அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அக்ரமத்தின் அழிவுக்கு!

அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளின் முக்கிய பிரதிநிதிகள் மூவரும் மாஸ்கோவில் மாநாடு கூட்டிப் பேசியதன் முடிவு, உலகசமாதானத்துக்கும், அக்கிரமத்தின் அழிவுக்கும் வழிகோலியது கண்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம்.

இன்றையப் போர்முறை நீடித்து நடக்குமானால், உலக சமாதானத்துக்குப் பங்கமும், அக்கிரமக்காரர்களுக்கு ஆதிக்கமும் ஏற்படுமென்பதை உணர்ந்தே மாஸ்கோ மாநாடு அதைத் தடுப்பதற்கு வழி கோலியிருக்கிறது. அக்ரமக்காரர்களான ஹிட்லர், முசோலினி, டோஜோ ஆகியவர்களால் நடத்தப்படும் கொடிய போர் முறையை மிக விரைவில் ஒழித்து விடுவது என்ற முடிவோடு மட்டும் நின்று விடாமல், போர்முடிந்தபின் செய்யப்பட வேண்டிய அரசியல் - சமுதாய - பொருளாதார ஒழுங்கு முறைகள் எப்படி அமைய வேண்டு மென்பதற்கும், அதற்கான காரியங்களைச் செய்வதில் மூன்று நாட்டினருடைய ஒத்துழைப்பின் அவசிய்ததைக் குறிக்கும் உடன்பாடும் மாஸ்கோ மாநாட்டில் செய்யப் பட்டிருப்பது பெரிதும் வரவேற்கக்கூடியதாகும்.

ஆனால், போர்க்காலங்களில் செய்யப்படும் உடன் படிக்கைகள் பல, இன்னொரு போர் மூளும் காலங்களில் கைவிடப் படுவது போலல்லாமல், இம்மாநாட்டு உடன்படிக்கை உண்மையிலேயே உலக சமாதானத்துக்கும் அக்ரமத்தின் அழிவுக்கும் அடிகோலி வேலை செய்யுமென்றே நம்புகிறோம். அது காலை, திராவிடநாட்டுப் பிரிவினை, பாகிஸ்தான் முதலான நம் நாட்டுக் கோரிக்கைகளுக்கும், இதர மைனாரிட்டி நாடுகளில் சுதந்தரங்களுக்கும் முட்டுக்கட்டை ஏற்படாதென்றும் நம்புகிறோம்.

7.11.1943