அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்‘அகிம்சா‘ வெறி!

24-1-52 வியாழன் இரவு 10.15 மணிக்கு நமது கிளைக் கழகத்தோரும், தி.மு.க. ஆதரவு பெற்ற ‘உழைப்பாளிகள் கட்சிக்குத் தேர்தல் வேலை செய்தவருமான நெல்லிக்குப்பம் தோழர் மஜீத், குத்திக் கொலை செய்யப்பட்டார். கொலை நிகழ்ச்சியைத் தடுத்த தோழர்கள் வேணு, பக்கிரி என்ற இருவரும் படுகாயப்படுத்தப்பட்டனர். இது சம்மந்தமாக ர. கண்ணன் என்னும் காங்கிரஸ் பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். ராமலிங்கம் என்பவரையும் போலீஸ் கைது செய்து, ஜாமீனில் விடுத்துள்ளனர். கொலைக்குக் காரணமென்று கூறப்படும் கண்ணன் எனும் காங்கிரஸ்காரர், ‘தியாகி மான்யம்‘ பெற்றவர். தேர்தலின்போது கோயங்காவுக்காக வேலை செய்தவர்.

1-2-52 அன்று பண்ருட்டி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கைதி விசாரிக்கப்பட்டார். கொலை செய்தது தான்தான் என்ற கைதி ஒப்புக் கொண்டார்.

காங்கிரஸ் வெறிக்குக் காரணமான தோழர் மஜீதுவுக்கு நெல்லிக்குப்பம் கிளைக்கழகம் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதோடு, மஜீது குடும்பத்தாருடைய தாங்கொணாத் துயரத்தில் தானும் பங்கு கொள்கிறது – என்று நெல்லிக்குப்பம் தி.மு.க. செயலாளர்கள் அ. வெங்கடபதி, ச.இராசகோபாலன் தெரிவிக்கின்றனர்.

செய்தி – திராவிட நாடு – 10-2-52