அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அடையாறு சாகசம்

கூழுக்கும் பொன்னுக்கும் பாடிய அந்த நாள் புலவர்கள், இரந்தோர்க்கு ஈயாதவனைக் கொடையில் குமணனென்றும், வில்லேந்தியறியா கோழையை வீராதி வீரனென்றும், காரிருள் முகத்தானைக் ‘கவரும் மதி‘ எனவும், வர்ணிப்பது வழக்கமே கேள்வியுற்றிருக்கிறோம்.

தமிழின் சுவையைக் குழைத்துக் குழைத்துத் தரும் ஆற்றல் மிக்கவரெனப் பாராட்டும் அன்பர் – பேராசிரியர் – ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களும், ‘அந்தநாள்‘ புலவரின் பாணியைக் கையாளும் நிலைக்கு வந்துள்ளார் எனும் செய்தி அறிந்தோம் – சிந்தை வெம்பினோம்.

தமிழாராய்ச்சியின் உதவியால், ஓரளவு சலனமற்ற வாழ்க்கையைப் பெற்றிருப்பவர். அவர், மந்தியை மலரெனவும், அந்தி நேரத்தி ‘உதயகால‘மெனவும் உருவகப்படுத்துகிறார் என்றால் விந்தைதானே!

அன்பர் சேது அவர்களின் உருவம், தமிழ் வீரத்துக்கு எடுத்துக்காட்டு குரல், கம்பீரத்தின் சின்னம். திண் தோள் மறவர்கல மைந்ததென்பதைக் காட்டும். அத்தகையவரின் தோற் அச்சம் ததும்புகிது.

தமிழன் சின்னமாகப் பல்கலைக்கழகத்தில் அமர்ந்திருக்கும் பேறு பெற்ற அவர், மகாமேரு மண்பொந்துக்கு சிரம் தாழ்த்துவது போல, கொடியவனை அண்ணலென்றும் – அலனின்றி எதுவும் அசையாதெனவும் வர்ணித்தால், விந்தைக்குரிய காட்சிதானே?

‘அண்ணாமலை மன்றம்‘ எனும் பெயரால் செட்டிநாட்டு முத்தையாவும் இன்னும் சிலரும் சேர்ந்து அமைத்திருக்கும் இசை மண்டபத் திறப்பு விழாவின் தலைவராக வீற்றிருந்த இவர் சிந்திய பரவசச் சொற்களைக் கேள்வியுற்றோம்.

பரவசம் – பாராட்டு – அஞ்சலி ஆகிய மூன்றினையும் கலந்து அழகு தமிழில் அர்ச்சனை செய்திருக்கிறார், யாரை? அவர், அடிக்கடி அழைக்கும் நாமகளையா – அல்ல, அல்ல, இசைவாணியையா, - அல்ல், அல்ல, இசவாணியையும்,நாமகளையும் அடிபணியவைக்கும் பூமகளின் கடாட்சம் பெற்ற பூமான், செட்டிநாட்டாரை? – அவரையும், அல்ல,அவ்விதம் பேராசிரிய புகழ்ந்ததும் பரவசத்தோடும் பாராட்டியது.

ஆச்சாரியாரை! - ஆம், தமிழ்ப் பேராசிரியர், தமிழின் வைரி ஆச்சாரியாரை, புகழ்ந்ததும் துதிபாடியும், அழகு தமிழ் கொண்டு அர்ச்சனை புரிந்திருக்கிறார்.

ஆச்சாரியார் யாரென்பதை, நாம் மட்டுமல்ல, தமிழுலகமே நன்கறியும் இந்திச் சனியனை இழுத்து வந்த பரோபகாரி! சமஸ்கிருதத்துக்குத் தாசர்! - தமிழாக்கத்தால் துரோகி‘ எனும் பட்டப்பெயர் பெற்றவர்.

அவரை பேராசிரியர் – அதுவும் தமிழ்ப் பேராசிரியர் – புகழ்ந்ததும், பரவசத்தோடும், பாராட்டுகிறார். ‘தமிழ் காக்கும் அண்ணலாம்! - ஆச்சாரியார் அவரது கைபட்டால், மண்ணும் பொன்னாகுமாம். அவ்வளவு ராசியுள்ள கையாம்! - அழகாக வர்ணிக்கிறார். “ஏது இனி, கவலை? மூன்று தமிழ் விழாக்களையும் துவக்கி வைத்து ஆசி கூறிய அண்ணல் கைராசியுள்ள ராஜாஜி இதனையும் துவக்கி வைக்கிறாரென்றால் முத்தமிழ் முன்னேற்றத்திற்கு இனித் தடையும் உண்டோ?“ என்று தமிழிசை விழாவைத் துவக்கி வைத்த ஆச்சாரியாரைப் போற்றுகிறார் சேது.

ஆச்சாரியார் கைராசிபட்டுவிட்டதாம்! தமிழ் இனித் தழைத்தோங்குமாம்! சொல்லின் செல்வர், சித்தரிக்கிறார் இவ்விதம்.

பேராசிரியர் சேதுவா, செப்பினார்? – என்று சிந்தித்தோம், விந்தையாகயிருந்தது. தமிழ்த் தோட்டத்துக்குள் ஆச்சாரியாரின் கைபட்டதால், முத்தமிழ் முழக்கமிடுமாம், இனி! இயல்-இசை-கூத்து எனும் மூன்று தமிழும் இனி ஏற்றம் பெற்று விளங்குமாம் – எப்படி? அதனை விளக்கவில்லை, அன்பர் சுருக்கமாகச் சொல்லிவிட்டார். ஆச்சாரியார் கைராசியுள்ளவர். அவர் தமிழைத் தொட்டால் போதும் – தளிர்மலர்ச் சோலையாகிவிடும் தமிழ்த்தோட்டம்!“ என்பதாக.

ஆச்சாரியாரின் கைப்பட்டாலே, தமிழுக்கு இவ்வளவு பேரிடம் கிடைக்குமென்றால், அதனைக்கண்டு மகிழ, நாம் காத்திருக்கிறோம்.

பரவசத் துதிபாடியிருக்கும் நண்பர் சேது அவர்கள், மிகமிக நல்லவர். ‘அடையாறு‘ போதை, எவரையும் குழப்பச் செய்வதாயிற்றே? – அதன் சுழற்சியிலே சிக்கினார், சொந்த நிலையை மறந்ததில் அதொன்றும் அதிசயமில்லைதான்.

எனினும், அன்பர் சேது அவர்கள், தமிழின்பால் தணியாத காதல் கொண்டவரெனும் காரணத்தால், யாருடைய கைப்பட்டால் தமிழ் செழிக்குமென்று கூறினாரோ, அவருடைய ‘பேனா‘ பட்டுக் கிளம்பியிருக்கம் அரசாங்க உத்தரவொன்றை அவருக்குக் காட்ட விரும்புகிறோம். நெடுநாட்களாக அமுலிலிருந்து வரும், உத்தரவுதான் அது. ஆனாலும், அதனை மீண்டும் ஞாபகமூட்டிட வேண்டிய அவசியம் வந்திருக்கிறது ஆச்சாரியாருக்கு.

ஏனெனில், இப்போது தமிழ் மலர்ச்சி தலைதூக்கி வருகிறதல்லவா? – தெள்ளுதமிழ், சிந்துபாடுகிறதே, தெருக்கள் தோறும்! அது, ஆச்சாரியார் கண்களில் பட்டிருக்கிறதுபோலும். உடனே உத்தரவு பிறப்பித்துவிட்டார்.

“சர்க்கார் சம்பந்தமான எல்லாக் கடிதப் போக்குவரத்துகளிலும், தஸ்தாவேஜுகளிலும் ஆண்களின் பெயருக்கு முன்னால் ஸ்ரீ போடவேண்டும் – பெண்களின் பெயருக்கு முன்னால் ஸ்ரீமதி போடவேண்டும்.

உத்தரவு, இது திரு – திருமதி – தோழர் – தோழியர் இப்படிப்பட்ட தமிழ்ப் பெயர்களைக் காட்ட விரும்புவீர்கள். இந்த அழகு ஸ்ரீயிலும், ஸ்ரீமதியிலும் வருமா என்று கேட்பீர்கள்! - உண்மைதான் பேராசிரியர், ஆதாரபூர்வங்களோ, ‘திரு‘வில் உள்ள அழகை மெய்ப்பிப்பார். ஆனால், ஆச்சாரியார் உத்தரவு ‘ஸ்ரீ‘யிடம் தான் போயிருக்கிறது!

அழகு தெமிழ்ச் சொல்லியிருந்தாலும் அதனைச் சீண்டும் திருவுள்ளம், இல்லை, தியாகர் நகர்வாசிக்கு, அத்தகையவரின், கைப்பட்டுவிட்டது. போது இனி ‘தமிழ்‘ மலரும்‘! என்று பேராசிரியர், வெளியிடுகிறார்.

அழகு தமிழ்ச் சொல்லிருக்க அன்பர் ஆச்சாரியார் ‘ஸ்ரீ‘யை விரும்புகிறார். விளக்கம் தேவையா இதை விவரிக்க? ஆனாலும் ‘நமது‘ பேராசிரியர், அவரது கைராசியை நாடுகிறார்! தமிழ் தழைக்க தன்னைப் போன்றோரை, நம்பவில்லை – ஆச்சாரியாரின் கைராசியை நம்புகிறார்! - அந்த ஆச்சாரியாரோ ‘திரு‘வை விரும்பாது ‘ஸ்ரீமதி‘யைத் தேடுகிறார்.

அத்தகைய ஆச்சாரியாரால் தமிழ் வளம் பெறம் என்று செப்புகிறார், சேது. ஒரு பேராசிரியர்! அவர், இவ்விதம் செப்பு கிறாரென்றால், சிந்தை குழம்பாதா, நமக்கு? மாற்றானின் அடிபணிந்து, உயிர்ப்பிச்சை கோரும் பண்பு, தமிழருடைய தல்ல – இது. அவர் அறிந்த விஷயம். இருந்தும், இசை மன்றத்திறப்பு விழாவிலே, இவ்வண்ணம் பேசகிறார்! இதனை என்னவென்று சொல்வது? அடையாறு மாளிகையின் மினு மினுப்பு, ‘அந்த நாள்‘ புலவர் கூட்டத்தில்,நமது தோழரையும் கொண்டு சேர்ந்துவிட்டது போலும் ‘அடையாறே‘ உன் சாகசமே சாகசம்! சிறுமீன் காட்டி, பெருமீனிழுக்கும் உன் திறமையே திறமை!

திராவிட நாடு – 19-4-53