அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அடக்குமுறையை வரவேற்கிறோம்!

சென்னை அரசாங்கம் தனது ‘ஜனநாயக’ ஆட்சி முறையின் பல கட்டங்களைக் கடந்து, இப்போது திராவிடர் கழகத்தார் மீதும் தனது ‘ஜனநாயக’ ஆட்சியைச் செலுத்தத் தொடங்கிவிட்டது.

22.8.48 ல் சென்னையில் பெரியார் இல்லத்தில் திராவிடர் கழக நிர்வாகக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அங்கு கூடியிருந்த அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இது, நம்மால் எதிர் பார்க்கப்பட்ட ஒரு சாதாரண நிகழ்ச்சிதான் என்ற போதிலும், இந்தி எதிர்ப்புச் சம்பந்தமாக இனி மேற்கொண்டு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்பதை முடிவு செய்வதற்காக மாகாண முழுவதிலிருந்தும் வந்திருந்த பிரதிநிதிகளையும் தலைவரையும் எதிர்பாராத விதமாகக் கைது செய்ததானது, சென்னை அரசாங்கத்தின் ‘ஜனநாயக’ ஆட்சி முறை எப்படிப்பட்டதென்பதைப் பொது மக்கள் உணரும்படி செய்து விட்டது.

காங்கிரசின் பேரால் உண்டாக்கப்பட்ட இந்தப் புதுமுறையான ‘ஜனநாயக’ ஆட்சிமுறை, பொது மக்களின் நியாயமான உரிமைகளைப் பறிப்பதற்கே உரிமைப் படுத்தப்படும் என்பதைச் சென்னை அரசாங்கம் செயல் முறையில் செய்து காட்டிவிட்டது.

ஆனால் இத்தகைய ஜனநாயக ஆட்சிமுறை ஆளவந்தவர்களை அவர்களின் பீடத்தினின்றும் அகற்றுவதற்கே துணை செய்யுமன்றி, இதனால் அவதிப்படுவோரை ஒன்றும் செய்துவிட முடியாதென்பது வரலாறுகள் கற்பிக்கும்பாடம். இதனை இன்றைய ஆணவ ஆட்சியாளர் உணரவில்லையென்றாலும், காலம், அவர்களுக்கு அதனை விரைவில் கற்பிக்கும்.

அடக்குமுறையை, அரசாங்கம் ஆயுதமாகக் கொண்டுள்ளது. ஆனால் அடக்குமுறைக்குக் காரணாயுள்ள உரிமை வேட்கை மேலும் அதிகமாக விரைவாக நாடெங்கும் பரவி விட்டதென்பதை, தலைவர்களைக் கைது செய்த நாளிலிருந்து நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளைக் கொண்டு சர்க்கார் நன்கு அறிந்துகொள்ள முடியும் சர்க்கார், தாங்கள் செய்யும் அட்டூழியங்களை மறைப்பதற்காக வைத்துக்கொண்டிருக்கும் பத்திரிகைத் திரைகளையும் கிழித்தெறியும் அளவுக்குப் பொதுமக்களின் உரிமைக் கிளர்ச்சியின் வேகம் நாட்டில் பரவி, நயவஞ்சகத்தால் நாடாள்வோரின் ஆணவம் முறியடிக்கப்படும் என்பது மட்டும் உறுதி.

எனவே, அடக்குமுறையை வரவேற்கிறோம். அது, ஆளவந்தார் களின் ஆணவ பலத்தை அளந்து காட்டும் கருவியாக அமைந்திருப்பதைக் கண்டு களிப்படைகிறோம். ஆனால் ஒன்று கூறுகிறோம். இந்த அடக்குமுறை, எங்களின் நியாயமான போராட்டத்தை நடத்துவதற்கு இடையூறாகச் சலிப்பையோ சஞ்சலத்தையோ-சோர்வையோ தந்துவிடாது. சோர்ந்து கிடக்கும் சிலரையும் இந்த அடக்குமுறை எழுப்பிவிடும் எடுத்துக் கொண்டுள்ள பணிக்கு விரைவில் வெற்றி மாலை சூட்டும் என்பதை நாம் நன்கறிவோமாதலால் அடக்கு முறையை அறைகூவி அழைத்து வரவேற்கிறோம்.
ஆட்சிப்பீடத்தில் இன்று அமர்ந்துள்ளவர்களே அன்று கூறினர் அதாவது வெள்ளையன் இந்த நாட்டை விட்டு வெளியேறா முன்பு கூறினர். அடக்கு முறையை அள்ளி வீசுகிறான் அன்னியன் ஆகவே! அவனை உடனே நாட்டை விட்டு நாம் அகற்றவேண்டும். இல்லாவிடில் நம் அல்லல்கள் அகலாது என்று ஆயிரமாயிரம் மேடைகளில் அண்டமதிரக் கூவினர் அவனைக் கண்டித்தனர். இத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை காங்கிரஸ் கண்யவான்கள். நம் ஆட்சியாய் இருந்தால் எழுத்துரிமை, பேச்சுரிமை முதலிய எந்த உரிமையும் பறிபோகாததுமட்டுமல்ல நாட்டு மக்களுக்குத் தேவையானதை, அவசியத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும், ஆனந்தத்தோடு வாழ முடியும். கதறியதை எல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டு, வெள்ளைக்காரனைவிட வேகமாக ஓடுகிறார்கள் அடக்கு முறைச்சட்டங்களை வீசுவதன்மூலம் இதனால் ஒன்று நன்கு புலப்படுகின்றது. இப்படிப்பட்ட அடக்கு முறையை வீசி அனேக காலம் இவர்கள் ஆட்சியில் அமர்ந்திருக்க முடியாது, அதி சீக்கிரத்திலேயே அவ்வாசனைத்திலிருந்து அகற்றப்படுவார்கள் என்பது.

நாட்டிலே நல்லாட்சி நிலவவேண்டும், நாடு நலமுற வேண்டும் என்பதற்காகவே அல்லும் பகலும் ஓயாது உழைத்துவரும் திராவிடர் கழகத்தை ஆட்சியாளர் அடக்குமுறை கொண்டு அடக்கி விட எத்தனித்தால், அது தன்னையே அடக்குமுறையால் சாடிக்கொள்கிறது என்றே பொருள். சர்க்கார் தங்கள் மனதை நன்றாகத் திறந்து காட்டியிருக்கிறது. எதேச்சாதிகாரம்தான் நடத்துவோம், ஜனநாயக ஆட்சி நடத்தமாட்டோமென்று அதற்காகச் சர்க்காரைப் பாராட்டுகிறோம், அடக்குமுறையை வரவேற்கிறோம்.

(திராவிடநாடு 29.8.48)