அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஐ.நா. கமிட்டியில் ‘திராவிட‘ முழக்கம்!

“மனித வரலாற்றுக்கு மகத்தான களஞ்சியம்“
“செல்வம் கொழிக்கும் திராவி மொழிகளே“
பாரிஸ் நகரத்தில் – எச்சரிக்கை

“இந்திய இலக்கியம் என்றதும் உங்கள் கண்முன் சமஸ்கிருத இலக்கியங்கள் மட்டுமே காட்சியளிக்கும் அதுமட்டுமே, இந்தியாவின் இலக்கியம் என்று கருதிடாதீர்கள். அதைவிடப் பன்மடங்கு சிந்தையள்ளும் செல்வங்கள், திராவிட இலக்கியத்தில் இருக்கின்றன. அவைகளைப் பற்றியும், ஆராய வேண்டுமென்பதை கமிட்டியினருக்கு நினைவுறுத்துகிறேன்.

பாரிஸ் நகரத்திலே பலநாட்டு அறிஞர்களின் மத்தியிலே, இவ்வித எச்சரிக்கையை விடுத்துள்ளார். இந்தியாவிலிருந்து சென்றிருக்கும் சி.பி. மாத்யூ எனும் அறிஞர்.

உலகத்தின் பல்வேறு பாகங்களிலுள்ள மனித இனங்களின் வரலாறு பற்றியும், அவரவர்களின் இலக்கியங்களையும் திரட்ட வேண்டுமென்று ஐக்கியநாடு சபையின் கலாச்சாரக் கமிட்டி பாரிஸ் மாநகரத்திலே கூடி ஆலோசித்தது, டிசம்பர் 6-ல் அதற்கென சுமார் 1,90,400 ரூபாய்களைச் செலவிடுவதெனவும் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த ஆலோசனை மண்டபத்திலேதோன் அன்பர் மாத்யூ, இவ்வித எச்சரிக்கையை விடுத்துள்ளார் மாத்யூ. இந்தியாவிலிருந்து மேற்படி கமிட்டிக்குச் சென்றிருக்கும் தூதுக்குழு உறுப்பினர்களில் ஒருவர்.

தக்க இடத்தில் அவசியமான விஷயத்தை, சுட்டிக் காட்டியுள்ளார் மாத்யூ. அவருக்கு நமது பாராட்டுதலைத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். அலைகடல் தாண்டி விண்ணிலே பறந்து, அகில உலக நாடுகளின் முன்நின்று அழகாக ஆர்ப்பரிக்கும் அரசியல் மேதைகள், திராவிட இனத்திலே ஏராளம் உண்டு, ஆனால், அவர்களெல்லாம் அங்கு சென்றால் ‘திராவிடம்‘ குறித்துப் பேசுவதில்லை. இந்தியா ஒன்று என்கிற ஒற்றுமையை உடைத்துக் காட்டுவது அழகல்ல எனும் ‘பெருந்தன்மையர்ல்‘ அதன் காரணமாகவோ, நமது இனப்புகழ் குறித்து எதுவும் பேசுவதில்லை. ஆனால், ஆரியவர்க்கத்தவரோ, சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம். தமது பெருமைகளை விவரிக்கத் தவறுவதில்லை. சச்சிவோத்தம் சர்.சி.பி. அமெரிக்காவுக்கச் சென்றால் அரை மணி நேரமாவது சமஸ்கிருதத்தின் அருமையைக் குறித்து விளக்கத் தவறமாட்டார்! அடையாறு ருக்மணி, பாரிஸ் மண்டபத்தில் ஆடும் சந்தர்ப்பம் ஏற்பட்டால், ‘பகவான் கிருஷ்ணன் பார்த்தனுக்கு, ‘கீதா, விளக்கம்‘ தந்த கட்டத்தை ஆடிக்காட்டத் தவறார்! இவ்விதமே சரிதாசிரியர்களும், சகலகலா பண்டிதரும் இந்தியாவைப் பற்றி எதுகூற வேண்டுமாயினும், சமஸ்கிருதத்தில் ஒரு சுலோகம், இதிகாசங்களில் ஒரு சம்பவம், இவ்விதமே விளக்கி வருகின்றனர். எழுதிய நூல்களையும் வெளிநாடுகளில் குவிக்கின்றனர்.

அவர்களின் பிரச்சாரம்! நம்மவரின் உணர்ச்சியற்ற பெருந்தன்மை! இதன் விளைவுகளால், வெண்ணிலாவை மேகங்கள் மறைப்பதுபோல வீரத்தாலும் விவேகத்தாலும் சிறந்து விளங்கிய திராவிட மக்களின் வரலாறுகள், உலகத்தின் முன் மறைக்கப்பட்டுக் கிடக்கின்றன.

அதனாலேயே, இவ்வித எச்சரிக்கையை, மாத்யூ விடுக்க நேர்ந்தது அவர் அறிவுறுத்தியிருக்கிறார், “சமஸ்கிருதமே உங்கள் மனக்கண் முன் தோன்றும். அதைவிட, ஏராளமான இலக்கியச் செல்வங்கள் திராவிட மொழிகளில் உள்ளன“ என்பதாக அகில உலக நாடுகளின் கண்முன், இந்தியா என்றதும் சமஸ்கிருதமே காட்சியளிக்கும் நிலையிருக்கிறது, என்பதை – நன்குணர்ந்த தாலேயே, இவ்விதம் அவர் பேச நேர்ந்திருக்க வேண்டும்.

மாத்யூ – ‘நமது கூட்டத்தவரல்ல‘ ஆனால், உலக இன வரலாறுகளின் உண்மை விளக்கம் உருவாக்கப்படல் வேண்டும் என்ற நல்லெண்ணத்தால். இவ்வித எச்சரிக்கையை வலியுறுத்தி யிருக்கிறார். இவ்வித நல்லெண்ணம், அவருக்குத் தோன்றியதற்குக் காரணம், “உலக வரலாறு உண்மையோடு விளக்கப்பட வேண்டும்“ எனும், ஆசையாகத்தான் இருக்க முடியும். இத்தகைய நல்லெண்ணங் கொண்டோர், மிக மிக கொஞ்சம் – இங்கு திராவிடம் ‘திராவிட மொழி‘ என்றாலே, “அவைகளை இல்லையென்று மறுக்க, என்னென்ன ஆதாரம் தேடலாம் என்று முயல்வோரே, அதிகம் அந்தக் கூட்டத்தின், ‘திருததொண்டின்‘ விளைவாகத்தான், திராவிட மரபின் பழம்புகழ், உலகக் கண்ணுக்குப் படாமல் கிடக்கிறது! நியூயார்க் நகரிலே மகாபாரதத்தைப் பற்றித் தெரியும் – லண்டன் மாநரிலே ராமாயண விளக்கம் அறிந்தோர் இருப்பர் – ரஷ்ய பூமியிலே ‘சமஸ்கிருதம்‘ புகழ் தெரிந்தோர் இல்லாமலிரார் – இதுபோல, எந்த நாடுகளையெடுத்துக் கொண்டாலும், ஆங்காங்கு சமஸ்கிருதத்தின் மணம் வீசாமலிருக்காது! ஆனால், ‘திராவிட மொழிகள்?‘ படித்துப்பட்டம் பெற்றோரில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம், இவ்விதம் ‘சில‘ மொழிகள் இந்தியாவில் உள்ளனவென்று ‘திராவிடர்‘ ‘திராவிட மொழி‘ இவ்வித வார்த்தைகளைக் கேள்வியுற்றவராக, உலகில் சிலர் இருந்தாலும், அவர்களிலே பலருக்கு அவைகளைப்பற்றிய உண்மை விளக்கங்கள் எட்டாத காரணத்தால் இருட்டிலே, கிடக்கிறது – திராவிட இனப்பெருமை. வீழ்ந்து போன ரோமாபுரியின் சரிதங்கள் ஏராளம். உண்டு! கிரேக்க வீரர்களைக் குறித்து உலகத்தோர் – அறிவர் – புகழ்வர்! பாபிலோன் சிறப்பும், எகிப்தின் புகழும் எல்லோரும் மெச்சிப் பாராட்டுவதாக உள்ளது. ஆனால், திராவிட இனத்தின் வரலாறு, விந்தியத்தைத் தாண்டவில்லை. இமயத்துக்கப்பால், எடுத்துச் செல்லப்பட்டதில்லை. புரவியேறி, நாவாய் ஓட்டி நானில் முழுமையும் புகழ் மணக்கச் செய்த ஒரு வீர இனத்தின் வரலாறு – ரோமாபுரியும், ஏதன்சும், பாபிலோனும் எகிப்தும், ஏற்றம் பெறுமுன் சிறப்போடு விளங்கிய திராவிட இனத்தின் வரலாறு – உலகில், எவருக்குமே தெரியாத அளவுக்கு மறைக்கப்பட்டிருக்கிறது. “திராவிடர்“ என்றால், யார்? – என்று கேட்கிறார்கள், வெளிநாட்டார். விசித்திர வியாக்யானங்களைக் கூறுகின்றனர், உலகமேதைகள், “திராவிடர், ஆரியருக்குப்பின் வெளியிலிருந்து வந்தோரே“ – என்று கூறுமளவுக்கு, உலக மேதைகளைத்துணியச் செய்கிறது காரணம், அவாகள், கண்முன் நம்மருந் தொல்காப்பியம் காட்டப்படவில்லை! அவர்களுக்கு “வால்மீகி‘யைத் தெரிந்தளவுக்கு “வள்ளுவர்“ தெரியார்! அகமும் புறமும், எவ்விதம் உணர்வர் அவர்கள்? சாகுந்தலமும் மகாபாரதமும் குவிக்கப்பட்டால், அவைகளைக் கொண்டுதானே இந்தியாவின் இறந்த காலத்தைச் சிந்தனை செய்வர்!

மண்டிலங்களை ஆட்டிப்படைத்த ஓர் இனம், கால வெள்ளத்தின் அலைகளைத் தாண்டி நிற்கும் இலக்கியங்களை ஏராளமாகப் பெற்றிருந்தும், உலகத்தார் உள்ளத்தில் படாமலே, மறைக்கப் பட்டிருக்கிறது. எத்தகைய விந்தை இது! இந்தத் ‘திருப்பணியை‘ அஞ்சா நெஞ்சத்துடன் செய்துவரும் திருக்கூடத்தின் தீரத்தைத்தான் என்னென்பது!

இந்தக் கூட்டத்தின் வரலாறுகளை, அறிந்ததால்தான், மாத்யூ, எச்சரித்திருக்கிறார். “மனித வரலாற்றின் சரிதத்தை எழுதும் போதும் – மறந்திடாதீர்கள். மலைபோல் காட்டப்படும், சமஸ்கிருதத்தைக் கண்டுவிட்டு, அதுதான் இந்திய இலக்கியப் பொக்கிஷம், சமஸ்கிருதம் பேசுவோரே இந்திய உபகண்டத்தின் ஆதிகுடிகள், என்றெண்ணித் திரும்பிடாதீர் – அந்த நூல்களைப் படித்ததோடு, ‘இந்திய இலக்கியத்தைக் கண்டோம்‘ என்று இருந்திடாதீர். அதைவிடச் செல்வம் கொழிக்கும் இலக்கிய மொழிகள் இருக்கின்றன. அவைதான் திராவிட மொழிகள்! அவை பேசப்படும் இடத்திலுள்ளோரைப் பற்றி அறியாமல், நாம் உலக வரலாற்றை எழுதிவிடுவதென்பது கூடாது. அப்படிச் செய்தால், அது முடியாத முயற்சி – முற்றுப் பெறாத பணியாகும்“, என்பதாக.

இந்த விஷயத்தின் மீது, மேலும் அவர் என்னென்ன பேசினாரோ! நமக்குக் கிட்டவில்லை! ஆனால், அவர் அதிகமாகவும் அறிவுறுத்தும் முழக்கமிட்டிருக்க வேண்டும் – ஆகவேதான், இந்தளவுக்காவது நமக்குச் செய்தி எட்டியிருக்கிறது. இந்தச் செய்தியையும் வெள்ளையர் இதழான ‘மெயிலைத்‘ தவிர, வேறெதுவும், விளக்கமாகப் போடவில்லை. எவ்விதம், போடுவர்? இருட்டடிப்புத்தானே, இன்றைய ‘பிரம்மாஸ்திரம்‘ அவர்களுக்கு.

இருட்டடிப்பின் காரணமாக, ஒரு இனவரலாற்றின் செழிப்புமிக்க பக்கங்களையே, கிழித்தெறியும் திருக்கூட்டத்தின் துணிவை, நினைத்தால் மனத் கொதிக்கும். அதே நேரத்தில திட்டமிட்டு அக்கூட்டம் செய்யும் வேலைகளைக் கவனித்தால், வியப்பு பெருகும்.

இந்த அளவுக்கு நம் பெருமையும் நமது இலக்கியமும் மறைக்கப் பட்டிருப்பதை எண்ணும்போது, மற்றோர் கேள்வியும் மனதில் எழும்பத்தான் செய்யும். “இவ்விதம் தமது மொழி, தமது இலக்கியம் ஆகியவைகளை மட்டும் உலகுக்குக் காட்டி, திராவிட இனவரலாற்றை மறைத்து ஒழிக்கும் ஆசை ஏன், ஏற்படுகிறது இவர்களுக்கு?“ – இந்தக் கேள்வியைத்தான், நம்மவர், அடிக்கடி கேட்டுக் கொள்ள வேண்டும். தமக்குள், அவ்விதக் கேள்விகள், மாத்யூ எனும் இந்தியத் தூதரின் உள்ளத்தையும் அடிக்கடி உறுத்தியது போலும் – அதனாலேயே இவ்விதம் ஒரு விளக்கம் தந்திருக்கிறார், பாரிஸ் மண்டபத்தில், “நான் இப்படிப் பேசியதால் எனக்கு சமஸ்கிருத கலாச்சாரத்தின் மீது வெறுப்பு என்று எண்ணிடாதீர்கள் அது உலக முழுமையும் தனது தூதர்களைப் பரவ விட்டிருக்கிற சிறந்த மொழிதான். ஆனால், இந்தியக் கலாசச்சாரத்தின் வரலாற்றுக் கண்ணாடி, அதுமட்டுமல்ல, அதைவிடச் சிறந்ததும் இருக்கிறது.“

மாத்யூ – நமக்கு அறிமுகமில்லாதவர். நமது பிரச்னைகளை அறிந்தவரா, இல்லையா என்பதும் அறியோம், நாம். ஆனாலும், ஐ.நா. சபையில் முழக்கமிட்டிருக்கிறார்! மனித வரலாறு மறைக்கப்படுவதைக் கண்டு சோகித்ததின் விளைவு தான். இந்தக் கர்ஜனை! இவ்விதக் கர்ஜ்னைகள், எழும்பாமற் போகாது. ஆறிவு வெளிச்சம் படரப்படர இதனை, ‘திருக்கூட்டத்துக்கு‘ உணர்த்தும் இந்த நேரத்திலே, அவர்தம் அடியார்களாக இருக்கும் ஆசையில் ‘ஆரியமாவது, திராவிடமாவது‘ என்று அலறுகிறார்களே, நமது அருமந்த சகோதரர்கள், அவர்களது பார்வையையும் திருப்ப விரும்புகிறோம். கேட்குது பாரீர், ‘திராவிட ஒலி! அதுவும் – அரசாங்கத்தின் தூதரின் ஆத்திர முழக்கமாக!

திராவிட நாடு – 28-12-52