அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஆஜ்மீர் வாயிலில்

ஆஜ்மீர் வாயலில், அந்த மெலிந்த, ஆனால் எஃகுக் கம்பி போன்ற உருவம் உள்ளே நுழைந்தபோது, தக்பீரும் ஜிந்தாபாதும், டில்லி நகரையே குலுக்கிவிட்டதாம். அதைவிட அதிகமான உள்ளக்குலுக்கு காங்கிரஸ் கோட்டைகளிலும் துரைமார்கள் வட்டாரத்திலும் உண்டாயிருக்கும். ஆடம்பரமான ஊர்வலம் கண்ணுக்கோர் காட்சியாக அமைந்திருந்தது. ஆனால், அது ஆரிய ஆங்கிலேயக் கூட்டுப்படையினரின் கருத்துக்கோர் மிரட்சியாக அமைந்தது. அம்பாரியிடப்பட்ட யானைகள், பேரிகை தாங்கிய ஒட்டகங்கள், நகாராவுடன் குதிரைகள், இசைக்கருவியுடன் பட்டாள பாவனையுடன் சென்ற லீக் காலாட்படைத் தொண்டர்கள், குதிரைப்படையினர், பிறகோர் அலங்காரமான மோட்டார் அதிலே, அமீரேமில்லத் அமர்ந்திருந்தார். அவருடைய நாமம், இலட்சம் பேர்களின் நாவிலே நர்த்தனமாடிற்று. இந்த ஆடம்பரங்கள், காங்கிரசுக்குப் புதிதன்று, ஒரு பிர்லா மனது வைத்தால் இதுபோல மாதமோர் ஊர்வலம் நடத்த
முடியும் காங்கிரசால்; சர்க்காருக்கும் இது சாதாரணமே, ஆனால், இந்த ஆடம்பரமன்று, அவர்களின் மருட்சிக்குக் காரணம். ஜனாப் ஜின்னா. இவ்வாண்டு மாநாட்டிலே எதிரிகள் மிகப்பாடுபட்டுக் கட்டி வைத்த தப்புப் பிரசாரக் கோட்டை மூன்றினைத், தகர்த்தெறிந்தாரே, அதுவே அச்சத்தை அவர்களிடை புகுத்திவிட்டது. பாருங்கள் அதன் விளைவை, பத்திரிகைகளிலே. மோமீன் எதிர்ப்பு, அஹ்ரார் எதிர்ப்பு, அகாலி எதிர்ப்பு, அகண்டிகள் எதிர்ப்பு என்று எத்தனை எதிர்ப்புகளைக் கொண்டு வந்து சபையிலே நிறுத்திக் காட்டவேண்டிய நிர்ப்பந்தம் லீகின் எதிரிகளுக்கு ஏற்பட்டுவிட்டது பாருங்கள்.

எந்த டில்லி நகரிலே, இவ்வாண்டு முஸ்லிம் லீக் மாநாடு கூடிற்றோ, எந்த டில்லி நகரிலே இஸ்லாமியரின் எழுச்சிச் சித்திரம் அழகுறக் காணப்பட்டதோ, அதே டில்லி இஸ்லாமிய சாம்ராஜ்ய பீடமாக விளங்கி, இஸ்லாமிய சக்கரவர்த்திகள் சகலவித சௌந்தரியத்துடன் ஆண்ட மாண்பின் இருப்பிடமாக விளங்கி, வீர வாழ்வுக்கும் இஸ்லாமிய பண்பாட்டுக்கும் தலைமைஸ்தானாக விளங்கிற்று என்பது, வரலாறு படித்தோர் அறிவர். பெரும்போர் வீரன் பாரும், யூகமிகு ஹிமாயூனும், சீர்திருத்தப் பிரியன் ஷெர்ஷாவும், அலங்கார பூஷிதன் அக்பரும், அல்லாவின் ஊழியன் அவுரங்கசீபும், மற்றும் பல பாதுஷாக்களும், உலவிய இடத்திலே, அன்று ஜனாப் ஜின்னா கெம்பீரமாக உலவினார். அதே டில்லியிலே, சரிந்த சாம்ராஜ்யத்தைக் காணச் சகியாது ஒளி இழந்தன போலும் என்று எண்ணத்தக்க விதத்திலே கண்ணிழந்து ஷாஆலம் சக்கரவர்த்தி சோகபிம்பமாக வீற்றிருந்த வரலாறும், அதே டில்லியிலே. பாதுஷாக்கள் பண்புடன் ஆண்டுவந்தபோது, வெள்ளையர், வைத்தியராகவும் கவியாகவும், யாத்ரீகராகவும் வியாபாரியாகவும், ஆங்கு நுழைந்து, மாளிகையில் புக மனுப்போட்டு, அனுமதி கிடைத்ததும் அகமகிழ்ந்து, தர்பார் சென்று தலைவணங்கி நின்று, உபசார மொழி பேசி, பாதுஷாக்களின் புன்னகைக்குத் தவங்கிடந்த வரலாறு ஜனாப் ஜின்னாவின் நினைவினில் நடனமாடாதிருக்குமோ!
அங்கு இப்போது வைசிராய் மாளிகை! லின்லிதோபிரபு இராசப் பிரதிநிதி. டில்லி நகர வரலாறும் அதன் இன்றைய அமைப்பும், காட்டும் பாடம் கவர்ச்சி மிக்கது.

சோபிதமான அந்த சுகந்தபுரியிலே, முஸ்லீம் லீக் மாநாடு கூடிற்று, இணையில்லா ஜனாப் ஜின்னாவின் தலைமையில்.

காங்கிரசின் கைப்பாவைகளான முஸ்லீம்கள் மந்திரிகளாக இருந்த காலம் ஒன்று இருந்தது. வந்தே மாதரம் பாடுவோம், கேட்கப் பிரியமில்லையானால், போகலாம் வெளியே என்று முதலமைச்சர் மொழிந்த காலம் ஒன்றிருந்தது. முஸ்லீம் லீக் என்றொரு கட்சியா? என்று பண்டித ஜவஹர் பதட்டப் பேச்சாடிய காலம் ஒன்றிருந்தது. காங்கிரசாட்சிக் காலம். அது கரைந்து, விடுதலை விழா நடந்து, முஸ்லீம்கள் வீறு கொண்டெழுந்து பாகிஸ்தான் எனும் சூளுரைத்துத் தோள்தட்டும் காலம் பிறந்து விட்டதால், இம்முறை, மாநாட்டு மேடையிலே பல மந்திரிகள், வைசிராய் நிர்வாக சபை மெம்பர்கள் உயர்தரப் பதவி வகித்து அனுபவம் பெற்றவர்கள், சிகந்தரின் சகாக்கள், வங்கச் சிங்கங்கள், சிந்து மாகாண ஜெயவீரர்கள், இன்னோரன்ன பிறர் அமர்ந்திருக்க, நடுநாயகமாக வீற்றிருந்த ஜனாப் ஜின்னா, வீர உரையாற்றினார். அந்தச் சொல்லம்பு, சூதுக்காரர் அமைத்திருந்த மூன்று முகாம்களை முறியடித்தன.

1. ஜனாப் ஜின்னாவுக்குச் சுதந்திரப் போராட்டத்திலே நாட்டமில்லை.
2. ஜனாப் ஜின்னாவுக்கு ஒற்றுமையிலே விருப்பமில்லை.
3. பாகிஸ்தானில் முதலாளி ஆட்சி இருக்கும்.

இம்மூன்ற போக்கிரித்தனமான புகார்கூறி அதனால், லீகையும் அதன் தலைவரையும் ஒடுக்கிவிடலாம் என்று மனப்பால் குடித்துவந்த தேய்ந்த மதியினருக்கு ஜனாப் ஜின்னா தமது தலைமைப் பிரசங்கத்திலே “தெளிவு” ஏற்படச் செய்தார், ஆனால் பாவம் அவர்கள் நெளிகிறார்கள் அந்தச் சவுக்கடிபட்டதும்.

(1) இந்துக்களே, வாருங்கள், சமரச கூடத்துக்கு, நாம் ஒன்றுபட்டு, வெள்ளையரை விரட்டுவோம், வாரீர்.

(2) காந்தியார், லீக் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக எனக்குக் கடிதம் எழுதட்டும், அதைத்தடுக்க இந்தச் சர்க்கார் துணியாது. அக்கடிதம் கிடைத்தால் ஒற்றுமைக்குண்டான வேலைகளைத் துவக்கலாம்.

(3) இலட்சக் கணக்கான முஸ்லிம் மக்கள் உண்ண உணவின்றித் தவிப்பதைக் காண்கிறேன், இந்நிலையே பாகிஸ்தான் அமைப்பிலும் இருக்குமானால் அத்தகைய பாகிஸ்தானை நான் வேண்டேன். முதலாளிகளே! நிலச்சுவான்தாரர்களே! காலத்திற் கேற்ற வண்ணம் திருந்துங்கள். இல்லையேல் ஆண்டவன்

தான் உங்களைக் காப்பாற்ற வேண்டும், நாங்கள் வாரோம் காப்பாற்ற இம்மூன்று கணைகள், எதிரிகளின் மூன்று முகாம்களைத் தகர்த்துவிட்டன. பாகிஸ்தான் முதலாளி ஆட்சியன்று, மக்களாட்சி, என்பதை ஜனாப் ஜின்னா தெளிவாக்கிவிட்டார். அன்னியராட்சியை அகற்றத்தாம் துடிப்பதை விளக்கிவிட்டார், ஒற்றுமைக்குத்தான் சித்தம் என்பதையும்கூறி, வழியுங் காட்டிவிட்டார். வீரம், சமரசம், கருணை எனும் மூன்று ரசங்கள் அவரது சொற்பொழிவிலே இழைந்து காணப்படுகின்றன, ஜனாப் ஜின்னாவிடம் இஸ்லாமிய உலகு ஏற்கனவே வைத்துள்ள அன்பு இவ்வாண்டு அவராற்றிய அரிய உரையின் பயனாகப் பன்மடங்கு அதிகமாகிவிட்டது. வீரத் தலைவரின் வழியைத் தமக்கும் உகந்ததென்று திராவிடத் தோழர்கள் தீர்மானிக்கின்றனர். பாகிஸ்தான் ஜிந்தாபாத்! ஜனாப் ஜின்னா ஜிந்தாபாத்!

(திராவிடநாடு - 02.05.1943)