அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அஜீர்ண அகவல்
பரமனை உணர்ந்து, மத நூல்களைப் பயில்வதால் நமக்குக் கலப்பற்ற நிரந்தர இன்பம் கிட்டுகிறது - என்று மத மந்திரி அல்ல, நமது மாநில நிதி மந்திரி பேசுகிறார்.

அவர் அங்ஙனம் பேசியிருப்பதால், அவர் ஓய்வு ஒழிச்சலில்லாமல் மத நூல்களைப் பயின்றவண்ணம் இருக்கிறார் போலும் என்று எண்ணி விடாதீர்கள்.

அன்றையக் கூட்டம் அப்படிப் பேச வைத்தது, அவ்வளவு தான்.

அவர், பரமனை உணர்ந்துவிட்டார் போலும், நிரந்தர இன்பம் பெற்று விட்டார் போலும் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று அவர் நமக்கெல்லாம் தேவரசத்தை வழங்குவார் போலும் என்று எண்ணிவிடாதீர்கள்.

மோட்டார் தொழிற்சாலைத் திறப்பு விழாக் கூட்டமானால், யந்திர மேம்பாடு பற்றியும் மரம் நடும் விழாவுக்குப் போனால் அதன் மகாத்மியம் பற்றியும் பேசுவது மந்திரிக்கு அழகு என்ற முறையில் மார்கழி மாத பஜனைக் கூட்டத்தார் மத்தியில் பேச நேரிட்டதால், அவர் மதநூல் பற்றிப் பேசுகிறார் வேறில்லை.

நிதி அமைச்சராக அவர் அமர்ந்து ஆண்டுகள் பல ஆகின்றன, இதுவரை ஒருநாளாவது, நிதி வரன்முறை, நிதி பாதுகாப்புத் திட்டம் இவைபற்றி ஒரு கருத்தும் வெளியிட்டதில்லை - அறிவீர்கள். நிதி மந்திரி இதுபற்றி எதும் பேசாதரிருப்பதற்குக் காரணம் இப்போது தெரிகிறது. அவர் பரமனை உணரும் பக்குவம் பெற்று, பரிபூரண ஆனந்தம் பெற, பல ஏடுகளைப் படித்தவண்ணம் இருக்கிறார், அதனால்தான் அவருக்கு, நிதிப்பிரச்னைபற்றி பேச நேரமோ, நினைப்போ இல்லை, சித்தத்தைச் சிவன்பால் வைத்து விட்ட சீலருக்கு, செம்பொன்னும் ஓடும ஒன்றாகத்தானே தெரியும், கேவலம் நிதிபற்றியா அவருடைய சிந்தனை செல்லும் என்று எண்ணிவிடாதீர்கள்.

இப்போது, ஓயாது, பகவானைப் பற்றியும், அவன் அருள் பற்றியும், அதைப் பெறும் மார்க்கம் குறித்தும், பெற்றோர் அடையும் பேரின்பம் குறித்தும் பேசிவரும் பெரியவர்கள் காலாகாலத்தில் மேனாட்டு முறைப்படி படித்து - தேவார திருவாசகமல்ல - தேம்பாவணியுமல்ல - இந்து லா, கிரிமினல் லா, ரோமன் லா போன்ற சட்ட நூல்களும், சரிதம், கணிதம், நடைமுறை விஞ்ஞானம், பொருளாதாரத் தத்துவம், ஷேக்ஸ்பியர், ஷெல்லி, கீட்ஸ், பைரன் போன்றாரின் கவிதைகள் இவைகளை எல்லாம் முறைப்படி படித்துப் பரீட்சையில் தேறி பட்டம் பெற்று, வக்கீல் வேலையில் உடுபட்டு, வழக்காடி வருமானம் தேடி, அதிலே கிடைத்த பவிசுதனைத் தேசீய மார்க்கட்டில் விலைபேசி விற்று அல்லது சமயமறிந்து ஆடகுவைத்து, தேசோத்தாரகர் ஆகி, பதவியில், வந்து அமர்ந்து, உதியம் பெற்று, ஊராளும் உயர்நிலை அடைந்தவர்கள்! கவனமிருக்கட்டும்!

பரமன் அருள் - நிரந்தர இன்பம் - மதநூல் பயில்வது - இவை எல்லாம், வாழ்க்கையில் அவர்கள் ஆனந்த ஆறுவடை அடைந்த பிறகு பேசும், அஜீர்ண அகவல்!

கேட்டுப்பாருங்கள், கோவையில் வழக்கறிஞராக இன்றைய நிதி அமைச்சர் வீற்றிருந்தபோது, கருப்புடை அணிந்த கட்சிக்காரருடன் உரையாடி, சாட்சிகளைப் பக்குவப்படுத்தி, கனம். கோர்டாரவர்களிடம் சமயத்துக்கு ஏற்றபடி கர்ஜனையோ, கெஞ்சுவதோ நடத்தி காலட்சேபம் செய்து வந்த நாட்களில தேவார பாராயணம் எவ்வளவு செய்தார். திருப்புகழ் எங்கெங்கு பாடினார், பரமன் அருளை எவ்வெவ்வழியில் நாடினார், மத நூற்களை யாரிடம் கற்றார் - என்று! கேலிப் புன்னகைத்தான் பதிலாகக் கிடைக்கும்.

பரமன் அருள் நாடிப்பெற்றால் பரமானந்தம் கிடைக்கும், அதற்கான ஏடுகளைப் படியுங்கள் என்று உபதேசம் செய்யும் இந்த ஊராளும் அமைச்சர், தமக்குப் பதவி எனும் மாயா பந்தம் வேண்டாம் என்று உதறித் தள்ளிவிட்டு, பழனியப்பனின் பாதசேவையே போதும், அதுவே, சாலோக சாமீப சாரூப சாயுச்யம் தரவல்லது என்று கூறிக்கொண்டு, இருக்கச் சொல்லுங்கள் - பார்க்கலாம்.

பரமன் அருளிலே பரமானந்தம் இருக்கிறது. அதைப் பெறப்பக்குவமான ஏடுகள் உள்ளன. படித்துப் பயன்பெறுக என்று உபதேசம் மட்டும் செய்யாமல், நிதி அமைச்சரின் குடும்பத்துப் பெரியவர் ஒருவர், செயலிலேயே அதைச் செய்து வருகிறார் - சுவாமி சித்பவானந்தா, மார்க்க போதகராக மட்டுமல்ல, சிறார்களுக்குச் சீரிய கல்வி அறிவூட்டும் செந்தண்மை பூண்டு ஒழுகி வருகிறார். அவர் போன்றோர், பரமன் - பக்தி - பேரானந்தம் - என்று பேசினாலாவது நம்மாலே புரிந்து கொள்ள முடியும்! இவர் பேசுகிறார்! அமைச்சர் ஆகவே பேசலாம் என்ற துணிவால்!

கடவுளை மறப்போர் கிளம்பிவிட்டனராம் - கனம் கவலைப்படுகிறார்!

இந்தக் காலக்கோளாறு போக மாமருந்து, மடாலயம் காட்டும் மதபோதனைதானாம்!

கடவுளை மறுப்போர் என்று கூறிக் கண்டிக்கும்போது, கனம், அமைச்சர், மதத்துக்கு அல்ல, தாம் சார்ந்திருக்கும் - சாய்ந்து கொண்டிருக்கும - கட்சிக்குத் தேவையான அரசியல் பிரசாரம் செய்வதாகவே எண்ணி மகிழ்கிறார்.

மந்தமதி படைத்தவனும் புரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு தமது ஏய்ககத்தவர் - பெரியார் உட்பட - எடுத்துக் கூறியாகிவிட்டது - எங்கள் வேலை கடவுள் மறுப்பு அல்ல ஐயன்மீர்! கடவுள் பெயர் கூறிக்கொண்டு கயவர் வெட்டும் படுகுழியை எடுத்துக்காட்டி, அதில் விழுந்துவிடாதீர்கள் என்று கூறுவதுதான், என்பதாக!

என்றாலும், பழிபோட்டுத் தலைவாங்குவது என்ற முறையில், இவர்கள், பக்தி பேசுகிறார்கள். மக்கள், இவர்களுடைய போக்கைப் புரிந்து கொண்டனர் - சட்டை செய்வதுமில்லை என்பதையும் அறியாமல்.
எவ்வளவு அச்சமும் ஆவநம்பிக்கையும் இருந்தால் இராமாயணம் பற்றி, மாஜி கவர்னர் ஜெனரல் கட்டுரை எழுதுவார்!

பைபிளிடம் எவ்வளவோ நம்பிக்கை இருப்பதால்தானே, சர்ச்சிலோ ஒசன் ஹோவரோ, அவர்தம் புனிதநூல் பற்றி எதும் எழுத வேண்டிய அவசியம் இல்லை என்று இருக்கிறார்கள்.

தள்ளாத வயதில் தசரத குமாரன் பற்றியல்லவா எழுதித் தள்ளுகிறார். ஓய்வுவேண்டிப் பதவியிலிருந்து விலகிக்கொண்ட வேதியர்!

எதிர்க்கிறார்கள் - அதனால்தான் ஏன் வேலையிலும் எனக்கு உற்சாகம் உண்டாகிறது என்று வேறு பேசுகிறார்.

சென்னை மக்கள் சிரிப்பாய்ச் சிரித்தார்கள், ராதாவின் நாடக மூலம் இராமாயணத்தின் உண்மையைக் கண்டு.

இவ்வளவு இராமாயண ஆதரவுப் பிரச்சாரத்துக்குப் பிறகு, பெருந்தலைவர்களின் பேனா ஆடியபிறகு, பாகவர்களும், நாடகக் கலாநிதிகளும், கவிதை கட்டுரை, காலட்சேபம், கூத்து, ஓவியம், பஜனை எனும் எத்தனையோ வழிகளிலே இராமாயணத்துக்கு மகத்துவம் ஏற்படுத்த முனைந்து மும்முரமாகச் சேவை செய்தான பிறகு, இராமன் எப்படி இருந்திருப்பான், என்னென்ன செய்திருப்பான் என்பதை, நெஞ்சு உரமும் நடிப்புத் திறனும், கலை உலகினர் கண்டு ஆச்சரியப்படும் அளவுக்குப் பெற்றுள்ள நடிகவேள் ராதா நாடகமாடிக் காட்டமுடிகிறது! தங்கள் வேலை பயனற்றுப் போய்விட்டது என்பதை இப்போதும் உணர மறுப்பது எந்த வகையான வீரமோ, நாமறியோம்.

தனித்தனிக் கதைகளிலே புகுந்து ஆராய்ச்சி செய்தால், ஆபாசம் நெளிகிறது என்பதை அறிந்து கொண்டதால், இந்தப் பக்த சிகாமணிகள், பொது இலட்சியமான கடவுள்பற்றிப் பேசி - நாம் கடவுளை மறுக்கிறோம் என்று கூறி, நாட்டு மக்களுக்கும் நமக்கும் இடையே உள்ள நேசத்தை நாசமாக்கலாம் என்று பகற்கனவு காண்கிறார்கள்.

கடவுளை - ஏதோ இவர்கள் கண்டறிந்து விட்டவர்கள் போலவும் - அவர் அருள்பெறும் மார்க்கம் அறிந்த மகான்கள் போலவும், பேசும் இந்த விற்பன்னர்கள் என்ன புதிய முறையை, தத்துவத்தைக் கூறிவிட்டார்கள்?

துவரை, பாம்பாட்டிச் சித்தரிலிருந்து பாம்புப் புற்றுக்குள்ளிருந்தபடி ராமாயணம் பாடியதாகக் கூறப்படும் வால்மீகி உட்ப, என்னென்ன சொன்னார்களோ, அவைகளை அறைகுறையாக அறிந்துகொண்டு, பகுதியும் விளங்காத முறையில் பேசுவதன்றி பிறிதென்ன செய்ய முடிகிறது!
கடவுள் எல்லோருக்கும் உண்டு! கடவுள் எதற்காக? பேரின்பம் பெற. இன்பம் எங்கே இருக்கிறது? அறிவில் இருக்கிறது! அறிவு எப்படிக் கிடைக்கிறது! சிந்தனைமூலம்! சிந்தனை எப்படிச் சாத்தியம்? அறிவின் துணைகொண்டால் சாத்தியம்! ஆகவே, பேரின்பம் பெற அறிவு தேவைப்படுகிறது.
அறிவினுக்கறிவாகி ஆனந்தமயமான இதியே என்றும், அறிவுக்கு அறிவாய் அறிவிப்பாளை என்றும், மூதறிஞர்கள் சொல்லிப் போனார்கள்.

இந்த நொந்த உள்ளத்தினர் இதைவிட மேம்பாடான எதைச் சொல்லுவதற்குத் தகுதி உள்ளவர்கள்!

நதி பெருங்குருவாகி
மனவாக்கெட்டி
நிச்சமாய்
சொச்சமதாய்
நிமலமாகி

போதுமே, பெரியவர்கள் இவ்வளவும் கூறிவிட்டார்களே! இடம் இழக்க மனமில்லாமல், இறைவனுக்கு வழக்கறிஞர்களாக மாறியிருக்கும் இந்தப் பெரியவர்கள், இதைவிடச் செம்மைப்படுத்தியாக் கூறப் போகிறார்கள்.

இத்தகைய இலட்சியததை நாம் மறுப்பதில்லை.

நாம் மறுக்கும் கடவுள் எது? கயவருக்குப் பிழைப்புக் கருவியாக உள்ள கடவுளை நிச்சயமாக நாம் மறுக்கிறோம் - கடவுள் தத்துவ விசாரணையிலே நமது தோவித்தனம் இருக்கிறது என்று காட்டிக் கொள்ள அல்ல - மக்கள் வாழ்வுக்கு நம்மாலான பணி செய்யவேண்டும் என்ற ஆர்வத்தால்.

பார்ப்ப வடிவில், பகவான், சொல்லக்கூசம் செயல்களைத் திருவிளையாடல் என்ற பெயராலும், பக்தர்களைச் சோதிப்பது என்ற பெயராலும், செய்ததாகக் கூறப்படும் பெம்மான், புரோகிதம் நடத்தி, உயர்ஜாதி என்று ஊரைமிரட்டி உல்லாச வாழ்வு வாழ்ந்து, பிறரைப் பேதையரென்றும் தாதரென்றும் மாற்றி வைத்து, அதனையே ஜாதிமுறை, நீதி என்று நெஞ்சாரப் பொய் சொல்லி, ஆதிக்கம் செலுத்த வைக்கும் ஆண்டவன், இதனை மறுக்கிறோம். தவறா?

புற்றிலே பாம்பு இருக்கிறது என்று எச்சரிப்பவனிடம், உனக்குப் பூந்தோட்டமே பிடிக்காதா என்று கேட்பது!

ஊசல் பண்டம் உடம்புக்கு இகாது என்று அறிவுரை கூறினால், சாப்பாடே கூடாதா என்று கேள்வி கேட்பது!

கள் பருகாதே என்று சொன்னால், தென்னைமீது என்னப்பா உனக்கு துவேஷம் என்றா வாதாடுவது!

மலம் - பார்த்து நட என்று கூறினால, எத்தணை மதுரமான பண்டமாக இருந்தது இப்போது மலம் ஆகிவிட்டது தெரியுமா என்றா தத்துவம் பேசுவது.

காதொடிந்த ஊசியில் அறுந்துபடும் நூல் இழையைக் கண்ணிழந்தவனைக் கொண்டு புகுத்தச் செய்து, நைந்துபோன பீதாம்பரத்தைக் கிழித்துத் தைத்துத் தரச்சொல்லும் மதிகெட்ட வேலைபோல, ஆபாசமான கதைகளை, ஆராய்ச்சியற்றவர்கள் நெட்டுருப்போட்டு, அதிலே புதைந்து கிடக்கும் உண்மைகளை உருட்டித் திரட்டி எடுத்து ஒருவாக்கி, உலகம் ஊய்யும் பொருட்டு, ஓங்காரச் சொரூபமாக்கப் போகிறார்களாம்!

இளத்தெரிகிறதா, மக்களை வாழ வைக்க முடிகிறதா என்று கேள்வி கேட்கப்படுகிறது, இவர்களோ, அதிலே கண்ட தோல்வியை மறைக்க, மணியடித்துக் காட்டுகிறார்கள் மாகாளி கோயில் பூஜாரிபோல! விடுதலைவீரர்கள் - இவர்கள் ஆட்சியிலே பஞ்சம்போகும், பட்டினி ஒழியும், வாழ்வுதுலங்கும், வளம் குலுங்கும், பேதம் போகு;, பீடை நீங்கும் என்று நம்பி மக்கள் நாடாளும் பொறுப்பைத் தந்தால், இவர்கள் அங்கு அமர்ந்து கொண்டு, தேவாரத் தேனைச் சுவை, திருப்புகழ் ஆமிர்தம் பருகு. இராமரசம் குடி, வியாசர் விருந்து சாப்பிடு என்று பேசி, மக்களின் கண்களில் மண்போடுகிறார்கள்!

இப்போது ஐதோ எல்லாத் தேவாலயங்களும் மூடிவிடப்பட்டிருப்பது போலவும், தண்டகாருண்ணிய ரிஷிகளின் யாகம் கலைக்கப்பட்டது போலவும், இப்போது யாராரோ கிளம்பி, நாட்டிலே நடைபெறும் மத காரியங்களை நாசமாக்கிக் கொண்டு வருவது போலவும் ஒரு எத்த காட்டி, தங்கள் ஆட்சியின் சொத்தைத் தனத்தை மறைக்கப் பார்க்கிறார்கள்.

பாமரமக்களே இப்போது பழங்கால ஏற்பாடுகளில், சடங்குகளில் சம்பரதாயங்களில் ஆவநம்பிக்கை அடைந்து விட்டார்கள்! கழனியில் விளைச்சல் இல்லை என்றால், மந்திர நீர் தெளிப்பதில்லை, உரம் தேடுகிறார்கள், காலரா என்றால், காளியாயிடம் சென்றால் போதும் என்று இருப்பதில்லை, ஊசி போட்டுக் கொள்கிறார்கள். வயல் ஓரத்திலே மின்சாரக் கம்பங்கள், நீர்ப்பாசனத்துக்கு மின்சாரம்! ஏறிச்செல்ல இரயில் வண்டி! பாட்டுக்கு ரேடியோ! பொழுது போக்குக்குச் சினிமா! உலகமறிய பத்திரிகைகள்! இவ்வளவும் அவர்களிடம்! இப்போதுமா அவர்கள் பத்துத்தலை இராவணன் - பாம்பின் தலையில் பூலோகம் - பந்துபோல் மலையைத் தூக்கிய மாருதி - இப்படிப்பட்ட பத்தாம் பசலிகளை நம்பிக்கொண்டிருப்பார்கள்!

என்னமோ சொல்கிறார்கள்! நமக்கென்ன புரியது! என்று ஆரம்பமான பேச்சு, நம்பத்தான் முடியவில்லை என்ற கட்டத்துக்கு வந்திருக்கிற இந்தக் கூட்டத்தில் கனம்கள் நுழைந்தால்தான் என்ன, மேன்மை தங்கிய நுழைந்தால்தான் என்ன, மாண்டது மீண்டுவரவாப் போகிறது! மன்னார்சாமி கூட நம்பமாட்டானே!

பழைமையை நிலைநிறுத்தம்ட தந்திரமான வழி, நம்மை நிந்திப்பது, நமது அறிவுப்பிரச்சாரத்தை நாஸ்திகம் என்று கூறுவது, என்று எண்ணிக்கொண்டு காலட்சேபம் செய்த கனம் அவர்களே, என்ன செய்தார் என்கிறீர்கள், ஒலிபெருக்கி துவக்கவிழா ஆற்றினார்! எதற்கு இந்த ஒலிபெருக்கி! தேவார திருவாசக பாராயணத்தை ஒலிப்பரப்பவாம்!! வெட்கம் இருக்கவேண்டாமா - தேவார திருவாசக காலத்திலே இல்லாத, நாயன்மார்கள் காலத்திலே தேவைப்படாத ஒலிபெருக்கியை, இவர்கள் நாடலாமா? பழைமையைப் பாதுகாக்க, புதுமையிடம் வரம் கேட்கிறார்கள்!!

தேவாரமும் திருவாசகமும் கேட்கும் - அதேபோது, தேவார திருவாசக காலத்தில், இல்லாத, அதிசயப்பொருள் விஞ்ஞான வசதி, தேவார திருவாசகம் கேட்டறியாத நாட்டவரால் கண்டுபிடிக்கப்பட்ட செய்தியும் புரியும். அதுபோதுமே, இவர்களின் அஜீர்ண அகவலின் போலித்தன்மையை அம்பலப்படுத்த.
(திராவிடநாடு - 31-10-54)