அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அடுத்த கிழமை

பூதேவர் விஷயமாக விடாமல் எழுதுகிறாயே பரதா! அவர்கள் இஷ்டம் அதுவானால், அதனால் உனக்கென்ன கஷ்டம், யாருக்கு என்ன நஷ்டம், என்று அன்பரொருவர் கேட்கிறார்.

நான் ஆல்கபோன் பரம்பரை என்று கூறினால், அவன் நடவடிக்கைகளை ஜாக்ரதையாகக் கவனிக்கும்படி, போலீஸ் உத்தரவு பிறக்கும். அதுபோல, பூதேவர் என்ற பரம்பரைப் பெருமையைக் கூறினால், சுயமரியாதைக்காரன், “ஓஹோ! அந்தப் பரம்பரையா,” என்று கூறிடத் துணிகிறான். ஆல்கபோன் எனும் கள்ளனின் பரம்பரை யென்றால் அமெரிக்கர் அலட்சியப்படுத்துவர், ரஸ்புடீன் சந்ததி என்றால் ரஷ்யர் காரியுமிழ்வர், போர்கியா பரம்பரை என்றால் கிருஸ்தவர் யாவருமே அவனை அணுகவிடார், அதுபோலவே, பூதேவர் என்றுரைத்தால் தேவரின் யோக்யதையைப் புராணங் கூறுவதைக்கேட்டுப் பூஜிக்கும் மக்களைப்போலன்றி, ஆரியக் கற்பனையின் ஆபாசத்தை அலசிப்பார்க்கும் சுய மரியாதைக்காரர்கள், “அந்தக் கூட்டந்தானா ஐயர்மாரே” என்று கூறிடுவர். குலப்பெருமையைக் கூறிக்கொள்வதுபோலப் பார்ப்பனர், தம்மைப் பூதேவர், என்று கூறிக்கொள்கின்றனர். அசல் தேவர்களின் இலட்சணம் என்ன தெரியுமோ? அதைத் தெரிந்தால், பூதேவர் என்பவர் மக்களின் வணக்கத்துக்குரியவரல்ல, என்பது மட்டுமன்று, இன்றுள்ள நிலைக்குத் துளியும் அருகதையுடையரல்லர் என்பதை மக்கள் அறிந்துக்கொள்ளலாம். தேவருலகத்து நடவடிக்கைகளைப் பற்றிய புராணங்களைப் பக்திக்குரியன என்று நம்பும் நமது மக்கள், அவைகளின் ஆபாசத்தை அறிவதில்லை. அறிந்தால், குடியும் கொலையும், விபசாரமும், விபரீதச் சேர்க்கைகளும் தலைவிரித்தாடும் காட்டுமிராண்டி வாழ்க்கையே சித்தரிக்கப்பட்டிருப்பதையும், அவ்வித வாழ்க்கையையே, சிலாக்கியமானது, புண்ய வசத்தால் கிடைப்பது, கடவுளுக்கருகேயிருக்கும் பேறு, என்று ஆரிய மதம் போதிக்கிற தென்பதையும், ‘அந்த உலக’ ஆபாசங்களிலே ஆயிரத்திலொரு பாகம், இந்த உலகிலே எங்கும் காணமுடியாதென்பதையும் உணருவர். “தேவன்” என்று பூஜிக்கத்தக்க உருவங்களாக்கப்பட்டுள்ள ஒரு கற்பனை ஆசாமியாவது, சத்புருஷனாக இருந்ததாகத் தெரிய வில்லை. அந்தக் கோலாகலக் காட்சி, காமவெறியர்களின் கூத்து மடத்தையும் தோற்கடிக்கும் விதமானது. தேவர்களுக்கெல்லாம் தலைவனாம் தேவேந்திரன், இவனுடைய யோக்யதை என்ன? இந்திராணி இருக்க, கூப்பிட்டால் கொஞ்சிடத் தயாராக ஆட லழகிகள் பலரிருக்க, ஆஸ்ரமத்திலே இருந்த அகலிகையைக் கற்பழித் தான். தேவர்களின் அரசனின் யோக்யதை இது. இந்தத் தேவர்கள் போன்றவர்கள் இது. இந்தத் தேவர்கள் போன்றவர்கள் நாங்கள், நாங்கள் பூதேவர்கள் என்றுகூறிப் பூரிப்பதானால், நான் பார்ப் பனரைத் தடுக்கவில்லை. ஆனால், தேவலோகத்திலே நடந்ததாகக் கூறப்படும் ரசமான சம்பவங்களைத் தமிழர்கள் அறியும்படி செய்வேன். அந்தத் தேவரின் யோக்யதையை விளக்க, இக்கிழமை, நாடக வேலையிலே நாட்டங்கொண்டதால், நான் சொல்ல வேண்டியதை நிறுத்தி வைக்கிறேன், அடுத்தவாரம் தொடுக்கிறேன்.
6.6.1943