அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஏன் எதிர்க்கிறோம்?

இந்தி எதிர்ப்புப் போர், 10.8.48ல் தொடங்கி நடைபெறுகின்றது. போர் தொடங்கிய பின்னர், போர் ஏன் தொடங்கப்பட்டது என்பதற்குக் காரணம் கூறத் தேவையில்லை. போர் தொடங்கு வதற்கு முன்னரே, போர் தொடங்கப்படாமல் இருக்க வேண்டுமானால், இன்னின்ன காரியங் களைச் சர்க்கார் செய்ய வேண்டுமென்று, பல ஆயிரக்கணக்கான மக்களின் ஆதரவைப் பெற்று நடத்தப்பட்ட பல பொதுக்கூட்டங்கள் வாயிலாகவும், மாகாண மாநாடு வாயிலாகவும், பல தமிழ்ப் பேராசிரியர்கள், தலைவர்கள், மாணவர் கள், முன்னிலையில் தீர்மானங்கள் நிறைவேற்றி சர்க்காரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஆனால், சர்க்கார் எதற்கும் இணங்கி வர வில்லை. எனவே, இனி போராட்டத்தைத் தொடங்குவதைத் தவிர, வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்து களம் புகுந்த பின்னரும், போராட்டத்துக்குரிய காரணங்களை விளக்கிக் கொண்டிருப்பது வீண் வேலையாகும் என்ற போதிலும், இது குறித்துச் சர்க்காரும், சில பத்திரிகைகளும் முன்னுக்குப் பின் முரணாகத் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு, ஏற்கெனவே, பொதுமக்கள் கொண்டிருந்த கருத்துக்களை மாற்றி அவர்களுக்குச் சந்தேகத்தையும், சஞ்சலத்தையும் உண்டாக்கும் முறையில், மனச் சாட்சிக்கு மாறாகவும், நீதிக்குப் புறம்பாகவும், நேர்மையைக் கைவிட்டு, நெறி தவறிக் காரியங் களைச் செய்ய முற்பட்டு விட்டதாலேயே, நாம் நம்முடைய நோக்கத்தை மீண்டும் மீண்டும் எடுத்துக் கூறி விளக்கிப், பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகத்தையும், சஞ்சலத்தையும் போக்கி, நம்முடைய முடிவு சரியென்பதை உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது. ஏனென்றால், நாம் பொது மக்களின் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பணிபுரிகின்றோமாத லால், அவர்களைத் தப்பான வழிக்கு இழுத்துச் செல்பவர்களின் தவறான போக்குகளைக் கண்டிக்கவும், அவற்றைப் பொது மக்களுக்கு எடுத்துக் கூறவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

சென்னை மாகாணத்தில் உள்ள பள்ளிக் கூடங்களில் இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டுமென்று விரும்பிய சர்க்கார் முதலில் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதாவது,

``சென்னை மாகாணத்தில், தமிழ்நாடு தவிர, ஆந்திர, கேரள, கன்னடப் பகுதி களில் இந்தி கட்டாயப் பாடம், தமிழ் நாட்டில் விருப்பப் பாடம்.''

இந்த உத்தரவு, பத்து ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் நடைபெற்ற கட்டாய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும் அதன் வெற்றியை யும் சர்க்கார் உணர்ந்து, இனியும் ஒரு போராட் டத்தை உண்டாக்கக் கூடாதென்று எண்ணியே இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளனர் என்று எண்ணினோம். என்றாலும் இந்தி நுழைவு தமிழ் மொழிக்கும், தமிழர் கலாச்சாரத்துக்கும் ஊறு உண்டாக்கும் என்பதை நாம் மேலே உள்ள உத்தரவைக் கண்ட பின்னரும் வலியுறுத்திக் கூறியே வந்தோம்.

ஆனால், இந்த உத்தரவு வெளிவந்ததும், சில பத்திரிகைகள் சர்க்காரை மிரட்டி இந்த உத்தரவை மாற்றும் நிலைமையை உண்டாக்கி விட்டன. தமிழ்நாட்டில் மட்டும் இந்தியை ஏன் விருப்பப் பாடமாக்க வேண்டும் என்று அப்பத் திரிகைகள் கேட்டன. ஆனால், சர்க்கார் அதற்குச் சமாதானம் கூறவில்லை. சமாதானம் கூறுவதற்குச் சர்க்காருக்குத் துணிவும் நேர்மையும் உண்டாகாத தற்குக் காரணம் என்னவென்றால், மந்திரிப் பதவியே ஒருசில பத்திரிகைகளின் பக்க பலத்தினால்தான் நிலைத்திருக்கிறது- நிலைத் திருக்க முடியும் என்ற தப்புக் கணக்குப் போட்டுக் கொண்டிருப்பதேயாகும். இந்தத் தப்புக் கணக்குத் தவறான- தேவையற்ற காரியங்ங்களைப் பொது மக்களின் விருப்பத்துக்கு மாறாக, அவர் களுடைய அபிப்பிராயத்தைத் தெரிந்து கொள் ளாமலேயே செய்யும்படி தூண்டி விடுகின்றது. எனவேதான் தமிழ்நாட்டில் இந்தியை விருப்பப் பாடமாக்கியதைக் கண்டதும், சில பத்திரிகைகள் அந்த ஏற்பாட்டைக் கண்டித்துத் தமிழ்நாட்டிலும் இந்தி கட்டாயப் பாடமாக இருக்க வேண்டு மென்று வற்புறுத்தின. கண்டனத்துக்கு மண்டி யிட்ட சர்க்கார் உடனே தன் உத்தரவை மாற்றிக் கொண்டது.

``தமிழ்நாட்டிலும் இந்தி கட்டாயப் பாடம் தான்.''

என்று அந்த உத்தரவு கூறிற்று.

இந்த உத்தரவு பிறந்தவுடனே தான் தமிழ் மக்கள் தங்கள் எதிர்ப்பின் முழு பலத்தையும் சர்க்காருக்கு உணர்த்தினர். ஒருநாள் இரண்டு நாளல்ல- ஒரு கூட்டம் இரண்டு கூட்டமல்ல. பல நாட்கள்- பல கூட்டங்கள்- பல மாநாடுகள்- மாகாண மாநாடுகள் கூட்டி, மாணவர்களும், பொது மக்களும் ஒரு முடிவுக்கு வந்து, தமிழ்நாட்டுக்கு இந்தி வேண்டாம் என்பதைத் தெளிவான தீர் மானங்கள் மூலம் தெரிவித்தனர்- சர்க்கார் செவி சாய்க்கவில்லை.

ஒருநாள் கண்டனத்துக்கே மண்டியிட்டுப் பணிந்து தங்கள் உத்தரவை மாற்றிக் கொண்ட சர்க்கார், மாதக் கணக்கில் மாநாடுகள் கூட்டி மக்களின் முழு ஆதரவையும் பெற்று தெரிவித்த வேண்டுகோளைத் திணையளவும் மதிக்க வில்லை. மதிக்காதது மட்டுமல்ல, யார் கண்டனங் களையும் வீசிச் சர்க்காரை, மண்டியிடும்படி செய்தனரோ அவர்கள் மனம் குளிரும் முறையில் காரியங்களையும் செய்தனர். இந்தி மொழியை மட்டுமல்ல, சமஸ்கிருதம், அரபி முதலான மொழிகளையும் கட்டாய பாடமாக்கியிருக்கி றோம். கவலை வேண்டாம் என்றனர்.

இந்த நிலை ஏற்பட்டவுடனே, தமிழ் மக்கள் கட்டாய இந்தித் திட்டத்தை ஒழித்துத் தீருவ தென்ற முடிவுக்கு வந்தனர். ஜனநாயகம் என்றால் என்ன என்பதைக் கூடப் புரிந்து கொள்ள முடியாத நிலையிலுள்ள ஒரு சர்க்கார், தங்களைச் ஜனநாயக சர்க்கார் என்று வெட்கமின்றிச் சொல்லிக் கொள்கிறதே என்பதைப் பொது மக்கள் உணரும்படி செய்யவே இந்தி எதிர்ப்பு இயக்கம் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் நடைபெற்ற ஒவ்வொரு இந்தி எதிர்ப்புக் கூட்டங்களும், மாநாடுகளும், தமிழ்நாட்டுக்கு இந்தி வேண்டாம் என்பதனை ஜனநாயக முறையில் உணர்த்தின.

மக்களில் பெரும்பாலோர் கட்டாய இந்தித் திட்டத்தை விரும்பவில்லை என்பதைத் தெரிந்தவுடனே, சர்க்கார் ஒரு புதுமுறையைக் கையாளத் தொடங்கிற்று. அதாவது,

``இந்தி கட்டாயப் பாடமாக்கப்படவில்லை.''

என்று தலைப்புடன் அறிக்கைகள் வெளியிடத் தொடங்கிற்று. அந்த அறிக்கைகளில், இந்தி கட்டாய பாடமாக்கப்படவில்லை என்று கூறியதோடு மட்டும் சர்க்கார் நின்றுவிடவில்லை.

``சிலர் சர்க்காரின் திட்டத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாததால் இந்தி கட்டாயப் பாடமாக்கப்பட்டிருக்கிறதென்று தப்பான பொருள் கொண்டுவிட்டனர்.''

என்று மேலும் தங்கள் தவற்றை மறைக்க முயன்றனர்.

``இந்தியை இரண்டாவது மொழிக் குழுவில் சேர்த்திருக்கிறோம். இரண்டா வது மொழிக் குழுவில் இந்தி- சமஸ்கிருதம்- அரபி- கன்னடம் மலை யாளம்- தெலுங்கு முதலான பல மொழிகள் இருக்கின்றன. மாணவர்கள் இவைகளில் ஏதாவ தொரு மொழியை எடுத்துப் படிக்கலாம், குறிப்பிட்ட ஒரு மொழிதான் படிக்க வேண்டு மென்ற கட்டாயம் இல்லை. எனவே இந்தி மொழி கட்டாயப் பாடமாக்கப்படவில்லை.''

என்று அறிக்கைகளை ஒன்றன் பின் ஒன்றாக வெளியிடத் தொடங்கினர். சர்க்காரின் இந்த அறிக்கைகளைப் பார்த்தவுடனே, ``இந்தி மொழிதான் கட்டாயப் பாடமாக்கப்படவில் லையே! மாணவர்கள் விரும்பினால் படிக்கலாம், விரும்பவில்லையென்றால் விட்டு விடலாம் என்றுதானே சர்க்கார் அறிக்கை கூறுகின்றது. அப்படியிருக்க ஏன் எதிர்க்க வேண்டும்.'' என்று கூடப் பலர் எண்ணக்கூடிய முறையில் சர்க்கார் தங்கள் திறமையைப் பயன்படுத்தி வேலை செய்தனர். விளக்கமற்றவர்களுக்கு இவ் வறிக்கை சரியானதே என்றுதான் தோன்றும். ஆனால், இவ்வறிக்கையில் அடங்கியிருக்கும் உண்மையென்ன? இந்தி எதிர்ப்பைத் தவறான கிளர்ச்சி என்று எண்ணுபவர்கள் இவ்வறிக்கை யில் அடங்கியிருக்கும் உண்மையை அறிய வேண்டும்.

இரண்டாவது மொழிக் குழுவில் சேர்க்கப் பட்டிருக்கும் மொழிகளில் மாணவன் எதைக் கற்க விரும்பினாலும் அதைக் கட்டாயப் பாடமாக எடுத்துக் கற்க வேண்டும். கட்டாயமாகக் கற்பது மட்டுமல்ல, பரீட்சையிலும் அந்த மொழியில் தேர்ச்சி பெற வேண்டும். எல்லாப் பாடங்களிலும் மாணவன் தேர்ச்சி பெற்றாலும், இரண்டாவது மொழிகளில் ஒன்றில் தேர்ச்சி பெறாவிட்டால் அவன் மேல் வகுப்புக்குப் போக முடியாது.'' என்று அவ்வறிக்கையில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த விளக்கமும், இந்தி மொழி கட்டாயமாக்கப்படவில்லை என்ற எண்ணத்தைத்தான் சிலருக்கு உண்டாக்கும். ``ஏதாவதொரு மொழியை எடுத்துக் கொண்டால், எடுத்துக்கொண்ட மொழியைத் தானே மாணவன் கட்டாயமாகக் கற்க வேண்டுமென்று கூறப் பட்டிருக்கிறது. எனவே இந்தி மொழியைக் கற்க விரும்பவில்லையென்றால், மாணவன் தான் விரும்புகின்ற வேறொரு மொழியை எடுத்துப் படிக்கலாமே! இதில் இந்தி கட்டாயம் என்பது எங்கே இருக்கிறது?'' என்றும் சிலர் எண்ணக் கூடும்.

இந்திமொழி பற்றிய சர்க்காரின் அறிக்கை யை மட்டும் பார்ப்பதோடு நின்று விடாமல், கல்வி சம்பந்ந்தமாகச் சர்க்கார் வெளியிட்டிருக்கும் வேறு அறிக்கைகளையும் கவனிக்க வேண்டும். அப்பொழுதுதான் முழு உண்மையும் புலப்படும். இந்தி மொழியைச் சர்க்கார் கட்டாயப் பாடமாக்க வில்லை என்று எண்ணுபவர்கள். சர்க்காரிடம் கீழ் குறிப்பிடும் கேள்விகளைக் கேட்டால் சர்க்கார் என்ன விடைதரும் என்பதை இங்கு விளக்குகிறோம்.

பொதுமக்கள்:- இரண்டாவது மொழிக் குழுவில் உள்ள எந்த மொழியை வேண்டு மானாலும் மாணவன் தன் விருப்பம் போல் எடுத்துப் படித்துக் கொள்ளலாம் என்பது உண்மைதானா?

சர்க்கார்:- உண்மை சிறிதுஞ் சந்தேகம் வேண்டாம்.

பொ.ம. :- தமிழ்நாட்டிலுள்ள மாணவர்கள் தெலுங்கு மொழியைப் படிக்கலாமா?

சர்க்கார் :- படிக்கலாம்.

பொ.ம.:- தெலுங்கு படிப்பதற்கு வசதி செய்து கொடுக்கப்பட்டிருக்கிறதா?

சர்க்கார் :- இல்லை.

பொ. ம :- மலையாள மொழியைப் படிக்கலாமா?

சர்க்கார் :- படிக்கலாம்.

பொ. ம:- இதற்கு ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறதா?

சர்க்கார் :- இல்லை.

பொ. ம:- கன்னடம் படிக்கலாமா?

சர்க்கார் :- படிக்கலாம்.

பொ. ம:- என்ன ஏற்பாடு செய்யப்பட் டிருக்கிறது?

சர்க்கார்:- ஒன்றும் இல்லை.

பொ. ம:- அரபி மொழி படிக்கலாமா?

சர்க்கார் :- படிக்கலாம்.

பொ. ம:- ஏற்பாடு உண்டா?

சர்க்கார் :- இல்லை.

பொ. ம:- சமஸ்கிருதம் படிக்கலாமா?

சர்க்கார் :- படிக்கலாம்.

பொ. ம:- என்ன வசதி செய்யப்பட்டிருக் கிறது?

சர்க்கார்:- ஒன்றும் இல்லை.

பொ. ம:- இந்தி படிக்கலாமா?

சர்க்கார் :- படிக்கலாம்.

பொ. ம:- இந்தி படிப்பதற்கு எந்தவிதமான வசதி செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது?

சர்க்கார்:- இந்தி படிப்பதற்கு எல்லாவித மான வசதிகளும், ஏற்பாடுகளும் செய்திருக்கி றோம்.

பொ. ம:- இந்தி படிப்பதற்கு மட்டும் எல்லாவிதமான வசதிகளும் செய்து கொடுத்து விட்டு, மற்ற மொழிகளுக்கு எந்த விதமான ஏற்பாடுகளும் செய்யாமல் இருப்பது முறையா?

சர்க்கார் :- இந்தி, இந்நாட்டுக்குப் பொது மொழியாக இருக்கப் போவதால் அதற்கு மட்டும் எல்லா வசதிகளும் செய்யப்பட்டிருக்கிறது.

பொ. ம:- அப்படியானால், இந்தி கற்பதற்கு மட்டும் எல்லா விதமான வசதிகளும் செய்து கொடுத்துவிட்டு, எந்தவிதமான வசதிகளும் செய்யப்படாத மொழிகளை மாணவர்கள் விரும் பினால் கற்றுக் கொள்ளலாம் என்று கூறுவதன் பொருள் என்ன?

சர்க்கார் :- மற்ற மொழிகளைக் கற்பதற்கு வசதி செய்து தரப் பணமில்லை.

பொ. ம:- இந்தி மொழி கற்பதற்கு மட்டும் பணம் இருக்கிறதா?

சர்க்கார் :- ஏராளமாக இருக்கிறது. கல்விக் காகப் பத்துக் கோடி ரூபா ஒதுக்கி வைத்திருப் பதே இந்தியை எல்லோரும் கற்க வேண்டுமென் பதற்காகத்தான்.

பொ. ம:- நாங்கள் விரும்பாத மொழிக்குப் பண உதவி செய்வதும், மற்ற ஏற்பாடுகளைச் செய்வதும் முறையா?

சர்க்கார் :- இப்படியெல்லாம் நீங்கள் கேட்கக் கூடாது.

பொ. ம:- அப்படியானால் யார் கேட்பது?

சர்க்கார் :- யாருமே கேட்கக் கூடாது. எது நல்லதென்று நாங்கள் நினைக்கிறோமோ அதை நாங்கள் செய்கிறோம்.

பொ. ம:- நல்லதென்று நீங்கள் நினைப்பது யாருக்கு? உங்களுக்கா? பொதுமக்களுக்கா?

சர்க்கார்:- பொதுமக்களுக்குத்தான்.

பொ. ம:- நீங்கள் செய்கின்ற காரியங்கள் எல்லாம் பொதுமக்களின் நன்மைக்கென்றால், அவற்றைப் பொதுமக்களிடம் கேட்டுச் செய்ய வேண்டாமா?

சர்க்கார் :- வேண்டியதில்லை. எங்களுக்கு எல்லாம் தெரியும்.

பொ. ம:- இப்படிச் செய்வதுதான் ஜன நாயகமா?

சர்க்கார் :- இதுதான் எங்களுடைய ஜனநாயகம்.

நாம் மேலே எழுதியிருக்கும் உரையாடல், இந்தித் திட்டம் பற்றிய சர்க்காரின் அறிக்கை களுக்குத் தரப்படும் உண்மை விளக்கமாகும். இதனை உண்மையென்று ஒப்புக் கொள்ள மறுப்போர், மீண்டும் சர்க்காரின் அறிக்கைகளை ஒருமுறைக்கு இரண்டுமுறை படித்துப் பார்க்க வேண்டுகிறோம். படித்துப் பார்க்கும் அளவுக்குப் பொறுமையைக் காட்ட முடியாதவர்கள், பள்ளிக் கூடங்களுக்குச் செல்லும் மாணவர்களிடமாவது கேட்டால் அவர்கள் உண்மையைக் கூறுவார்கள். அப்பொழுது தெரியும் சர்க்கார் கூறும் இரண்டாவது மொழிக் குழுவில் இந்தி ஒன்று தான் கட்டாயம் படிக்க வேண்டிய மொழி என்ற உண்மை. இந்த உண்மை தெரிந்துவிட்டால், இந்தி எதிர்ப்பு நியாயமான கிளர்ச்சி என்பது புலப்படும். இதுமட்டுமல்ல, இந்தி மொழியை எப்படியாவது தமிழ்நாட்டில் கட்டாயப் பாடமாக்குவதற்குச் சர்க்கார் செய்யும் சூழ்ச்சிதான் இது என்பதும் நன்கு விளங்கிவிடும்.

இந்தி மொழியைப் படிக்க விருப்பமில்லை யென்றால், வேறொரு மொழியைப் படிப்பது தானே என்று சர்க்கார் கூறுகின்றார்களே, வேறு மொழி படிப்பதற்குத்தான் சர்க்கார் எந்தவிதமான ஏற்பாடும் செய்யவில்லையே என்பதைக் கூடவா பொதுமக்கள் இனியும் உணராமல் இருக்க முடியும்? எனவே, இந்தி எதிர்ப்பு நேரடி நடவடிக்கை ஏன் எடுத்துக் கொள்ளப்பட்ட தென்பதை இனியாவது அதனைத் தவறெனக் கருதுவோர் உணர முடியுமென்று நம்புகிறோம்.

(திராவிட நாடு - 15.8.48)