அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஆழம் அறியாமல்..!

போர் முறையில் அநுபவம் இல்லாத பலர், ரஷ்யரின் போர்முறையைப் பற்றிக் கேவலமாக நினைத்தும் பேசியும் எழுதியும் வந்தனர். ஜெர்மானியர் ரஷ்யரைத் தோற்கடித்துவிடுவர் என்று மனப்பாலும் குடித்தனர். இதற்கேற்பவே ரஷ்யரின் போர்முறையும் சிலகாலம்வரை ஜெர்மானியரின் அக்கிரம ஆக்கிரமிப்புக்கு ஆளாகிப்பல ஊர்களை இழக்கும்படி நேரிட்டது. இதற்குக்காரணம், போதிய தளவாட வசதி இல்லாமல் இருந்தமையேயன்றிச், சிலர் கருதுவதுபோலக் கோடைகாலக் நிலையன்று என்பதை நாம் அறிவோம். ஏனென்றால், கோடை காலத்தில் ரஷ்யரால் போர் செய்ய முடியாதென்பது ஹிட்லருடையவும் அவரைச் சார்ந்தாருடையவும் நினைப்பாக இருந்தது, அதனாலேயே ஹிட்லரும் கோடைகாலத்தைக் குதூகலமாக வரவேற்றுக்கொண்டிருந்தார். ஆனால் நடந்ததென்ன? மாரிகாலத்தைவிடக் கோடைகாலமே ரஷ்ய மக்களின் போர்முறைக்கு மிகவும் ஏற்றதாய் இருந்தது. மாரிகாலப் போர்வீரர் ரஷ்யர் என்பதுமாறி, மாரிகாலமும், கோடைகாலமும் உண்மைக்கும் உரிமைக்கும் போராடும் ரஷ்யருக்கு ஒன்றே என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

ரஷ்யமக்கள், எந்தெந்த இடங்களை கொடுங்கோலனான ஹிட்லரின் கோடைகோலனான ஹிட்லரின் கோடைகாலத் தாக்குதலுக்கு விட்டுக் கொடுக்கவேண்டியதாயிற்றோ, அந்த இடங்களை எல்லாம் கோடைகாலத்திலேயே திரும்பப் பிடித்தனர், இன்னும் பிடித்தவண்ணமே ரஷ்யர் முன்னேறிச் செல்கின்றனர். நாளுக்கு நாள் ரஷ்யரின் முன்னேற்றம் பலமடைந்து கொண்டே வருகிறது.

எதிர்பாராத இந்த முன்னேற்றம் நாஜித் தலைவனுக்கு நடுக்கத்தை உண்டாக்கிவிட்டது. “ரஷ்யர் நடத்துகின்ற இந்தத் தாக்குதல்களும், அவர்களின் படைபலமும் ஜெர்மானியரைப் பிரமிக்கவைத்துவிட்டது” என்று பெர்லின் நிருபரே எழுதுகிறார் என்றால், ரஷ்ய மக்களின் உத்வேகம் இன்னும் எவ்வளவு பன்மடங்கு அதிகமாக இருக்குமென்பதைச் சொல்லவும் வேண்டுமோ! கிரிஸ்மஸுக்குள் ஜெர்மனி தோற்றுவிடும் என்பதாக ஜெர்மானியரே எதிர்பார்க்கின்றனர் என்றும், ஜெர்மானியர் தங்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர் என்றும் போர் வட்டாரங்களிலேயே பேசப்படுவதாக இங்குச் செய்திகள் கிடைக்கின்றன. ஜெர்மானியிலேயே ஹிட்லருக்கு எதிராக ஒரு கூட்டம் கிளம்பித் துண்டு நோட்டீசுகள் வாயிலாக ஹிட்லரின் கொடுமைகளை வெளிப்படுத்தி வருவதாகவும் செய்திகள் கிடைத்துள்ளன. இந்த நிலையில் ஹிட்லரின் பாடு “ஆழமறியாமல் காலை வைத்தேனே” என்ற திகிலை உண்டாக்கியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

எனவே, நாஜிசத்தின் அழிவு இதனால் ஏற்பட்டுவிடுமென்ற நம்பிக்கையோடு நின்று விடாமல், உலக சமாதானத்தை விரைவில் காணவேண்டுமானால், ரஷ்யப் போர்க்களத்துக்குத் தளவாட உதவி இன்னும் பன்மடங்காகப் பெருகுவதில் பிரிட்டிஷாரும், அமெரிக்கரும் பெரிதும் கவனம் செலுத்தவேண்டுமென்பதை வற்புறுத்திக் கூறுகிறோம்.
31.10.1943