அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அலகாபாத் அம்மானை

“மார்கழி மாதம் திருவாதிரை நாள்
வரப்போகுதய்யே!
மனதைப் புண்ணாக்காமல் ஒரு தரம்
போய்வாவென்று சொல் ஐயே!”

என்று ஆடலழகர் மீது காதல் கொண்டு கசிந்து கண்ணீர் மல்கிக் கேட்ட நந்தனார், எந்த ஆருத்ரா தரிசனத்தைக் கண்டாரோ, அது, இவ்வாண்டு அடியோடு நிறுத்தப்பட்டு விட்டதாம்! தில்லைத் தீட்சிதர்களே கூடிப் பேசி, இம்முடிவுக்கு வந்தனராம்.

இது போலவே, ரங்கநாதரின் வைகுந்த ஏகாதசிக்கும், வளர்பிறை தேய்பிறையாகி விட்டது. மற்றும் பல கோயில்களிலே கொட்டு முழக்கு நிறுத்தப்பட்டு விட்டது. காலத்தின் கோலம் என்று கைபிசைந்து கொள்வர் வைதிகர்கள். காலராவும், பிளேக்கும், அம்மை நோயுங்கூட, நமக்குக் கிடைக்க இருந்த அன்பளிப்பு நின்று விட்டதே என்று அழுதுகொண்டிருக்கும். ஷோக் மைனர்கள், தாங்கள் காண இருந்த கண்ணாடிக் கமலமோ, கர்ல் சுந்தரியோ, ஆருத்ராவுக்கு வருவாளென்று எண்ணினதில் மண் விழுந்ததே என்று அயர்வர். மற்றும் பலருக்குப் பலவிதமான மனக் கஷ்டம் ஏற்பட்டிருக்கும். இத்தகைய திருவிழாக்கள் நிறுத்தப் பட்டது மகத்தான தேசீய நஷ்டம் என்று தேசபக்தர்கள் பாசமேலீட்டால் கூறவுங்கூடும். சாப்ரு மாநாட்டிலே, “இத்தகைய தேசீய நஷ்டங் களைத் தடுக்கத் தேசீய சர்க்காரால் தான் முடியும்” என்று விவாத வீரர் எவராவது வீரதீரத்துடன் பேசி, இதனை மறுப்பவருண்டா? என்று கேட்டிருக்கக் கூடும். “எனக்கு வேறு தீர்மானமிருக்கிறது பேச; இல்லையானால் விட்டிருப்பேனா இதை மறுத்துப் பேசாமல்” என்று மற்றோர் மாபெருந் தலைவர் மலர்ந்திருக்கவுங்கூடும். அடையாறு கலா மண்டபத்துப் பத்மினி, சித்தினிகள், பூர்வீக இந்திய நடனக் கலைக்கு இத்தகைய அவமதிப்பைக் காட்டினதற்காக நாங்கள் கண்டித்து, கண்டித்ததைக் காட்டும் பொருட்டு, பூச்சூடுவதை ஓருநாளும், புது மோஸ்தர் பூட்ஸ் அணிவதை ஒரு வாரமும், கிரீம் பூசுவதை மூன்று மணி நேரமும் விட்டுவிடப்போகிறோம் என்று தீர்மானிக்க இருந்தார்கள். ஆனால், நாட்டிய நவரசமணி, ஸ்ரீமதி உருக்மணி அருண்டேல் அம்யைபரின் கருத்து வேறுபடவே, தீர்மானத்தை விவாதித்து, நிறைவேற்றாமல் விட்டுவிட்டனர் என்று, ஒரு விசேஷ அறிக்கை வெளியிடப்படக் கூடும். “ஆனால் இதனை ஒரு சாதாரண சம்பவமென்று நான் கருதவில்லை. இதுதான் முதல் தரமான புரட்சி” என்று மார்க்ஸ் மாணவர் முழக்கம் செய்யக்கூடும்.

வீரன், இவ்வாறு பேசிடக் கேட்ட நான், “விசாரமாக இருக்கும். கேள்வியிலே நீ பேசும் வேடிக்கைதான் எனக்கு மருந்தாக இருக்கிறது” என்று கூறினேன். “நீ தினசரிகளைப் படித்த தில்லையோ! படித்தால் அந்த வேடிக்கை கிடைக்குமே ஏராளம். நான், தேவையில்லையே” என்று “என்ன வேடிக்கை” என்று நான்கே வீரன் சொன்னான். “எத்தனை உண்டு. ஏன், இந்தத் தேவ தேவன் இப்படித் திணறுவதும், திருக்கடி தேம்புவதும் ஒரு பெரும் வேடிக்கையாகத் தோன்ற வில்லையா உன் செங்கோலுக்கு முன்பு, நெற்றிப் பாஞ்சசன்யம், சக்கரம் யாவும் பழகுவது வேடிக்கை யல்லவா! இந்தத் திருவிழாக்கள் உண்மையிலேயே பூசைக்காக என்பது மெய்யான முப்புரமெரித்தவரும், மூன்றடியாக உலகை அளந்து, மாபலியையும் முகுந்தனும், சர்க்கார் மாளிகை அதன் வாசிகளும், கிடுகிடுவெனவும், தலை சுழன்று, மனம் மிரண்டு, தமது உத்தரவை மாற்றிவிடவுமான “அற்புதத்தை” அரை நொடியிலே செய்திருக்க மாட்டார்களா! உண்மையில் இந்தத் திருவிழாக்கள், “திருப்பிரம்மங்களின் தேவைக்காக, காசுக்கும் கருத்துக்கும் சூறாவளியாக, சுயநலக்கூட்டம் ஏற்படுத்தியவை,” எனவே தான், அவைகள் கால நெருக்கடியை உத்தேசித்து நிறுத்தப்பட்டதும், எங்கும் “கப் சிப்” ஆகிவிட்டது. இந்த வேடிக்கை உனக்குப் போதாதா? என்றான். “இது ஒரு வேடிக்கையா?” என்று நான் இழுத்தேன். “சரி! அது தான் போகட்டும், இந்திய அரசியல் சிக்கலைப் போக்க, கண்ட நாள் வாழ்வும் செல்வாக்கும், பொது ஜனத் தொடர்பும், பத்திரிகைப் பலமும் கொண்ட கட்சிகளெல்லாம் முயன்று தோற்ற பிறகு முக்காடிட்ட மூர்த்திகள் கூடிப் பேசினீரே, சிக்கலை அவிழ்க்க, அது உனக்குச் சிரிப்பூட்டவில்லையா? என்று கேட்டான். அதுகூட எனக்குச் சிரிப்பில்லை. ஆனால், மாநாடு கலைந்ததும் அந்த மாபெரும் தலைவர்கள் அலகாபாத்தை விட்டுக் கிளம்பினர், இனி அவரவர்கள் தத்தமது கட்சியைக் கலந்தா
லோசித்துப் பேசுவர்” என்றிருக்கிறதே அந்தப் பகுதிதான் ஆச்சரியமானதடி என்பதுபோல், எனக்கு அந்தச் செய்திதான் வியப்பூட்டுகிறது. இவர்களுக்குக் கட்சிதானா? கலந்து பேச! உதாரணமாக, சர். ப்ரு, எங்கேபோய், இந்த வயதிலே கட்சியைக் கண்டு பிடிப்பார்! சட்ட புத்தகத்திலே, வரிக்கு வரியினூடே மறைபொருள் கண்டு பிடிப்பார் திடீரெனக், “கட்சி”யைக் கண்டு பிடிக்க முடியுமா! இருந்தால் தானே! அலகாபாத்திலே பேசினர், அவரவர் தம் கட்சியைத் தேடினர் என்ற அறிக்கைக்கும் அரசமரத்தைச் சுற்றிவிட்டு வயிற்றைத் தடவிக் கொண்ட கதைக்கு வித்தியாச மில்லையே, இதுதான் எனக்குச் சிரிப்பூட்டுகிறது என்று நான் சொன்னேன். உண்மையாகவே, இந்த விருந்தாக அந்த மாநாட்டுச் செய்தியைத்தான் நான் கொள்வேன். அவ்வளவு வேடிக்கை தோழர்களே, விவேகிகள் பலர் விழலுக்கு நீர்பாய்ச்சும் அந்த கலை! பாபம்! ஒவ்வொருவரும், ஒவ்வொரு துறையிலே நிபுணர்கள். பெரிய சட்ட நிபுணர்கள். தீமையிலுள்ள ‘பாயிண்ட் தானம்’ செய்யக் கூடியவர்கள். ஆனால் பொது மக்கட்கும் அவர்கட்கும் இருக்கும் சம்பந்தமோ, புராணப் புலவர் கட்கும் பகுத்தறிவுக்கும், புளியம் பழத்துக்கும் அதன் ஓட்டுக்கும் இருப்பது போன்றது கூட அன்று! சிலருக்குச், சொந்தக் கருத்தை எடுத்துக் கூறியவுடன், கட்சியிலேயிருந்து “கல்த்தா” கிடைத்தது. சிலர், “எந்தக் கட்சியும் எமது இயல்புக்கு ஏற்றதன்று; எமது இயல்புக்கு ஏற்றபடி கட்சி அமைக்கவோ எமக்கு நேரமில்லை” என்று கூறிடும் ஏகாந்திகள். ஆனால் ஒன்று அறிவர். ஒன்றரைப் பக்க நீளமுள்ள அறிக்கைகள்!! அந்தக் கூட்டத்துக்குப் போய்ச் சேரும் நாள் வரும் என்று அன்பர் ஆச்சாரியார் கனவுகூடக் கண்டிருக்க மாட்டார். ஆனால், பாபம், அங்கும் போனார், அல்லாபக்ஷின் தந்தியையும் கண்டார், அவரது அலுவல், அது போலாகிவிட்டது. “இதனால் நஷ்டமொன்று மில்லை” என்று கூறுவார், ஏனய்யா இந்த வீண்வேலை? என்று நாம் கேட்டுவிட்டால். அவர் இஷ்டம், அதைத்தடுப்பது கஷ்டம், நமக் கென்ன. “வாடி உள்ளே! அங்கே ரேழியிலே, இந்த மொட்டை முண்டைகள் ஏதாகிலும் பேசிண்டே கிடக்கும் மொண மொண வென்று. உள்ளே வா! என்று கூப்பிட்ட ராஜாயி, அடுத்த ஆறாம் மாதம் அறுத்து விட்டாள், ரேழி மாநாட்டிலே அமராமல் என்ன செய்வாள் அது போல, ஆச்சாரியாருக்கு முன்பு காங்கிரஸ் இருந்தது, எனவே, கட்சியற்றார் மாநாட்டுக்குப் போக வேண்டிய நிர்ப்பந்த மில்லை. இப்போதுதான் அவர் “ராஜிநாமா” செய்து விட்டாரே, சாப்ரு கோஷ்டியிலே சேராது என் செய்வார் பாபம்! இலண்டன் பட்டினத்திலே இப்போது, ஏழெட்டு அரசுகளின் தலைவர், தத்தம் அரசு அமைத்துக் கொண்டு, நேசநாட்டு வெற்றியை எதிர்பார்த்தக் கொண்டுள்ளனரல்லவா! ஜெனரல் டி’காலே என்ன! வில்ஹெலமினா அரசியார் என்ன! டாக்டர் பென்ஷ்! இன்னும் பலர்! அவர்களுக் காகவாவது, விமானப்படை, தரைப்படை உள்ளன. வெற்றி வாடையும் வீசுகிறது. ஓர் நாள் மீண்டும் தத்தம் அரசுகளைப் பெறுவர். ஆனால், அலகாபாத் என்ற அபூர்வ நகரமிருக்கிறதே அது அரசியல் விதவைகள், கூடிக்கூடி, ஆரூடம் கேட்டு, அலுத்துப் போகும் இடம்! ஆச்சாரியார் அங்கும் சென்று பார்த்து விட்டார்! முயற்சி திருவினையாக்குமாமே, அந்தப் பழமொழியை அவர் வாழ்க்கை வழியாகக் கொண்டார் போலும்! பார்க்கட்டும்!!

இனி, ஒரு பத்து நாட்களுக்காவது, பத்திரிகைகளின் விசேஷ நிருபர்கள் மும்முரமாக வேலை செய்வர். சாப்ரு மாநாட்டு எதிரொலி! சாப்ரு மாநாட்டு விஷயமாக டில்லியில் பரபரப்பு; வில்கி சாப்ரு கோரிக்கையை ஆதரிப்பார் என்று விஷயமறிந்த வட்டாரம் கூறுகிறது” என்று எழுதவும், எழுதியதை மறுத்து மற்றொன்று எழுதவும் தொடங்குவர். இந்த வேடிக்கைகளைச் சில நாட்கள் அனுபவிக்கலாம்!

ஆனால், இந்த அலகாபாத் அம்மானைகள் அரசியல் நெருக்கடியைத் தீர்க்க முடியாது. பிரச்சினை வேறு, இவர்கள் பேசுவது வேறு; பிணியறியாதார் மருந்து வகை பேசுகின்றனர். இந்த வேடிக்கை, எதற்கும் இடமளிக்கும் இந்நாட்டிலேயன்றி வேறெங்கும் காண முடியாது.

நான் பழைய லவால் அன்று! நீங்கள் காண்பது புது லவால்! என்று இப்போது அதிகாரம் செய்யும் லவால் கூறுகிறார். நான் வெர்டூன் வெற்றி வீரன் என்பது பழங்கதை. இப்போது நான் பெர்லின் பிடித்து வைத்துள்ள கத்தை என்று வயோதிகப் பெட்டெயின் கூறவில்லை. அட்மிரல் டார்லான், நான் அங்குமிருப்பேன் இங்குமிருப்பேன், என்று கூறவில்லை, செயல் அவ்வண்ணமிருக்கிறது. ஆச்சாரியாரும், இத்தகைய போரால் பொசுக்கப்பட்ட புருஷர்களிலே ஒருவர் தானே! அவர் அதைச் சொல்லவில்லையே தவிர, அவர் நிலை அதைத் தெளிவாகக் காட்டுகிறது. அவர் சாப்ரு மாநாட்டுக்குப் போகிறாரென்றால், புறப்படுமுன்பு அவருடைய மனம் என்ன பாடுபட்டிருக்கும். எத்தனையோ முறை சாப்ருஜயகர் கூட்டத்தை நையாண்டி செய்த கூட்டத்தின் தலைவரல்லவா அவர்! அப்படிப் பட்டவர், அங்காவது போவோம் என்று எண்ணினது அவருடைய “வேளை”. லவால் போலப் பேசவில்லையே யொழிய; அவர் ஒரு புது மனிதராகத் தான் காணப்படுகிறார். என்ன செய்வது, எல்லாம் யுத்த நெருக்கடி!!
* * *

வயல்களிலே விளைவது போதாது, ஆகவே காடு மேடு, குளத்தங்கரை, கோயில் தோட்டம் ஆகிய எல்லா இடங்களிலும் உணவுப் பொருளை உற்பத்தி செய்யுங்கள் என்று சர்க்கார் புது யோசனை கூறியிருக்கிறார்களல்லவா, அது போல, வார்தா வயலிலே, வெற்றி விளையவில்லை, பம்பாயிலே சாகுபடியின் போதே சச்சரவு, டில்லியிலே குத்தகைக்கு விடவே ஆளில்லை. எனவே ஆச்சாரியார், அலகாபாத்திலாவது தமது விவேகமெனும் வித்தைத் தூவி, உழைப்பெனும் நீர்பாய்ச்சி, வெற்றி விளையுமா என்று பார்க்கிறார். இதுவும் வீணானது அவருக்குத் தெரியாமலா போகும்! அபசகுனமாக முதலிலே கூற வேண்டாம் என்று சொல்லுகிறார், நான் என்ன செய்வது உண்மையைக் கூறத்தானே வேண்டும். காளையிடம் பால் வேண்டினால், கனபாடி சுப சோபனம் பாடினாலும் கிடைக்கவா போகிறது! ஆனால், ஏன், ஆச்சாரியார், இந்த அலகாபாத் அம்மானையிலும் கலந்து கொண்டார். அதன் காரணத்தை அவர் கூறினார் அலகாபாத் கூட்டத்திலே!

தேசிய சர்க்கார் ஏற்படா முன்னம், யுத்தம் முடித்து விட்டால், நம்பாடு மிக ஆபத்தாக முடியும்! இது ஆச்சாரியார் வாக்கு. அவருடைய அலைச்சலுக்கும், மனக்குடைச்சலுக்கும், காரணம் இந்தக் கருத்தே தான். போர் ஆரம்பமான போது, பிரிட்டன் தனியாகத், திக்கற்று, நல்ல விமானப் படையற்றுச், சேம்பர் லெயின்கள் உலவிய இடமாக இருக்கக் கண்டனர் காங்கிரசார். அச்சு நாட்டு வெற்றிகள் அவர்களுக்கு, பிரிட்டனின் பலவீனத்தைக் காட்டின. மூழ்கும் கப்பல், சரியும் சுவர், இலாபமில்லாக் கம்பெனி என்று பிரிட்டனை எண்ணினர். அச்சு நாட்டவரின் ஆற்றலைப் பற்றிப் பேசினர். காந்தியாரும் ஆஸ்ரம வாசி, ஹிட்லருக்கும் உச்சியான இடத்திலே ஒரு தனி ஜாகை உண்டு; காந்தியாருக்கு அந்தராத்மாவின் உதவி உண்டு, ஹிட்லரும், கடவுளின் தூதர் என்றே ஜெர்மன் மக்கள் நம்புகிறார்கள். இருவரும் மாமிசம் புசிப்பதில்லை. மது அருந்துவதில்லை, மாதரிடம் கொஞ்சுவதில்லை, இருவருக்கும் குழந்தைகளிடம் பிரேமை, இருவரும் இரு பெரும் நாட்டின் இணையில்லாத் தலைவர்கள் என்று அர்ச்சித்தனர். அப்போதெல்லாம், பெல்ஜியம் வீழ்ந்தது, பிரான்ஸ் பணிந்தது, போலந்து புகைந்தது, செக்கோ சிதைந்தது, கிரீஸ் கவிழ்ந்தது, என்று இழவோலை வந்த வண்ணமிருந்தது. இது கேட்டு இப்போது என்ன சொல்லுகிறாய்? என்று இடுக்கியிலே இங்கிலாந்தைச் சிக்க வைத்தனர் காங்கிரஸ்காரர். பிரிட்டிஷ் தோல்வி நிச்சயம், அச்சுநாட்டு வெற்றி நிச்சயம் என்ற எண்ணத்துடன் காந்தியார் இருக்கிறார் என்று பண்டித ஜவகரும் சொன்னார். ஆகவே, மூழ்கும் கப்பலிலிருந்து முதலில் எலிகள் ஓடுவது போலக், காங்கிரசார் தமது பதவிகளை விட்டு வெளியேறினர். விரைவிலே ஒரு சுப முகூர்த்தத்திலே தமக்குப் பட்டாபிஷேகம் நடக்கும் என்று நம்பினர். ஆனால், தனியாக நின்ற பிரிட்டன், தணலிலே வெந்து, தங்கநிறங் கொண்ட எஃகுக்கம்பியாகி, இன்று அச்சுநாட்டு இருதயத்தைக் குத்தும் ஈட்டி முனையாகி விட்டது. நச்சு நினைவு கொண்ட அச்சு நாட்டின் கொட்டத்தைச் சோவியத் சம்மட்டி சோர்வின்றி மட்டந்தட்டி வருகிறது. இப்போது, ஸ்டாலின்கிராட்டி லிருந்து ஜெர்மானியர் ஓட்டம், ரிஜாவிலே ஜெர்மன் படைகளுக்குத் திண்டாட்டம், நேப்பிள்ஸ் மீது பிரிட்டிஷ் குண்டுவீச்சு. ஜினோவா நகரைக் காலி செய்யும்படி முசோலினி உத்தரவு, மடகாஸ்கர் பணிந்தது. டாகர் இணங்கிற்று, சாலமன் சமரிலே ஜப்பான் சளைத்தது, மக் ஆர்தர் மகத்தான வெற்றி பெற்றார், ரோமல், எல் அகாலியாவிலிருந்து ஓடுகிறார், மாண்டலே ரோடு தாக்கப்பட்டது, நியூகினியில் ஜப்பானியர் தோற்றனர், என்ற இந்த அட்டவணையைக் காண்கின்றனர். எந்தப் பக்கம் திரும்பினாலும் இந்தியாவிலே சோல்ஜர் மீதுதான் இடறி விழவேண்டும், அவ்வளவு இராணுவப் பெருக்கம்! பட்டாளத்தைப் பார்க்காத குக்கிராமமே இல்லை, பட்டாளத்துக்கு ஆள் அனுப்பாத பட்டிக்காடே இல்லை, பால் விற்று வந்தவன், பழக்கடைக்காரன், பண்ணை வேலையாள், பாட்டாளி என்னும் தோழர்கள், இன்று டாங்கிப் படையிலும் பீரங்கிப்படையிலும் விமானப் படையிலும், “நாயக்”காகி விட்டனர். திக்கெட்டும் கூடாரங்கள்! தெருவெங்கும் இராணுவத்தார் நடமாட்டம். பட்டாளம் இராத பட்டிக்காடு இல்லை! இவ்வளவு பலமாகி விட்டது இந்திய முஸ்தீப்பு, பதினைந்து இலட்சம் போர் வீரர்கள் பாரா! உஷார்!! என்று கூறுகின்றனர் இன்று.

இவ்வளவு பலம் திரண்டு, பக்குவம் பெற்றது, ஆச்சாரியார் அறியாததன்று! இவ்வளவு படை திரட்டவும், பணந்திரட்டவும், இரண்டுக்கும் தேவையான பிரசாரம் செய்யவும், காங்கிரசல் லாதாரே பயன்பட்டனர் என்பதை பிரிட்டிஷார் அறிவர், என்பதும் ஆச்சாரியாருக்குத் தெரியும்.

வெற்றிக் கொடியின்கீழ் நேசநாடுகள் வீற்றிருக்கும் வேளையிலே, வீரஇஸ்லாமியரும் தீரத்திராவிடரும் ஆற்றிய அரும்பணிகள் ஆங்கிலரின் கவனத்திற்கு வராமற் போகுமா, அதே நேரத்தில், அகிம்சை பேசிவந்த கூட்டம், தபாலைக் கொளுத்தி தண்டவாளத்தைக் கழற்றி, போலீசை விரட்டி, சர்க்கார் ஆபீசைத் தாக்கிய நாசகாரியம், நினைவிற்கு வராமற் போகுமா!

சூலுக்கும் சுறாவுக்கும், எதிரியின் சப்மரைனுக்கும் கலங்காது, கடல் கடந்து சென்று போரிட்ட பட்டாளத்தினிடம் பரிவு உண்டாகுமா? படையலை உண்டு கடைவீதியிலே நின்று, பட்டாளத்திலே சேராதே என்று சுலோகம் பாடிய சொரூபங்களிடம் அன்பு ஏற்படுமா? ஈராக், ஈரானுக்கு அடிக்கடி சென்று, இந்தியப் பட்டாளத்தாருக்கு இதமொழி உரைத்து வந்த சர். சிகந்தர் ஹயத்கானிடம், நேசநாடுகள் சலுகை காட்டுமா, பிர்லாமாளிகையிலே கூடி, பிரிட்டனுக்கு இறுதி எச்சரிக்கை விட்ட “தேசியத் திருப்பிரம்மங்களிடம்” அன்பு காட்டுமா? யுத்த எதிர்ப்புப்பேசிய ஆச்சாரியாரிடம் அளவளாவுமா, அன்றி, அமெரிக்கா சென்று இரவல் தளவாட சட்டத்தின்படி போர்ப் பொருள் பெறும் பணியைத் திறம்பட ஆற்றிய சர். சண்முகத்திடம் பேசுமா! மீண்டும் மந்திரிகளாக வேண்டு மென்று சிறைக்குள் குதித்த தோழர்களுக்குத் திருஷ்டி கழிக்குமா, ஆபத்தான வேளையிலே, ஹனிபால் கதை தெரிந்த பிறகும், ஆகாயமார்க்கமாக பிரிட்டன் சென்ற அஞ்சா நெஞ்சராம் சர். இராமசாமி முதலியாரின் யோச¬னையைக் கேட்குமா? நேசநாடுகளின் வெற்றி வாடை, காங்கிரசாருக்குக் குளிராகத்தான் இருக்கும்!!

ஆச்சாரியார் நேச நாடுகள் வெற்றிபெறும் இந்த நேரத்திலே, நாம் தேசிய சர்க்காரிலே இருக்க வேண்டும், இல்லையானால் ஆபத்து என்பதன் கருத்து இதுதான்!

இது தெளிவாக இருப்பது கண்டு நான் மகிழ்கிறேன். சில “தெம்மாண்டைகள்” இன்னமும் பிரிட்டனைத் திட்டுவது, வீரத்துக்கு இலட்சணம் என்று கருதுவது போல் ஆச்சாரியார் இராமல் உண்மையான நிலைமையைத் தெரிந்துகொண்ட வரையிலே எனக்குத் திருப்தியே. ஆனால், அலகாபாத் போவது என்றால், அது மீண்டும், அவருடைய மனம் இருட்டடைப்பில் சிக்கிற்றோ என்ற ஐயத்தை உண்டாக்குகிறது.
20.12.1942