அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அச்சு முறிந்த வண்டி!
சேற்றில் சிக்கிக்கொண்ட வண்டி! என்று ஆச்சாரியார் காங்கிரசை வர்ணிக்கிறார். அதை வெளியே தள்ளிவிட்டு, மீண்டும் அதிலே ஏறிக்கொள்ளவே, இப்போது வண்டியை விட்டுக்கீழே இறங்கினாராம்! நமக்கிருக்கும் சந்தேகம், வண்டியைச் சேற்றிலிருந்து வெளியே தள்ளும் சக்தி ஆச்சாரியாருக்கு உண்டா இல்லையா என்பதன்று, இந்த முயற்சியே, ஆச்சாரியார் சேற்றிலே இறங்கிவிட்டால், அவரைச் சேற்றிலிருந்து வெளியே இழுத்துவிட வேண்டி நேரிடுமே! அதற்கு யார் இருக்கிறார்கள் என்பதேயாகும்.

உண்மையில் ஆச்சாரியார் கூறின உவமை சரியானதன்று, பொருந்தாது. காங்கிரஸ், சேற்றிலே இறங்கிய வண்டியன்று! அச்சு முறிந்தவண்டி, ஆகாத வண்டி! அதில் பூட்டப்பட்டிருக்கும் மாடு ஒரு சண்டி கொஞ்சம் அதற்குக் காலும் நொண்டி! காந்தியார் பிடிவாதக்காரர், பலமுறை போரிட்டுத் தோற்றிருக்கிறார். எனவே அவரைச் சற்றுக்கால் நொண்டியான சண்டி மாடு என்றுரைத்தோம்! வண்டியின் அச்சு முறிந்தது, பளுத்தாங்காத காலும், பாறை சரியில்லாததாலும், இரண்டரை வருட ஆட்சியிலே அந்த வண்டி ஏற்றிச்சென்ற மமதை மிகமிகப் பளுவான வஸ்து, இஸ்லாமியரையும் திராவிடரையும் ஏய்க்கவேண்டும் என்பதற்காக, காட்டு வழி சென்றது. எனவே காங்கிரஸ் வண்டியின் அச்சு முறிந்திருக்கிறது. அந்த அச்சு முறிந்த வண்டியிலே பூட்டப்பட்டிருக்கும் நொண்டி யான சண்டிமாடு, வண்டியை இழுத்துச் செல்கிறது. வெளியே வந்த ஆச்சாரியார், இதனைத் தெரிந்துகொள்ள வேண்டுகிறோம்.

காந்தியார் தமது புதுப்போராட்டத்தைத் துவக்கியே தீருவதென்று முடிவு செய்துவிட்டார். யுத்த முயற்சியைக் கெடுக்கத் துணிந்துவிட்டார். பாகிஸ்தானை எதிர்த்தே தீருவதென்றும் தீர்மானித்து விட்டார். இந்த இரண்டும் ஆச்சாரியார் போக்குக்கு நேர்மாறானவை, ஆச்சாரியார், யுத்த முயற்சியில் ஈடுபட்டாக வேண்டும் என்றும், பாகிஸ்தானிகளுடன் சமரசம் செய்து கொள்ளத்தான் வேண்டுமென்றும் கூறிவிட்டார். இனி எப்படி அந்த வண்டி ஆச்சாரியாருக்கு ஏற்றதாக முடியும்! ஏனோ இன்னமும் அவருக்கு இந்த மயக்கம்!!

இந்தப் புதுப்போர் பிரிட்டிஷாருக்கு எதிர்ப்பு என்ற பெயரில் துவக்கப்பட்டாலும், உண்மையான நோக்கம் வேறு! காந்தியாரே தமது அறிக்கையிலே பிரிட்டிஷாரின் யுத்த முயற்சியைக் கெடுக்க வேண்டுமென்று நான் எண்ணவில்லை. அப்படி எண்ணினால், மூன்றாண்டுகளுக்கு முன்பே இதனைச் செய்திருப்பேன் என்று குறிப்பிடுகிறார்.

இப்போது இந்தத் தீயில் குதிக்கம் திருவிழா நடத்துவதற்குக் காரணம், முஸ்லீம் திராவிடர் ஆகியோரின் கேளிக்கைகளை, ஓரளவுக்குப் பிரிட்டிஷார் ஏற்றுக் கொண்டதால், மனம் வெதும்பி பிரிட்டிஷாரை மிரட்டி, இஸ்லாமிய திராவிடர்களின் கோரிக்கைகளை ஒழித்துவிட வேண்டும் என்ற எண்ணமேயாகும். இந்தப்போர், வகுப்புப் போராகவே வளரும் என்பதை அவர் அறிவார். ஆனால் அராஜகத்தை அணைத்துக் கொள்ளவும் தயாராகிவிட்டதாகத் தெரிவிக்கிறார்.

வகுப்புக் கலவரமாகவே இந்தப்போர் வளரும் என்பதற்கு சந்தேகமில்லை.

1930-34ல் காங்கிரஸ் சட்டமறுப்பு இயக்கத்தை நடத்தியதற்கு, காங்கிரசின் போக்கு முஸ்லிம்களால் கண்டிக்கப்பட்டது. சட்ட மறுப்பு இயக்கத்திலே சேராதவர்களைத், தேசத் துரோகிகள் என்றும், நாட்டைக் காட்டிக் கொடுப்பவரென்றும், வெள்ளைக்காரருக்குக் குலாம் என்றும் காங்கிரசார் தூற்றித், துவேஷப் பிரசாரம் செய்தனர். விஷயமறியாத மக்களிடம் சட்ட மறுப்பில் சேர மறுத்தவர்கள்மீது வீண் பழிசுமத்தி விரோத மனப்பான்மையை உண்டாக்கி வைத்தனர், ஆத்திரமூட்டினர். அதன் பலன் என்ன? நாடெங்கும் வகுப்புக் கலகம்! அமளி! கொலைகுத்து முதலியன தாண்டவமாடின. இதோ அந்தச் சமயம், சாந்த சொரூபியாம் காந்தியாரின் கைங்கரியத்தின் எதிரொலியாக விளைந்த விபரீதத்தின் விவரம் தருகிறோம், பாருமின் எவ்வளவு நெருக்கடி விளைந்தது என்பது விளங்கும். சமாதானம் நிலவி இருந்த காலத்திலேயே இத்தகைய கோரம் நிகழ்ந்ததென்றால், சமர் நடக்கும் இதுபோது, எதிரிகள் எப்பக்கம் பாயலாம், எப்போது தாவலாம் என்று எண்ணமிட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்திலே, கொடுமையும் கோரமும் எவ்வளவு பயங்கரமானதாகவும், நாட்டைக் கெடுக்கக்கூடியதாகவு மிருக்கும் என்பதைச் சற்று யோசியுங்கள். இதோ தகவல்!

சட்ட மறுப்புச் சமயத்திலே நடந்த வகுப்புக் கலவரங்களில் சில இவை.
ஜூலை 8ந் தேதி - வங்காளத்தில் ரங்கபூர் என்ற இடத்தில் கலவரம்.
ஜூலை 9ந் தேதி - வேலூரில் வேதனை.
ஜூலை 10ந் தேதி - லாகூரில் அடிதடி.
ஜூலை 11ந் தேதி - பம்பாயிலும், ஐக்கிய மாகாணத்தில் எட்டா என்ற இடத்திலும் வகுப்பு அமளி.
ஜூலை 12, 15 - வங்காளத்தில் மைமன் சிங் பகுதியில் கலகம்.
ஜூலை 17ந் தேதி - மதுரையில் மண்டை உடை திருவிழா. மத்திய மாகாணத்தில் அம்ரோடி நகரிலேயும் ஜபல்பூரிலேயும் அமளி.
ஜூலை 19ந் தேதி - கல்கத்தாவிலே கலவரம்.
ஜூலை 23ந் தேதி - சிந்து மாகாணத்திலே ஷிகார்பூரிலே கலவரம்.
ஜூலை 24ந் தேதி - பஞ்சாபில், லூடியானாவிலே கலகம்.
ஆகஸ்ட் 2ந் தேதி - பீகார் மாகாணத்தில் சம்பாரன் ஜில்லாவிலே கலகம்.
ஆகஸ்ட் 4 - 11 - சத்துரில் கலகம்.
ஆகஸ்ட் 12ந் தேதி - பஞ்சாபில் அமிர்தசரசில் அமளி.
ஆகஸ்ட் 22ந் தேதி - கராச்சியிலே கலவரம்.
ஆகஸ்ட் 24ந் தேதி - கோண்ட வகுப்பாரும் போலீசாரும் கை
கலந்தனர், மத்திய மாகாணத்திலே சோய்டூல் ஜில்லாவிலே.
ஆகஸ்ட் 31ந் தேதி - பம்பாயில், கெய்ரா ஜில்லாவிலே கலகம்.
செப்டம்பர் 1ந் தேதி - வங்காளத்திலே குங்னா ஜில்லா.
செப்டம்பர் 2ந் தேதி - கராச்சியில் கலவரம்.
செப்டம்பர் 4ந் தேதி - கிராமவாசிகள் போலீஸ் அடிதடி, பம்பாயில், சதாரா ஜில்லாவில் நடந்தது.
செப்டம்பர் 6ந் தேதி - நாக்பூரில் பம்பாயில் கலகம்.
செப்டம்பர் 7ந் தேதி - பம்பாய்.
செப்டம்பர் 12ந் தேதி - ஐக்கிய மாகாணத்திலே புலந்தகார் ஜில்லாவில் கலகம்.
செப்டம்பர் 16ந் தேதி - மத்திய மாகாணத்தில் ரெய்ப்பூரில் கலகம்.
செப்டம்பர் 25ந் தேதி - பம்பாயில், பான்வெல் என்ற இடத்திலே அமளி.
செப்டம்பர் 26ந் தேதி - மொரதாபாத்தில் கலகம்.
செப்டம்பர் 30ந் தேதி - வங்காளத்தில் கோபிநாத்பூரிலும், மத்திய மாகாணத்தில் ரெய்பூரிலும் கலகம்.
அக்டோபர் 2ந் தேதி - கான்பூரில் கலவரம்.
அக்டோபர் 3ந் தேதி - வங்காளத்தில் மித்இபூர் ஜில்லாவில் கலகம்.
அக்டோபர் 4ந் தேதி - ஐக்கிய மாகாணத்தில் ரூர்க்கி என்ற இடத்
திலும், வங்காளத்தில் டாப்லுக் என்ற இடத்திலும் கலகம்.
அக்டோபர் 6ந் தேதி - மத்திய மாகாணத்தில் பண்டாரா ஜில்லா
விலே கலகம்.
அக்டோபர் 10ந் தேதி - அதே மாகாணத்தில் சியோனி ஜில்லாவில் கலகம்.
அக்டோபர் 17ந் தேதி - வங்காளத்திலே டிப்பேரா ஜில்லாவில் கலகம். அக்டோபர் 19ந் தேதி - நாசிக் அருகே கலகம்
அக்டோபர் 22ந் தேதி - வங்காளத்திலே திணாஜபூர் ஜில்லாவிலே கலகம்.
அக்டோபர் 24ந் தேதி - மொரதாபாத்தில் கலகம்.
அக்டோபர் 26ந் தேதி - பம்பாயில் கலவரம்.
அக்டோபர் 28ந் தேதி - ஐக்கிய மாகாணத்தில் சண்டாசி ஜில்லாவிலே கலகம்.
அக்டோபர் 29ந் தேதி - டில்லியில் கலவரம்.
நவம்பர் 5ந் தேதி - பம்பாயில் கலகம்.
நவம்பர் 7ந் தேதி - பம்பாயில் கலகம்.
நவம்பர் 10ந் தேதி - பீகாரில் சந்தால் பிரதேசத்தில் கலகம்.
நவம்பர் 12ந் தேதி - மேற்படி இடத்திலேயே கலகம்.

மேலும் பலப்பல கலவரங்கள் நடைபெற்றன. விரிக்கின் வேதனையே மிகும். இத்தகைய குழப்பம், போர்க்காலத்தில் நடக்கப் பார்த்துக்கொண்டிருக்கப் பொதுவாகவே சர்க்காரோ சம்மதிக்க
முடியுமா? இத்தகைய குழப்பம் எதிரிக்கு உடந்தையாக இருக்கவேண்டுமென்று ... எண்ணக்காரர் தவிர மற்றையோர் செய்ய முன்வருவார்களா என்று கேட்கிறோம். காரிருள்! மின்னல்! இடி! கடலிலே வழிதவறி மரக்கலம் செல்கிறது கப்பலோட்டி, கலக்கத்தோடு, கமலையும் அலையைக் கண்டு இடை இடையே காணப்படும் பனிப் பாறைகளைப் பார்த்து, மரக்கலத்தைச் செலுத்துகிற வேலையிலே, கப்பலிலே உள்ள ஒரு குறும்பன், தன் திறமையைக் காட்ட வேண்டி, அடித்தட்டிலே, கோடாரி கொண்டு வெட்டினால், அவன் கடலிலே பசியுடன் உலவும் சுறாவுக்கு இரையாகும்படி, தூக்கிக் கடலிலே விசி எறியப்படுவான்! நாட்டுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நாளிலே, காந்தியார் இத்தகைய வகுப்புக் கலகமும் குழப்பமும் வரவேண்டுமென்ற உள் நோக்கத்துடன் கிளர்ச்சியைத் துவக்கினால், சர்க்காரும் மக்களும் அவரைச் சும்மாவாவிட்டு வைத்திருக்க முடியும் என்று கேட்கிறோம்.

திராவிட நாட்டைப் பொறுத்தமட்டிலே, காந்தியாரின் புதுப்போர், ஜஸ்டிஸ் கட்சியைத் தூற்றும் சந்தர்ப்பமாக, காங்கிரஸ்காரர்களால் உபயோகிக்கப்படுவதோடு, தீர்ந்துவிடும். காங்கிரஸிலிருந்து “கணிகண்ணன் போகிறான்... நீயும் உன் பைநாகப் பாயைச் சுருட்டிக்கொள்” என்று ஆச்சாரியார் கூறிவிட்டார். அவர் விலகியதும், பலர் காங்கிரஸிலிருந்து விலகி விட்டனர், விலகுகின்றனர், கடுமையான போர், கடைசிப்போர் என்று கிருபளானி கூறுவது கேட்டுச் சில காங்கிரசார், இந்த நேரத்திலே ஆச்சாரியார் படகு ஆபத்திராது, அதற்குப் போவோம் என்று கருதி, அவரைச் சூழ்ந்து நிற்கின்றனர். ஆச்சாரியார் இல்லாத காங்கிரஸ், பெட்ரோல் இல்லாத மோட்டாராகி, கரியில் ஓடும் வண்டிபோலாகிவிட்டது. சில கொடி தாங்கிகளுக்கு, ஆச்சாரியார் விலகினது, காங்கிரசிலே தாம்பூலம் பெறும் இடத்தை வாங்கி வைத்ததால், அவை காங்கிரசைப்பற்றித் தமுக்கடிக்கின்றன. ஆச்சாரியாரின் பிரசார பலம் இல்லை என்பதோடு, காங்கிரஸ் சம தர்மிகள், பொது உடைமைக்காரர்கள் ஆகியோரின் பிரசார பலமும், காந்தீயப் போருக்கு இம்முறை கிடைக்கப் போவதில்லை. எதிர்க்கவும் போகிறார்கள். இந்நிலையிலே காந்தியாரின் போர் நடக்கையிலே துவண்டு கீழே வீழ்ந்துவிடும் என்றே நாம் கருதுகிறோம். இயக்கம், அரிஜன இயக்கம், இந்தி இயக்கம், கிராம தேவா இயக்கம் என்பனவற்றின் பேரால் இருந்துவரும், பாரதமாதாவின் சம்பளச்
சேனை, காந்தியாரின் போரிலே கலந்துகொள்ளும், கருத்தைவிடக் காசு பிரதானம் அவர்கட்கு!

காந்தியாருக்கே, இன்று தமது போர் நடத்தக் காங்கிரஸ் பயன்படாது என்ற எண்ணம் உண்டாகிவிட்டது. ஆகவேதான் அவர், மாணவர்களையும் தொழிலாளரையும் தமது இயக்கத்திலே சேரக்கோருகிறார். சமதர்மிகள், சோவியத் அன்பர்கள், பாசிச எதிர்ப்பாளர்கள், மாணவரிடையேயும், தொழிலாளரிடையேயும், காந்தியப் போரின் கபோதித் தன்மையை விளக்கிக்கொண்டு வருவதால், அந்த இடமும், காந்தியாருக்கு அதிக பயன்தரும் என்று கூறமுடியாது, எனவே, ‘ஆள்பஞ்சம்’ வெகுவிரைவிலே ஏற்பட்டு விடும். ஆனால் குழப்பத்தையே காந்தியார் நம்பியிருப்பதால், அதனைத்தடுக்கச், சர்க்காரும், காங்கிரசல்லாத மற்றக்கட்சியிலும் கூடி ஆலாசித்துத் தக்க முறையைத்தக்க சமயத்திலே எடுத்துக் கொள்ளவேண்டும்! எடுத்துக்கொள்வர்!

இதனை நன்குணர்ந்தே சர் ஸ்டாபோர்டு கிரிப்ஸ் அமெரிக்க மக்களுக்குத் தமது ரேடியோச் சொற்பொழிவிலே, காந்தியாரின் இயக்கம் அடக்கப்படும் என்று தெளிவாகத் தெரிவித்து இருக்கிறார்.

சர். கிரிப்ஸ், காந்தியாரின் மண் குடிசையிலே தங்கினார், கதர் அணிந்தார், கைராட்டை சுற்றினார், ‘ஜனகணமன’ பஜனையில் கலந்துகொண்டார் என்றெல்லாம் கூறிப் பூர்த்த காங்கிரசார், சர். கிரிப்ஸ் காந்தியாரைப்பற்றி, அமெரிக்கருக்குக் கூறியிருப்பதனைக் கேட்டு, மனம் துவண்டு போயிருப்பர், பாவம்!

காந்தியாரின் குடிசைக்கு வருபவர்களிலே பலர், அவரையும் அவரது நிலையையும் நினைப்பையும் நடவடிக்கைகளையும் படமெடுக்கவே வருகிறார்கள் என்பதைக் காங்கிரசார் தெரிந்துகொள்ளாமல், வருகிறவர்கள் வணங்கவும் வாழ்த்தவும், சீடராகவும் சேவை புரியவுமே வருகிறார்கள் என்று நம்பி ஏமாந்து போகின்றனர்.

சர். கிரிப்ஸ், காந்தியாரின் அபிப்பிராயங்கள் எப்போதும் தெளிவாக விளங்கப்படுவதில்லை எப்போதும் முரணானதாக இருக்கும்.

இந்த மிகக் கஷ்டமான வேளையில் மிக அதீதமாக நிர்பந்தம் விளைவிக்கப்போவதாக மிரட்டுகிறார். காந்தியாரின் கோரிக்கைகளை மற்ற சக்திவாய்ந்த அரசியல் கட்சிகள் எதிர்க்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை” என்று கூறியிருக்கிறார்.

உண்மையான பேச்சு! எனவேதான் காங்கிரஸ் ஏடுகளின் உள்ளத்திலே, அவரது பேச்சு எரிச்சலைக் கிளப்பிவிட்டது.

“ஆங்கிலேயனே வெளியே போ!” என்று காந்தியப்போர் இருக்குமானால், “ஆரியரே, வெளியே போய் விடுங்கள்” என்பது பெரியார் தொடுக்கும் போராக இருக்கவேண்டும் என்று, நாம் முன்பே கூறினோம், அச்சமயம் கோயில்பட்டி, விருதுநகர் ஆகிய இடங்களிலே கூடிய நமது மாநாடுகளில், அத்தகைய போர் தேவை என்று ஆர்வமுள்ள இளைஞர்கள் துடித்தனர். ஜஸ்டிஸ் கட்சியினர் நிர்வாகக் கமிட்டிக் கூட்டம் 9-ந் தேதி நடைபெறப் போகிறது. அங்கு, நிலைமைக்கேற்றது என்ன என்று தலைவர்கள் தீர்மானிப்பார்கள். கட்டளை பிறந்ததும், கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு வெளிவரத் திராவிட வீரர்கள் தயாராக உள்ளனர்!

முஸ்லீம் லீக் தலைவர் ஜனாப் ஜின்னா நிலைமையைப் பற்றிப் பரிசீலனைசெய்ய, கமிட்டியைக் கூட்டப்போகிறார். போட்டிப் போர் துவக்குவதா, என்பது பற்றி ஆங்கு பேசப்படும்.

ஆதித்திராவிடர் தலைவர் டாக்டர் அம்பேத்கார் அஞ்சா நெஞ்சுடன், “இந்த அமளியை அடக்கித் தீர்க்கவேண்டும் என்று கூறிவிட்டார். ஆறுகோடி ஆதித்திராவிடர்கள், தலைவர் கட்டளையை எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். மற்றோர் ஆதித் திராவிடத் தலைவர், தோழர் ராஜபோஜர், காந்தியாரின் போருக்கு எதிரிடையாகப், போட்டிப்போர் துவக்கவேண்டுமென்று கூறிவிட்டார். சீக்கியத் தலைவர்கள், இச்சமயத்திலா இத்தகைய சண்டித்தனம்? என்று கேட்டுச் சீற்றத்தோடு அறிக்கை விடுத்துள்ளார். இந்துமகாசபைக்காரரும் இதுபோது இது கூடாது என்றுகூறி ஒதுங்கிக் கொண்டனர். எனவே, ஆச்சாரியாரும் அவரது சீடர்களும், பொது உடைமைக்காரர் முதலிய தீவிரவாதிகளும் அவர்களுடன் தொடர்புகொண்ட மாணவ, தொழிலாள வர்க்கத்தினரும், திராவிடரும், ஆதிதிராவிடரும், சீக்கியரும், இந்துமகா சபையினரும், கண்டிக்கும் ஒரு போராட்டத்தைக் காந்தியார் துவக்கிக் காணப்போவது என்ன? என்று கேட்கிறோம்.

காந்தியாரின் திட்டத்தைப்பற்றி சுதேசமித்திரன் 24ந்தேதி எழுதியது, “திட்டத்திற்குத் தியாகம் அஸ்திவாரம் தியாகம் செய்யப் பலர் பக்குவப்பட்டிருக்கின்றனர், எல்லாரும் பக்குவப்படவில்லை.” என்று காங்கிரசின் சக்திக்குறைவை எடுத்துக்காட்டி, “நாட்டிலோ குறைகளுக்குக் குறைவில்லை. கசப்பு மலிந்து கிடக்கிறது. கிளப்புவது எளிது, அடக்குவது எளிதல்ல. அடக்காவிட்டால் விஷப்பரீட்சையாக முடியும்” என்றுரைத்து, நாட்டு நிலைமையை விளக்கிவிட்டு, ஏழைநாடு, எளிய காலக்ஷேமம்கூட இன்றைக்குக் கஷ்டம்! என்று சஞ்சலத்தைக் காட்டி “மக்களிடையே பரஸ்பர நம்பிக்கையாவது இருந்தால் சற்றுத் தைரியம் கொள்ளலாம் அதுவுமில்லை. வகுப்புமாச் சர்யம் வலுவுற்றிருக்கிறது. நல்லது சொன்னாலும், செய்தாலும், பொல்லாததாகப்படுகிறது” என்று வயிற்றிலடித்துக் கொண்டு, காந்தியாரை எச்சரிக்கிறது!

இவ்வளவையும் கவனியாமல், காந்தீயர்கள் போர் துவக்கினால், நாட்டினருக்கு, அதை அடக்கும் சக்தி உண்டு என்பதைக் காட்ட முடியும் என்பதிலே நமக்குச் சந்தேகமில்லை. கடைசிப் போரைக் காந்தியார் துவக்கி, அவர் அடைந்த தோல்வி அட்டவணையிலே இதனையும் குறித்துக்கொள்ளட்டும். தொட்டது துலங்காத தலைவர் அவர்! துவக்கப்படும் மற்றோர் போர், பெறட்டும் தோல்வி!
2.8.1942