அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அலை ஓசைமட்டும் போதாது!
வெளிநாட்டு மூலதனம் எனும் கழுகு இங்கு வட்டமிடுவது. புதியதோர் ஆபத்து, புதயி முறையிலே ஏற்படும், இத்தகைய பேராபத்தை, வலியச் சென்று பெறும் முறையிலே, நேருவும் நடந்து கொள்கிறாரே - வல்லூறுகளுக்கு அழைப்பு அனுப்புகிறார்களே என்று மனம் நொந்து, நாம் நிலைமையை விளக்கிக் காட்டினோம்.

வெளிநாட்டு மூலதனம் இங்கு ஏன் புக அனுமதிக்கப்படுகிறது? முதலாளித்வ முறைக்குச் சரக்கார் பணிகிறது என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக் காட்டுத்தானே? என்று கேட்டோம்.

நாட்டுப் பற்றும், வல்லரசுகளின் போக்கை உணரும் பக்குவமும், பொருளாதாரப் பிடியின் பயங்கரச் சக்தியை அறிந்துகொள்ளும் திறனும் உள்ள எவரும், வெளிநாட்டு மூலதனத்தைப் புகவிடுவதைச் சரியான காரியம் என்று கூறமாட்டார்கள்.

பலகோடி பவுன்களையோ டாலர்களையோ, இங்கு கொண்டுவந்து கொட்டி, புதிய தொழில்களைத் துவக்கி, பரோபகாரம் செய்யும் பண்பு கொண்டவர்களல்ல, எந்த நாட்டு முதலாளியும், தொலைதூரத்திலிருந்து இங்கு வந்து பணம் போடுவதானால், தன் சொந்த நாட்டிலே கிடைக்கக்கூடிய இலாபத்தையும் ஆதிக்கத்தையும் விட அதிகமாகக் கிடைப்பதாக இருந்தால் தானே, இசைவார்கள்! இதை விளங்கிக்கொள்ள நுண்ணறிவுகூட வேண்டாமே, சாமான்யமான அறிவே போதும்.

பல நூறுகோடி டாலர்களை இங்கு கொண்டுவந்து கொட்டித் தொழில்களைத் துவக்கும் நிலையை, அமெரிக்கா பெற்றால், அவர்கள் இங்கிருந்து இலாபம் சுரண்ட முடியும் என்பது மட்டுமல்ல, இவ்வளவு தொகையும், பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணம்கொண்டு, அதற்கான சூழ்நிலையும் ஆட்சி முறையும் வேண்டும் என்று வற்புறுத்தவும், உலகச் சூழ்நிலையில், அவ்வப்போது ஏற்படும் நிலைமைக்கு ஏற்றபடி, தமது கருத்துக்கு ஒத்த முறையில் இந்திய துணைக்கண்டம் நடந்துகொள்ள வேண்டும் என்ற நிபந்தனைகள் விதிப்பதுமான போக்கிலேதானே நடந்துகொள்வார்கள். பணத்தைக் கொட்டிவிட்டு, பலனை நீங்கள் அனுபவித்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட, அவர்கள் என்ன பித்தர்களா! பணம் போடுகிறோம் தொழிலில், ஐதோ, தர்ம நியாயமான வட்டியும் இலாபமும் மட்டும் கொடுத்தால் போதும், வேறு ஆதிக்க ஆசை எமக்குக் கிடையாது, என்று கூற, அவரக்ள் என்ன, ஏமாளிகளா! நிச்சயமாக, போட்ட முதல் எவ்வளவு அதிகமாக இலாபம் தருமோ அவ்வளவும் ஊகறிஞ்சவும் இலாபத்துடன் கூட, முதல் கெடாமல் இருக்கும் நிலையை உண்டாக்குவதிலே அதிகாரப் பொறுப்பும் பெறத்தான் விரும்புவர் - அதற்கு இந்திய சரக்கார் ஆணங்கத்தான் வேண்டிவரும். கடன் வாங்கிக் கட்டிய மாடி வீட்டிலே, மந்தமாருதம் வீசும் அந்திப் போதிலே, உலவினாலும், உண்மை நிலையை உணருபவனுக்குத் தணல்காற்று வீசுவது போலத்தானே இருக்கும்! கடன் கொடுத்தவனின் போக்கு மாறினால் தன் நிலை தாழ்ந்துவிடும். தடுமாறிவிடும் என்ற பயம், மாடிவீட்டுக்காரனின் மனதைப் பிய்த்துத் தின்றுவிடுமே, ஒரு பெரிய நாட்டிலே, பிரமிக்கத்தக்க அளவு தொகையுள்ள பணத்தை அன்னிய நாட்டு முதலாளிகள் கொண்டுவந்து போட்டுத் தொழில் துவக்குவது என்றால், பொறுப்புணர்ச்சியுள்ள, யாருக்குத்தான், கவலையும் அச்சமும் தோன்றாமலிருக்க முடியும்!

வெளிநாட்டு முதலாளிகளின் வேட்டைக்காடாக ஆகிவிடும்படி இந்நாட்டைச் செய்துவிடும் விபரீத காரியம் இது, இன்று நாம் எச்சரிக்கிறோம் - பொது மக்களை, குறிப்பாகக் காங்கிரசிலே உள்ள இளைஞர்களைக் கேட்டுக்கொள்கிறோம். “தலைவர்களைத் தவறான வழியிலே செல்ல விடாதீர்கள்! நாட்டை ஆடகு வைக்கும் நாசகாரியம் நடைபெற அனுமதிக்காதீர்கள். வல்லூறுகளை இங்கு வட்டமிட அழைக்காதீர்கள்” என்று கேட்டுக் கொள்கிறோம்.

வெளிநாட்டு மூலதனம் ஏன் தேவைப்படுகிறது என்பதற்கும், வெளிநாட்டவர், மூலதனம் போட்டாலும் ஆதிக்கம் பெற முடியாதபடி செய்யப்படும் என்றும், பசப்புகின்றனர் சிலர். விஷயம் விளங்காமல் இவ்விதம் பசப்பியிருந்தால், நாம் பரிதாபப்படுகிறோம் அவர்களிடம் விஷயம் தெரிந்திருந்தும், வேண்டுமென்றே, மக்களின் மனதிலே எதையாவது போட்டு நிரப்பி, தவறான எண்ணத்தை உண்டாக்க வேண்டுமென்தற்காகப் பசப்பியிருப்பின், அவர்களைச் சமூகத் துரோகிகள் என்று குற்றம் சாட்டத் தயங்கோம்.

வெளிநாட்டு மூலதனம் இங்கு புகுவது நியாயம் என்று வாதாட, ஒரு விசித்திரமான காரணத்தைக் காட்டுகிறது, வேடிக்கை பேசும் கல்கி.

இந்நாட்டு முதலாளிகளுக்குத் தைரியம் உண்டாக்கக் கூடிய விதமாகவும், உணர்ச்சி எட்டக் கூடிய முறையிலும், பயத்தைப் போக்கக் கூடிய வகையிலும், இந்திய சர்க்கார் தமது திட்டத்தையும், கொள்கையையும் விளக்கியும் கூட, இந்திய முதலாளிகளின் மனம் மாறவில்லை - அவர்கள் தம்மிடம் உள்ள மூலதனத்தை, பதுக்கிவைத்துவிட்டார்கள். இலாபத்தைக் கட்டுப்படுத்தவில்லை, வருமான வரியிலே மாறுதல் செய்கிறோம். தொழில்களைச் சரக்;கார் உடைமையாக்கிவிடமாட்டோமட். அஞ்சவேண்டாம், என்றெல்லாம், கூறியும்கூட, முதலாளிகள், புதிய தொழில்களைத் துவக்க முன்வரவில்லை - பணம் போட மறுக்கிறார்கள். எனவேதான் நமது தலைவர்கள் வெளிநாட்டு மூலதனத்தைத் தேடவேண்டி வருகிறது நாடவேண்டி ஏற்படுகிறது என்று கல்கி வாதாடுகிறது.

படித்ததும் - சிந்திக்காமலிருக்கும் வரை - ஒப்புக்கொள்ளக் கூடிய விதமான, காரணம் காட்டி எழுதுவதில் கைதேர்ந்ததல்லவா, கல்கி எனவேதான், இவ்விதம் எழுதிற்று.

“வெளிநாட்டு மூலதனம் கேடுதான் செய்யும், ஆனால் என்ன செய்வது? இங்கே உள்ள முதலாளிகள், பணமூட்டையைப் பாதாளாக்கிடங்குகளில் போட்டு மூடிவிட்டார்கள், புதிய தொழிலுக்குப் பணம், மூலதனம் இல்லை. வேறே என்ன செய்வது, வெளிநாட்டு மூலதனத்தை நாடித்தானே ஆகவேண்டும்” என்று ஊரார் உரையாடவேண்டுமென்பது. கல்கியின் கருத்து. நிலைமையை மறைத்து, தலைவர்கள் தவறான பாதையில் செல்கிறார்கள் என்பதை மக்கள் அறியவிடாதபடி தடுத்து, இளவந்தார்களின் செல்வாக்கைக் காப்பாற்றுவதற்காகக் கருதுகிறது கல்கி - இந்தத் திருப்பணிக்காக, நாட்டின் எதிர்காலத்தை நாசமாக்கும் செயலுக்குக் கூசாமல் உடந்தையாக இருக்கிறது.

தீராத தலைவலியைத் தீர்த்துவிடும், திருப்பதி பிராண்டு தைல வியாபாரி, திருவரங்கம் பிள்ளை, ஏராளமான, வி.பி. பார்சல்களை அனுப்பிய அலுப்பினால் ஏற்பட்ட தலைவலியைப் போக்கிக்கொள்ள ஆமிர்தாஞ்சனம் விலைக்கு வாங்கிவரும்படி, கடைப்பையனை அனுப்பும் கதை போலிருக்கிறது நிலைமை.

இந்திய முதலாளிகள், மூலதனம் போட மறுக்கிறார்கள் - பயத்தால், சந்தேகத்தால் - போதுமான பாதுகாப்பும், தேயைôன இலாபமும் கிடைக்குமா கிடைக்காதோ என்ற சந்தேகத்தாலும், எந்தச் சமயத்திலே, சர்க்கார் குறுக்கிட்டு, தொழில்களை, பொதுஉடைமையாக்கி விடுமோ என்ற அச்சத்தாலும்.

நாட்டுப்பற்றா, தொழில் முன்னேற்றத்திலே அக்கறையோ, பொதுமக்களின் வாழ்வுக்கு வசதி தரும் பொருள்களை உற்பத்தி செய்யும் சேவா உணர்ச்சியோ துளியாவது இருக்குமானால், இந்தச் சந்தேகமும் பயமும், அந்தக் கூட்டத்தாருக்கு ஏற்பட்டே இருக்காது.

பன்னிப் பன்னிப் பல தலைவர்கள் பேசும், அன்பு, சீலம் , தொண்டு எனும் பண்புகளை, அவர்கள் துளியும் கவனிக்கவில்லை. உபதேசங்கள் பயன்படவில்லை. புலியிடம் செய்த ஜீவரட்சம் பிரசாரம் போலாயிற்று!

ஆட்சியாளர்கள், உபதேசம் போதவில்லை என்பதை உணர்ந்து, உறுதிமொழிதந்து பார்த்தனர். உருக்கமான வேண்டுகோள், விளக்கமான அறிக்கைகள், பணிவன்புள்ள பேச்சு, இவை மூலம், முதலாளிகளின், இலாபவெறியைக் குறைக்கவும், அச்சத்தையும் சந்தேகத்தையும் போக்கவும், முயன்றனர். ஆபேதவாதப் பண்டிதரே, அவர்களுக்கு உபசாரமொழி பேசினார். சர்தார் படேல் அவர்களிடம் சல்லாபித்தார்! மத்தாய் அவர்களை மகிழ்விக்கக் கூடியவிதமாக பட்ஜெட் தயாரித்துக் காட்டினார். என்ன செய்தும், பணமூட்டைகள் பாதாளச் சிறையைவிட்டு வெளிவரவில்லை.

இதனாலேதான், வெளிநாட்டு மூலதனம் தேடவேண்டி நேரிடுகிறது என்று வாதாடுகிறது கல்கி - சாமர்த்தியமான வாதம் என்ற நினைப்பில்.

உள்நாட்டு முதலாளிகளைத் திருப்திப்படுத்தி வழிக்குக் கொண்டுவர முடியவில்லை, இந்தத் தோல்வியை ஒப்புக்கொண்டு, இதையே கூறிக்கொண்டு, வெளிநாட்டு முதலாளிகளிடம் மூலதனம் கேட்டால், அவர்கள், கைகொட்டித் தானே சிரிப்பார்கள்! “என்னய்யா வேடிக்கை! உங்கள் நாட்டு முதலாளிகளுக்கே, மூலதனத்தைப் போட்டுத் தொழில் நடத்தலாம் என்று எண்ணம் பிறக்கவில்லை, நீங்கள் ஏதேதோ கூறியும் அவரக்ள் ஆணங்கவில்லை, இந்நிலையில், அவர்களைச் சரிக்கட்ட முடியாத நீங்கள், உங்கள் பேச்சினால், எங்களை மயக்கியோ, மகிழ்வித்தோ, ஆசையைக் கிளறியோ, மூலதனம் பெற முடியும் என்று எண்ணுகிறீர்களே, தென்ன பித்தம் - என்று கேட்கமாட்டார்களா! கூரைஏறி கோழிபிடிக்கத் தெரியாதவன், கோபுரம் ஏறி, நட்சத்திரத்தைப் பிடிப்பதாகக் கூறுவது போலிருக்கிறதே!

ஏன் முடியவில்லை, இந்நாட்டி முதலாளிகளைச் சரிப்படுத்த? சர்க்காரின் பிரச்சாரபலம், ராணுவ போலீஸ்பலம் முழுவதும், ஏழைத் தொழிலாளியை அடக்கவும் அவன் சார்பாகப் பணிபுரிவோரை வேட்டையாடவும் தானே பயன்படவேண்டும்? அந்த சக்தி முதலாளிகளின் மீது ஊராய்ந்திருந்தல் கூடப் போதுமே, பணமூட்டைகள் வெளியே கிளம்பியிருக்குமே, மளமளவென்று? செய்தனரா? செய்யும்படி, ஆட்சிப்பீடத்தில் காங்கிரசாரை அமர்த்திய வீர இளைஞர்கள் கேட்டனரா? கேட்பரா? இனியாகிலும்? இந்நாட்டு முதலாளிகள், பொது மக்களின் சர்க்கார், காந்தியாரின் சீடர்களால் அமைக்கப்பட்ட சர்க்கார், கேட்டும் கெஞ்சியும், ஏன் பிடிவாதத்தை விடமறுக்கின்றனர்? அவரக்ளை நல்வழிக்குக் கொண்டுவர, ஏன் சரக்;கார் முயற்சிக்கவில்லை - ஏன் வெற்றிகிட்டவில்லை? உள்நாட்டிலே வெற்றிபெற முடியவில்லை என்று கூறிவிட்டு, வெளிநாட்டிலே, பணம் கேட்டால், கிடைக்குமா? தோல்வித் தோடா அணிந்துகொண்டு வீரக்கோட்டம் புகும்தீரன் உண்டா? இதுபோலெல்லாம் மக்கள் எண்ணிடக் கூடுமே என்று யோசியாமலேயே கல்கி வெளிநாட்டு மூலதனம் தேடுவதற்குக் காரணம், உள்நாட்டிலே மூலதனம் கிடைக்காதது தான் - உள்நாட்டிலே மூவதனம் கிடைக்காததற்குக் காரணம், முதலாளிமார்களின் முரட்டுப் பிடிவாதந்தான், என்று தீட்டுகிறது!

உள்நாட்டு முதலாளிகளை அடக்கவோ மடக்கவோ ஆற்றல் இல்லை. சர்க்காருக்கு.

இதையும் கூறிவிட்டு அதே மூச்சில், வெளிநாட்டு மூலதனம் புகுந்தால், அதன்மூலம் அன்னியர் ஆதிக்கம் தேடிக்கொள்வார்கள் என்று அஞ்சவேண்டியதில்லை, ஏனெனில், நமது தேசத்தை ஆளும் தலைவர்களுக்கு மூலதனம் போடுவதன் மூலம் ஆதிக்கம் பெறலாம் என்ற எண்ணம் கொண்டால், அன்னியரை அடக்கும் அறிவும் ஆற்றலும் உண்டு, என்று எழுதுகிறது கல்கி.

ஆஹா! என்னதெளிவு! எவ்வளவு தீட்சணியம்! - என்று கூறவேண்டி இருக்கிறது. இந்தப் போக்கைப் பார்க்கும்போது.

அறிவும் ஆற்றலும் உண்டாம் - வெளிநாட்டு முதலாளிகள் இங்கு ஆதிக்கம் தே முனைந்தால், அவரக்ளை அடக்கவும் மடக்கவும் இடு துரத்தக்கண்டு அஞ்சி ஓடும் ஆற்றலழகன், புலியைப் பூனையாக்கும் ஆற்றலரசனாவானாம்! எவ்வளவு வேடிக்கையான வாதம் புரிகிறது பாருங்கள், கல்கி! பொதுமக்களின் சிந்தனைத் திறத்தைப் பற்றி அவ்வளவு அலட்சியம இருக்கிறது அந்த எட்டுக்கு நாலுவரிக்கு முன்னால்தானே நாôமே தீட்டினோம். எவ்வளவு முயன்றும் இந்திய நாட்டத் தலைவர்களால், இந்திய முதலாளிகளைச் சரிப்படுத்த முடியவில்லை என்று - நாமே உடனே தீட்டுகிறோமே, வெளிநாட்டு முதலாளிகளின் ஆதிக்க ஆசையை மட்டந்தட்டும் அறிவும் ஆற்றலும் எமது தலைவர்களுக்கு உண்டு என்று - முடமானவன், பாபம், ஆகவேதான் நடக்க முடியவில்லை என்று கூறிவிட்டு, முடவன் முத்துசாமியை ஓட்டப்பந்தயத்துக்கு அனுப்பி, முதல் பரிசு பெறச் செய்வோம் என்றும் சொன்னால், முத்துச்சாமியின் காலைப்பற்றி அல்ல, நமது தலையைப்பற்றியே சந்தேகிப்பார்களே, என்று துளியும் எண்ணிடாத ஏமாளிபோல, “கல்கி” எழுதலாமா?

அறிவும் ஆற்றலும், அன்னிய முதலாளிகளின் கொட்டத்தை அடக்குமளவுக்கு இருப்பது உண்மையானால், அந்த அறிவாற்றல் ஏன் இங்கு பயன்படவில்லை? மக்கள் இப்படி யோசிப்பார்களே - நமது வாதம் கேவலம் வக்கரபுத்தியின் விளைவு என்று ஏற்படுமே என்பதுப்றறி யோசிக்காமலேயே, தங்கள் கட்சியினர் ஆளுகின்ற காரணத்தால், அவர்கள் செய்வது கேடு சூழ்ந்ததாக இருப்பினும் ஏதாவது சப்பைக்கட்டு போட்டு ஆதரித்தாக வேண்டும் என்று கல்கி எண்ணுகிறது போலும்! கட்சிப்பற்று தேவைதான் - ஆனால் நாட்டைக் கெடுக்கும் நாசகாரியத்துக்கு உடந்தையாக இருக்க வேண்டுமா, அதன்பொருட்டு?

இந்திய நாட்டு முதலாளிகளைச் சரிக்கட்ட முடீயாத நிலையிலே உள்ளவர்கள், அன்னிய முதலாளிகள், இதக்கம் பெறத்திட்டமிடும்போ, எப்படித் தடுக்க முடியும்? அவ்வளவு ஆற்றல் இருந்தால், இந்நாட்டு முதலாளிகள் இந்த அளவுக்குக் கொக்கரிக்கவே மாட்டார்களே!

பொதுமக்களை, எதையாவது சொல்லி, சமாதானப்படுத்திவிட வேண்டும், மனக்கொதிப்பை மாற்றவேண்டும், என்று எண்ணும் “கல்கி” அறிவுத்துறைக்கும் நாட்டுக்கும் நிச்சயமாகத் தீங்கு இழைக்கிறது.

நாம், எதிர்க்கட்சியினர். எனவே, நமது கண்டனம், கட்சி மாச்சரியத்தின் விளைவு, என்று விவரமறியாதாரால், கருதப்படக்கூடும். கல்கியோ ஆளும் கட்சியின் ஆதரவு பெற்றது - நெஞ்சிலே உரமும் நேர்மைத் திறமும் இருக்குமானால், கண்டித்திருக்கவேண்டும், தன்கட்சி தலைவர்களின் தவறான போக்கை - நாடு உருப்படும் - நல்லாட்சி மலரும் மக்கள் வாழ்வர். இதை மறந்து “சொத்தை சோடை”யான வாதங்களைப் புரிந்து அன்னியநாட்டு முதல் இங்கு வருவது, கேடு செய்யாது என்று பொதுமக்களை எண்ணும்படிச் செய்கிறது “கல்கி” மக்களாட்சிக் காலத்திலே, இத்தகைய “மனப்போக்கு” மாபெரும் துரோகமான காரியம் என்பதை கல்கி உணரவேண்டுகிறோம்.

செல்லாக்காசு கொடுத்து ஏமாற்றுபவன் மட்டுமல்ல, அந்தக் காசை வாங்கித் தட்டிப்பார்த்து, “பரவாயில்லையே! சத்தம் நன்றாகத்தான் இருக்கிறது! செல்லும் காசுதான்!” என்று கடைக்காரருக்குத் தந்திரமாக கூறுபவனும் கூடத்தான், குற்றவாளி என்று அறநெறி அறிந்தோர் கூறுவர்.

தங்கள் ஆட்சியின்போது, அற்புதமான முன்னேற்றம் நடைபெற்றதாகவும், புதுப்புதுத் திட்டங்கள் தீட்டப்பட்டதாகவும், காட்டிக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் ஆளும்கட்சிக்கு ஏற்படுவது இயற்கை. ஆனால் அதற்காக, எதிர்காலத்தைக் கெடுக்கக்கூடாது, இந்நாட்டை, வல்லரசுகள் நடத்தும் அரசியல் சொக்கட்டான் காயாக இக்குவதும்கூடாது! இதனைத் தைரியமாக எடுத்துக் கூறவேண்டிய பொறுப்பு “கல்கி” போன்ற ஏடுகளுக்கு இருக்கவேண்டும். நாம், அத்தகைய “மேதைகளின்” ஏடுகளிலே, வெறும் ஆலைஃசையை மட்டுமல்ல, அறிவுத்தெளிவை, எதிர்பார்க்கிறோம். கட்சிக்கு ஒரு தம்பட்டமாக மட்டும் இருப்பதுகூடாது, மக்கள் முரசாகவேண்டும் மாறவேண்டும்.
(திராவிடநாடு - 24.4.49)