அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஏழை எரிமலை!

மக்களின் கோபம், மக்களை என்ன செய்ய முடியும்?

மன்னன், எவ்வளவு கொடுமைப்படுத்தினாலும் மக்கள், மனம் நொந்து சபித்தாலும், அரசாளப் பிறந்தவன், ஆண்டு கொண்டுதானே இருப்பான்!

ஆண்டவன், அரசனைப் பிறப்பிக்கிறான்! அரசனை எதிர்த்தால், ஆண்டவனின் ஏற்பாட்டை எதிர்ப்பது என்றாகும். தேவநிந்தனை, பெரும்பாவம்.

கொடுங்கோல் மன்னன் வாழ்கிற நாட்டைவிடக் கடும்புலி வாழ்கிற காடே மேல். அவ்வளவுதான் செய்யமுடியுமே தவிர, வேறு என்ன செய்ய இயலும்?

மன்னனுக்கு அடுத்தபடி, சீமான்கள்! அவர்கள், இலட்சுமி புத்திரர்கள்!!

பெரும் புண்ணியவான், மன்னனாகிறான்! சாதாரணப் புண்ணியவான்கள், சீமான்களாகின்றனர்! ஆக, இருவரும் இறைவனின் அருளைப் பெற்றவர்களே!

மக்களின் வாழ்வின் மீதோ, பாவமூட்டைகள்தான், வறுமை, நோய், வேலையில்லாக் கொடுமை என்ற உருவிலே உள்ளன. அவர்கள், ‘அடுத்த ஜென்மத்தி’லாவது நல்வாழ்வு கிடைக்கவேண்டுமென்று நாதனை வேண்டுவதன்றி, வேறுவழி இல்லை, என்று வெளிப்படையாகவே பேசினர் முன்பெல்லாம்.

சீன்மான்கள்! தனிரகம்! மன்னனுக்காவது, வாரிசுகளின் தொல்லை, வெளிநாட்டு வேந்தரால் ஆபத்து ஏற்படும். இவர்களுக்கோ, இவ்வகை ஆபத்தும் கிடையாது. இன்ப வாழ்வு! மது உண்டு, அதை ஊற்றித்தர மங்கை உண்டு. மங்கையர்க்கு அழகு உண்டு. அதை அழிக்கும் வல்லமை சீமான்களுக்கு உண்டு! அவர்களின் மாளிகைகள், கலை கொஞ்சும் இடமாயிற்று! கலைவாணர்களோ, அவர்களுக்குக் கட்டியம் கூறிப்பிழைப்பவர். கவிவாணர்கள் புகழ்மாலை சூட்டுவர். காமக்கிழத்தியர், தமது காமம் கக்கும் கண்களான கெண்டையைவீசி, சீமான் வர்க்கத்தினரான விரால்களை இழுப்பர். ஒரே கோலாகலமான வாழ்வு!

இந்தக் கோலாகல வாழ்வுக்கான வசதிகளைத் தேடித்தர, ஒவ்வொரு சீமானிடமும் ஆயிரக்கணக்கில் ஆட்கள் இருப்பர். அவர்கள் கழனிகளில் மாடுகளாவர். மாளிகை வாயிலில் நாய்களெனக் காத்துக்கிடப்பர். வறுமை கொட்டும்! அதைவிட அதிகமாக, சீமான்கள் என்ன செய்வாரோ என்ற அச்சம் அவர்களைப் பிடித்தாட்டும். கைகட்டி வாய் பொத்தி நிற்பர் அவர்கள். சீமான் கேட்கும் போதெல்லாம், வரி தரவேண்டும். சில வேளைகளில் அபராதம் தரவேண்டும். வேறு சில வேளைகளில் சீமான்கள், கிடைப்பதை எடுத்துச் செல்வர், ஏழை ஏதும் கேட்கவே முடியாது. அவர்கள் ஏழைகள் மட்டுமல்லர், கோழைகள்!

ஏழையோ கோழை! சீமானோ உல்லாசமன்றி வேறொன்றும் அறியான் - விரும்பான். மன்னனோ மதோன்மத்தன்! மன்னன் மனைவியோ, மந்தகாசம் தவிர வேறு ஏதும் விரும்பாதவள்!

புரட்சிக்கு முன்பு, இதுதான் பிரான்ஸ்!

இருபது முப்பது ஏக்கர் விஸ்தீரணமுள்ள இடம். அதைச் சுற்றி முள்வேலி! அங்குதான், சீமானின் மாளிகை இருக்கும். மாளிகைக்கு அழகுதரத் தோட்டம். தோட்டத்துக்கு அழகுதரச் சிறுகுளம் - அதிலே சிங்காரிகள்! அவர்கள் நீராடுவர்! அது கண்டு, சீமான்கள் களிநடமாடுவர்! அவர்கள் சிரித்துப் பேசுவர், சீமான் சொக்கிச் சாய்வார்! அவர்களின் அதரம் துடிக்கும்; சீமானின் நெஞ்சமோ, அருகே சென்று அவளை அணைத்து முத்தமிடாவிட்டால், தன் நெஞ்சு வெடிக்கும் என்று கூறுவார். சேல் விழியாள், சிற்றிடையாள், வாட்கண்ணாள், சுருண்ட குழலழகி, கிளி மொழியாள், கட்டுக்கடங்காக் கனகப்பந்தினைக்கொண்ட காரிகை, இவ்வண்ணம் இருப்பர்! இந்த இன்ப வல்லிகளுடன் கொஞ்சி விளையாடும் சீமானுக்குக் கொல்லைப் புறத்திலே, குமுறிச் சாகும் பணியாள், நோய் உயிரைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்ன, அது தெரிந்தும் தடுக்க முடியாதது கண்டு, திகைத்துக் கிடக்கும் தரித்திரவானின் புழுப்போன்ற நிலைமை, இதுவா நினைவிற்கு வரும்?

ஒரு கையில் திராட்சைப் பழக்கொத்தும், மற்றொரு கையில் அதன் ரசம் ஊற்றப்பட்ட பானக் கோப்பையும் ஏந்திக் கெண்டக் கண்கள் சுழல, ஆடை நெகிழ, கூந்தல் புரள, சிற்றிடை துடிக்க, அவள் அருகே நடந்துவந்து, ஆஹா! ஐயோ! அப்பப்பா! போதுமே! இன்னமுமா! முடியவே முடியாது! என்று சரசமொழிகளைப் பொழிகிறபோது, சீமானின் காதிலே, காலமெல்லாம் பாடுபட்டவனின் ஈனக்குரல், குமுறல், அழுகுரல், பெருமூச்சு, ஏறுமா? அவன் ஆனந்த புரியிலல்லவா வாழ்கிறான்! அடிமையின் அழுகுரலைக் கேட்க அவனுக்கு நேரம் ஏது? அழவேண்டியவன் அழுகிறான்! ஆமாம்! கண்களுக்கு நீரைப் பொழியவைக்கும் சக்தி இருக்கும் வரையில்தானே அழப்

போகிறான்! பிறகு? கண்களும் வறண்டுவிடும்! உலகம் ஒரே அந்தகாரமாகி விடும்! அவன் மனிதன், என்று வேறு யாரேனும் கவனப்படுத்தியாக வேண்டும் - இல்லையேல், அவன் நடைப்
பிணந்தான்! அவன் உழுத வயலிலே பச்சைப் பசேலெனப் பயிர் ஏறி இருக்கும் - அவனுடைய கண்களோ பஞ்சடைந்து இருக்கும்.

“-எஜமானர் இருக்கிறாரா?”

“ஏண்டா மூடா! இருக்கிறாரா?

என்று கேட்கிறாயே, திமிரா உனக்கு? இல்லாமல் எங்குப்போய் விடுவார்?”

“ஒரு மனு...”

“இன்று அவரைப் பார்க்க முடியாது.”

“நாலு நாட்களாக வந்து வந்து போகிறேனே.”

“நாயே! நாலு நாட்கள் நடந்தால் எனக்கென்ன? நாற்பது நாட்கள் நடந்தால் என்னடா?”

கதவு ‘படார்’ என்று சாத்தப்படும்! ஏழை, தள்ளாடி மறுபடியும் தன்வீடு அடைவான்! வீடா அது? வேதனைக்கூடம்!

“வந்துவிட்டீர்களா!”

அந்தக் குரலிலே ஆவல் தோய்ந்து இருக்கும்.

ஒரு வறண்ட பார்வையை அவன் பதிலாக அளிப்பான்.

“என்ன சொன்னார்?”

-அவரா? நான் பார்க்கவே இல்லையே!”

“ஏன்?”

“அவருக்கு ஓய்வு இல்லையாம்” குடிசையில் இந்தப் பேச்சு நடக்கும்.

ஓய்வு இல்லாச் சீமான்! உண்மைதான் அது! விருந்தளிப்பது, விருந்துக்குச் செல்வது, காமக்கிழத்தியைத் தேடுவது, துரத்துவது, ஒரே வேட்டைமயம்!!

ஆமாம்! ஓய்வு கிடைக்கும்போது அவர், குதிரை மீதேறிக்கொண்டு, மாளிகைக்கு அருகே உள்ள சிறு அடவிக்குச் செல்வார் - முயல்வேட்டைக்கு, மான்வேட்டைக்கு!!

வேட்டை நாய்கள் அவரைப் புடை சூழ்ந்து செல்லும். மது உண்ட மங்கையின் மொழி அவரைச் சொக்கவைப்பதுபோலவே, அந்த வேட்டை நாய்களின் ‘குரைப்புஒலி’யும் அவருக்கு ஆனந்தமளிக்கும். கம்பீரமாகச் சவாரி செய்வார்! ஒரு முயல் சிக்கினால் போதும், சீமானின் வீரத்தைப் பாராட்டுவர்! மறுதினம் அந்த மகத்தான சம்பவத்தைக் கொண்டாட விருந்து நடக்கும்.

‘அந்த நீல உடைக்காரி!.... யார்?-”

“அவளா? நெளியும் அந்த இடையில், என் கரம் நேற்றிரவு...”

“ஓஹோ! அவள் உன் மதுக்கிண்ணமா?-”

“கிண்ணத்தில் மது கிடையாதடா!”

“என்னடா அது?” தான் அருகே நெருங்கினால், அவ்வளவும் வெறும் பூச்சு என்பது தெரியும்.”

ஒவ்வொரு புறத்திலே ஒவ்வொரு வகையான சம்பாஷணை - எல்லாம் இன்ப வாழ்வு பற்றியே இருக்கும். சில இடங்களிலே சீற்றமொழியும் உண்டாகும்.

‘என் பாதையில் குறுக்கிட்டான். நாளை மாலை நான் அவனுடன் வாட்போர் நடத்தப்போகிறேன்.
“ஏன் வாட்போர்?”

“நான் நேசித்து வந்த நடன சுந்தரியின் மனத்தை அவன் மயக்கி, என் சந்தோஷத்தை அழித்தான். ஆகவே, அவன் அழிக்கப்பட வேண்டியவன்.”

இங்ஙனம் சூள் உரைப்பான் வாலிபமுடுக்குள்ள சீமான். வயோதிகனோ, “ஆபத்து வந்தால் நான் கவனித்துக் கொள்கிறேன். அரசன் என் கைக்குள்! ஆளைத் தீர்த்துவிடு. அந்தி வேளையில் அருவிப் பக்கம் அவள் தனியாக உலவ வருவது வழக்கம் - என்று கூறிக் கொலையாளியை ஏவுவான், வேறோர் சீமான் மீது!

“நாகரிக நகரங்களில் நான் உலவி இருக்கிறேன். நங்கையரை நேசித்திருக்கிறேன். ஒய்யாரிகளுடன் உலவி இருக்கிறேன். குலவி இருக்கிறேன். ஆனால் ஆரணங்கே! நான் முதன் முதல் காதலிப்பது, உன்னைத்தான்! இது உதட்டு அசைவு அல்ல உள்ளத்தினின்றும் வெளிவரும் உண்மை!”

“காலிப்பது முதல் முறை? கட்டுக்கதை!!

“நிச்சயமாக அப்படித்தான் தோன்றும் உனக்கு. எனக்கு மட்டுமா, அனைவருக்கும். நாட்டியச் சாலைகளிலே வட்டமிட்டுக்கிடந்த வாலிபன்தானே இவன்! இவனுக்காக இதுவரை காதல் ஏற்பட்டிராது! என்றே எவரும் எண்ணுவர். கள்ளச் சிந்தனையற்றுக் கூறுகிறேன். கனிமொழியாளே! நான் உன்னைக் கண்ட பிறகே உண்மைக் காதலின் உயர்வைத் தெரிந்து கொண்டேன்! இதுவரை நான் உழன்றேன் - கெட்டு அலைந்தேன் - தீவு நோக்கிப் பறக்கும் சிறுபறவைபோல அலைந்தேன்...”

அதற்குமேல், அவன் அவனைப் பேச அனுமதிக்கமாட்டாள்! முத்து மாலை பரிசளிப்பாள்! அழகும் இளமையும் பலியாகும்...! புதிய ஜோடி!

இவ்வளவு வேலைகள் இருக்கும் போது சீமான்களுக்கு ஓய்வு ஏது?

அந்த ஏழை சொன்னது சரி! ஓய்வு இல்லை சீமானுக்கு!! ஏழையின் குறையைக் கண்டறிய நேரம் இல்லை! ஆண்டவனுக்கும் நேரம் இல்லை! திகைத்துப் போயிருந்தான் தேவன்!! தன் சிருஷ்டியிலே ஏற்பட்ட அலங்கோலத்தைக் கண்டு!!

ஆண்டவன், அரசாள்பவன், சீமான், யாருக்கும் ஓய்வு இல்லை!

தேவாலயத்திலே திருவிழாக்களுக்குக் குறைவில்லை! அரண்மனையிலே, ‘தர்பார்கள்’ நடந்த வண்ணம் இருந்தன. மாளிகைகளிலே, விருந்துகள் நித்திய நிகழ்ச்சி! யாருக்கும் ஓய்வு இல்லை!! ஏழை என்ன செய்வான்? என்ன செய்தான்?

ஜூலை 14! அதுதான் அவன் செய்த வேலை! பொறுத்துக் பொறுத்துப் பார்த்தான்! ஜெபித்தான் - மண்டியிட்டான் - காலைப்பிடித்தான் - கண்ணீர் பொழிந்தான் - எல்லாம் செய்து பார்த்தாகிவிட்டது.

ஓய்வு இல்லை;
நேரம் இல்லை;

செய்வதற்கு ஒன்றுமில்லை–
இவ்வளவுதான், அவன் பெற்ற பதில்கள்! மேலும் பேசினால், சவுக்கடி, வேட்டை நாய், ஆளைவேட்டையாட! கோபமாகப் பேசினால் கத்தி, குண்டு! சிலருடன் கூடிப் பேசினால், அதிகார வர்க்கம் சீறும்! சீறினால், பாஸ்ட்டிலி! ஆமாம்! பாஸ்ட்டிலி!! மனிதனை உயிரோடு வதைக்கும் சிறைக் கூடம்! வாலிபனை வயோதிகனாக்கும் இடம்! திட சித்தமுடையவனைப் பித்தனாக்கும் இடம்!!

இந்நிலையிலே கிடந்தவன், கடைசி வழியைக் கண்டு பிடித்தான்! இல்லை தவறு! கடைசிப் பாதையில் துரத்தப்பட்டான்! ஜூலை 14!! புரட்சி!!

பல காலமாகக் குமுறிக்கொண்டிருந்த உள்ளம்! எரிமலை நெருப்பைக் கக்கலாயிற்று எதிர்பாராததுதான்! ஆனால், புரட்சி நேரிட்டபோது, பிரான்சு நாட்டுச் சீமான்கள் நடு நடுங்கினர்.
மன்னனின் அதிகாரம் தானாகவே ஒரு சிக்கலை உண்டாக்கிக் கொண்டது. சீமான்களிடம், மன்னன் வரிபெற முடிவதில்லை! மக்களுக்கோ, வரிப்பளுவைத் தாங்கும் சக்தி இல்லை. நாட்டு வளத்தைப் பெருக்கும் அறிவுக்கு இடமில்லை. - சர்க்கார் நிர்வாகமோ, மாடு மேய்ந்த வயலின் நிலை பெற்றது. இது சமயம், வரவு செலவுத்திட்டத்தை ஒழுங்குபடுத்த மன்னன் நிபுணர்களைத் தேடினான். ஒருவர் பின் ஒருவராக வந்த நிபுணர்கள், தங்களின் திறமை, இந்தச் சிக்கு அறுக்க முடியவில்லை என்பதைக் கண்டு கலங்கினார்.

சர்க்காருக்கு இந்தச் சஞ்சலம், அதே போது ஏழை உலகிலே, மெள்ள மெள்ளப் பரவிய புரட்சிக் கருத்துக்கள் புத்துருவெடுத்தன.
“கிடக்கிறான் தள்ளு!”

“உரக்கப் பேசாதே! தெரிந்தால் அதிகாரம் தாக்கும்.”

“வறுமை தாக்கித் தாக்கி வைரம் பாய்ந்தகட்டையடா, இது. வேறு தாக்குதலுக்குப் பயப்பட வேண்டியதில்லை, போ.”

“போலீஸ் வரும்! பட்டாளம் வரும்! துப்பாக்கியால் சுடுவர்!”

“துப்பாக்கி என்ன செய்யும்? சாகடிக்கும். போடா! முட்டாளே! இப்போது நான் வாழ்ந்து கொண்டா இருக்கிறேன்.”

ஏழையின் குரலிலே ஒரு புதுமை! பேச்சிலே புரட்சி! பார்வையிலே புரட்சி! ஆம்! அவன் புரட்சிமயமானான். மக்களிடை புரட்சி மனப்பன்மை! மன்னன் மனத்திலேயோ மருட்சி!

ஸ்டேட்ஸ் ஜெனரல், எனும் மக்கள் மன்றத்தைக் கூட்ட உத்திரவிட்டான் மன்னன், நெருக்கடியைத் தீர்க்க.

வயிற்று நெருக்கடியைத் தீர்க்க அல்ல, கொடுங்
கோன்மைக்கு நெருப்பிட!!

419 வருஷங்களாகக் கூடாத சபை கூடிற்று, 1789-இல் தலைமுறை தலைமுறையாக, மன்னர்கள் எந்த மன்றத்தைக் கூட்டாமல், அசட்டை செய்தனரோ, அந்தச் சபையைக் கூட்ட வேண்டிய அளவு நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது.

மக்களின் பிரதிநிதிகள், சீமான்களின் பிரதிநிதிகள், மத அதிகாரிகளின் பிரதிநிதிகள் -- எனும் முப்பிரிவு. இச்சபையில் - ஏர், கோப்பை, ஜெபமாலை! உயிர்பற்றிக் கவலையற்ற வேட்டைக்காரன் - பசியுடன் புலி - உருத்திராட்சப் பூனை!!

முப்பிரிவில், வழக்கப்பட, இயல்பின்படி, சீமானும் குருவும் கூடிக்கொண்டு, உழைப்பவனை, உள்ளேவா, ஆனால், கொஞ்சம் அடக்கமாகப் பேசு! என்று கூறினர். அதாவது, மக்களின் பிரதிநிதிகளுக்கு, அதிகாரம் மட்டுப்படுத்தப்பட வேண்டும், பிரதிநிதிகளின் அளவும் குறைவாக இருக்க வேண்டும் என்றனர்.

மக்கள் மருண்டனரா? இல்லை! ‘ஆமாம் சாமி’ என்றனரா? இல்லை! ‘அப்படியா!’ என்று கேட்டனர் - ஆச்சரியத்துடன் அல்ல - கோபத்துடன் - பேச்சால் அல்ல - பார்வையால்!!

அந்தப் பார்வையை, சீமானும் குருவும் அதற்கு முன்பு கண்டதில்லை. பஞ்சடைந்த கண்களிலே இருந்து நெருப்புப் பொறி பறக்கும் என்று அவர்கள் எண்ணியதில்லை.

1789, மே மாதம் ஐந்தாம் தேதி கூடிய சபையில், முதலிலே இந்தக் கொந்தளிப்பு ஏற்பட்டது. மக்கள், மன்றத்தில் இடம் பிடித்துக் கொண்டனர் - சீமானும் குருவும் ஓரளவுக்கு விஷயத்
தைப் புரிந்து கொண்டனர். புதிய உண்மை உலவலாயிற்று. ஏழை, கோழையல்ல! சாகத் துணிந்தவனுக்குச் சீமான் சிறு துரும்பு!!

பணிந்தனர், மக்கள் வெற்றிக்களிப்புடன் முழக்கமிட்டனர்.

இது சபையல்ல - களம்! இவர்கள் மக்களல்ல - மாற்றார் - என்று மன்னன் எண்ணவேண்டி நேரிட்டது. தன் ஆதிக்கத்தை நிலைநாட்டப் படை தேடினான், பிரான்சிலே அல்ல- வெளிநாடுகளில் ! பட்டாளங்கள் பவனி வந்தன! பிரான்சு நாட்டு மன்னன் கேட்டான். அவன் பேச்சுக்கு மதிப்பு வைத்து வேற்றுநாட்டு மன்னர்கள் உதவிக்குப் படைகளை அனுப்பினர்! மக்கள் கேட்டால், படை எங்கிருந்து வரும்? யார் அனுப்புவர்? எனவே, மக்களே போர்வீரராயினர் - தெருவெல்லாம் பட்டாளம்! கிடைத்ததெல்லாம் ஆயுதம்!!

அதற்குப் பிறகு, புரட்சியின் போக்கைத் தடுக்க யாராலும் முடியவில்லை. எங்கெங்கு முன்பு பணிந்து கிடந்தனரோ, அங்கெல்லாம் பாய்ந்து சென்று தாக்கினர்! எங்கெங்கு ஏவல் புரிந்தனரோ, காவல் புரிந்து வந்தனரோ, அங்கெல்லாம், சென்று தாக்கினர்! உல்லாசபுரி அல்லோல கல்லோலப் பட்டது. மங்கையர் வெறியிலே மதுக்கிண்ணங்களைக் கீழே வீசும் சத்தமன்றி வேறு சத்தமறியாச் சீமான், தன்மாளிகைச் சுவரை கட்டை, கல், கையில் கிடைத்த சாமான், சம்மட்டி கொண்டு ‘கும்பல்’ தாங்குவது கேட்டுத் திகைத்தான்! அவனுடைய ‘வீரம்’ உதவிக்கு வரவில்லை. வீரமல்லவே அது! - ஆணவத்தையன்றோ அவனே அதுவரை வீரம் என்று எண்ணிக்கொண்டிருந்தான். அவன் மனக்கோட்டை தூளாயிற்று - மாளிகைக்கும் அதே கதி. புரட்சி, மாளிகைகளை மண்மேடாக்கிற்று. மன்னன், குடும்பத்துடன் பிடிபட்டான். எங்கும் இரத்தமயம்! “வெறி நாய்களைச் சுட்டுத்தள்” - என்று கூறிய ஆணவச் சீமானின் வாயிலிருந்து இரத்தம்!! புரட்சி, பயங்கர உருவெடுத்தது - தடுக்க முடியாதநிலை! எதிர்ப்பட்டதெல்லாம் தூள்! எவன் எதிர்த்தாலும் சரி, வெட்டு! குத்து! கொல்லு!! பசி! பசி! பசி!! - ஆம்! முன்பு கதறினான்.

ஜூலை 14-இல் வெட்டு! குத்து! கொல்லு! - ஆசைதீரச் சொன்னான்! சொல்லிச் சொல்லி ஆனந்தப்பட்டான், அன்றுவரை சொல்லொணாக் கஷ்டப்பட்டவன்!! பாஸ்ட்டிலியை இடித்துத் தரைமட்டமாக்கினர்! தெருவெல்லாம், திரண்டு திரண்டு சென்றனர் - புரட்சி பொங்கி வழிந்தது. ஒரேநாளில் பல காலமாக இருந்துவந்த ஆணவம் தரைமட்டமாயிற்று. 150 ஆண்டுகளுக்கு மேலாக, கொடுமைக்கூடமாக இருந்துவந்த பாஸ்ட்டிலி சிறைக்கூடமே. தூள் தூளாயிற்று!

சிறைப்பட்ட மன்னன், சிதறிய சீமான்கள், கோபம் வெறிபோலாகிவிட்ட நிலையில் மக்கள்!

ஜூலை 14-ந்தேதி என்றால் இதுதான் - ஆணவம் அழிந்த படலம் - ஆதிக்கக்காரன் அடிபணிந்த படலம்.

கொலைவாளினை எடடா!

மிகுகொடி யோர்செயல் அறவே!

என்று மக்கள் முழக்கமிட்ட நாள். புரட்சிக்கவிஞன், தந்த லாமார்சலே என்ற கீதம் பாடி மக்கள் தமதாட்சியை நிறுவப் போரிட்ட நாள்! மக்கள் வகுத்த அரசியல் திட்டம். அவர்கள் புகுத்திய ஏற்பாடு, வெற்றியோ, நிம்மதியோ தரவில்லை என்பது உண்மை. புரட்சிக்குப் பிறகு, குழப்பம் சதி, கலகம், இவை ஏற்பட்டு, மீண்டும் மக்கள் தொல்லைக்கு ஆளாயினர் என்பதும் உண்மை! இரத்த வெறிபிடித்து அலைந்தனர் என்பதும் உண்மை! மீண்டும் சர்வாதிகாரத்துக்குப் பலியாயினர் என்பதும் உண்மை - ஆனால், கொடுமைப்படுத்தப்பட்ட மக்கள், தங்கள் கஷ்டத்தைப் போக்கிக்கொள்ள உரிமைப்போர் புரிந்த வீரப்போர் புரிந்த நாள், ஜுலை 14. அன்று மறுக்க முடியாத உண்மை - அவர்களை அந்த அளவுக்கு ‘இரத்தவெறி’ கொள்ள வைத்தது. மன்னனின் எதேச்சாதிகாரம்! சீமானின் செருக்கு! குருமார்களின் கபடம்! எக்காலமும் அவர்களை அடக்கியே வைத்துவிட முடியும் என்பது ஏமாளிக்கொள்கை என்பதை உலகுக்கு உரைத்த நாள் ஜூலை 14! ஏழை என்ன செய்வான்? என்று ஆணவம் பேசலாம், முதலில், பலநாள், ஆனால், அவன் அழுவதை நிறுத்திக்கொண்டு அச்சத்தைத் துரத்திவிட்டு, அடிமைத்தனங்களை உடைத்தெறிந்துவிட்டு, கோபக்கனல் கக்கும் கண்களால் ஆதிக்கம் செலுத்துபவனைப் பார்க்கும் நாள்

ஒன்று வரும் - அதுதான் புரட்சி ! அதைத் தடுக்கப் பட்டாளத்தால் முடியாது என்பதைப் பாருக்கு எடுத்துரைத்த நாள்,

ஜூலை 14.

ஜூலை 13 வரையிலும்கூடச் சீமான்கள், பிரான்சிலே மட்டுமல்ல, எந்த நாட்டிலும் ஏழை, கோழை என்றுதான் எண்ணினர். ஜூலை 14இல் தான், ஏழை, கோழையல்ல, எரிமலை!! என்பதை அறிந்தனர்.
(திராவிட நாடு - 20-7-1947)