அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அடக்குமுறை தர்பார்-மற்றொரு காட்சி!

“கோட்சே கூட்டம்” நூல் மீது பாய்ச்சல் பிச்சமூர்த்தி மீது வழக்கு

‘கோட்சே கூட்டம்’ மீதும், சர்க்காரின் கரம் சென்று தாக்கிவிட்டது. ‘கோட்சே கூட்டம்’ என்ற இச்சிறு நூலை எழுதியவர் குளித்தலை கி.பிச்சமூர்த்தி! பொதுவாழ்வுப் புயலில் சிக்கியவர்-இன்னும் பல ஏடுகளைத் தாயகத்திற்குத் தந்தவர்.

‘கோட்சே கூட்டம்’ எழுதியது குற்றமாம்-சொல்கிறது. எழுத்துரிமை பேசி ஊராளும் உரிமை பெற்ற பாராளும் காங்கிரசாட்சி! இந்நூல் வெளிவந்து ஈராண்டுகள் ஓடி மறைந்துவிட்டன. இந்நூல் வகுப்புத் துவேஷத்தை வளர்க்கிறதாம். அதற்காக வழக்காம் எப்பொழுது? நூல் அச்சான பிறகு, விற்பனை செய்த பிறகு இல்லந்தோறும் அந்த ஏடு சென்றடைந்த பிறகு, எல்லோரும் தங்கள் உளத்தில் அக்கருத்துக்களை ஏற்றியான பிறகு, அடுத்த பதிப்பு அச்சிட யோசனை பிறந்த பிறகு, இத்தனையும் முடித்து இரண்டு ஆண்டுகள் தாண்டி 153 அ என்ற குற்றச்சட்டத்தைத் தேடியெடுத்து வீசிவிட்டனர் ஆளவந்தார். அக்கினி யாஸ்திரம் என்று அவர்கள் நினைப்பது அந்தப் பிரிவு சட்டத்தைத்தான். ஆனால் மக்கள் மறைந்து எழுத்துரிமை என்ற வருணாஸ்திரம் உண்டென்பதை அவர்களே நமக்குணர்த்தியவர்கள். அதற்குள்ளாகவா மறந்துவிட்டார்கள்!

அச்சிட்ட குற்றத்திற்காக ரூ.1000 கொட்டி ‘அழுது’ விட்டார்கள். பதிப்பக நிர்வாகிகள், வழக்கு குழித்தலை, கரூர், மணப்பாரை இப்படி பல இடங்களில் தொடர்ந்து நடைபெறுகிறது. பதிப்பக நண்பர்கள், தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள். வந்து வந்து எண்ணம் வெந்து, மனம் நொந்து போகிறார்கள்!

பேச்சுரிமையைக் கல்லறைக்கு அனுப்புகின்றார்கள். காங்கிரசார் அடக்குமுறைப் பாணங்கள் பாய்ந்து சென்ற வண்ணமே உள்ளன. எதேச்சாதிகார வெறி, உச்சிக்குப் போய், ஊர்த்துவத் தாண்டவமாடுகிறது. அணையும் தீபத்தின் கடைசி சுடர் நிலையோ, இந்த ஆளவந்தாருக்கு என்று ஐயம் வந்து நிற்கிறது நம் கண்களின் முன்னால்!

(திராவிடநாடு 13.8.50)