அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஏன் இந்தக் கொடுமை?

15-7-53ல் தி.மு.க. திட்டப்படி தமிழ்நாடெங்கும் நடைபெற்ற ரயில் நிறுத்தக் கிளர்ச்சியில் ஈடுபட்ட ஐயாயிரத்துக்கு மேற்பட்ட தோழர்களில் பலரின் வழக்குகள் இன்னும் நடைபெற்ற வண்ணம் உள்ளன. பலர் தண்டிக்கப்பட்டுச் சிறை சென்றுள்ளனர். சிலர் சிறை சென்று திரும்பி வந்தும் விட்டனர்.

ஆனால், ஒருசிலர் எந்தவிதமான விசாரணையுமின்றிக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்ற செய்திகைக் கேள்விப்படும்போது, இந்த ஜனநாயக சர்க்காரின் விசித்திரமான – விபரீதமான போக்கை எப்படி வர்ணிப்பதென்றே தெரியவில்லை.

தூத்துக்குடியில், ரயில் நிறுத்தக் கிளர்ச்சியில் ஈடுபட்ட நூற்றுக்கு மேற்பட்ட தோழர்களை எந்தவிதமான விசாரணையுமின்றிக் காவலில் வைத்திருப்பதாகவும், அவர்களை ஜாமீனில் விடக்கூட மறுப்பதாகவும் நமக்குச் செய்தி கிடைத்துள்ளது.

தூத்துக்குடித் தோழர்கள் மீது மட்டும் ஏன் இந்த விசித்திரமான முறையைச் சர்க்கார் கையாள வேண்டுமென்பது தான் தெரியவில்லை. மற்ற ஊர்களில் கையாளப்படாத முறைகள் எதனையும் தூத்துக்குடித் தோழர்கள் கையாண்டர்கள் என்று கூறுவதற்கும் இல்லை – கூறப்படவுமில்லை.

தூத்துக்குடிப் புதுக்கிராமத்தில் நடைபெற்ற அசம்பாவித சம்பவத்துக்கும் தி.மு.க.வுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை ஆதாரப்பூர்வமாகப் பல தடவை விளக்கப்பட்டு விட்டது. அதுவுமின்றித் தூத்துக்குடியில் நடைபெற்ற அந்தச் சம்பவம், ரயில் நிறுத்தக்கிளர்ச்சியை ஒரு நல்ல தருணமாகப் பயன்படுத்திக் கொண்ட சில கொள்ளைக் கூட்டத்தாரால் நடத்தப்பட்டிருக்கலாமென்றும், தி.மு.க.வுக்கும் அந்தச் சம்பவத்துக்கு தொடர்பு உண்டாக்கிக் கூறமுடியாதென்றும், தூத்துக்குடி துப்பாக்கிப் பிரயோக சம்பந்தமாக நடைபெற்ற விசாரணையின்போது சாட்சியளித்த போலீஸ் அதிகாரியே கூறியிருக்கிறார். அப்படியிருந்தும் தூத்துக்குடித் தோழர்களை மட்டும் ஏன் இப்படிக் கொடுமைப்படுத்த வேண்டும்?

தூத்துக்குடியைப் பொறுத்தவரையில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தத் தனி நடவடிக்கைக்குக் காரணம் யார்? சென்னை சர்க்காரின் அனுமதியின்பேரில் அந்தத் தோழர்கள் விசாரணையின்றி அடைக்கப்பட்டுள்ளனரா? அல்லது தூத்துக்குடியிலுள்ள அதிகாரிகளே இந்தக் கொடுமையைச் செய்கின்றனரா? என்பதற்குச் சர்க்கார் தக்கபதில் தரவேண்டுமென்றும், காரணம் எதுவுமின்றிக் கழகத் தோழர்களைக் காவலில் வைத்திருக்கும் ஜனநாயகத்துக்கு அப்பாற்பட்ட சர்வாதிகாரக் கொடுமையைக் கைவிட்டு அந்தத் தோழர்களை விசாரணை செய்து, குற்றஞ் செய்திருப்பின், மற்ற ஊர்த் தோழர்களுக்கு அளிக்கப்பட்டதுபோல் இவர்களுக்கும் தண்டனை கொடுக்கவேண்டுமே தவிர, காரணம் கூறாமல் காவலில் வைத்திருக்கும் கொடுமையைச் செய்ய வேண்டாமென்றும் கேட்டுக் கொள்கிறோம்.

திராவிட நாடு – 30-8-53