அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஏன் எதிர்ப்பு?
மதத் தலைவர்கள் பிரபல மிராசுதார்களையும், பென்ஷன் பேர்வழிகளையுமாகப் பிடித்திழுத்து, “கேண்மின் சீடகோடிகளே! இனி நீவிர், நமது மதப்பிரச்சாரம் புரியுங்கள் யாகம், யக்ஞம் யோகம் முதலியன நடைபெறும்படி பார்த்துக்கொள்ளுங்கள்” என்று இக்ஞை இடுகின்றனராம்!

இவ்விதம் சனாதனப் படை திரட்டுவது கண்டு நாம் அவர் மீது காயவில்லை. இத்தகைய பேச்சுக்கு நாட்டிலே இன்னமும் இடமிருக்கிறதே, இவைகளை எடுத்துப்போட்டு விளம்பரத் தந்து உடந்தையாக இருக்கும் பத்திரிகைகள் உள்ளனவே. இப்பத்திரிகைகள் தானே சுயராஜ்ய சூரர்களின் உடுக்கையாக உள்ளன. இந்நிலையில் நாடு முன்னேறுவது எப்படி? என்றே கவலைப்படுகிறோம்.

நாட்டிலே இப்போதுதான் ஒருவித விழிப்பு, கொஞ்சம் பகுத்தறிவு காரணங் காண விரும்பும் மனப்பான்மை, புத்துலக உணர்ச்சி கிளம்பி இருக்கிறது. மூடநம்பிக்கைகளும் குருட்டுப் பழக்க வழக்கங்களும் குறைந்துகொண்டு வருகின்றன. எதனையும் ஆராய்ந்து பார்க்கவேண்டும் என்ற எண்ணம் எழுச்சி பெற்று வருகிறது. பிறவியின் பேதம் எதிர்க்கப்படுகிறது. வைதிகக் கோட்டை தகர்ந்து வருகிறது. பார்ப்பனியம் பயந்து வாழுகிறது. புரட்சி வலுக்கிறது புத்துணர்ச்சி பூக்கிறது.

ஆனால், வயலில் பூத்துக் கண்கவர் வனப்புடன் வளங்கும் மலர்களின் மீது, தனது முரட்டுக்காலை வைத்து மிதித்து, மலரைத் துவைத்துக் கீழே புதைந்து சேறுடன் சேறாகிவிடும்படி செய்யும் ஏருமைகள்போல் இப்போது சனாதனம், வர்ணாஸ்ரமம் என்ற பேச்சுப் பேசி, முளைத்தெழும் பகுத்தறிவைப் பாழாக்கும் பாவிகள் முனைந்து நிற்கின்றனர். நாட்டின் கவனம் வேறு பக்கம் திருப்பப்பட்டு இளைஞகள் எண்ணத்தை இந்த நாசகாலர்கள்மீது செல்ல ஓட்டாதபடி தடுத்ததுத் தேசியக் கூட்டம். ‘துரோகம்’.

இந்நாட்டிலே பெரிய பெரிய அறிவாளிகள் மேல்நாட்டுப் படிப்பில் மிளிருவோர், உலகச் சுற்றுப்பயணம் செய்தோர், விஞ்ஞானப் பட்டதாரிகள் உள்ளனர். அரசியல் துறையிலே ஆதிதீவிரவாதம் புரிய சூரர்கள் இருக்கின்றனர். ஆனால், அவர்கள் தமது சிறு விரல் கொண்டு அசைக்கவில்லை. நில்லு எனச் சொல்லவில்லை. அவர் சூழ்ச்சியைப் பார்ப்பனியம் கூடாது என்று துணிந்து சொல்ல முன்வரவில்லை. அரசியல் தீவிரம் பேசிக்கொண்டு சமுதாய விஷயத்தில் பச்சை வைதிகத்துக்கு, வாழும் பார்ப்பனியத்துக்கு நாட்டையும் மக்களையும் காட்டிக்கொடுக்கும் கூட்டம் பெருகிவிட்டது.

இளைஞர்களையே எதிர்காலச் சிற்பிகள் என்பர். அவர்கள் இதனை ஒப்புகின்றனரா என்று கேட்கிறோம். இந்தப் பழமைக்குப் புத்துயிர் தரும் பாதகச் செயலைக் கண்டு அவர்கள் நெஞ்சம் துடிக்கவில்லையா? மனம் பதறவில்லையா? இந்நிலையில் நாடு இந்த ஆண்டில் இருப்பது காண, வெட்கமில்லையா! என்று கேட்கிறோம்.
வர்ணாஸ்ரமம் நிலைக்க வேண்டுமாமே! செய்யாவிடின் உலகிலுள்ள ஜீவராசிகளுக்கெல்லாம் கேடு சூழுமாமே! ஒப்புக்கொள்கின்றனரா நமது இளைஞர்கள் இதனை என்று கேட்கிறோம். ஒப்பவில்லை எனில், இந்த முறையை நிலைநாட்ட முனைந்து வேலை செய்ய முத்ராதிகாரிகள் படை திரட்டப்படுகிறதே, ஒரு சங்கராச்சாரி ஊர்சுற்றி வந்து உழைக்காது, பாடுபடாது உல்லாசவாழ்வு வாழ்ந்து, ஊரை ஏய்க்கும் தந்திரத்தை உச்சாடனம் செய்து பண்டை நாட்களில் நடந்து வந்த முறைகள் நடக்க வேண்டும் எனப் பயம் பதைப்பு இன்றிப் பகிரங்கமாகச் சொல்லித் திரிகின்றாரே கேட்டனரா இளைஞர்கள்?
பகுத்தறிவைப் பாழாக்கி மனிதத் தன்மையை மாய்த்து, பார்ப்பனர் தவிர மற்றையோரின் மானத்தைப் பறிக்கும் திட்டம் வகுத்த மனுவுக்கு வக்காலத்து வாங்கிப்பேசும் வம்பர் கூட்டத்தை அடக்கினரா? வாய் சலிக்க மட்டும் பேசுகின்றனர். ஆனால், சமுதாயத்தின் பழைய சாக்கடையில் மக்கள் புகவேண்டும் எனச் சங்கராச்சாரி சாற்றுகிறாரே, இதனைக் கண்டித்தனரா?
யாகமாம்! யோகமாம்! யக்ஞமாம்! இவைகளைப் பிராமணர்கள் செய்யவேண்டுமாம்!
தெரியாதா, வெட்கக்கேடான இவர்கள் கதை?
ஆற்றருகே, அழகிய தோப்பிலே பர்ணசாலை அமைத்துக் கொண்டு, தென்றல் வீச, தேன் அமுதுண்டு, தேவர்களின் பிரதிநிதியாகப் பிராமணர்கள் வாழ்ந்து மற்றை வகுப்பார் மாடுபோல் உழைத்து, ஆகில் சந்தனம் கட்டைகளாகத் தந்து, இடு மாடு, மான்களை யாகத்துக்கு உதவி, பண்டம் பதார்த்தம் பால் பரிவுடன் தந்து, பாதபூஜை செய்து வாழ்ந்த காலமும், விஷயமறியாது வலையில் வீழ்ந்த அம்மக்கள் விண் ஒளியைக் காட்டியும், விசித்திரம் புரிந்து மயக்கியும், மோட்சம் என்று கூறி ஏய்த்தும், நரகம் எனச் சொல்லி மிரட்டியும், அடக்கி ஒடுக்கி ஆண்டனர் பார்ப்பனர் ஒருநாள்.
ஆக்காலத்தில்தான் யாகம் விதவிதம்!
ஆஜமேத யாகமும், அஸ்வமேத யாகமும், நரமேத யாகமும், மிருத்யூ நாக யாகமும் செய்துகொண்டு, மேனி சிவந்து, தொந்தி பெருத்து, மேதினியில் பார்ப்பனர் வாழ்ந்து, மான், பசுங் கன்று, பன்றி இறைச்சி முதலிய இறைச்சி வகைகளை உண்டு, சோமபானம் பருகிச் சொக்கி, சொகுசாக பௌண்டரீக யாகம் எனும் லீலைகள் புரிந்து காட்டிலுள்ள பொருள் பொன் பெண் யாவற்றிற்கும் தாமே கர்த்தாக்கள் எனப் புகன்று தோள்வலிமை கொண்டவரின் மனவலிமையை முற்றும் மாய்த்து, மன்னாதி மன்னரும் அடிபணிய, “குடி! குடி! வெறிக்க வெறிக்கக் கூடி! மயங்கிக் கீழே விழும் வரையில் குடி! மாதா வகையில் மாதா நீங்கலாக மற்றவரைக் கூடு” என்று கூறும் “மகா நிர்வாணத் தந்திரம்” கற்று அதன்படி நடந்து மதோன்மத்தர்களாக வாழ்ந்தனர்.
எத்தனை ஜாலியன் வாலாபாக்குகள் இங்கு முன்னாளில் நடைபெற்றன. எத்தனை எத்தனை ஆயிரம் டயர்கள், ஆம்மம்மா! எண்ணினால் நெஞ்சு வேகும். நினைப்பு அத்தனையும் மாறும்! ஜாலியன் வாலாபாக்கைக் கண்டித்தோம். டயரைத் தூற்றினோம்! ஆனால், முன்னாளில் நட்நத ஜாலியன் வாலாபாக்குகளை, படுகொலைகளை நாம் ஜபதபாதிகள் என்று அனுமதித்தோம். முன்னாள் டயர்களை முடிசூடா மன்னராக, மோட்ச வழகாட்டிகளாகக் கொண்டோம்! கெட்டோம்!
கேளுங்கள் நண்பர்களே! மனு கூறி அன்று பார்ப்பனியம் அமுல் நடத்திப் பகுத்தறிவால் சாய்ந்து, இன்று சங்கராச்சாரியாரால் தூக்கிவைக்கப்படும், சூத்திரர் கடமை, நிலை எது?
பிராமண பூஜைதான்!
நம்மவர் மானம் எவ்விதத்தில் பறிக்கப்பட்டது என்பதை எண்ணிப் பாருங்கள். மனு அத்தியாயம் 8 சுலோகம் 365இல், “ஒரு கன்னிகை போக விருப்பத்தினால் உயர்ந்த ஜாதிப் புருஷனைச் சேர்ந்தால் அவளைக் கண்டிக்கக்கூடாது” என்று கூறிவிட்டு, அதே அத்தியாத்தில் 374 இம் சுலோகத்தில், சூத்திரன் காவலில்லாத பிராமணப் பெண்களைப் புணர்ந்தால் அவன் அங்கத்தை அறுத்துவிடு” எனக் கட்டளையிட்டான்.
கண்களில் இரத்தநீர் பெருகவில்லையா இந்தக் கர்ணகடூரமான சட்டத்தைக் கேட்க, என்று கேட்கிறோம்.
“சூத்திரன்” கொல்லப்பட்டால், என்ன தண்டனை தெரியுமோ? “பூனை, அணில், கோட்டான், காடை, தவளை, நாய், உடும்பு, காக்கை இவைகளில் ஒன்றைக்கொன்றால் செய்யúவ்ணடிய பிராயச்சித்தம் யாதோ அதைச் சூத்திரனுக்கும் செய்க” என்று மனு அருளுகிறார்!
இந்நிலையில் நாம் இருந்தோம்! சங்கரர் கூறும் யாக யோக யக்ஞம் செய்துகொண்டு அவர்கள் வாழ்ந்தனர்.
ஹோமத்தில் என்ன கண்டனர் அவர்கள்?
மனு அத்தியாயம் 3 சுலோகம் 257 இல் ஹோமத் திரவியங்களைக் குறிப்பிடுகிறார். யாவை? செந்நெல்லின் சோறு, பசுவின் பால், சோமபதையின் சாறு, தீ நாற்றமற்ற இறைச்சி இவைகள் ஆவிசுகள் அதாவது ஹோமத்திற்குரியன.
அம்மட்டோ? மதுபர்க்கம் எனும் பண்டமும் அவர்களுக்குண்டு, அப்பண்டம் யாது? மாட்டிறைச்சியை நெய்யில் வேகவைத்துத் தேன்கலந்து செய்யும் சிற்றுண்டி.
இதுதான் மறைந்து போன மகாத்மியம், இதனை மீண்டும் புதுப்பிக்க வேண்டுமென்று தான், சகத்குரு கூறுகிறார். இதற்குத்தான் முத்திராதிகாரிகள் கிளம்பியுள்ளனர்.
முன்னாளில் இந்நிலை இருந்து பிராமணபூஜை குறைவர நடந்து, யாகம் யக்ஞம் சரவிர நடந்ததே அதனை எதிர்த்துப் புரட்சி புரிந்து சூத்திரர்களைச் சூத்திரத் தன்மையினின்றும் மீட்க விரும்பியவர்களே ஆரக்கர் என்று ஆரியர்களால் அழைக்கப்பட்டனர். நம்மவரைக் கொண்டே நம்மவரை வீழ்த்தினர்.
ஆனால், பெரியதொரு புயல் கிளம்பிற்று, தோப்புகளிலிருந்த மரங்கள் ஆடின. பர்ணசாலைகள் காற்றில் பறந்தன. யாக குண்டங்கள் அழிந்தன. ஹோமத்தீ அணைந்தது. தர்ப்பை தவித்தது. பார்ப்பனர் பதுங்கினர். வந்தது புத்துலக உணர்ச்சி, மேனாட்டு வாடை வீசிற்று. அதன் வேகத்தின் முன்பு யோகம், யாகம், யக்ஞம், ஜபம், தபம் எல்லாம் பறந்தன பஞ்சுபோல!

கேட்கும் ஆட்கள் கிளம்பிவிட்டனர். யாகமும் யோகமும் கிளைவையும், வெல்லெஸ்லியையும் தடுக்கவில்லை.

ஆஜமேத யாகம், இடு தின்ன உதவிற்றே தவிர ஆங்கிலேயனை விரட்ட முடியவில்லை! ஹோமப்புகை துப்பாக்கி வேட்டுப் பகை முன்பு மாயமாய் மறைந்தது.

சஙகராச்சாரிகளின் பீடம் ஆக்காலத்தில் காலியாக இல்லை. அந்தக் காலத்தில் ஒருயாகம் செய்து வெள்ளையனைத் தடுத்திருக்கக்கூடாதோ. வெள்ளையன் வேதமறியாத நீசன்! என்றனரே. ஒரு வேள்வி செய்து அவனை விரட்டி இருக்கலாகாதோ, பிராமணர்கள் பூதேவர்களாயிற்றே, ஏன் வெள்ளையன் வந்ததும் கடையைக் கட்டிக்கொள்ளத் தொடங்கினர்.

எங்கே அந்த யாக யோக பலம்? திராவிடப் பெருங்குடி மக்களை ஏய்க்கப் போட்ட தவவேடம் என்னவாயிற்று? மக்களை மிரட்ட எழுதிவைத்துக் கொண்ட ஏடுகளில் காணப்படும் பாசுபதாஸ்திரம், வர்ணாஸ்திரம், வாயுவாஸ்திரம், ஆக்கினியாஸ்திரம், மோகனாஸ்திரம், இந்திராஸ்திரம், ராமபாணம், திரிசூலம், தண்டம், கதை, மாகாளி வாள் இவைகள் எங்கே போயின?

இத்தனையும் பொய் என்பதை மேனாட்டுப் படை எடுப்பும் அத்துடன் கலந்துவந்த புத்துலக வாடையும்காட்டி, மக்களை விழிப்படையச் செய்தது.

பிறகே மக்கள் கண்டனர் யாகம் யோகம் என்ற பேச்சு பார்ப்பனர் போக போக்கியத்துடன் வாழவேண்டும் என்பதற்காகச் செய்யப்படும் சூது என்பதைப் பிறகே அறிந்தனர். யாகம், தெரியாத பிரிட்டன், பிரான்சு அமெரிக்கா முதலிய வல்லரசுகள் வாழ்வதை ராபர்ட் கிளைவ் துப்பாக்கியுடன் வந்து நாட்டைப் பிடித்தானே தவிர, தாமரைக் குளத்தருகே தனி இடம் அமைத்துத் தவம் செய்ததால் அல்ல என்பதைத் தெரிவித்தது மக்களுக்குப் பார்ப்பனியக் கொடுமை. கண்டனர் மக்கள் சரஸ்வதி பூஜை உள்ள நாட்டிலே 100க்கு 90 பேர் தற்குறிகளாகவும், லட்சுமி பூஜை உள்ள நாட்டிலே தரித்திரம் தலைகோலமாக இடுவதையும், சக்தி பூஜை செய்யும் நாட்டிலே சக்கைகள் எனும் மனிதப் பிண்டங்கள் வாழ்வதையும், இவைகள் இல்லாத, தெரியாத நாட்டிலே, இன்பம் பெருகி இருப்பதையும். எனவேதான் பார்ப்பனியத்தை எதிர்த்தனர்.
(திராவிடநாடு - 20-7-47)