அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


எதேச்சாதிகார ஆணவத் தர்பார்
கழக வீரர் கைகளிலே விலங்குதடை உத்தரவும்
சுயராஜ்யத்தின் ‘திமிர்’ப் போக்கு!

தோழர் என்.வி.நடராசன், விடுதலைப் படையின் முன்னணி வீரர்! எதுவரினும் இதயங் கலங்கா சூரர்! பொறுப்பானவர்! ‘திராவிடன்’ பத்திரிகையின் ஆசிரியர்! திராவிட முன்னேற்றக்கழக அமைப்புக்குழுவின் செயலாளர்! நாட்டு மக்களின் இதயத்தைத் தன் தொண்டால் கவர்ந்தவர்! அவர் கைகளிலே விலங்கிட்டு வீதிவிழியே அழைத்துவந்தனராம். அவரையும் குன்றத்தூர் தோழர் பாலசுந்தரத்தையும் 14.11.50 அன்று சப்டிவிஷனல் மாஜிஸ்ரேட் கோர்ட்டுக்கு, இருவர் கைகளிலும் விலங்கு பூட்டி, வீதி வழியே கொண்டு சென்றனராம்! கேட்கும்போதே, நெஞ்சம் கொதிக்கிறது. இலட்சிய வீரர்கள் கைகளிலே விலங்கு! இரும்புச்சங்கிலி!

வெறி பிடித்தலைந்த எந்த எதேச்சாதிகார ஆட்சியுங்கூட இப்படி நடந்ததில்லை ஆனால், இவர்கள் நடத்துகிறார்கள்! கண்ணியத்தை மறந்து திரிகிறார்கள்!!

காங்கிரஸ், சர்க்கார், நம் கைகளிலே விலங்கைப் பூட்டுகிறது! விவேகிகள் காணக்கூடிய செயல் ஆனாலும் ‘நம்மைக் கேட்க யாரிருக்கிறார்கள்’ என்ற திமிரோடு செய்கின்றனர்! பரவாயில்லை எதையும் தாங்கும் இதயம் நமக்குண்டு!

அடக்குமுறை வெறியால் துள்ளித்திரியும் அகிம்சா மூர்த்திகள் என்றும் இருக்கப்போகும் நிரந்தர பீடமல்ல அதிகாரம் ‘நடுத்தெரு நாராயணர்கள்’ ஆகும்காலம் நெருங்கிக் கொண்டேயிருக்கிறது. எதேச்சாதிகாரம் நீடிக்காது-ஒழியும் ஒழிந்தேதான் தீரும்!

(திராவிடநாடு 19.11.50)