அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஏடுகளே புரட்சி ஆயுதங்கள்!

தடை போட்டால் படையாகும்!

ராமராஜ்ய தர்பார் ஆரம்பமாகிவிட்டது. அவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டார்கள் என்பதை எப்படிக் காட்டுவது? அனுமார் இலங்கைக்கு வந்திருப்பதை எப்படிக் காட்டியதாக கதையிருக்கிறது, அதுபோல!

காங்கிரஸ் ஆட்சிபீடம் ஏறியிருக்கிறது என்றால், சர்வதிகாரம் முடிசூடிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம் – அவர்கள் பதவியில் அமர்ந்திருக்கிறார்கள் என்ற சேதியே, அடக்குமுறைக்கு ஆனந்தத்தையும் ஆர்ப்பாட்ட வெறிச் செயல்களுக்கு கும்மாளத்தையும் கொடுக்கும்.

அவர்கள் வந்து மாதம் ஒன்றுகூட முடியவில்லை. காலண்டரின் ஒரு சீட்டு கிழிந்து விழுவதற்கு முன்னாலே, அடக்குமுறை குதியாட்டம் போட ஆரம்பித்துவிட்டது.

சோவியத் சம்பந்தமான புத்தகங்களை, பத்திரிகைகளை, புகைவண்டி நிலையங்களில் விற்கக்கூடாது என்று தடுத்திருக்கின்றனர், இந்த ஆட்சியாளர்கள்.

ஏடுகளைப் படிக்காதே, எங்களோடு சேர்ந்து, போடு எதற்கம் பஜகோவிந்தம் என்று கூறுகிறார்கள்.

படிப்பதைத் தடுக்கிறது, ஒரு பரிபாலனம் – இவர்கள் வேறு வெட்கமில்லாமல் சொல்லிக் கொள்கிறார்கள், இந்த ஆட்சிக்குப் பெயர் ஜனநாயகமென்று – வெட்கம்! வெட்கம்!

நம் இயக்க ஏடுக் பலவற்றை இப்படித்தான் தடுத்தார்கள். ஆனால் நீதிமன்றத்திற்குப் போய் முகத்தில் கரியைப் பூசிக்கொண்டார்கள், இந்த ஆட்சியாளர்கள்.

நம் இயக்க எழுத்தாளர்களையெல்லாம் தொல்லைமேல் தொல்லை அனுபவிக்க வைத்தார்கள்.

இப்பொழுது மீண்டும், கொடி, கட்டிவிட்டார்கள், தங்கள் அடக்குமுறை ஆர்ப்பாட்டத்திற்கு!

ரஷ்ய இலக்கியங்கள், மறுமலர்ச்சி மலர்கள். அம்மலர்களைக் கசக்கியெறியும் மந்திரியாகிறார்கள்.

ஆனால், அதே நேரத்தில் அமெரிக்க இலக்கியஙக்ளும், ஏடுகளும் விற்கப்படுகின்றன. அமெரிக்காவுக்கு அடிபணிந்து கிடக்கும் ஆட்சயாளர் ஓரவஞ்சனையோடு நடந்து கொள்வது தான் வேதனை தருகிறது.

இந்திய சர்க்கார், உலக நாடுகளோடு நட்புறவு கொண்டுள்ளதாக வேறு பெருமை பேசுகிறது – இதுதான் நட்பின் இலக்கணமா? நேசமனப் பான்மைக்கு அடையாளமா?

திராவிட இயக்கம் ஒரு மறுமலர்ச்சி இயக்கம், அதன் அறிவுப் பிரச்சாரம் கனவேகமாகப் பரவுகிறது. ஆகவே, அதன் அறிவாயுதத்தைப் பிடுங்கிவிடவேண்டும் என்றுதான், முயற்சி செய்தார்கள். ஆனால், அவர்களின் ஆற்றலுக்கும் அப்பாற்பட்டது. அறிவியக்கம் என்பதை அவர்கள் உணரும்படிச் செய்துவிட்டது காலம். அவர்கள் இப்போது தங்கள் முடி மீட்சிக்குப் பிறகு பொதுவுடைமை இயக்கத்தின்மீது பாய்வதன் மூலம், மறுபடியும் தங்கள் இழிகுணத்தைக் காட்டியிருக்கிறார்கள்.

மறுமலர்ச்சி எண்ணத்தைத் தூவும், சோவியத் ஏடுகளைத் தடுத்துவிட்டு, முதலாளித்துவ வெறியை ஊட்டும் அமெரிக்க ஏடுகளுக்கு ஆதரவு காட்டும் இந்த போக்கை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

புத்தகங்களுக்குத் தடை விதித்தல், எழுத்தாளர்களைக் கட்டுப்படுத்தல், எண்ணங்களுக்குக் கூடத்தடைபோடல் – இம்மாதிரி அடக்குமுறைகளை, நெறிகெட்ட வகையில் ஏவுவதை, மக்கள் உரிமையில் நம்பிக்கை கொண்டோர் எதிர்க்காமலிருக்க முடியாது – நாம், சர்க்காரின் போக்குகண்டு வெறுக்கிறோம் – எதிர்க்கிறோம். ஏடுகளுக்குத் தடைபோடாதீர், போட்டால் அவைகளே, படைக்கலங் களாக மாறிவிடும் என்று ஆணவத்தால், அறிவு கலங்கித் திரியும் ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம்.

திராவிட நாடு – 8-6-52