அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஏன் பிறந்தோம் இங்கு

நீர்வள நிலவள மிகுந்த நெல்லூர் தலத்திலே, சென்னை மாகாணக் கவர்னரின் ஆலாசனையாளர் மிஸ்டர் ரூதர்போர்டு, “மக்களே! காலநெருக்கடியை உத்தேசித்து, இனி நீங்கள் உபயோகிக்கும், அரிசியின் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள்” என்று உபதேசித்தார். மூன்றுவேளைச் சோற்றுக்காரர் இரண்டு வேளை உண்போர், ஒரு பொழுதுடன் இருப்பது, முழு வயிற்றுக்குச் சோறிடுவோர் அரை வயிற்றை மட்டும் நிரப்பிக் கொள்வது என்ற இன்னோரன்ன முறைகளே தேனும் கையுண்டால், மதியுரைத்த மன்னர்பிரான் சர்க்காரின் அதிகாரி கூறியபடி நடக்கலாம், “இது ஒரு கஷ்டமல்லவே! ராபர்ட் கிளைவின் கீழ் வேளை செய்த இந்திய சிப்பாய்கள் கஞ்சியைத் தாங்கள் குடித்துவிட்டு, சாதத்தை வெள்ளைச் சிப்பாய்கட்குத் தரவில்லையோ, அத்தகைய மூர்த்திகளன்றோ” என்று மற்றோர் ஆங்கிலத் தோழர் எவரேனும் கூறுவார். புறாவுக்காகத் தன் சதையை அறுத்துத் தந்த சிபிச் சக்ரவர்த்தி வாழ்ந்த இப்பாரத பூமியிலே, தியாகமே வாழ்வு என்பதன்றோ கொள்கை” என்று ஆரியரொருவர் திருவாய் மலர்ந்தருளுவார், “அரைவயிறு சாப்பிடும்படி “துரை” சொன்னாராமே அது கிடைத்தால் போதுமே நான் உணவருந்தி நாள் மூன்றாகிறதே” என்று பட்டினிப் பட்டாளம் கிளம்பும். இவ்வளவு வேதனை இங்கிருக்கிறது. சோற்றுக்கு அளவிடும் போதனையும், சோற்றுக்கே திண்டாடும் சோதனையும் ஏற்பட்டிருக்கிறது. நாட்டிலே இதுபோது பதினைந்து இலட்சம் தோழர்கள் பட்டாளத்திலே சேர்ந்து, சர்க்காரின் பாதுகாப்பு பெற்று, பசி நோயின்றி இருக்கும் இந்தத் தயவும் கிடைத்திராமற் போய்விட்டிருந்தால், மிஸ்டர் ரூதர்போர்டின் உபதேசம் போல், நாட்டிலே பலர் செய்ய வேண்டி நேரிட்டிருக்கும். பட்டாளத்திலே சேர்ந்தோம், பாதிவயிற்றுச் சோற்றுக்காரராக இல்லை என்று போரிடும் தோழர்கள் திருப்தி கொள்ளலாம். அவர்களும் நம்முடன் இருந்து, வேதனையை உண்டு விம்மிடுவதை விட, இன்றுள்ள நிலை மேலென்று கருதுவர்.

சாப்பாட்டின் அளவைக் குறைத்துக் கொள் என்று உபதேசம் செய்யப்படும் நாட்களிலே அமெரிக்காவிலே! ஹாலி உட் எனும் கலாஷேத்திரத்லே உள்ள நட்சத்திரங்களும் மனம் நொந்துள்ள னராம். பாருங்கள் பரிதாபத்தை. பராரியும் பஞ்சையும் அவதிப் படுவது சகஜம் கலைவாணிகள் கஷ்டப் படுகிறார்களென்றால், திடுக்கிடவில்லையா! ஓ! கலை வளர்ச்சியிலே கருத்துக் கொண்ட கவிதா உள்ளம்படைத்த கண்ணியர்களே, உமது இருதயம் துடிக்கவில்லையா, கலைக்கு வந்துற்ற இடி கேட்டு.

இங்கே சோற்றுப் பஞ்சம் இருக்கட்டும் - அதைப் பொறுத்துக் கொள்ளலாம், அங்கே ஹாலிவுட்டில், கலையை வளர்க்கும் கயற்கண்ணிகள், கமலமுகவதிகள், கூந்தலழகி! ஆடலழகி ஆகியோரும், சுந்தரரூபர், சுகுணப் பிரதாபர்களம் சோர்ந்து விடுகின்றனராம், அவர்கள் சோர்ந்தால் கலை சுருண்டு விடாதா, கலை சுருண்டால், உலகமே இருண்டன்றோ போகும், ஆகவே ஆவன செய்க என்று இங்குள்ள கலாவல்லபர்களுக்கு கலையின் சார்பாக ஒரு வேண்டுகோள் விட வேண்டிய அளவு வேதனை ஹாலிவுட்டிலே! யாது என்பீர்கள். கேண்மின், இனிக் காலக்கோளாறை உத்தேசித்து ஹாலிவுட் நட்சத்திரங்கள் திங்களொன்றுக்கு (அங்கும் முப்பது நாட்கள் திங்களுக்கு!) 6666-10-8 தொகைக்கு மேலாகச் சம்பளமாகப் பெறக்கூடாதென்று, சர்க்கார் உத்தரவிட்டுள்ளனராம். கிளிகளும் கோகிலங்களும் 6666 ரூபாயைக் கொண்டு நாங்கள் ஒரு மாத முழுவதையும் எப்படிக் கழிப்போம், எதற்குக் காணும் இத்தொகை என்று ஏங்குகின்றனவாம். நாளொன்றுக்கு 222 ரூபாய் தான் பாவம்! இது போதுமா! இது அமெரிக்காவிலே அவர்களுக்கு வந்துள்ள அவதி. இங்கு, மிஸ்டர் ரூதர்போர்டு, அரிசியை மட்டாக உபயோகிக்கும்படி அற உரையாற்றுகிறார். ஏன் பிறந்தோம் இங்கு?
27.12.1942