அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஏழை பங்காளர்
“கொடுமை! கொடுமை!”
ஒரு பெருமூச்சு.
அக்கிரமம்! அநீதி! அடுக்காது”
கண்ணீர் புரள்கிறது.
“எனக்கா இந்தக் கதி?”
ஏக்கமான பார்வை, கடலைக் கடந்து சென்று பாரிஸ் பட்டணத்திலே மாளிகை, மனைவி, மக்கள், உற்றார் உறவினர்மீது பாய்கிறது.

“ஒரு குற்றமும் செய்யாத எனக்கு இந்தக் கடுந்தண்டனையா? நீதிக்காகப் போராடுபவர்கள் இல்லையா? நிரபராதியைக் காப்பாற்ற யாரும் இல்லையா? பொய்யை மெய்யென்றாக்கும் வஞ்சகரை வீழ்த்த ஒரு வீரன் இல்லையை? உண்மைக்காகப் பரிந்து பேச, யாரும் இல்லையா? ஏழை பங்காளர் உண்டோ இல்லையோ? ஒரு பிழையும் செய்தறியா என்னை இந்தத் தீவிலே தள்ளிய தீயர்களின் போக்கை, எதிர்க்கும் துணிவு கொண்ட ஒரு தீரன் இல்லையா? எல்லோருமா மண்டியிட்டு விட்டனர்? ஒருவரும் இல்லையா உண்மையை உரைக்க, என் பொருட்டுப் போரிட, நீதியை நிலைநாட்ட!”

சோர்வுமேலிட்டுச் சாய்கிறான்! அவனுடைய உடை சுக்குநூறாகிக் கிடக்கிறது. ஒரு பாலத்தில் ராணுவ உடை தரித்துக் கம்பீரமாகப் பாரிசில் உலவியவன், ஆயுள்தண்டனை பெற்று, (அந்தமான் தீவு போன்ற டெவில்ஸ்) தீவிலே உழல்கிறான். அவன் செய்த குற்றம் என்ன, அதைத்தான் அவன், தண்டிக்கப்பட்ட அன்றும் கேட்டான். தீவிலே ஒவ்வொரு நாளும் கேட்டபடி இருந்தான், பதில் என்ன? காற்று ஏதோ பேசிற்று. புரியாத மொழி! அலை ஒலித்தது; ஒலிதான்; பொருள் இல்லை! அவனுடைய பெருமூச்சு ஒன்றுதான் புரியக் கூடிய மொழியாக இருந்தது. அநியாயமாகத் தண்டிக்கப்பட்டான். வஞ்சகரின் வலையில் சிக்கி வதைகிறான். அக்கிரமக்காரரின் இலக்காகி இம்சைப்படுகிறான். குற்றமற்றவன், கொடுமை செய்கின்றனர் என்று தெரிவிக்கிறது பெருமூச்சு. அது, தீவில்! பாரிஸ் நெடுந்தூரத்தில் இருக்கிறது.

பாரிஸ்... தீவிலே, திக்கற்ற நிலையிலே, தீயர்களின் சூழ்ச்சியினால் தண்டனை பெற்ற ‘டிரைட்ஸ்’ “ஒரு குற்றமும் நான் செய்யவில்லையே! என்று குமுறிக் கொண்டிருந்தான். அலைகடலிடையே உள்ள அந்தத் தீவிலே அவன் ஆறுதல் கூறுவாரின்றி அவதிப்பட்டான். கண்ணெதிரே கடல் - கருத்திலேயும் கடல்தான். அலை அலையாக எண்ணங்கள். தாய்நாட்டைத் துரோகம் செய்து அரசாங்கத்தாரின் இராணுவ இரகசியத்தை வெளியிட்டான் என்று 1895இல் குற்றம் சாட்டப்பட்டு, ஆயுள் தண்டனை தரப்பட்டவன் டிரைபஸ். அவன்மீது சுமத்தப்பட்டது. அபாண்டம் என்று நிரூபிக்கமுடியவில்லை - இடந்தரப்படவில்லை. உண்மைக் குற்றவாளிகள் டிரைபசைப் பலியிட்டுச் சட்டத்தைச் சரிப்படுத்திவிட்டுத் தங்களைக் காப்பாற்றிக் கொண்டனர். அவன் தீவிலே திகைக்கிறான்; தீயர்கள் தேசத் தலைவர்களெனத் திகழ்கின்றனர். டிரைபசுக்காக வாதிட யாரும் இல்லை! அவன் மனைவி ஓயாது அழுதாள். நண்பர்கள் கதறினர். ஆனால், அவன் பொருட்டுப் போரிட ஒரு மாவீரனும் தோன்றவில்லை. அவனுக்காகப் போரிட வேண்டுமென்றால், பலம் பொருந்திய பிரஞ்சு சர்க்காருடன் போர் என்ற பொருள். வஞ்சனையில் கைதேர்ந்தவர்களுடன், புன்னகைப் புலிகளுடன், வஞ்சக நரிகளுடன் போர் தொடுக்க வேண்டும். இணையில்லாத வீரம், ஏழைக்காக எதையும் சகித்துக்கொள்ளும் துணிவு நீள்வையமே எதிர்த்தாலும் அஞ்சாமல் நீதிக்காகப் போரிடும் பண்பு, இவை வேண்டும்! போக போக்கியத்தில் புரண்டு கொண்டிருந்தவர்கள், ஏன் தமது சிறுவிரலையும் தூக்கவில்லை! அவர்களின் அலுவல் அதுவா! மது நிறைந்த கோப்பை, மதுரமொழி வழியும் அதரம், மயக்கமூட்டும் கண்கள், இவற்றில் மனத்தைப் பறிகொடுத்தவர்களுக்கு, ஒரு டிரைபஸ் அக்கிரமமாகத் தண்டிக்கப்பட்டது பற்றி என்ன கவலை!

“பாவம்! டிரைபஸ், எவ்வளவோ கண்ணியமாக வாழ்ந்து வந்தவன்; கம்பீர புருஷன்; அவன்கதி கடைசியில், ஆயுள் தண்டனை!”

“என்ன செய்யலாம்? சட்டப்படி, உயர்தர நீதிமன்றத்தார் விசாரித்தல்லவா தண்டித்தனர்? அரசாங்கத்தின் இராணுவ இரகசியத்தையல்லவா? டிரைபஸ் வெளிப்படுத்தி விட்டான். சாதாரண குற்றமல்லவே!”

“செய்திருப்பானா? டிரைபஸ் உண்மையில் குற்றவாளிதானா?”

“இல்லாமலா தண்டித்தார்கள்? தக்க ருஜூ இருந்ததால் தான் நீதிபதிகள் தண்டித்தனர்.”

இவ்வளவு தான் டிரைபசைப் பற்றிய பேச்சு. மாளிகை, கொலுமண்பம், நிர்வாக நிலையங்களில் இவ்வளவாவது, பேசப்பட்தற்குக் காரணம், தீவாந்திரசிட்சை பெறுவதற்கு முன்பு டிரைபஸ், பாரிஸ் பட்டணத்தில் அதிகாரியாய், அந்தஸ்துடன் வாழ்ந்ததால்தான், நாதியற்றவனாகி, தீவிலே நலிகிறான் டிரைபஸ். பாரிஸ் நகைமுகம் காட்டும் நங்கையாகவே திகழ்ந்தது. கண்ணீர்க் கடல் நடுவே “நான் குற்றமற்றவன்! நான் குற்றமற்றவன்!” டிரைபஸ் என்று கூறுகிறான் தீவில். “ஆதாரம் எங்கே? நீ நிரபராதி என்பதற்கு ருஜு எங்கே?” என்று சட்டம் கேட்கிறது. டிரைபஸ். தன் இருதயத்தின் தூய்மையை எடுத்துக் காட்டுகிறான். சட்டம் சிரித்துவிட்டு, வேறு வேலையைக் கவனிக்கிறது. “நான் குற்றமற்றவன்” என்று டிரைபஸ் கூறிக்கொண்டிருந்தான் தீவில். நாட்கள் மாதங்களாயின! ஆண்டுகள் உருளத் தொடங்கின; டிரைபஸ், கந்தலாடையில் இருக்கிறான். கண்கள் குளமாகிப் பிறகு வறண்டு போயின; கைகால்கள் எலும்புருவாயின; டிரைபஸ், நடைப்பிணமானான். ஈனக் குரலில் அப்போதும் கேட்டவண்ணம் இருந்தான்” “நான் செய்த குற்றம் என்ன?” என்று.

டிரைபஸ் செய்த குற்றம் என்ன? அவன் நன்றாகப் படித்தவன் -குற்றம்.

சலியாத உழைப்பாளி - குற்றம்.

உண்மையான சாட்சியங்கள், அவனுக்கெதிராகக் கிடைக்கவில்லை - குற்றம்.

அவன் கலங்காதவன் - குற்றம்”

பாரிஸ் பட்டணத்திலே, ஒரு மாவீரன் கிளம்பினான். டிரைபஸ் செய்த குற்றங்களைக் கூற! இராணுவ இரகசியத்தை வெளியிட்டான் என்று குற்றம் சாட்டினார்களே, அது அல்ல அவன் செய்த குற்றம். படித்தான்; உழைத்தான்; வஞ்சகருக்கு எதிராக வழக்கு மன்றத்திலே வலிவு தேடிக்கொள்ள முடியவில்லை. அதுதான் குற்றம் என்று இடித்துக் கூறினான் அந்த இணையில்லாத வீரன்.

மான் குற்றம் செய்யலாமா, புலியார் தண்டிக்கிறார்! ஏன் மான் அழகான கண்களைக் காட்டிற்று? புள்ளிமான் துள்ளி விளையாடுவதா! கள்ளங்கபடமற்று ஓடுவதா! சருகு உதிரும் சத்தம் கேட்டாலும் மருண்டு ஓடுவது ஒரு குற்றமல்லவா! சாதுவாக இருப்பது மற்றோர் குற்றம்! பதுங்கிப் பாய்வது, பல்லால் கடிப்பது, நகத்தால் கிழிப்பது, இரத்தம் குடிப்பது, உறுமுவதுபோன்ற ஒரு நற்பண்பு இல்லை! இவற்றைப் பெறாதிருத்தல் குற்றமல்லவா? புலியார், எத்தனை குற்றங்
களைத்தான் பொறுப்பார்! ஆகவேதான் குற்றம் செய்த மானைத் தண்டித்தார்.!

டிரைபஸ் செய்த குற்றமும் இவ்விதமானதே!

இதனை, இறுமாப்பாளருக்கே இடித்துக்கூற, ஒருவர்தான் முன்வந்தார். ஒரு பயனுங் கருதாது முன்வந்தார். தன் தலைபோகுமே என்ற பயமின்றி முன்வந்தார். எதிர்ப்புச் சக்தியின் தன்மையும் அளவையும் பொருட்படுத்தாது முன் வந்தார் நீதியை நிலைநாட்ட - கைவிடப்பட்டவனைக் காப்பாற்ற ஒரே ஒருவர்தான் வரமுடியும். ஒப்பற்ற உள்ளப் பண்புடையோர் மந்தையாக இரார். ஒரே ஒருவர்தான். அவர்தான் ஏழை பங்காளர் எமிலிஜோலா! பிரான்சு நாடு மௌனம் சாதித்த
போது, ஜோலா உண்மையை உரைத்தார். ‘டிரைபஸ் குற்றமற்றவன்’ என்று.

எமிலி ஜோலாவைத் தவிர, வேறு யாருக்கும் அந்த உறுதியான உள்ளம் இருக்க முடியாது. அநீதி பெருநெருப்பெனக் கொழுந்து விட்டெறியும்போது, அதனை அணைக்கத் துணிவது அனைவருக்கும் சாத்தியமாகக் கூடிய செயலல்ல! ஜோலாவால் முடியும்! ஜோலா அப்படிப்பட்ட ஆற்றல் படைத்தவன். அவனுடைய பேனா ‘நானா’வுக்காகப் போராடிற்று. நானா ‘கேவலம்’ வழுக்கிவிழுந்த ஒரு வனிதைதான்’ அவளுக்காகப் போராடிய ஜோலாவால்தான் டிரைபஸ் விஷயமாகவும் போராட முடியும்; போராடினார் - வாழ்க்கை முழுவதுமே வறியோருக்காவே போராடிய வீரர் ஜோலா. தனக்காகப் போராடும்படி டிரைபஸ் ஜோலாவைக் கேட்டுக் கொள்ளவில்லை. அவன் அநீதிக்காரரால் அவதிக்கு ஆளாக்கப்பட்டான் என்று அறிந்தார்; ஆவேசம் பெற்றார்; ஆற்றல் அவ்வளவையும் செலவிட்டார். “நீதி” வெளிவந்தது.“நானா” சம்பவமும் அப்படிப்பட்டதே.

ஜோலா, அவருடைய நண்பனுடன் மிகமிகச் சாமான்யர்கள் மட்டுமே செல்லும் சிற்றுண்டிச் சாலையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்! ஒரு நாள், திடீரென்று கூக்குரல் கேட்டது. பெண்களின் அலறலொலி நலா பக்கங்களிலிருந்தும் கிளம்பியது. ஜோலாவும் நண்பனும் ஜன்னலோரத்தில் சென்றபொழுது ஏராளமான பெண்கள், விரட்டுகிற போலீசிடமிருந்து தப்பி அங்குமிங்கும் சிதறிக்கொண்டிருந்தனர். விபசார விடுதிகளில் போலீசார் நுழைந்து விரட்டினர், விபசாரத்தையன்று, விபசாரிகளை!

மேல்மூச்சுவாங்க ஓர் இளமங்கை அந்தக் கடைக்குள் நுழைந்து, ஒரு தூணுக்குப் பின்னால் மறைந்து கொண்டாள். பயத்தாலும் திகிலாலும் அலைக்கழிக்கப்பட்ட அந்த மங்கையை ஜோலா தன்னருகில் அழைத்தான். அச்சத்தோடு அவள் மெதுவாக அவன் பக்கத்திற்கு வந்தாள். எனினும், போலீஸ்காரன் கடைக்குள் நுழைந்ததும் தப்பியோட அவள் முயன்றாள். ஜோலா அவள் பக்கம் சென்று, அவள் தன்னைச் சேர்ந்த நண்பர் எனக் கூறிப் போலீஸ்காரனை அனுப்பி விட்டான். பிறகு மூவரும் நாற்காலிகளில் அமர்ந்தனர். வறுமை எவ்வளவு வாட்டியபோதிலும், விடாத அழகின் சாயல் அவள் முகத்தில் இருந்தது. அவளுடைய இழிதொழில் அவளை முற்றும் சிதைக்கவில்லை. ஜோலாவின் நண்பன் ஓர் ஓவியக்காரன். அவன் அவளுடைய உருவத்தை அங்கேயே தீட்ட ஆரம்பித்தான். ஜோலா அவளுடைய வரலாற்றைக் கேட்க ஆவலுள்ளவனாயிருந்தான். மிக வணக்கத்துடன், “உங்கள் பெயரென்ன அம்மா” எனக் கேட்டான் ஜோலா. பெயரா? அவள் வாழ்ந்த ஒவ்வோர் ஊரிலும் அவளுக்கு ஒவ்வொரு பெயர் இருந்தது. பெயர்களைக் கூறிவிட்டு, “ஏன் கேட்கிறீர்கள்” எனக் கேட்டாள். ‘நானும் உங்களைப்போல் ஒருவன்தான் அம்மா’ எனக் கூறிவிட்டு, பணியாளனைக் கூப்பிட்டு அவளுக்குச் சிற்றுண்டியளிக்கச் சொன்னான்.

அவள் தூரத்துக் கிராமத்தைச் சேர்ந்தவள். பாரிசுக்கு வரும்பொழுது அவளது வயது பதினேழு. கையில் காசு கிடையாது. இளமையும் எழிலும்தான் மிஞ்சியவை. வாழ்வு! அது ஏதோ அவளால் கனவு காணப்பட்ட பொருள். தன் பழைய நினைவுகளைக் கூறும் பொழுது சொற்கள் தழுதழுத்தன, நீர்த்துளி படர்ந்த கண்கள் சொற்றொடர்களை முடிந்தன. அவளுடைய தாயகம் - அங்கே செல்ல முடியாது. குளிர், பிணி, பட்டினி - இவற்றால் வேட்டையாடப்பட்ட மிருகம், போலீசாரால் விரட்டப்படும் அனாதை.

வரலற்றை ஜோலா உற்றுக் கேட்டுக்கொண்டிருந்தான். பலவாண்டுகளாக அமைதியை அறியாத அவள், தன் துயரை மற்றொருவரிடம் கூறுவதில் சிறிது அமைதியடைந்தாள். இருவரும் நேரம் போவதையே கவனிக்கவில்லை. அவர்கள்தான் அந்தக் கடைசியில் கடைசி. சொந்தக்காரன் கடைசியாக ஒவ்வொரு விளக்காக அணைக்க ஆரம்பித்தான். அப்பொழுது தான் எழுந்துபோக வேண்டுமென்ற எண்ணம் அவர்களுக்கு உண்டாகியது.

மூவரும் வெளிக் கிளம்பினர். ஜோலா அவளுடைய அறைக்குப் போகவேண்டுமென்று பிடிவாதம் செய்தான். நகரில் மிக மோசமான துர்நாற்றம் வீசுகிற குறுகிய தெருவை அடைந்தனர். புழுதியடைந்த வீட்டு வாயிற்படிகளில் பெண்கள் “ஏதாவது அதிர்ஷ்டம் வராதா?” என்ற நம்பிக்கையுடன் நின்று கொண்டிருந்தனர். ஜோலா போகும்பொழுது அவர்களது ஆச்சரியக் குரலும், ஏளனச் சிரிப்பும், பொறாமைப் பேச்சும் அவனுடன் வரும் மங்கையின் மீது வீசப்படுவதைக்
கேட்டான்.

தன்னுடைய வறுமை தூய்மையானது என்பதைக் காட்டத் தன் நண்பனைத் தொடரும்படி கையசைத்துவிட்டு, ஜோலா அப்பெண்ணின் அறைக்குள் நுழைந்தான். மங்கிய விளக்கொளி
யில் அலங்கோலமான அந்த அறையில் அவன் கடிதக் கட்டுகளையும், புகைப்படங்களையும் புரட்டினான். கடைசியாகப் புகைப்படமொன்று கிடைத்தது. “நானா” – ஆம் அவருடைய பெயர். குழந்தையின் சட்டையொன்றை அவன் கையிலெடுத்
தான். அம்மங்கை கண்ணீர் விட்டுக் கதற ஆரம்பித்தாள். அவளுடைய குழந்தை – அது இறந்துவிட்டது.

ஜோலாவுக்கு உலக வரலாறே கண்முன் வந்து நிற்பது போலக் காணப்பட்டது. ஆவேசத்துடன் தன் நண்பனை அழைத்து, அவன் கையிலிருந்து அப்பெண்ணின் சித்திரத்தில் “நானா” என்ற பெயரைத் தீட்டினான். அந்தப் பெயரில் ஒரு பெருங்கதை பிறந்தது, உலகையே உலுக்க.
***

அந்தப் புத்தகம் பாரிஸ் நகரையே குலுக்கியது. முதியோர்கள் திகைத்தனர். இளைஞர்கள் துடிதுடித்தனர். அது நாட்டில் நிலவிய கொடுமையை விளக்கிக் காட்டியது. நாட்டின் நலிந்த நிலை ஏட்டிலே இடம்பெற விடுவது உயர்ந்த தன்மையல்லவென்று கலைப்பூங்காவின் காவலர்கள் சினந்தனர். ஆனால், கரடு முரடான வாழ்வினர், ‘இவை இதற்கு முன் ஏன் ஏட்டில் வரவில்லை?’ எனக் கேட்டனர். புத்தகக் கடைகளிலெல்லாம் புத்தகங்கள் கண்ணுக்குத் தெரியும்படி வைக்கப்பட்டிருந்தன. சமூகத்தில் ‘மதிப்பிற்குரிய’ வகுப்பினர் திடீரென்று புத்தகக் கடையில் நுழைந்து பலப்பல புத்தகங்களைப் புரட்டிப் புரட்டிப் பார்ப்பார்கள். கடைசியில் ஏதோ பேச்சுவாக்கில் கேட்பதுபோல ‘நானா’ இருந்தால் ஒரு புத்தகம் தா எனச் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, மெதுவான குரலில் கேட்டு வங்கிச் சென்றனர்.

“நானா” வைப் பற்றிப் பாரிஸ் முழுவதும் பேசிக் கொண்டிருந்ததேயன்றி, உண்மையான “நானா”வுக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாது. அவள் வழக்கம்போல் ‘வாழ்வை’ நடத்தி வந்தாள். ஒருநாள் கதவைத் தட்டும் சப்தம் கேட்டது. நானா சென்று கதவைத் திறந்தாள். ஒருவரையும் காணோம். கதவுப் பிடியில் மூட்டையொன்று தொங்கியது. அதை அவிழ்த்ததில் ‘நானா’ என்ற புத்தகம், பூங்கொத்து, தின்பண்டங்கள், பணம்-முதலியன இருந்தன.
***

அப்படிப்பட்ட ஜோலா, பிரான்சு நாட்டிலே, இலக்கிய மன்றத்தாரால், ஏளனம் செய்யப்பட்டு, புத்தகம் வெளியிடுவோரால் புறக்கணிக்கப்பட்டு, மேட்டுக் குடியினரால் வெறுக்கப்பட்டு, தன் பாட்டு மொழியினால் நாட்களுக்குக் கேடு வருகிறதென்று பலர் பழித்துரைக்கக் கேட்டுப் பாரிசில், பல கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருந்தார். போராடிப் போராடியே, உலகின் பார்வையைத் தன் பக்கம் திருப்பினார், ஆகவேதான், எமிலி ஜோலாவால் - நானாவுக்காக அனுதாபத்துடன் போராடியவரால் - டிரைபசுக்காகப் போராட முடிந்தது. மற்றவர்கள், “மேதை” என்ற புகழ்பெற மேட்டுக் குடியினரின் பாத சேவை செய்தனர், அரண்மனைக்கு ஆலத்தி எடுத்தனர்; ஆலயப் பூஜாரிக்கு அன்பாபிஷேகம் செய்தனர். ஜோலா, மக்களுக்காக ஒதுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, கொடுமைப் –

படுத்தப்பட்ட மக்களுக்காக, ஒதுக்கப்பட்ட – நசுக்கப்பட்ட – கொடுமைப்படுத்தப்பட்ட மக்களுக்காக எழுதினார். எழுதினார் என்றால் போராடினார் என்றே பொருள். அவருடைய எழுத்து, வீரன் கைவாளைவிட வலிவுடையது. உள்ளத்தை உலுக்கக் கூடியது, உலகே எதிர்த்தாலும் அஞ்சாது போரிடும் எழுத்துகள், மமதைக் கோட்டைகளைத் தூளாக்கும் வெடிகுண்டுகள். “நீதி” வேண்டும் என்று ஜோலாவின் பேனா எழுதிற்று. என்ன நேரிட்டது? “நீதி” கிடைத்தது. மந்திரிசபைகளை, அவருடைய பேனா முனை மாற்றி அமைத்தது. பல மண்டலங்களிலே, மறக்கப்பட்டுப் போன டிரைபசுக்கு, நண்பர்களைத் திரட்டிற்று. ஒரு பெரும்படை திரட்டிவிட்டார் பேனா மூலம். எங்கோ தீவிலே, ஏக்கத்துடன் ‘நான் ஒரு குற்றமும் செய்யவில்லையே” என்று கதறிக் கொண்டிருந்த டிரைபசுக்கு வெற்றி; விடுதலை! பதினொரு ஆண்டுகள் பராரியாகப் பாழும் தீவில் வதைபட்ட
வனுக்கு, வெற்றி; விடுதலை – ஒரு ஜோலாவின் எழுத்தால்!
***

பிரெஞ்சு - ஜெர்மன் சண்டை மும்முரமாக நடந்து கொண்டிருந்த சமயம். பிரெஞ்சு ஒற்றனொருவன் ஜெர்மன் படைத்தலைவரிடம் அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது, சிறிய குறிப்பொன்று அவன் கையில் சிக்கியது. அதை அவன் உடனே பிரெஞ்சுப் படைத் தலைமை இடத்திற்கு அனுப்பினான். அந்தக் குறிப்பில் பிரெஞ்சு நாட்டுக்கு உயிர்போன்ற படையமைப்பு இரகசியங்கள் எழுதப்பட்டிருந்தன. அந்த இரகசியங்கள் படைத்தலைமைக் குழுவினருக்கு மட்டுமே தெரிந்திருக்க முடியும். யார் அந்தத் துரோகி? படைத்தலைவர்கள் ஒன்றுகூடி ஆராய்ந்தனர். கடைசியாக ஆல்பிரட் டிரைபஸ் என்பவன் மீது குற்றம் சுமத்தப்பட்டது. உண்மையில் அந்தத் துரோகத்தைச் செய்தவன் எஸ்டர் ஹோலி என்பவன். படைத் தலைமைக் குழுவின் செல்வாக்குப் பெற்றிருந்த எஸ்டர் ஹோலியின் நண்பர்கள், அவசரமாக டிரைபஸ் மீது வழக்குத் தொடுத்தனர்.

1895 ஆம் ஆண்டு டிரைபஸ் இராணுவ மன்றத்தால் குற்றஞ் சுமத்தப்பட்டு, அந்தமான் போன்ற டெவில்ஸ் தீவுக்கு அனுப்பப்பட்டான். தண்டிக்கப்பட்ட உடனேயே அவன் வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டான். பெரிய மைதானத்தில் அவனுடைய படைவாளும் இராணுவச் சின்னங்களும் பிடுங்கப்பட்டன. கூடியிருந்த மக்களும் ஒழிக டிரைபஸ் என முழங்கினர். கடல் முழக்கத்தில் பறவை கூவுவதுபோல், டிரைபஸ் “நான் குற்றமற்றவன்! பிரஞ்சு வாழ்க!” எனக் கதறினான். டிரைபஸ் அங்கு ஒரு பக்கத்திலிருந்த பத்திரிகைக்காரனைப் பார்த்து, “நீங்களாவது எனது தூய்மையை உலகுக்குக் காட்டுங்கள்” எனக் கூறினான். பத்திரிகைக்காரர்களுக்கு உண்மையை எழுதச் சொல்ல இவன் யார்? அவர்கள் திரும்பினார்கள்– “துரோகி டிரைபசின் முடிவு” என்று கொட்டை எழுத்துகளைத் தீட்ட.அங்கு வந்திருந்தவர்களில் ஒருவர் காதில் அந்தச் சொற்கள் விழுந்தன. ‘குற்றமற்றவனாயின், உலக வரலாற்றிலே மிகக் கொடுமையாகத் தண்டிக்கப்பட்டவன் அவன்தான்” என்று அவர் முணுமுணுத்தார் அவர்தான் பிரெஞ்சு நாட்டுப் பெரும் இலக்கிய ஆசிரியர் அனதேல் பிரான்சு.

மற்றொருவர் அங்கே வரவில்லை. ஆனால், அவர் காதிலும் டிரைபஸின் கூக்குரல் விழுந்தது. எழுதுகோலை வைத்துவிட்டுக் கைகளைப் பிசைந்துகொண்டே அங்குமிங்கும் அறையில் அவர் உலாவினார் வெறித்த பார்வையுடன். “அநீதிக்கு இடமளிக்க முடியாது” என்று கூறினார். அவர்தான் ஜோலா.
***

டிரைபசின் நண்பர்கள், ஜோலாவிடம் சில குறிப்புகள் கொடுத்தனர். அவனுடைய துய்மைக்கான ஆதாரங்கள். அவற்றின் துணைக்கொண்டு வேலை செய்ய வேண்டும், டிரைபசை மீட்க வேண்டும், நீதியை நிலைநாட்ட வேண்டும். “முடியுமா?” சே! என்ன கேள்வி அது? கோழையின் மொழி.

ஜோலா, பேனாவை எடுத்தார். பிரான்சு முழுவதும் டிரைபசை வெறுக்கிறது. ஆம்! அவனுக்காகப் பரிந்து பேசுபவரையும் பகைக்கும். இலக்கிய மன்றம் இடித்துரைக்கும். ஆமாம்! ஆனால், அநீதிக்குச் சக்தி அதிகம் இருக்கிறது என்பதற்காக அதன் போக்கில் விட்டு விடுவதா? அதன் அடிபணிவதா? அதற்கா, இந்த அறிவு ஆற்றல்? விளக்கைத் தூண்டினார், குறிப்புத் தாள்களையும் ஆதாரக் கடிதங்களையும் ஒன்று சேர்த்தார். களத்திலே புகும் வீரரானார். உண்மை எழுந்தது! எழுதினார் எழுதினார்; இரவெல்லாம் எழுதினார்! எங்கோ தீவில் எவனோ ஒருவன் படும் அவதியைத் துடைக்கத் தீட்டினார். இரவு இரண்டு - ஓயவில்லை; மூன்று - முடியவில்லை; நான்கு – பேனா வேலை செய்தவண்ணமிருக்கிறது. ஜோலாவின் மனைவி, விடியற்காலை பார்க்கும்போது, அறையில் விளக்கு எரிகிறது, ஜோலா எழுதுகிறார்; மேஜை எல்லாம் தாள்கள். ஆவேசம் கொண்டவர்போல் ஜோலா இருந்தார். “நீதி” தயாராகிவிட்டது.
***

“அரோரி” பத்திரிகைக் கூடத்திலே, நண்பர்களை வரச்சொல்லிவிட்டு, ஜோலா கிளம்பினார் அவர்களைக் காண.

பரட்டைத் தலையுடன், கசங்கிய உடையில், வேகமாகக் கடைவீதியில் ஜோலா சென்றபோழுது, கோச்சு வண்டியில் இருந்த நீதிபதிக்கு ஜோலாவின் வேகம் கலக்கத்தை உண்டாக்கியது. விலை கூறிக்கொண்டிருந்த கடைக்காரன் ஜோலாவையே பார்த்தான். சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்தவர்கள் ஜோலாவைக் கண்டதும், வாசற்படியில் வந்து நின்றனர். பத்திரிகைக் கூடத்தில் நுழையும்பொழுது அவரால் அழைக்கப்பட்ட அனைவரும் காத்திருந்தனர். எரிமலை வெடிக்கப் போகிறதா?

‘டிரைபசினுடைய மனைவியின் கண்கள் நம்பிக்கையால் ஒளிவிட்டன. வழக்கறிஞர் லபோரிக்கு ஒவ்வொரு வினாடியும் யுகம்போலத் தோன்றியது. அனதேல் பிரான்சுக்கு உட்கார முடியவில்லை. எல்லோருக்கும் வணக்கம் செலுத்திவிட்டு, ஜோலா தன் கையயெழுத்துக் கட்டைப் புரட்டினார்.

“பிரெஞ்சுக் குடியரசின் தலைவரே... டிரைபஸ் வழக்கு பிரெஞ்சு நீதியின் மீது அழியாத களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது..!” டிரைபசின் மனைவி மகிழ்ச்சியால் முகமலர்ந்தாள்.

ஜோலா கண்ணாடியைக் கழற்றிக் கண்களைத் துடைத்தார். அறையில் அமைதி நிலவியது. டிரைபசின் சகோதரரின் கன்னத்தில் கண்ணீர் வழிந்தது.

“அநீதிக்கு வழிவிட்டு நாம் அமைதியாக வாழ முடியாது. டிரைபஸ்மீது பல குற்றங்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன. அவன் நன்றாகப் படித்தவன் - குற்றம். சலியாத உழைப்பாளி - குற்றம். உண்மையான சாட்சியங்கள் அவனுக்காதரவாய்க் கிடைக்கவில்லை – குற்றம். அவன் ஒரு யூதன் – குற்றம். அவன் கலங்காதவன் - குற்றம். அவன் கலக்கமடைந்தான் - குற்றம்.”

துடிதுடிக்கின்ற விரல்களால் மற்றொரு பக்கத்தைப் புரட்டினார்; குரல் இன்னும் கனத்தது.

“யுத்த மந்திரி, இராணுவக் குழுவினர், படைத்தலைமை எஸ்டர் ஹேஸியைச் சந்தேகிக்க மனமொப்பவில்லை. ஓராண்டிற்கு முன்பிருந்தே அவர்களெல்லோருக்கும் நன்றாகத் தெரியும் டிரைபஸ் குற்றமற்றவன் என்று. குற்றமற்றவன் தீவில் வாழும்பொழுது, அநீதி வழங்கியவர்கள் அமைதியாக வாழ்கிறார்கள், மனைவி மக்களிடம் அன்பு பாராட்டி மனிதாபிமானமுள்ளவர்களாக.”
நீர்த்துளி படர்ந்த கண்ணாடியைத் துடைத்துக் கொண்டு, ஜோலா மேலும் படிக்கலானார்.

“இராணுவக் குழுவினர் எஸ்டர் ஹேசை விசாரித்தனர். ஏன்? டிரைபஸை மற்றுமொருமுறை தண்டிக்க; இது உண்மை. ஆனால், பயங்கரமான உண்மை. நான் உறுதியுடன் கூறுகிறேன் - “உண்மை கிளம்பிவிட்டது. எதுவும் இதைத் தடை செய்ய முடியாது.”

ஜோலா உரத்த குரலில் கூவினார். பத்திரிகைக் கூட வாயிலில், மக்கள் கூட்டம் தேங்கியிருந்தது. கண்ணாடிக் கதவுகளின் வழியாக ஆச்சரியமுற்ற கலங்கிய முகங்கள், துடிதுடிப்புடன் காத்துக் கொண்டிருந்தன.

“புகழ்பெற்ற பிரெஞ்சுத் தாயகத்தின் தனிப்பெருந் தலைவரே! மூன்று ஆண்டுகளாக வழக்கை நடத்திய டார்ட் என்பவர் மீது நான் குற்றஞ் சாட்டுகிறேன். கிடைத்த உண்மைக் குறிப்புகளை மறைத்ததற்காக! யுத்த மந்திரியின் மீது நான் குற்றம் காட்டுகிறேன். அதே பழிச் செயலைச் செய்த இராணுவக் குழுவினரையும், உதவிப் படைத்தலைவரையும் நான் குற்றஞ் சாட்டுகிறேன்! கைதியினிடத்தில் கொடுமை காட்டிய பாரிஸ் சிறைச்சாலைத் தலைவர் மீது நான் குற்றஞ் சாட்டுகிறேன். வழக்கில் பொய்ச் சாட்சிகளும் பொய்க் கையெழுத்தும் தயார் செய்தவர்கள் மீதும் குற்றம் சாட்டுகிறேன்!

பொதுமக்களின் மனத்தை மாற்றும் வகையில் பொய்ப் பிரசாரம் செய்த யுத்த இலாக்கா முழுவதையும் நான் குற்றம் சாட்டுகிறேன்! வழக்குக்கு ஆதாரமான சாட்சியங்களைத் தண்டிக்கப்படுபவனால் பரிசீலனையும் சமாதானமும் கூறமுடியாத வகையில் அவசரத்துடன் அநீதி வழங்கிய முதல் இராணுவ மன்றத்தை நான் குற்றஞ்சாட்டுகிறேன்! உண்மை யான குற்றவாளியைக் “குற்றமற்றவனெனப்” பெருந்தவறு செய்த இரண்டாவது இராணுவ விசாரணை மன்றத்தை நான் குற்றஞ்சாட்டுகிறேன்! ஓர் அனாதையின் மீது இல்லாத பழிகளைச் சுமத்தி ஆயுட்காலத் தண்டனையைக் கொடுத்த அனைவரையும் - அந்தக் குற்றஞ் சாட்டிய அனைவர் மீதும் நான் குற்றஞ்சாட்டுகிறேன்! இத்தகைய குற்றச்சாட்டுக்களைத் தெரிவிப்பதன் மூலம் நான் சட்டத்தை அவமதிப்பவனாக அவதிக்குள்ளாக்கப்படுவேன் என்பது தெரியும். அதைப்பற்றிக் கவலையில்லை. நான் நீதி வேண்டுகிறேன். குமுறிக் கொண்டிருந்த எரிமலை வெடித்து விட்டது, விளக்கமான மறு விசாரணை நடப்பதாக!”

பத்திரிகைக் கூடம் பரபரப்புடன் வேலை செய்யத் தொடங்கியது. முதல் பிரதி - இரண்டு மூன்று - வேகமாக ஆயிரக்கணக்கில் பத்திரிகை குவிந்தது. ஜோலாவின் “குற்றச்சாட்டு” பாரிசைக் கவ்வியது எதிர்பாராதது. ஒருவருக்கும் என்ன சொல்வதென்றே புரியவில்லை. யுத்த மந்திரிசபை கூடியது. ஏதாவது செய்தாக வேண்டும். என்ன செய்வது? படைக்குழுவினர் கூலியாட்களையமர்த்தி, ‘ஜோலா வீழ்க” எனக் கூவச் செய்தனர். வீதிகளில் மூர்க்கத்தனமான சம்பவங்கள் நடைபெற்றன. ‘அரோரி’ பத்திரிகைக் கூட்டம் தாக்கப்பட்டது. “குற்றச் சாட்டுச்” செய்தித்தாள்கள் கிழிக்கப்பட்டன. ஜோலாவின் கண்முன்னால் அவருடைய வைக்கோலுருவமும் டிரைபசின் வைக்கோலுருவமும் தீயிலிடப்பட்டன. ஜோலா துரத்தப்பட்டார். அவருடைய வீட்டிற்குச் சென்றார். வீட்டில் தயாராகக் காத்துக் கொண்டிருந்த போலீஸ் ஜோலாவைக் கைதாக்கியது.

ஜோலாவின் வழக்கு ஆரம்பமாகியது. ஜோலாவிற்காகத் திறம்பட வாதித்தவர் லபோரி. வழக்கு ஆரம்பமாகும் பொழுது, அது தனிப்பட்ட வழக்கென்றும், டிரைபஸ் வழக்கிற்குச் சம்பந்தப்பட்ட தல்லவென்றும் நீதிபதி கண்டிப்பாகக் கூறினார். அது ஓர் இராணுவத்தினரின் நாடகம் போல முடிந்தது. கடைசியில் ஜோலா கூறியவை மறுக்க முடியாதன. “நான் எழுதுபவன்; பேசும் திறன்படைத்தவனல்லன். எனது வாழ்நாளில் பெரும்பகுதி உண்மையொளிகாணச் செலவழிக்கப்
பட்டது. அதே விருப்பத்தால்தான் இந்த வழக்கில் ஈடுபட்டேன். பலமான இராணுவத்தையும், அதிகாரமுள்ள அரங்கத்தையும் எதிர்க்க முடியுமா? என என் நண்பர்கள் என்னைத் தடுத்தனர். தனி மனிதனின் சிதைவில் நீதி சிறக்குமாயின், அதனால் பயன் பெரிதே... வரலாற்றால் மறக்கமுடியாத பெரும் குற்றத்தை இந்த நீதிமன்றம் செய்துவிட்டது. நீதிக்கு வழிகாட்டிய எனது புகழ்மிக்க தாயகம், அநீதிக்கு எடுத்துக்காட்டாக ஆக்கப்படுவதை நான் ஒப்பவில்லை...

பிரெஞ்சு நாட்டின் முன்னால், உலகின் முன்னால், அழுத்தமாகக் கூறுகிறேன்; டிரைபஸ் குற்றமற்றவன்! என்னுடைய நாற்பதாண்டு உழைப்பின்மீது, நாட்டிலே பரவிய புதிய உண்மையுணர்வின்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். டிரைபஸ் குற்றமற்றவன்! நான் அழிந்து போவேன்... என் புகழ் மங்கிப் போகலாம்... எனினும் டிரைபஸ் குற்றமற்றவன்!”
ஜோலா போராடினார். விசாரிக்குமுன்பே முடிவு கட்டப்பட்ட வழக்கில் நீதிக்கு இடமெப்படி இருக்க முடியும்? ஓராண்டுச் சிறைத் தண்டனையும், மூவாயிரம் பிராங்கு அபராதமும் ஜோலாவுக்கு விதிக்கப்பட்டது.

இராணுவத்தினர் குதூகலித்தனர். வெளியில் கூடியிருந்த கூட்டம், “இராணுவம் வாழ்க! ஜோலா வீழ்க” என முழங்கியது.

“என் புகழ் மங்கிப் போகலாம். ஆனால், டிரைபஸ் குற்றமற்றவன்!” ஜோலாவின்—— முழக்கம் அது. புகழ் மங்கவில்லை. பெரியதோர் ஒளியைப் பரப்பிக்கொண்டு கிளம்பிற்றுப் பாரெங்கும். டிரைபசும் விடுதலை பெற்றான். அது பிறகு. ஆனால் முதலில் வெற்றி இராணுவத்தினருக்கு; -வீழ்க ஜோலா- முதலில். பிறகே -வாழ்க ஜோலோ முதலில். ஜோலா பாரிஸ் பட்டணத்திலே நிலைத்திருக்கவே முடியாத நிலை இருந்தது.

ஜோலாவும் அவனுடைய நண்பன் பால் செஸானே என்பவனும் அந்த ஊருக்கு மிகுந்த நம்பிக்கையுடன்தான் வந்தார்கள். பொழுது போவது கூடத் தெரியாமல் இருவரும் சிறிய வாடகை அறையில் உட்கார்ந்து திட்டமிடுவார்கள். செஸானே தன் ஓவியத் திறமையால் உலகையே ஆட்டமுடியும் என்பான். ஜோலா தன் எழுத்தாண்மையால் வாழ்க்கையை வளம் பெறச் செய்யலாம் எனக் கனவு காண்பான். கையிலிருந்த காசு குறையக் குறைய, அவர்களுடைய உற்சாகமும் குன்றியது. மிகச் சுலபத்தில் கட்டப்பட்ட கற்பனைக் கோட்டைகள் வெகு விரைவில் தரைமட்டமாயின. மிகுந்தவை இருட்டறையில் உலாவுகிற செஸானேயும், வறுமைச் சகதியில் தத்தளித்துக் கொண்டிருந்த ஜோலாவும்தான்.

ஜோலாவுக்குப் பாரிஸ் நகரத்துப் பெயர்பெற்ற புஸ்தகக் கடையொன்றில் வேலை கிடைத்தது. புஸ்தகங்களை அடுக்கி மூட்டை கட்டும் வேலைதான் செய்தான். அதற்காகக் கிடைத்த சிறுவருவாய் அவர்களது ‘எப்பொழுதும் வறுமை’ என்ற நிலையை ஒழித்தது. ஜோலாவுக்கு இப்பொழுதுதான் தன்னைச் சுற்றிலும் பார்த்து நுணுக்கங்களை உணர நேரம் கிடைத்தது. உள்ளே வறுமையாலும் துன்பத்தாலும் துடித்துக்கொண்டிருந்த உலகின் ஒவ்வொரு பகுதியையும் நன்கு ஆராய ஆரம்பித்தான். அவன் ஆராய விரும்பிய உண்மைகள் மேல்பூச்சின்றி, மறைக்கப்படாததால், சந்துபொந்துகளில் பொதிந்துகிடந்தன. ஒவ்வோர் உண்மையும் வைரத்தைப் போன்று அவனுக்குப் பிரகாசித்தது. சோர்வும் வெறுப்பும் கொள்ளாமல் ஜோலா தான் பார்த்தவவற்றைக் குறிப்பெடுத்தான். பெரும்போருக்கு ஆட்கள் திரட்டுவதைப் போல, ஜோலா சமூக அநீதிகளைத் திரட்டிக் கொண்டிருந்தான். இரவில் வெகுநேரம்வரை பாரிஸ் நகரத்துச் சேரிகளில் அவன் உலவுவான். வீதியோரத்திலும், சாக்கடைப் பக்கங்களிலும், இடிந்த மனைகளிலும் ஆற்றுப் படிக்கட்டுகளிலும் பெருவாரியான மக்கள் குளிர் பொறுக்கமாட்டாது அடைந்து கிடப்பதைக் கண்ணுற்றான். இருட்டின் கறைகள், இருண்ட வாழ்வினர் தொங்கும் நரம்பின் குப்பைகள், சமூக பலிபீடத்தில் சாய்ந்த மாந்தர் அனைவரையும் கண்ணுற்றான்.

ஜோலா சிறு சிறு கட்டுரைகள் எழுதிப் பத்திரிகைக்காரர்களிடமிருந்து உதவிபெறுவான். புத்தகக் கடைச் சொந்தக்காரருக்கு ஜோலாவின் போக்குப் பிடிக்கவில்லை. அவனுடைய “கீழ்த்தரமான” கட்டுரைகளால் கடையின் மதிப்புக் கெட்டுவிடுமென அவர் பயந்தார். அதற்கேற்றாற்போல் கலைச்சீமான்

களையும், அரசியல் கனதனவான்களையும் கடுமையாகக் கண்டித்து, ஜோலா எழுதிய புத்தகம் போலீசாரின் கவனத்துக்கு வந்தது. ஜோலாவும் வேலையைவிட்டு நீக்கப்பட்டான்.

1882ஆம் ஆண்டு முதல், அதாவது அவனுடைய 22ஆம் வயதிலிருந்து ஜோலா தன் பேனாவை நம்பியே வாழவேண்டி வந்தது. ஜோலா மனங் குலையவில்லை, உறுதியுடன் தன் போராட்டத்தைத் தொடங்கினான். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அட்டவணை போட்டுக் கொண்டு சலியாது அவன் உழைத்தான். நூல்களைப் பதிப்பிக்க அவனுடைய நண்பரொருவர் முன்வந்தார். ஜோலாவின் கதைகள், கட்டுரைகள் ஒவ்வொன்றாக வெளிவர ஆரம்பித்தன. அவை சமூகத்தின் அநீதியையும் அரசியல் அக்கிரமத்தையும் வன்மையாகக் கண்டித்தன. முதலில் அவனுடைய புத்தகங்கள் விலைபோகவில்லை. ஏனெனில், தங்களைப்பற்றிய முழு உண்மையை உணர மக்கள் மனங்கூசினர். புத்தகக் கடைக்காரர்களுக்குப் பிடிக்கவில்லை.

சாதாரண ஜோலா இலக்கிய உலகில் புகுந்து விட்டார். புத்தகங்கள் ஒன்றன்பின் ஒன்றாகக் கிளம்பின மலையுச்சியிலிருந்து விரைந்துவரும் பேராறுகளைப் போலக் கட்டுரைகள், ஜோலாவின் பேனா முனையிலிருந்து கிளம்பின. அவருடைய நாவல்களனைத்தும் அடிப்படையான கருத்துகளின்மீது கட்டப்
பட்டவை. கற்பனையில் கனிதருகிற கற்பகத் தருவைவிடக் குப்பைமேட்டில் சேர்ந்திருக்கிற முட்செடி, ஜோலாவுக்கு மேலானதாயிருந்தது. தான் கண்ட உண்மைகளை எழுச்சிதரும் வகையில் அவர் உலகுக்கு எடுத்துக்காட்டினார். சமூக அமைப்
பில் கண்ட ஏற்றத்தாழ்வுகளைச் சுட்டிக் காட்டினார். கொடுங்
கோலர்களை எதிர்த்தார். குருமார்களைச் சாடினார். அவருடைய நாவல்களில் நிலையற்றோர், வஞ்சகர், அனாதைகள், ஆணவக்காரர், திருடர், சோம்பேறிகள், குடிகாரர், கனவு
காண்போர், நலிந்த உழைப்பாளர், கொடிய முதலாளிகள், பேராசைப் பாதிரிமார், முதுகெலும்பற்ற கலைவாணர், வெறிகொண்ட மதப்பித்தர் அனைவரும் சித்திரிக்கப்பட்டனர்.

சாதாரண குடும்பத்தினரின் வரலாற்றை விளக்கமாகத் தொடர்ந்து எழுதுவதென ஜோலா 1871இல் தொடங்கிச் சுமார் 50 ஆண்டுகளில் 20 நாவல்கள் வெளியிட்டார். ஒவ்வொரு நாவலும் வாழ்க்கைப் பகுதியைத் தனித்தனியாக விளக்குவது, மார்க்கட்டைப் பற்றிய நாவலில், பணத்திற்காகச் செய்யப்படும் மோசடிகள் கூறப்பட்டுள்ளன. அடுத்த நாவல் குடியைப் பற்றியது. அது 1877இல் வெளிவந்தது. ஜோலா எழுதிய நாவல்களில் முதலில் மக்களை அவர் பக்கம் இழுத்தது அந்த நாவல்தான்.

1880இல் “நானா” வெளிவந்தது. “லா பெட்டே ஹூமன்னே” என்பது, புகைவண்டிகளைப் பற்றியது. “ஜெர்மினல்” சுரங்கங்களின் இருண்ட வாழ்வைப் படம் பிடிப்பது. பெரு முதலாளிகளின் இருண்ட வாழ்வைப் படம் பிடிப்பது. பெரு முதலாளிகளின் சுரண்டல் போக்கை வெட்ட வெளிச்ச
மாக்கியது. “வார்ஜெந்த்”, உலக வரலாற்றில் எழுந்த முதல் தொழிலாளர் அரசாங்கம் உள்நாட்டு முதலாளிகளாலும் பிரஷியப் பிரபுக்களாலும் நெரிக்கப்பட்டுத் தொழிலாளரின் இரத்தமும், ஏழையின் கண்ணீரும் சிந்தப்பட்ட 1870ஆம் ஆண்டைப் பற்றிய “வீழ்ச்சி” ஜோலாவின் நாவல்களில் உயர்ந்த வகையில் ஒன்றாகும். “லூவார்ட்ஸ்” என்ற நாவல், மதத்தின் மூட நம்பிக்கைகளைச் சிதறடித்தது.

போராடிப் பெற்ற நிலையை, ஒரு துர்ப்பாக்கியனுக்கு நீதி தேடித்தரத் துணிந்ததால் இழந்த ஜோலா சிறை புகவேண்டுமென்று “தீர்ப்புக்” கிடைத்தது.

ஜோலாவின் இடையறாத உழைப்பிற்கு அவரடைந்த பயன்!

நாட்டை விட்டு ஓடிப்போகும்படி நண்பர்கள் கூறினர். அது “கோழைத்தனம்” என ஜோலா உதறித் தள்ளினார். பக்கத்திலிருந்த நண்பர் அவரைத் தட்டி “ஜோலா பாரிஸ் சிறையில் வாடுவதில் பயனில்லை. வெளிநாட்டுக்குச் செல். அங்கிருந்து டிரைபஸ் வழக்குப் பற்றிக் கட்டுரைகள் அனுப்பு ஓடிப்போவதால் நீ கோழையாக மாட்டாய். தாய் நாட்டை விட்டு, மனைவி நண்பர்களைவிட்டு ஓடுகிறாய், உன் கருத்தை - லட்சியத்தைப் புறக்கணித்தல்ல; சில சமயங்களில் கோழைப் பட்டத்தை ஏற்றுக்கொள்ளப் பெரிய வீரம் வேண்டும்” என்றார். ஜோலா அதை ஏற்றுக் கொண்டார். 1897ஆம் ஆண்டு அவரது 57ஆம் வயதில் ஜோலா இங்கிலாந்து ஓடினார்.

ஜோலாவின் வெடிகுண்டுகள் தூரத்திலிருந்து வீசப்பட்டன. “அரோரி” பத்திரிகை இடைவிடாது உழைத்தது. உண்மை கிளம்பி விட்டது. அதைத் தடுக்க எவராலும் முடியாது.

ஐரோப்பிய நாடு அரசியலிலே இரண்டாகப் பிரிந்தது. ஒரு பக்கத்தில் வெறிபிடித்த இராணுவம், பிரபு அரசவம்சம், மதத்திற்கும் கலைக்கும் பாதுகாப்பளிக்கிற குருமார் கூட்டம். மறுபக்கத்தில் மெதுவாகத் தலை தூக்குகிற புத்துணர்ச்சி.

பிரெஞ்சு மந்திரி சபை மாறியது. உண்மைத் துரோகி எஸ்டர் ஹேஸி கூண்டில் நிறுத்தப்பட்டான். அவனுக்கு உதவியாக இருந்த ஹென்றி தற்கொலை செய்து கொண்டான். எஸ்டர் ஹேஸி நாட்டை விட்டோடினான். முன் வழக்கை ஜோடித்த வழக்கறிஞர் டார்ட் வேலையிலிருந்து நீக்கப்பட்டான். டிரைபஸ் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

1899இல் பிரான்சு நாட்டுக்கு ஜோலா திரும்பினார். மூன்றாண்டுகளுக்கப்புறம் துடிதுடிப்பான இருதயம் ஓய்ந்தது. 1902 செப்டம்பரில் ஜோலா இறந்தார். அவருடைய முயற்சிகள் வீண்போகவில்லை. நீண்டகால வழக்கின் பின் டிரைபஸ் 1906இல் தூய்மையானவன் என முழு வீடுதலையளிக்கப்பட்டு, உயர்ந்த இராணுவப் பதவிகள் கொடுக்கப்பட்டான்.
அவருடைய கல்லறைக்கருகில் அனேதேல் பிரான்சு, உணர்ச்சி மிக்க சொற்பொழிவாற்றினார். “நீதி, உண்மை இவற்றைத் தவிர்த்து வேறெதுவும் அமைதியை வழங்காது. ஜோலா உலக உணர்வின் ஆரம்பத்தைக் குறிப்பவர்.”

இலக்கியத்தில் ஜோலா அவருடைய ஏடுகளின் அளவினால் மதிப்பெய்தவில்லை. எளிய நடையில் ஒளிவிட்ட கருத்துகளுக்காக, ஏழை எளியோரைப்பற்றித் தீட்டிய எழுத்தோவியங்களுக்காக, மூடத்தனம், வெளிவேடம் அநீதி, சுரண்டல் முறை, போர் இவற்றை எதிர்த்து எழுதியதற்காக மட்டுமல்ல, சமயம் நேர்ந்த பொழுது தனது தள்ளாத வயதில் பலமிக்க இராணுவம், அதிகாரமுள்ள அரசாங்கம் அனைத்தையும் எதிர்த்துத் தனியாக நாட்டையும் வீட்டையும் விட்டோடிப் போராடிய திறத்திற்காக ஜோலா உலக வரலாற்றிலே இடம்பெற்று விட்டார். “பிரான்சு நாட்டிற்குப் பல்வகைகளில் தன் உழைப்பைச் செலுத்தலாம், ஒருவன் வாளேந்தியோ. என் பங்கில் எமலி ஜோலா என்ற பெயரை வருங்காலத்திற்கு வழங்குகிறேன். அது இரண்டிலொன்றை ஆராய்ந்து அடைவதாக” என்று ஜோலா கூறினார். வருங்காலம் - பின் சந்ததி ஜோலாவைத் தேர்ந்தெடுத்துள்ளது.

ஜோலா ஓய்வேயறியாத உழைப்பாளி. அவருடைய வாழ்வு ஏமாற்றங்கள் நிறைந்ததாயிருந்தது. குறிப்பாகப் பிரெஞ்சு இலக்கிய மன்றம் அவரை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்க மறுத்தது. ஆனால், பிரெஞ்சு மொழி இலக்கிய ஆசிரியனாக வல்ல, உலக இலக்கியத்தில் உயர்ந்த இடத்தை ஜோலா அடைந்துவிட்டார்.

“எதை எழுதுவது?” என்றொரு நாள் நம் கவிஞருக்குச் சந்தேகம் பிறந்தது. தாமரை தன் அழகைக்காட்டி எழுதச் சொல்லிற்றாம், காடும் கழனியும், கார்முகிலும், கலாப மயிலும், மலரனைய மாதரும், செவ்வானமும், அன்னமும், வீரமும், பிறவியும், என்னைப்பற்றி எழுது! என் எழிலைப்பற்றித் தீட்டு என்று கூவின. கவிஞர் கூறுகிறார் கேளுங்கள். ஜோலாவின் உணர்ச்சி அதிலே உள்ளதைக் காணுங்கள்,

“இன்னலிலே, தமிழ் நாட்டினிலே யுள்ள
என் தமிழ் மக்கள் துயின்றிருந்தார்
அன்னதோர் காட்சி இரக்க முண்டாக்கியென்
ஆவியில் வந்து கலந்ததுவே!”