அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


“அகிம்சா” ஆட்சியின் அழகினைப் பாரீர்!

திடுக்கிடாதீர்கள்! நூல் எழுதிய குற்றத்திற்காகவும், அவைகளைப் பிரசுரித்த குற்றத்திற்காகவும் தண்டனை பெற்ற தோழர்கள் ஆசைத்தம்பி, கலியபெருமாள், தங்கவேல் ஆகியோரை இந்த ஆளவந்தாரின் ‘கருணை’ ததும்பி ஆட்சி நடத்தியிருக்கும், முறை இது!

மொட்டையடித்திருக்கிறது! சாதாரண கிரிமினல் கைதிகளை விடக் கேவலமாக நடத்தியிருக்கிறது. நண்பர் ஆசைத்தம்பி. விருதுநகர் நகர மக்களின் பிரதிநிதி “தனியரசு” மாதப் பத்திரிகையின் ஆசிரியர். திராவிட முன்னேற்றக்கழகத்தின் செயற்குழு உறுப்பினர். அவரை, இந்த முறையில் அலங்கோலமாக்கி இருக்கிறது. அரசாங்கம்! துறையூர்த் தோழர்களும், மக்களிடை மானமுடன் வாழ்ந்து வருபவர்கள் வியாபாரிகள்! இவர்கள் திருடவில்லை, பொய் சொல்லவில்லை. ஆளவந்தாரைக் கவிழ்க்கச் ‘சதி’ செய்யவில்லை! சாதாரணமானது நூல் எழுதியது. அதை வெளியிட்டது! அதற்குச் சிறைவாசம் அங்கு போனதும் இந்தக்கொடுமை!

திருச்சியிலிருந்து நமக்குக் கிடைத்த செய்திகளைக் காணும்போது நெஞ்சம் துடிக்கிறது-நிலை தடுமாறுகிறது!

தோழர்களுக்கு முசிரி மாஜிஸ்டிரேட் தண்டனை தந்த தேதி 19 தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும், முசிரி சப்ஜெயிலில் மூவரும் அடைக்கப்பட்டு 21 ந் தேதி வெள்ளியன்று, திருச்சி மத்தியசிறைக்கு கொண்டுவரப்பட்டு ‘அவுட்குவாரன்டைன்’ பகுதியில் கொண்டுபோய் அடைக்கப்பட்டனர்.

தீர்ப்பு விபரம் தெரிந்ததுமே ‘ஜட்ஜ்மெண்ட் காப்பி’ கோரி மனு கொடுக்கப்பட்டது. 20 ந் தேதியன்று தீர்ப்பின் விபரம் கிடைத்ததால் 21 ந் தேதியன்று வழக்கறிஞர் விருத்தாசலம் அவர்களைக் கொண்டு அப்பீல் தாக்கல் செய்ததோடு ஜாமீனில் விடுதலை செய்யுமாறும் மனு செய்துகொள்ளப்பட்டது.

21.7.50 அன்றைய தினமே, ஜாமீனில் விடுதலை செய்யுமாறு செஷன்ஸ் ஜட்ஜ் உத்தரவு பிறப்பித்தார். ஆனால் டிப்டி கலெக்டரின் கையெழுத்துக்காக முசிரிக்குச் செல்லவேண்டிய திருந்தது.

ஜாமீன் உத்தரவும் கிடைத்திருக்கிறது! இருந்தும் 22.7.50 சனியன்று, தண்டனை அடைந்த தோழர்களைச்சிறை அதிகாரிகள், கட்டாயப்படுத்தி மொட்டையடித்திருக்கின்றனர்!

“ஜாமீன் உத்தரவு கிடைத்துவிட்டது. இன்று மூன்றாவது சனிக்கிழமையாதலால் சர்க்கார் விடுமுறையாகப் போயிற்று! நாளை ஞாயிறு ஆகவே திங்களன்று நாங்கள் சிறையிலிருந்து வெளியே போய்விடப் போகிறோம் வேண்டாம் இது” என்று எவ்வளவோ, கேட்டுக்கொண்டும் “அதிகாரதேவதைகள்” தங்கள் “திருக்கைங்கரியத்தைச்” செய்யத் தயங்கவில்லை! மொட்டை அடித்தே விட்டிருக்கின்றனர்!!

அதுமட்டுமல்ல, குவாரண்டைன் பகுதியில் தோழர்களின“ ஆடைகள் யாவும் அகற்றப்பட்டனவாம்! புராதனகாலத்து ‘ரிஷீசுவரர்’ உடைதான் கொடுக்கப்பட்டதாம். ஜாமீனில், விடுதலையாகும் வரை அந்த ‘கால்முழத்துடன்’ தான் இருக்க நேர்ந்ததாம்!

அவர்கள் சூதர்களல்ல; மனித சமுதாயத்தை வாழ்விக்கப் பாடுபடும் தூதர்கள்! தேசத் தொண்டர்கள் நாட்டின் வீரர்கள்! அவர்களைக் கிரிமினல் கைதியை விடக் கேவலமாக நடத்தி இருக்கின்றனர். அரசாங்கத்தார் ‘அநியாயம்! அக்கிரமம்! நேர்மைக்கொலை!’ என்றெல்லாம் வார்த்தைகள் நெஞ்சில் புரண்டாலும் “இந்தக்காட்சியைப் பாருங்கள்! பொதுமக்களே நேர்மையாளரே, இந்தக்காட்சியைக் கவனித்துப் பாருங்கள்! என்ன குற்றம் செய்தனர்-இவர்கள்! எதற்காக இவ்வளவு சித்திரவதைக்கு ஆளாக்க வேண்டும் அவர்கள் உள்ளங்களை!

அடுக்குமா இது? நல்லாட்சியின் அழகுதானா? நாட்டில் வீரமுழக்கம் செய்த இன்று ஆட்சிப்பீடமர்“ந்திருப்போர் இப்படித்தானா, எதிர்க்கட்சியினரை நடத்துவது? கிரிமினல் கைதிகளை விடக்கேவலமாக நடத்தியிருகக்‘ன்றனர்! ஜாமீனில் விடுதலையாகப் போகின்றனர் என்பது தெரிந்தும், மொட்டை அடித்திருக்கின்றனர். விஷயத்தை பலமுறை கூறியும் வீம்போடு நடந்து கொண்டிருக்கின்றனர்! இதுதான் சுதந்திர ஆட்சியா? சுயராஜ்யபூமியா? உரிமைவாழ்வா? என்பதைப்பாருங்கள்! அகிம்சா வாதிகளின் ‘அருமையான’ ஆட்சி முறையைப் பாருங்கள்!” என்பதை மட்டும் வேதனையோடு வெளியிடுகிறோம்!

(திராவிட நாடு-30.7.50)