அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஐந்தாம் ஆண்டு!

“திராவிட நாடு” ஐந்தாம் மலரின் முதல் இதழ், தங்கள் கரத்தில் இருப்பது. கடந்த நான்கு ஆண்டுகளாகக் கடமையைக் களிப்புடன் நிறைவேற்றி வந்த, “திராவிட நாடு” இனியும் அப்பணியினை ஆற்றும் உறுதியுடன், உமது உற்சாகம், ஆதரவு எனும் உறுதுணை தேடவந்துள்ளது. கொந்தளிப்பான நாட்களிலே தோன்றி, காலநிலை எனும் கஷ்டங்களைத் தாங்கி “திராவிட நாடு” பணியாற்றி வந்திருக்கிறது, பணிபுரிய முன் வந்திருக்கிறது. அன்றுபோல் இன்றும், இன்றுபோல் என்றும் உமது ஆதரவை அருளக் கேட்டுக் கொள்கிறோம். இதுவரை “திராவிட நாடு” நமது இயக்கத்தவரிடமிருந்து பெற்றுள்ள ஆதரவும் உதவியும், தேவை. மேலும் சில மடங்கு அதிகமாக அன்பர்கள் அதனை அளிப்பர் என்று நம்புகிறோம்.

இயக்க ஏடுகளின் வாழ்வு, எதிர்நீச்சல்காரனுடையது போன்றது. இன்பம் நிறைந்ததாகவோ எளிதான வகையில் வெற்றி பெறக்கூடியதாகவோ இருக்க முடியாது. எங்கும் ஒரேவிதமான சேதியாகத்தான் இருக்கும். குடியரசு, திராவிடமணி, தொழிலாளர் மித்திரன், திராவிட நாடு ஆகிய அலுவலகங்கள் அனைத்திலும், ஒரேவிதமான நிலைமையே இருந்து தீரும் காரணம், இவை, மக்களுக்கு இனிப்புப் பண்டம் தயாரித்து விற்பனைக்கு அனுப்பும் வேலையில் உடுபடாமல், சிந்தனைக்குச் சற்றுச் சிரமமான வேலை தருவருதான். இந்தப் பொதுநிலையிலும், திராவிடநாடு, நாலு ஆண்டுகள் பணிபுரிந்து ஐந்தாம் ஆண்டு ஆரம்பாகிறது. வளர்ச்சி, உற்சாக மூட்டக்கூடிய விதத்திலேயே ஏற்பட்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

சமுதாயத்திலே உள்ள ஜாதிச் சனியன், சனாதனக்கேடு, வைதிகக் கொடுமை, ஆகியவைகளை நாம் காணும்போது, நமது கண்களிலே அனலும் புனலும் கொப்பளிக்கிறது. எப்பாடு பட்டேனும், இவைகளைக் களைந்து எறியவேண்டும் என்ற எண்ணம் உண்டாகிறது. மகத்தான் வேலை, அதனை நாம் மேற்கொண்டுவிட்டோம். அளவு நிலைமை கஷ்டநஷ்டக் கணக்கு இவைகளைக் கூடக் கவனிக்கவோ, இவைபற்றிக் கவலைப்படவோ கூட நேரமோ நினைப்போ இருப்பதில்லை. “போரிடு போரிடு! பொல்லாங்கை ஒழிக்கப்போரிடு! ஆநீதியை அழிக்கும் அறப்போரில் உடுபடு” என்று உள்ளம் தூண்டியபடி இருக்கிறது. நம்மால அந்த எழுச்சிக் குரலினின்றும் தப்ப முடியவில்லை.

மிகப் பெரிய இக்காரியத்தைக் சாதிக்கத் தேவையான அளவு பணம் இல்லையே, வாழ்விலே நிம்மதி இல்லையே, வசதி இல்லையே, உதவி இல்லையே, என்று மனதுக்துக் கூறினாலோ, மனம், ஆமாம்! அதனால்தான் உன்னை நீ ஒப்படைத்துவிடு இந்தக் காரியத்துக்கு இதனால் உனக்கு என்ன கஷ்டம்வரும்? மாளிகை பறிபோகுமா? மிட்டா கலையுமா? ஆலை அழியுமா? சோலையில் உலவிடும் இன்பத்தை இழக்க வேண்டி வருமா? நீ இவைகளற்றவன், இழக்க என்ன இருக்கிறது உனக்கு? ஏன், உனக்கு கலக்கம்? ஏழு! போரிடு! என்று மேலும், தூண்டியே விடுகிறது.
பன்னெடுங் காலமாக எறிப்போன கொள்கைகளை எதிர்த்து நடத்தும் புது அமைப்பு முறைக்கான பிரச்சாரம் மக்களின் செவி புகுமா என்பதே சந்தேகமாக இருக்கிறதே என்றால், “செவியிலே அல்ல தவறு, உன் குரலிலே, அதைச் சரிப்படுத்து, இடைவிடாமல் எடுத்துக் கூறு, இதமாகக் கூறு, இன்னலுக்கிடையே இனிய முகத்தோடு இருந்து கூறு, இன்றே கூறு, கூறும் சக்தி உள்ள மட்டும் குறைகள் இருப்பது பற்றிக் குமுறிக் கொண்டிராமல், கூறிக்கொண்டேயிரு” என்றே உள்ளம் வற்புறுத்துகிறது. பகுத்தறிவு இயக்கப் பணிபுரிவோன் உள்ளம், அந்நிலை பெற்று விட்டது. அந்தப் பணியின், ஒருமுறை, ஒருவகையே, ஏடு, திராவிட நாடு அறிவுப் புரட்சிகாகக் ஆற்றலுடன் பணிபுரியும் அஞ்சாநெஞ்சன், வெஞ்சமர் பலகண்ட மாவீரன், பெரியார் இராமசாமியின் எண்ணங்களை, நாட்டுக்கு எடுத்துக்காட்டும் ஏடு. திராவிடத் தனி அரசுக்கான புரட்சி முரசு.

மகாராஜாக்கள் மண்டியிடச் சிற்றரசர்கள் சாமரம் வீசப் பிரபுக்கள் பாதம் தாங்க, பனியாக்கள் பல்லக்குத் தூக்க, பார்ப்பனர்கள் புகழ்கீதம் பாடப் பவனிவரும், பாசீசக் காங்கிரசோ, பழைமைக்கே பாடுபடும் ஸ்தாபனமாகி விட்டது. பலமும், அதற்கேற்ற அளவு எதிர்க்கட்சியை அழிக்கும் வன்மையும், அந்த ஸ்தாபனத்துக்கு ஏற்பட்டுவிட்டது. ஏன் என்று கேட்பார் இல்லை என்ற நிலையில், எதையும் செய்யலாம் என்ற முறையில், நாடாளத் தொடங்கும் நாள் இது. மக்களின் நலன், இத்தகைய ஆட்சி முறையினால் பாதிக்கப்பட்டால், கண்டிக்க, தடுக்க திருத்த ஏடுகள் அதிகம் இல்லை. அந்தப் பணிக்கு முன்னணி வீரனாகத் திகழ்வது, “குடியரசு” அதன் ஒலிபெருக்கி “திராவிட நாடு”.

விடுதுலைக் கிளர்ச்சிக்கு, வித்து என்றிவிட்டோம், உழைப்புத் தியாகம் எனும் நீர்பாய்ச்சும் காலம் வந்துவிட்டது. திராவிட நாடு ஆநதக் காரியத்துக்கான திறமையையும், வலுவையும் பெற வேண்டும், உங்கள் ஆதரவு பெருகினால், பெறும், என்று உறுதியாகக் கூறுகிறோம், எங்கெங்கு கொடுமை காணப் பட்டாலும், அங்கெல்லாம் நின்று போரிட்டுக் கொடுமையை ஒழிக்க வேண்டும் என்று திராவிட நாடு விழைகிறது. பாட்டாளிகளின் பாதுகாப்பாள னாக, வாலிபர்களின் முரசொலியாக, விளங்க வேண்டும் என்று விழைகிறது.

ஆங்கில, ஆரிய, பனியா ஏகாதிபத்தியங் களின் இணிவேரைக் களைந்து ஏறியும் பணியில் திராவிட நாடு தனக்குப் பெரும் பங்கு தரவேண்டுமென்று நாட்டு மக்களûக் கேட்டுக் கொள்கிறது. அறிவுத்துறையில் ஆநகே நாட்களாக முளைத்துக் கொழித்துக் கிடக்கும் கள்ளிக் காளான்களைக் கல்லி ஏறிய வேண்டுமென்று ஆசைப்படுகிறது. கலையின் பெயரால் நடத்தப்படும் கபடம் உடைபட்டாக வேண்டும், பழைமை பேரால் நடைபெறும் பாதகங்கள் பொடிபட வேண்டும், எங்கும் எவருக்கும் உரிமை வேண்டும், விடுதலை வேண்டும், சமத்துவம் வேண்டும், இவைகளைக் காணப் பணிபுரிய வேண்டும், அப்பணியிலே நமக்கோர் நல்ல பங்கு வேண்டும் என்று திராவிட நாடு கேட்கிறது. வெள்ளை ஏகாதிபத்யக் கோட்டைகளை, வேதியரின் அரண்களை, ஆரியக் கலைக்கூடங்களை, கற்பனைக் கடவுளருக்காகக் கட்டுப்பட்டுள்ள கோட்டங்களை, அந்தப் பெயர் கூறிவாழும் கபடர்களின் குகைளகைத் திராவிட நாடு தனது சக்திக்கேற்ப அளவேனும் தாக்கித் தகர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறது. அந்தச் சக்தியை அதிகப்படுத்தும் பொறுப்பும் நிலையும் உம்முடையது. நாம், நமது குறிக்கோளைக் கூறினோம், நம்மை வேலை வாங்கும் பொறுப்பு உம்முடையது பணித்திடுக.

முடியுமா? நம்முன் காணப்படும் மாபெரும் ஆநீதியை அழிக்க முடியுமா? என்று கேட்கத் தோன்றும், நாம் எண்ணியதுண்டு, திண்ணமாக நம்புங்கள், முடியும்! காட்டரசனான சிங்கத்துக்குப் பக்கத்தில் கைத்துப்பாக்கியை வைத்துப் பாருங்கள் (ஓவியத்தில்) சிங்கத்தின் வலின் நுனியிலுள்ள கத்தை அளவு இருக்கும் கைத்துப்பாக்கி! கேலிச்சித்திரமாகத் தோன்றும் ஆனால், வல்லமையும் திறமையும் உடையவன் உபயோகித்தால், அந்தச் சிறு துப்பாக்கி சிங்கத்தை வீழ்த்தும், சிங்கத்தை மட்டுமல்ல, மற்ற பல துஷ்டமிருகங்களையும், பழைமைக்காட்டிலே, மதோன்மத்தரென உலவும் புராணப் புலிகளும், சனாதனச் சிங்கங்களும், கைத்துப்பாக்கி அளவான நமது பிரச்சார யந்திரத்தினால், நிச்சயமாகச் சாகடிக்கப்படும். இப்போதே கூட, அவை, தேசியத் தோட்டத்திலே பதுங்குமிடங்கள் தேடிக் கொண்டதால், நமது குறிக்கு அகப்படாமல் தப்பித்துக் கொண்டுள்ள. இன்னும் கொஞ்ச நாட்கள் மட்டுமே, இந்தப் பதுங்குமிடம் கிடைக்கும். பழைமைக்காடு அழிக்கப்படும் நாள் விரைந்து வந்து கொண்டே இருக்கிறது. திராவிட நாடு இந்த பணியில் மும்முரமாக வேலை செய்யும். உலகிலே, நடைபெற்ற புரட்சிகளை உங்கள் முன் தீட்டிக் காட்டும் வீரர் வரலாறுகளை விளம்பும், விஞ்ஞானிகளின் சேவையை எடுத்துரைக்கும், ஆரியம் புகா முன்னம் திராவிடர் வாழ்ந்த வகையைக்கூறும், இனித் திராவிடர் விடுதலை பெறவேண்டியதன் அவசியத்தையும் அதற்கான அறப்போர் மார்க்கத்தையும் எடுத்துக்கூறும் திராவிட நாட்டிலே வெளிவரும், அச்சமற்ற கண்டனங்கள், தனி ஆட்கள்மீது கொண்ட குரோதத்தின் விளைவு அல்ல, வாலிப உள்ளத்திலே மூண்டெழும் தன்மானத் தீயின் பொறிகள்!

பத்திரிகையாளர் உலகிலே நமது பத்திரிகைகள் இடம் பெறா! எழுத்தாளர் உலகிலே, நமது “எழுத்தாளர்கள்” காணப்படமாட்டார்கள். அந்நிலை ஆச்சரியப்படக் கூடியதுமல்ல, அருவருக்குத் தக்கதுமல்ல, ஆயாசப்படக் காரணமுமில்லை. சுராஜ்மல் லல்லுபாய் கம்பெனியில் சம்மட்டிக்கு இடம் கிடைக்குமா? பளபளப்பும் ஜொலிப்பும் கொண்ட பத்திரிகை உலகிலே, பாசறைச் செய்திகளைத் தாங்கி வரும் நமது ஏடுகள் இடம் பெறத்தான் முடியாது. உங்கள் மனதிலே, அவை இடம் பெற்றுவிட்டால் போதும். அந்த மன்றத்தைவிட மதிப்பும் சக்தியும் வாய்ந்த இடம் வேறு இல்லை.

“திராவிட நாடு”, அலங்கார ஆட்டைகள், ஆழகான படங்கள், சிங்காரக் காட்சிகள், சினிமா ரசங்கள், எழுத்தாளரின் எழிலோவியங்கள் எதுமற்றது. போருக்கான வாளுக்குப் பூவேலை இராதல்லவா! போகிகளின் கையிலே உள்ள செயினில் வைர இழைப்புத் தரப்படும். திராவிட நாடு போர்வாள்! அதனுயை ஆற்றல், கூர்மையைப் பொறுத்தது!

அன்பர்கள், ஆண்டு ஐந்தாகிறது, ஏன் இன்னும் திராவிட நாடு கொஞ்சம் மேனி மினுக்குடன் வரலாகாது! முடியாத காரியமா? என்று கேட்ட வண்ணம் உள்ளனர். அவர்களின் இவலையும் நாம் அடியோடு கவனியாமலிருக்கப் போவதில்லை. சிறிது சிறிதாக இதழின் தோற்றத்திலே, எழில் கூட்ட முயற்சிக்கிறோம். அச்சுப் பொறிக்கு, மின் உதவிகிட்டவில்லை. கேட்டிருக்கிறோம். கிடைத்ததும், காகித நிலைமையும், சரியானதும், கண்ணுக்குக் காட்சியாகவும் இருக்கும்படி, இதழைச் சித்தரிக்கிறோம். சூழ்நிலைகள் தெளிவுபடட்டும்.

திராவிட நாடு கனதனவான்களின் காணிக்கையோ, வியாபாரிகளின் விளம்பரப் பணமோ பெற்று வாழ்ந்து வரவில்லை. அன்பர்கள் தரும் ஆதரவினாலேயே வாழ்கிறது, வளர்கிறது, எனவேதான், மகிழ்ச்சியுடன் உமக்கு நன்றி கூறும் இந்நாளில், மறவாமல் உமது ஆதரவை அதிகப்படுத்துக என்று கேட்டுக் கொள்கிறோம். கணக்குப் புத்தகம், கவலைக்ககேற்ற சித்திரமாகத்தான் இதுபோதும் இருக்கிறது. சிறிதளவு அக்கரையை அதிகப்படுத்தினால் சீராக முடியும் நிலைமை செய்க.

கருத்துள்ள கவிதைகள், காலத்தைக் காட்டும் கட்டுரைகள், சிந்தனைக்குரிய சிறுகதைகள், ஓவியங்கள் ஆகியவற்றைத் தீட்டி அனுப்புங்கள், நாடு மீளவும், கேடு தீரவும் நாமினி இலங்கி நனிவாழவும்!

விடுதலை வீரர்களான நமது தோழர்கள் நெடுஞ்செழியன், செழியன், அன்பழகன், வேதரத்னம், வேலன், புலவர் மாணிக்கம் ஆகிய அன்பர்களின் எழுச்சிமிக்க கட்டுரைகள், நமக்குச் சீமான்கள் தரக்கூடிய செக்குகளை விட அதிகமான ஆனந்தத்தை அளிப்பன. அவர்களுக்கெல்லாம் நமது நன்றி.

புரட்சிக் கவிஞர், புதுவைச்சிவம், மற்றும் எண்ணற்ற புதுக்கவிதையாளர்கள், அடிக்கடி தந்துதவும், கவிதைகள் நமக்கு மாளிகைவாசிகள் தரக்கூடிய பணத்தை விட மகிழ்வூட்டுவன. அவர்களுக்கு, நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கைவல்யம் அவர்களின் கருத்தோவியங்ள், நமக்குக் கிடைத்தற்கரிய கருவூலங்கள். தளர்ந்த உடல், முதிர்ந்த பருவம், ஆனால் ஆர்வம் கொழுந்துவிட்டு ஏரிந்தவண்ணம் இருக்கும் அவ்வீரர், திராவிடநாட்டுக்குச் செய்துவரும் பேருதவிக்கு எமது மனமுவந்த நன்றி உரித்தாதுக.

ஏஜெண்டுகள் அனைவரும் இயக்கத் தோழர்கள், அவர்கள் ஆற்றும் பணியும் காட்டும் எக்கமும், எமக்களிக்கும் உற்சாகமும், போற்றத்தக்கன, எமது நன்றிஅவர்கட்கு, பொருளாலும், பிறவற்றாலும், திராவிட நாடு வளர உதவிய அன்பர்கட்கெல்லாம் நமது நன்றியறிதலைக் கூறிக்கொண்டு, நாலு ஆண்டுகளாக நாம் ஆற்றிய தொண்டினை, மேலும் திறம்பட நடத்த, இந்த ஐந்தாம் ஆண்டினைத் துவக்குகிறோம் என்று கூறி, இந்த இதழினை உமக்குத் தருகிறோம், உவகையுடன்.
(திராவிடநாடு - 21-4-46)