அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஏழாவதாண்டு

“திராவிட நாடு” இதழுக்கு ஆறு ஆண்டுகள் முடிந்து, ஏழாவது ஆண்டு தொடங்கியிருக்கிறது. கடந்த ஆறாண்டுகளாகப் பொதுமக்களின் நலன் கருதி உழைத்த “திராவிட நாடு” இனியும் அப்பணியினைத் தொடர்ந்து நடத்த உங்கள் ஆதரவையும் ஒத்துழைப்பையும் நாடி உங்களிடம் வருகின்றது.

வியாபார நோக்கத்தோடு நடத்தப்படும் பத்திரிகைகள் போலன்றிக், கொள்கைக்காகப் பணியாற்றும் பத்திரிகைகளை நடத்துவதென்பது எளிதான காரியமென்று நினைத்துவிட முடியாது. அவற்றிற்குப் பலவிதமான தொல்லைகள் ஏற்படும். சமூக சீர்திருத்தமென்பது, தொல்லைகளும் - தொந்தரவுகளும், எதிர்ப்பும் இன்றி நடக்கக்கூடியதன்று. பழைமைப் பிரியர்களும், பொறாமைக் காரர்களும் தங்களுடைய திறமை முழுவதையும் சீர்திருத்தப் பாதைக்குக் குறுக்கே நிறுத்திக், கொள்கைகள் நாட்டில் பரவ விடாமல் தடுப்பதிலேயே கண்ணுங் கருத்துமாக இருப்பார்கள்.

சமுக சீர்திருத்தப்பணியில் பலவிதமான தடைகள் ஏற்படும். நீக்கக்கூடியது - ஒதுக்கக் கூடியது - உடனடியாக ஒழிக்கக்கூடியது என்ற முறையில் தடைகள் ஏற்படும். அவற்றிற்கேற்பக், காலப்போக்கை அனுசரித்துக் காரியங்களை நடத்திச் சென்று வெற்றி காண வேண்டும். தடைகளைக் கண்டு தயங்கினால் எடுத்துக்கொண்ட காரியத்தை எந்தக் காலத்திலுமே நிறைவேற்ற முடியாது. தடைகளின் தன்மையை அறிந்து அதற்கேற்பப் பணியாற்றினால் மட்டுமே வெற்றி காண முடியும்.

சமுதாயத்திலுள்ள சாதித் தொல்லைகள், சனாதனக் கோட்பாடுகள், வைதிகக் கொடுமைகள், மத வேறுபாடுகள், இவற்றால் ஏற்படும் பிளவு - பகைமை - ஒற்றுமைக்குறைவு ஆகியவைகளைக் களைந்தெறிவதென்பது சுலபமான காரியமன்று. பன்னெடுங்காலமாக மக்களிடையே பரப்பப்பட்டு வந்த கொடுமைகள் இவை. இக்கொடுமைகளைப் போக்குவதையே நாம் குறிக்கோளாகக் கொண்டுள்ளோம்.

“திராவிட நாடு” கடந்த ஆறு ஆண்டுகளாக இந்தப் பணியினைச் செய்து வந்ததுபோலவே இனியும் தொடர்ந்து பணியாற்றும் என்பதை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்வதன் வாயிலாக அவர்களின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் தர வேண்டுகிறோம்.

எந்த ஒரு பொதுப்பணியும், அதற்குச் சம்பந்தப்பட்ட மக்களின் ஒத்துழைப்பின்றி நடக்க முடியாதென்பதை நீங்கள் அறிவீர்கள். “திராவிட நாடு”, நாட்டில் பரவி, அது வெளியிடும் கருத்துக்களை மக்கள் மனதில் பதியவைத்துப் பயன் உண்டாக்குவதற்கு உறுதுணையாய் நின்று பணிபுரியும் ஏஜண்டுத் தோழர்களுக்கும் சந்தாதாரர்

களுக்கும் நாம் பெரிதும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

ஒவ்வொரு ஆண்டுத் தொடக்கத்திலும், ஏஜண்டுத் தோழர்களுக்கும் சந்தாதாரர்களுக்கும் நாம் நினைவூட்டுவதையும், வேண்டுகோள் விடுவதையும் இவ்வாண்டுத் தொடக்கத்திலும் வழக்கம்போல் கையாள வேண்டிய நிலையிலேயே இருக்கிறோம். இவ்வாண்டு, கணக்குப் புத்தகம் கவலையை அதிகமாகவே உண்டாக்கும் நிலைமையில், ஏஜண்டுத் தோழர்களில் சிலர் பராமுகமாய் இருக்கின்றனர். கடந்த இரண்டு வாரங்களாகச் சில ஏஜண்டுகளுக்கு பத்திரிகை அனுப்புவதைக் கூட நிறுத்தும்படியான நிலைமையை அவர்கள் உண்டாக்கிவிட்டார்கள்.

பத்திரிகைக் காகிதத்துக்கு இருந்த கட்டுப்பாடு நீங்கிவிட்ட தென்ற போதிலும், காகித விலை நஞ்சென ஏறிக்கொண்டே போகிறது. கடந்த மாதத்தில் ஏழணா விற்ற காகிதம் இம்மாதத்தில் எட்டரை அணா என்று விற்கப்படுகிறது. இன்னும் விலை ஏறுமென்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையிலும், நாம் பத்திரிகையின் விலையை உயர்த்தாமலும், பக்கங்களைக் குறைக்காமலும் வாசகர்களைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற விருப்பத்தைக் கைவிடவில்லை.

கொள்கைக்காக நடத்தப்படும் பத்திரிகைகளை இலாபத்தை எதிர்பார்த்து நடத்தமுடியாது. இலாப நோக்கம் வலுப்பெற்று விட்டால், கொள்கையின் நோக்கம் சிதறடிக்கப்பட்டுவிடும். எனவேதான் நாம் இலாபத்தைக் குறிக்கோளாகக் கொள்ளாமல், கொள்கையையே குறிக்கோளாகக் கொண்டுள்ளோம். “திராவிட நாடு” இதழைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் தெரியும், அது இலாபத்துக்காக நடத்தப்படும் பத்திரிகை அன்று என்பது. இலாபத்தை அள்ளிக் குவிக்கும் விளம்பரங்களைத் “திராவிட நாடு” எப்போதுமே ஏற்றுக்கொள்வதில்லை. விளம்பரங்கள் போடும் இடத்தில், மக்களுக்குப் பயன்படும் நல்ல கருத்துக்களை வெளியிட்டால், அதுவே சிறந்த இலாபமென்று, “திராவிட நாடு” கருதிப் பணியாற்றி வருகின்றது.

இந்த நிலையில், ஏஜண்டுத் தோழர்களிற் சிலர் தங்கள் ஊக்கத்தையும் முயற்சியையும் தளர விடுவதன் வாயிலாக நமக்குத் தொல்லையையும், அவர்களை எதிர்பார்த்து இருக்கும் வாசகர்களுக்கு ஏமாற்றத்தையும் தரும் நிலைமையை மாற்றி, “திராவிட நாடு” இன்னும் சிறந்த முறையில் மக்களுக்குப் பயன்படும்படி செய்வது, ஏஜண்டுத் தோழர்களின் இன்றியமையாக் கடமை என்பதை அன்புடன் நினைவூட்டி வேண்டிக் கொள்கின்றோம்.

இந்தக் குறை ஏஜண்டுத் தோழர்களை மட்டும் பொறுத்ததன்று. வாசகர்கள் பலர் அவர்களுக்குக் கொடுக்கும் தொல்லையே, அவர்கள் பாக்கியை மாசா மாசம் ஒழுங்காக அனுப்பமுடியாமல் இருப்பதற்குக் காரணம் என்றும் தெரிகிறது. எனவே, வாசகர்கள் இந்தக் குறைக்கு இடம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு அவர்களையும் கேட்டுக்கொள்கிறோம்.

“திராவிட நாடு” இதழுக்குக் கட்டுரை - கவிதைகள் வழங்கிய அன்பர்கட்கும், அச்சகத் தோழர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் எமது அன்பு கலந்த நன்றியறிதலை உரித்தாக்கித், “திராவிட நாடு” இதழின் ஏழாவது ஆண்டை உங்களின் ஆதரவை எதிர்பார்த்துத் தொடங்கியிருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
20.6.1948