அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அபலை அழுகிறாள்
அதோ செல்லும் அந்த அபலையைப் பார்! அழகும் இளமையும், தேய்ந்துகொண்டே இருக்கிறது. மேனியின் மெருகு மங்கிவிட்டது - மனம், குமுறலைக் கொண்டு கொண்டு, குழம்பிப் போய்விட்டது. குறுநடை நடக்கும் சிறுவனுடன் சென்றுகொண்டிருக்கும் அந்தப் பெண்ணை, இக்கதிக்கு ஆளாக்கி விட்ட ஆணழகர், ஆற்றல் மிக்கவர், நாட்டுக்கு நற்றொண்டாற்றியவர், அவர், இக்காரிகையின் இளமைக்கும் எழிலுக்கும், கனிமொழிக்கும் காதலுக்கும் கட்டுண்டு விட்டார். எனவே, கைவிடமாட்டார் என்றே ஊரார் எண்ணினர். அவருடைய அன்புரையைப் பருகிய அணங்கும் அவ்விதமே எண்ணினாள்; உலகை உதாசீனம் செய்யத் துணிந்தாள், பேதைப் பெண்ணே! இன்மொழி கேட்டு இதயத்தைக் காணிக்கையாகத் தந்துவிட்டாய் - நெஞ்சாழத்தைக் கண்டாயோ - மேல்வாரியாக இருக்கும் மோக அலைகளை மட்டும் நம்பிடாதே, அடித்தளத்திலே, வஞ்சகம் உறங்கிக்கொண்டிருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்த்தாயா? என்று அவளிடம் சிலர் கூறியபோது அவள் சிரித்தாள். இப்படியும் சில அவநம்பிக்கைக்காரர்கள் உள்ளனரே, காதலின் ஜோதியைக் காணமுடியாத குருடர்களாக உள்ளனரே என்று எண்ணிச் சிரித்தாள். அவர் இவ்வூரின் காவலர்! அறியீரோ? என்று கேட்டாள். ஆம்! அறிந்திருப்பதால்தான், கேட்கிறோம் அவர் நெஞ்சாழத்தை நீ அறிந்திருக்கிறாயா என்பதை என்று மறுகேள்வி விடுத்தனர் - அந்த மங்கை மருளவில்லை. அவர் ஆசையை அலையவிடும் பேர்வழி அல்லர். உறுதி நிரம்பிய உள்ளம். உலுத்தர் வழி செல்பவரல்லர். அவர் என்னை விரும்பினார் என்றால், பல மாதரிடம் மையல் கொண்டிருந்தார், பத்தில் நான் பதினொன்று என்ற முறையிலே அல்ல. ஊரே ஆச்சரிய மடைந்தது, அவர் உள்ளத்திலே எனக்கு இடம் கிடைத்தது கண்டு. அப்படிப் பட்டவரா, என்னைக் கைவிடுவார்!’ அவரா, என்மீதுள்ள அன்பை மறப்பார்! என்றுதான் அந்த அபலை, ஆர்வத்துடன் கூறினாள். ஆயினும், அவள் கைவிடப்பட்டாள் - கலங்கினாள் - கண்ணீர் பொழிந்தாள் - கைவிடாதீர் என்று கெஞ்சினாள் - காதலின் விளைவான குழந்தையைக் கையில் ஏந்திச் சென்று, நீதி கேட்டாள்! கிடைக்கவில்லை! அபலையானாள்! அலைகிறாள்! ஆற்றுவாரற்று! அவளை, இக்கதிக்கு ஆளாக்கிய ஆணழகரோ, ஊர்க் காவலர் எனும் உயர்ந்த இடத்தை அலங்கரித்தபடி தான் இருக்கிறார், ஊராரோ, அவருடைய உள்ளம், கள்ளர் குகை போன்றிருந்ததே என்பதுபற்றி ஒரு சொல் கூறவும் திறனற்றுத்தான் இருந்தனர். காதலித்தவர், கைவிட்டாரே, இது துரோகமல்லவா! கனிமொழி தந்த காரிகையையே இப்படிக் கதியற்றவளாக்கி விடத் துணிந்தாரே, இந்தக் கடின சித்தர், ஊர் மக்களின் நலனுக்காகச் சிறுவிரல் அசைக்கவும் முன்வருவாரா! - என்று சிந்திக்கவில்லை. ஊர்ப் பிரச்னையையும் உலகப் பிரச்னையையும் தீர்த்து வைக்கும் திறனிருப்பதாகக் கூறிக் கொள்பவர், இந்தத் துரோகக் காரியம் செய்தது, அடுக்குமா? என்று கேட்கவில்லை - துணிவு இல்லை - நெஞ்சில் ஈரமும் வீரமும் ஏககாலத்திலே வற்றிவிட்டது. காரிகையைக் கைவிட்டவர், ஊர் மன்றத்திலே இடம் இழக்கவில்லை - உயர்நிலையை இழக்கவில்லை!

பழைய சகுந்தலைக் கதைபோல, பரதன், சதிபதிகளைச் சேர்த்து வைத்து, கதை சுபமாக முடியவுமில்லை. பரதன், சகுந்தலைக்கும் துரோக மிழைத்த துஷ்யந்தனை ஊரார் தூயவன், மேலாவன் என்று கூறிடக்கேட்டுத் துடிக்கிறான்.

யார் இந்தக் கண்ணியர்? காதலித்து மங்கையைத் தயாக்கிப்பிறகு, கை விட்ட மகானுபாவர் யார்? எங்கிருக்கிறார்? - என்று கேட்கத் தோன்றும்.

யாராக இருந்தால் என்ன! அவர், இன்றும் கண்ணியர்கள் வரிசையிலே வைத்துப் போற்றப்படத்தான் செய்கிறார். கைவிடப்பட்டவள் கதறுகிறாள், அவரோ, காலத்தால் தாக்கப்பட்டு, அனுபவச் சுமையாகிவிட்ட வேறோர் அம்மையுடன், சரசசல்லாப சுந்தரராகவே காலந்தள்ளுகிறார்.

“ஓஹோ! புரிந்துவிட்டது, புரிந்து விட்டது! இவரைப் பற்றித்தானே கூறுகிறார்!” என்று, அன்பர்கள் தமக்குத்தெரிந்த ஏதேனும் கவலை, நாம் குறித்திட்ட கதையுடன் பொருத்திப்பார்த்திட வேண்டும்.
நாம் கூறுவது காதலித்தவளைக் கைவிட்டு, கதறச் செய்துவிட்டு, வேறோர் இடம் நாடும், வெளிச்செயலை, நேர்மையாளர்கள் கண்டிக்க வேண்டியது முறை, கடமை என்ற போதிலும், பொதுவாக ஊரார், எப்படி நமக்கென்ன என்று இருந்து விடுகிறார்களோ, அதுபோலவே அரசியல் உலகிலே, ஒருகட்சி, எந்த மக்களைக் காப்பாற்றுவதாக வாக்களித்து எந்த மக்களின் அன்புரையைக் கொண்டு, பதவிக்குவந்ததோ, எந்த மக்கள் மனமார, உறுதியாக நம்பினரோ, அந்த மக்களைத் தவிக்கச் செய்துவிட்டு, மக்களின் நலனை மதிக்கமறுக்கும் சிறுகூட்டத்திடம் சொக்கிக்கிடந்தால், பொதுமக்கள் மனம் பதறினாலும், வெளியே எடுத்துக்கூறத் துணிவின்றிக் கிடக்கின்றனர் என்ற நிலையை விளக்கவே காதலின் கடமையை மறந்த கன்னியரின் கதையை, எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டோம்.

காங்கிரஸ் கட்சிக்கே இந்நாட்டு, மக்கள் மன்றத்திலே உயர்விடம், மேலிடம், கிடைத்தது. ஏழை பங்காளனாகவே, காங்கிரஸ்கட்சி வளர்ந்தது. ஏழையைக் கைவிடமாட்டேன் என்றே உறுதி கூறிற்று. ஏழை, உளமார நம்பினான் -உறுதியாக நம்பினான், ஊராளக் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்புக் கிடைத்தாலும், தந்நிலை உயரும், வாழ்வு மலரும் என்று. கட்சியின் மேம்பாட்டுக்காகப் பணிபுரிந்தான்; தியாகம் புரிந்தான்! ஆனால், பயன் என்ன கண்டான்?எடுத்துக் காட்டிலே குறித்திட்டபடி, ஏமாற்றப்பட்ட ஏந்திழை, சிறுகுழந்தையை எடுத்துக்கொண்டு தெருவில் அலைவதுபோல, ஏழை, தன்தியாகத்தைக் காட்டியும், நீதி நியாயம் கேட்டுப் பார்த்தும் ஏமாற்றமே காண்கிறான்.

ஏழை கைவிடப்பட்டான் - கதறுகிறான் - கவனிப்பார் இல்லை! காதலித்தவன், கைவிட்டதால், கதியற்றுப் போன காரிகைபோலக் கனிமொழியாளைக் கைவிட்டு வேறிடம் தேடிக்கொண்ட கண்ணியமற்றவர்போலக் காங்கிரசாட்சியினரும், ஏழையை அழஅழ விட்டுவிட்டு, பணமூட்டை
களுடன் சல்லாபம் செய்கின்றனர் - வெட்கமோ வேதனையோ, துரோகம் புரிகிறோமே என்ற அச்சமோ துளியும் இன்றி.

நேர்மையாளர்கள் சிலர் கண்டிக்கின்றனர் - ஆனால், பொது மக்கள் தமது மனம் திறந்து பேசமுடியாது, குமுறுகின்றனர்.

ஏழையைக் காட்டிக்கொடுத்து விட்டு, பணமட்டைகளுடன் காங்கிரசாட்சியினர் கூடிக்குலாவும் நிலையை இவ்வாண்டு ‘பட்ஜெட்’ தெளிவாகக் காட்டுகிறது.

ஏழைகளுக்குப் புதிய புதிய வரிகள் - செல்வவான்களுக்கு, சிந்து, லாலி, உபசாரம், வரிகுறைப்பு!
வருமானவரித் திட்டத்திலே, செல்வவானுக்குச் சாதகமான, மாறுதல்; ஏழைக்கோ, அரையணா கார்டு, முக்காலணா கவர், இரண்டணா! பல புதுப் பொருள்களின் மீது வரி!

சல்லாபம், சீமான்களிடம், ஏழை பங்காளனின் இன்றைய நிலை இது. சரியா? கேட்டால், தீர்ந்தது, கர்ஜனை செய்கிறார் காமராஜர் - யார் நீ! கபர்தார்! சும்மாவிடமாட்டேன்-! - என்கிறார். பொதுமக்களின் நிலைமை, நாம் குறிப்பிட்ட எடுத்துக் காட்டிலே காணப்படும் அபலையின் நிலைக்கு வந்துவிட்டது.

காங்கிரசைக் கண்டிப்பதையே வேலையாகக் கொண்ட கயவர்கள் என்று நம்மைக் கண்டிக்கும் காமராஜர்களின், கண்களுக்கு, அந்த அபலையின் காட்சி தெரிவதில்லை - மமதையோ, மயக்கமோ, காரணம் அறியோம்!

காமராஜருக்குத் தெரியும் நண்பர் ஓ.வி. அளகேசன் - உடை கருப்பு அல்ல, கதர்! கட்சி, காங்கிரஸ்! அவர், இவ்வாண்டு ‘பட்ஜெட்’ எப்படி இருக்கிறது என்பதைப்பற்றி, மன்றமேறிக் கூறியிருக்கிறார். ஓய்வு கிடைக்கும்போது, சல்லாபம் காட்டிக்கொண்டு, சண்டமாருதப் பிரசாரத்துக்குக் கிளம்பியுள்ள காமராஜர், படித்துப்பார்க்க வேண்டுகிறோம் - அது சிரமம் என்றால், படிக்கப் படிக்க, நின்றாகிலும் கேட்டுப் பார்க்க வேண்டுகிறோம்.

“நிதி மந்திரி சோஷியலிஸ்டு தத்துவத்தை உடையவராயினும், பணமூட்டைகளைத் திருப்தி செய்யமுனைந்துவிட்டார். உதவிக்குச் சிறிதும் அருகதையற்றவர்களுக்கு அவர் உதவி செய்கிறார். ஸ்ட்ரைக்குகளைக் குறைத்து உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம் தொழிலாளர்கள் தங்களுடைய பங்கைச் செய்து விட்டனர். ஆனால், முதலாளிகளோ, சர்க்கார் வெளியிட்ட கடன் பத்திரங்களைக் கூட வாங்கவில்லை. இந்தப் பட்ஜட்டின் மூலம் உதவி பெறும் பணமூட்டைகள் சிறிது கூடத் தேசபக்தியற்றவர்கள்.”

அவர் தந்த ‘சூடு’ போதாது, என்று அன்பர் கருதுவராயின், இதோ மேலும் சில - ஆனால் யாவும், மூவர்ணக்காரரின் முழக்கமேதான், கருப்புடையான் கண்டனம் அல்ல!

“புதுவரி விதிப்புயோசனகள் ஏழைகளின் வயிற்றில்தான் அடிப்பதாக இருக்கின்றன. இப்பொழுதுள்ள சர்க்கார் பணக்காரர்களால் பணக்காரர்களுக்காகவே நடத்தப்படும் சர்க்கார்போல் காணப்படுகிறது” - இது தேசியவாதி, திருமல்ராவ் என்பவர் தரும் சூடு.

“இந்தப் பட்ஜட்டில் ஓர் அம்சமாவது ஏழைகளுக்கு உதவி புரிவதாக இல்லை” - என்று கூறுகிறார், கேசவராவ்.

“பாமர மக்களைப் பொறுத்தமட்டில் பட்ஜட் திட்டங்கள் மிகவும் ஏமாற்றமாகும்” என்கிறார் திருமதி அம்மு சுவாமிநாதன்.

“எளியவர்களின் வயிற்றிலடித்து, யார் உதவி பெற அருகதையில்லையோ, அவர்களுக்கு பட்ஜட் உதவி அளிக்கிறது” என்று கண்டிக்கிறார், சந்துபாய் தேசாய்.

“இந்தப் பட்ஜெட், மொத்தத்தில், கஷ்டத்தைக் கண்டறியாத முதலாளித்துவத்திற்கு அசல் கொம்புத்தேனில் பிசைந்தெடுத்த பஞ்சாமிர்தம்.” என்று நேதாஜி எனும் இதழில், பசும்பொன் முத்துராமலிங்கம் எழுதுகிறார்.

இவர்கள், காமராஜர் போலவே, காங்கிரசார்தான் - வைரம் பாய்ந்த தேசியவாதிகள்! இவ்வளவு நேர்மையாளர்கள், ஏழையைக் காங்கிரசாட்சி கைவிட்டு விட்டதைக் கூறுகிறார்கள்! முதலாளிகளுடன் கூடிக் குலவுவதைக் கூறுகிறார்கள்.

அபலை அழுகிறாள்! ஆணழகரோ, ஊரில் முதல்வராய், உயரிடம் அமர்ந்து, உத்தமர் என்று கருதப் பட்டு இருக்கிறார்.

இந்நிலை, எத்தனை நாளைக்கு நீடிக்கும்?

ஏழையின் கண்ணீர் வெற்றிபெறாமலா போகும்? வரலாறு, திட்டமாகக் கூறுகிறது, ஏழையின் கண்ணீர் புனல்மட்டுமல்ல, கனலாகி, எத்தகைய கொடுங்கோலாட்சியையும் கருக்கிவிடக் கூடியது என்று.

அந்தநாள் வரும்வரையில், அபலை அழத்தான் வேண்டும்!
13.3.1949