட்ட சுதந்திரம் எப்போது ஏற்படும, என்ற பிரச்சனைகளைப்பற்றி ஆவலோடு பேசினரேயல்லாமல், நாம் குறிப்பிடும் எதிர்கால இயந்திரத் தொழிற்சாலை அமைப்புக்கான முறைகளைப் பற்றியோ, திராவிடத்திலே, இன்னின்ன வகையான தொழிலைப் போருக்குப் பிறகு புதிதாகத் துவக்க இயற்கை இடந்தரும், இயற்கை வளத்தை இன்னின்ன இடர் சூழ்ந்துளது, அதனைப் போக்கும் வழி இவை, எனும் பிரச்சனைபற்றியோ பேசினாலில்லை. வடநாடு வகையுடன் இது விஷயத்திலிருக்கத் திராவிடம், தெளிவு பெறாதிருப்பது, மனக்கஷ்டமூட்டுவது மட்டுமல்ல, எதிர்காலத்தை இடர் மிக்குளத்தாக்கும் என்றோம். அஞ்சுகிறோம். காங்கிரஸ் கட்சியினருக்குத் திதாவிடம் தனிநாடு என்ற தத்துவமே பிடிக்காது, எனவே அவர்கள் இது விஷயத்திலே அக்கரைகொள்ள மாட்டார்கள். நமது நிலை அப்படியல்ல எனவே, இனிச் சேலத்திலே கூட இருக்கும்.. நீதிக்கட்சி மாநாட்டிலே, திராவிட நாட்டின தொழில வளப்பெருக்கத்துககான ஓர் திட்டம் தயாரிக்கும். பொருப்பை ஏற்றுக்கொள்ள ஒரு தனிக்குழு அமைக்கப்பட வேண்டும்.

இவ்வாண்டு இது விஷயமாக முஸ்லீம் லீக், முக்கியமானதோர் அமைப்பை ஏற்படுத்தியது காண நாம் மிக மகிழ்ச்சி அடைகிறோம். இன்று மட்டுமல்ல, பொது உடைமை ஆட்சி ஏ.ற்படாதவரை, எங்கும், எவரிடம், எந்தப் பகுதியினர் அல்லது வகுப்பினரிடம் பொருளாதார இயந்திரம், இருக்றிதோ, அவர்களே ஆள்பவராகவோ, ஆள்பவரை ஆட்டிவைப்பவராகவோ இருக்கமுடியும். எங்கும் ஆஸ்ரமங்கள் நிறைந்து, காவியே நாடாண்டால் மட்டுமே, பொருளாதார ஆதிக்கத்தைப் பற்றிய சிந்தனை இலாதொழியும். இந்நிலை சில ஏட்டிற் காணவும், பாட்டுமொழி பேசும் புலவர்களின் பொன்னுரையிலே கேட்கவும், இயலுமெயன்றி, நடைமுறைக்கு எற்றதன்று. தொழில்வளம், வாணிப வளம், உலகிலே எப்பகுதயிலே அதிகமாக உதோ, அப்பகுதி உலகை ஆளவழி வகை தேடிக்கொள்ளும் இங்கும், இந்த ஆட்சி கூடாது என்று இயம்பும் முஸ்லீம், பாக்கியஸ்தானைப் பரிபாலிக்கத் தொடங்கிய பிறகு, தொழில்வளத்தைப் பெருக்காது போனால், சுயாட்சியின் சுவையை அனுபவிக்க முடியாது. வடநாட்டிலே உள்ள வியாபாரக் கோமான்களும், ஆலை அரசர்களும், இன்று அரசியலை ஏலம் எடுக்கக்கூடிய நிலையிலே உள்ளனர் என்பதையோ, உண்மையிலேயே பிரிட்டிஷாருக்கு இந்தியாமீதுள்ள பிடிதளர்ந்து வருவதற்கும், பிடியினால் உண்டாகும் பலன் குறைவதற்கும் காரணம், பெருத்தகுரல் கொண்ட தேசீயவாதியின் கிளர்ச்சியல்ல! ஆலை அரசர்களும், வணிக வேந்தர்களும், பொருளாதாரப் போர் முனையிலே, வெளிநாட்டுப் படையைத் தாக்கி வருவதேயாகும்! என்பதையோ மறுப்பதற்கில்லை. ஆங்கிலக் கம்பெனிகள் எங்கும் காணப்பட்ட காலம்போய், ஆங்கிலருக்கு வேலைதரும் நிலையிலுள்ள வடநாட்டுக் கம்பெனிகள் எங்கும் நிலைத்துவிட்டன. இரும்பரசனாக டாடா கம்பெனியும், பருத்திப் பார்த்திபனாக பஜாஜ் பிர்லா கூட்டமும் இருப்பது, காந்தியும், ஜவஹரும் நடத்தும் கிளர்ச்சியைவிடப் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்குப் பேரிடி என்பதை, ஆர அமர யோசிப்போர் உணருவர். பிரிட்டிஷ் பிடிதளரத் தளர, மார்வாரி மண்டலமாக, இந்திய பூபாகம் மாறத் தொடங்கிவிட்டது. நாட்டுக்கு நரம்புபோன்ற தொழிலகள், வீரிய விருத்தி மருந்துபோன்ற ஆலைகள் முதலியன, பாரதகண்டத்து யூதர்கள் கையிலே உள்ளன. இந்த நிலையிலே, பாகிஸ்தானும் இருக்குமானால் பயன் என்ன? இதனையோசித்து, ஜனாப் ஜினனா அரியதோர் அமைப்பை இதுபோது ஏற்படுத்தியுள்ளார். இக்குழு, பாக்கிஸ்தான் வட்டாரத்தின் இயற்கை வளத்தைக் கண்டறிந்து, அதற்கேற்ற முறையிலே, என்னென்ன தொழிற் சாலைகளை எவ்வணணம் ஏற்படுத்த முடியும் என்பதற்கான திட்டம் தயாரிக்கும். நாம், கூறும் யோசனை, இதையொட்டியதே, திராவிடம், தனியரசுடன் வாழ வேண்டுமானால், கொருளாதாரத்திலே பிச்சைக் கிண்ணமேந்திக் கொண்டிருககக் கூடாது. அவ்விதமான அவசியத்திலே நம்நாடு இல்லை. இயற்கை, லோபித்தனமுடையதுமன்று. வளமற்றதல்ல நம்வட்டாரம். தொழிலுக்கு ஏற்ற இடமே வணிபம் ஓங்கியிருநது இடம். வகையறிந்தோர் வாழுமிடம். திராவிடநாட்டின், இயற்கை வளத்தையும் எங்கெங்கு என்னென்ன களஞ்சியங்கள் அமையும், என்பதையும், கண்டறிந்து, விஷயத்தைத் தொகுக்க வேண்டும். திராவிடத்திலே, என்னென்ன விதமான தொழிற்சாலைகளை எவ்வெவ்விடத்தில் ஏற்படுத்தலாம், என்ற திட்டத்தைத் தயாரிக்க வேண்டும். இதற்கென ஒரு தனிக்ழு. தளரா ஊக்கத்துடன் பணியாற்றவேண்டும். இதுபோது, என்னென்ன விதத்திலே, எவ்வளவு பொருள், வெளிநாடுகளுக்குப் போன்றதென்ற கணக்கம், இப்பொருள்களை இங்கேயே உற்பத்தி செய்யும்வழி என்ன என்பதையும், கண்டறிந்து, ஓர்வேலைத் திட்டத்தைத் தொகுத்தல் அவசியம்.

ராஜாசர் அண்ணாமலையார், சர்.சண்முகம், எ.கு.இரத்தினசபாபதி முதலியார், இக்கமிட்டிக்கு அமைப்பாளர்களாக இருந்து, ஆந்திர, கேரளத் துணைத்தலைவர்களைத் தெரிந்தெடுத்துப் பணிபுரியத் தொடங்கினால் பயன் மிகுதியுண்டு என்பதைக் கூற வேண்டுமோ! இன்று, குடும்ப மேன்மைக்கு மட்டுமே பயன்படும், இத்திராவிடத் திருமணிகளின் அறிவாற்றல், பிறந்த நாட்டுக்குப் பயன்படுவதைக் காண்பதை விடச் சிறந்தபேறு, அவர்களுக்குத்தான் என்ன இருக்க முடியும்! செல்வத்தை இவர்கள் கண்டு கண்டு இந்நேரம் சலித்தே போயிருக்கவேண்டும். சபலகுணம் மிகச் சக்தி வாய்ந்ததுதான் என்றபோதிலும, அவர்களை நாம், திராவிடம் எனும் பெரியதோர் குடும்பப் பாதுகாப்பாளர்களாகவன்றோ இருக்க அழைக்கிறோம், தம் வாழ்நாளிலே, பிறந்த இடத்தின் பொருள்வளத்தையே வளர்த்தோம் என்ற திருப்தி, சொந்தத்திலே, சொகுசான வாழ்வை அனுபவிக்க மட்டுமே பயன்படும் பணக்குவியலைவிட, பன்மடங்கு, இன்பந்தரவல்லது. இந்த அமைப்பை உருவாக்கக் கோவை மோட்டார் மன்னர் தோழர் ஜி.டி.நாயுடு அவர்களே, முனைய வேண்டுமென்பது நமது வேண்டுகோள். பிறிதேரிடத்திலே இப்பெரியாரின் பெருங்குண விளக்கமான கொடை விபரம் வெளியிட்டுள்ளோம்.

சேலத்திலே நடைபெற இருக்கும் நீதிக்கட்சி மாநாட்டிலே, இதற்காக வழிகாண வேண்டும். இன்று நமக்கு அவசியமானது. எந்தத் தலைவர் தேவை, என்ற பிணக்கூட்டும் பிணிப்பேச்சல்ல, பணிபுரியக் குழுவும் பயனுள்ள திட்டமுமேயாகும்.

இத்தகைய திட்டங்கள் இல்லையெனில், ஆயிரமாயிரம் கோடியாகக் கூடப் பணம் கிடைப்பினும், அரிய பெரிய தலைவர்களின் அணிவகுப்புப் பெருகினும் பயன் இராது. ஆகவே இதுபற்றி அறிவாற்றலுள்ள நமது தலைவர்கள் யோசிக்க வேண்டுகிறோம்.
(திராவிடநாடு - 16.01.1944)