அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


‘அடக்குமுறைக் காணிக்கை!’

ரூ.3000! ‘அடக்குமுறைக் காணிக்கை’ யாகச் செலுத்த வேண்டும்! அடிப்படை உரிமைகளை ‘வழங்க’ ஆவலுற்று நிற்கும் அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டும்! அதுவும் 25.6.49 ம் நாளுக்குள் செலுத்த வேண்டும்! இது “திராவிட நாட்”டிற்குச் சென்னை அரசியலார், ‘பக்திப் பரவச மேலீட்டால்’ பிறப்பித்திருக்கும் கட்டளை!

“திராவிடநாடு, “யாரையும் அனாவசியமாக அலட்சியப் படுத்தாமல், ஆனால் அதே நிலையில் யாருக்கும் அடிமையாகாமல், யாரையும் தூற்றாமல், ஆனால் அதேபோது எந்த உண்மைக்கருத்தையும் எடுத்துரைக்கத் தவறாமல், யாருடைய எதிர்ப்பையும் வரவழைத்துக் கொள்ளாமல், ஆனால் அதே சமயம் யாருடைய எதிர்ப்புக்கும் அஞ்சாமல், யாருடைய மனமும் நோக வேண்டும் எந்பதற்காக எதையும் சொல்லாமல், ஆனால் அதே காலத்தில் நாடு திருந“தவேண்டும் என்ற நாட்டத்தை மறந்துவிடாமல், யாரையும் துவேஷிக்க வேண்டும் என்ற நோக்கமில்லாமல், ஆனால் அதே பொழுது வரலாற்று நிகழ்ச்சிகளை மக்கள் முன் வைக்கத் தயங்காமல், மாற்றார் யாரைப்பற்றியும் பொறாமையுள்ளங் கொள்ளாமல், ஆனால் அதே நிலையில் கழகத்தின் வளர்ச்சிகண்டு பொறாமையுற்று, உள்ளங்கருகி உடல் வெந“து, புன்செயல்கள் செய்யப் புறப்படும் புல்லறிவாளர்களின் அறியாமைகண்டு, புன்சிரிப்புக்கொண்டு பரிதாபப்படுவதல்லாமல் வேறெதுவும் நினையாமல், நேர்மை வழியினின்றும் நெறி பிறழாமல், சென்ற ஏழு ஆண்டு காலமாகத் தொண்டாற்றி வருகிறது; இனியும் தொண்டாற்றி வரும்.

திராவிடர் கழகமும், அதற்கு உறுதுணையாக இருந்துவரும் பத்திரிகைகளும், அவற்றிற்கு இருக்கும் ஆற்றல் சிறிதளவே யாயினும் அவை ஆற்றியிருக்கும் ஆற்றிவரும் தொண்டும், பகலவன் ஒளி போல பரவிப் பயனளித்து வருவன கண்டு, சனாதனிகளும் வர்ணாச்சிரமிகளும்-வைதிகர்களும்-சுயநலக்காரர்களும்-அரசியல் பிற்போக்காளர்களும் மிரண்டு, நெறி பிறழாக்கழகத்தையும், அதனைச் சார்ந்த இதழ்களையும், குறிப்பாக “திராவிட நாடு” “விடுதலை” ஆகிய இரண்டினையும் ஒழித்துக்கட்டி விடுவது எனக் கங்கணங் கட்டிக்கொண்டு, அவரவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளின் மூலம், தங்கள் தங்கள் பாணங்களை, வெவ்வேறு மூலை முடுக்குகளில் நின்று கொண்டு வீசத் தலைப்பட்டுள்ளனர். அப்படிப்பட்ட செயல்களிலே ஒன்றுதான், இப்பொழுது “திராவிட நாட்”டின் மீது ஏவப்பட்டிருக்கும் ரூ.3000 ஜாமீன் பாணம்!

“திராவிட நாடு” அரசியல்-பொருளாதாரம்-சமுதாயம் பற்றிய கருத்துக்களைக் காரணகாரியங்களோடு விளக்கிக் காட்டி, நாட்டு மக்களுக்கு அறிவு கொளுத்தும் அரிய பணியினைச் செய்து வருவதால், முற்போக்கு உள்ளம் படைத்த இளைஞர் உலகம் அவற்றை யெல்லாம் கேட்டு-அறிந்து சிந்தித்துத்-தெளிவடைந்து. திராவிடர் கழகப் பாசறைகளில் வீரர்களாகத் தங்களைப் பதிவு செய்து கொண்டு வருகிறார்கள்.

இளைஞர்களுக்கு அறிவுறுத்தித் தெளிவுண்டாக்கும் நற்பணியினை மேற்கொண்ட காரணத்திற்காகத்தான், பொறாமையுற்று எழும்பிய கிரேக்க அரசாங்கம் சாக்ரடீஸுக்கு நஞ்சு ஊட்டிக் கொன்றது.

எண்ண-எழுத-எடுத்துக்கூற உரிமையளிப்போம் என்று இங்கு வாய்ப்பறை சாற்றிவந்த அதே வாய்தான், இப்பொழுது “திராவிட நாட்”டிடம் “அடக்குமுறைக் காணிக்கை” கேட்கிறது. “திராவிட நாட்”டின் பேனா, தான் உருவாக்கும் ஒவ்வொரு சொல்லையும் தட்டிப் பார்த்து, பயனுடைய சொற்களா என்று ஆராய்ந்து, பிறிதோர் வெல்லுஞ் சொல் அதற்கில்லை என்பதைத் தெரிந்து, அளவறிந்து பயன்படுத்தி வருகிறது. ஆகையால்தான் பொறாமை யுள்ளங்கொண்ட புன்மதியினர் பேனாவோடு பேனாவை நேர்நிறுத்திப் பார்க்க முடியாமல், அரசாங்கத்தின் அதிகாரத்தை அண்டித் தஞ்சமடைந்து நிற்கின்றனர். அரசாங்கம் பேனா முனை கொண்டல்ல, அதிகாரத் துப்பாக்கியின் உதவிகொண்டு பேனா முனையை அல்ல, பேனா பிடித்தவர்களையே சுடப் பார்க்கின்றது.

சென்ற ஏப்ரல் திங்களில் “திராவிட நாட்டி”ல் எழுதிய கட்டுரைகளின் மீது குற்றச்சாட்டு! கட்டுரைகள் வந்தது. 1948 ஏப்ரலில்! அதற்காக அடக்கு முறைப்பாணத்தை வீசுவது 1949 ஜுனில்! இதிலிருந்து விளங்கும், உள்ளபடியே கட்டுரைகளின் காரணமாக அடக்குமுறை வீசப்பட்டிருக்கிறதா அல்லது “திராவிட நாட்”டை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தின் காரணமாக அடக்குமுறை வீசப்பட்டிருக்கிறதா என்பது. கட்டுரைகளைப் படித்துப் பார்ப்போர்க்கு இன்னும் தெளிவாக விளங்கும் எவ்வளவு தெளிவான மனப்பான்மையில் சாதாரணமான உண்மைக் கருத்துக்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன என்பது.

இந்த ‘அடக்குமுறைக்காணிக்கை’ ஒரு சோதனை! “திராவிட நாட்”டின் மீது மட்டும் பரீட்சிக்கப்படும் சோதனையல்ல, திராவிடர் கழகத்தின் மீது திராவிட நாட்டின் மீது பரீட்சிக்கப்படும் சோதனையாகும்! திராவிடப் பெருங்குடி மக்கள் தங்களின் ஆதரவு “திராவிட நாடு” க்கு என்றும் உண்டு என்பதை, அரசியலார்க்கு எடுத்துக்காட்ட இந்நெருக்கடியைத் தீர்த்து, மேற்கொண்டு எடு“க்கவேண்டிய நடவடிக்கைகளுக்கும் ஊக்கமளித்து, ‘எதையும் தாங்க இந்த இதயம் உண்டு’ என்று வெற்றி முழக்கமிட்டு வீறிட்டுக் கிளம்ப வேண்டுகிறோம்!

(திராவிட நாடு 12.6.49)