அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


“அமரதாரா“ – போயிற்று!!

தமிழ்நாட்டின் பிரபல தேசிய எழுத்தாளரான நண்பர் ‘கல்வி‘ ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மறைந்த செய்தி கேட்டுத் திடுக்கிட்டோம். எதிர்பாராத இச்செய்தி உண்மையிலேயே, நம்மைக் கலங்க வைத்துவிட்டது.

தமிழ்நடையில் ஒரு நகைச்சுவையையும், சரித நிகழ்ச்சிகளின் மீது ‘சமையல்கட்டு‘க்குக்கூட ஒரு ஆவலையும் தூண்டிவிட்ட எழுத்தாளர் அவர் அவரது, எழுத்து – செயல்பற்றி, கருத்து வேறுபாடுகள நிறைய உண்டு. ஆனால், அவரது திறமை – செயல்வன்மை, நிச்சயம் பாராட்டுக்குரியதாகும். தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.வாசனின் “ஆனந்த விகடன்“ பீடுநடை போட்டிடும் பெருமைக்குக் ‘கல்வி‘யும் காரணமாவார். திரு.வி.க. எடுத்துத் தந்த பேனா வீணாகவில்லை! அவரிடம் பெற்ற பயிற்சி, அன்பர் கல்கியை சிறந்த தமிழ்ப்பித்தராக்கிற்று. அதனால், தமிழிசை, தமிழ்க் கவிதைகள் முதலியவற்றில் பிற தேசிய எழுத்தாளர்களைவிட அவரிடம் ஒரு தனி ஆர்வம் கண்டோம்! இதேபோல, நாட்டியம், இசை நாடகம் முதலிய துறைகளைப் பற்றி ‘ஆடலும் பாடலும்‘ எனும் மகுடமிட்டு ‘கர்நாடகம்‘ எனும் பெயரில் அவர் செய்து வந்த விமர்சனம், தமிழ்க் கலைத்துறையில் குறிப்பிடப்பட வேண்டிய சேவையாகும். விமர்சனம் என்றாலும் அதை விரும்பிப் படிக்கும்படி வாசகர்களைச் செய்த பெருமை நண்பர் கல்கிக்கு உரித்தாகும்! அத்தகைய எழுத்தாள நண்பர் இறந்துவிட்டார் என்பதை எண்ணும்போது, உண்மையிலேயே வருந்துகிறோம்.

தீவிரவாதியல்ல, அவர்! சீர்திருத்தத்துக்கும் பழைமைக்கும் இடையிலே அல்லாடும், ‘அந்த இடத்து‘ எழுத்தாளர்களைப் போன்றவர்தான். எழுத்தாளர் கூட்டத்திலே பழைமையைக் கட்டி மாரடிக்கும் ‘செக்கு‘ச் சுபாவம் கொண்டோரைப் போல இல்லாது, பழைமையைச் சில சமயத்தில் போற்றியும், புதுமையைச் சில சந்தர்ப்பங்களில் வாழ்த்தியும், இரண்டிலும் சேராது இடைநிலையில் ஆடிவந்தார்! எனினும், ஆரம்ப காலத்தில் அவருடைய எழுத்துக்கள் கொண்டிருந்த கனல் வேகம், பிற்பாடு குறைய நேர்ந்தது என்பதை எவரும் மறுக்க முடியாது. தேசியப் போரில், ஈடுபட்ட தியாகி – எழுத்தை அதற்கெனச் செலவிட்ட இலட்சியவாதி – வாழ்க்கை ஆரம்பம் காங்கிரஷ் கட்சி அலுவலக ‘குமாஸ்தா‘வாகத்தான் இருந்தது – ஆனாலும், அந்த இடத்தைப் பெறுதற்கரிய பேறு என எண்ணிப் பணியாற்றியயே பலரது கவனத்தையும் கவர்ந்தார் அவர்! அவர் தீட்டிய “தியாக பூமி‘ திரைப்படம், வெள்ளையரால், தடைசெய்யப்பட்டது. பலருக்கு நினைவிருக்கலாம். அவருடைய எழுத்துத் திறமையை, பெரும்பாலும் ‘அடுப்பங்கரை‘களையும், ‘ஊஞ்சல் பலகை‘ உல்லாசிகளையும், திருப்திப்படுத்தப் பயன்படுத்தாது, துவக்கத்திலிருந்து வேகம் துவளாமல் செய்திருந்தாரானால் புதுமை பெறத் தவிக்கும் தமிழகத்துக்கு அவரது சேவை மிகவும் பயன்பட்டிருக்கும். அந்த நிலை, அவருக்கு அமைந்த வாழ்க்கையமைப்பால், இல்லாது போனது, உண்மையில் வருந்தக் கூடியதே!!

‘கல்வி, கடைசிவரையில் அன்பர் ஆச்சாரியார் அவர்களையே ஆசானாகவும், ஏக தலைவர் எனவும் பின்பற்றி வந்தார். கண்மூடித்தனமாக என்று கூடச் சொல்லலாம். ஆச்சாரியாரது, அரசியல் வாழ்க்கையில் சில சலனங்கள் ஏற்படவும், அதே போல் ‘கல்கி‘யின் பெயரில் சில சலனங்கள் முளைக்கவும், ஒருவருக்கொருவர் காரணமாயிருந்திருக்கின்றனர். தவறானாலும், சரியானாலும் ஆச்சாரியார்மீது ஒரேவித நம்பிக்கை வைத்திருந்தார், கல்கி! ஆசை கண்ணை மறைக்கும் என்பதுபோல, அந்தப்பக்தி, ‘கல்கி‘யின் உள்ளத்தையே மூடிவிட்டது! அதனால், அவர் பெற்ற ஏச்சும் பேச்சும் ஏராளம். எனினும், அவைகளையெல்லாம் தனது குருநாதருக்காகத்தான் தாங்கிக் கொள்ளும் கணைகள் என்று மகிழ்ச்சியாகவே ஏற்றுக் கொண்டார்! ஏகலைவன், விசுவாசம்! பழி, கல்கிக்குத்தான். அதனால்தான், அன்பர் ஆச்சாரியார் அவர்கள், இடுகாட்டில் கண்ணீர் வடித்தாராம்! உண்மையில், கலங்கக்கூடிய சம்பவம்தான் ஆச்சாரியார் அவர்களுக்கு நமது மனமார்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

எழுத்தாளர்களின் நிலையைப்பற்றி எண்ணியவர் கல்கி! பலருக்கு நினைவுச்சின்னம் எழுப்பப் பாடுபட்டவர், அவர்! அவருடைய செயலும், ஆர்வமும், அகால மரணத்துக்கு இரையான சில எழுத்தாளக் குடும்பங்களின் துயர்துடைக்கப்பயன்படவில்லையே என எண்ணுகின்ற அளவுக்கு, இந்தத் துறையில் அவர் கவனத்துக்குரியவரானால். பலர், பெறாத பாக்கியம், இது! இதனால், பலரால், பிரச்னைக்குரியவராகவும் ஆனால்! தேசீயக் கூடாரம் முழுதும் எரிச்சல் கணைகளைப் பூட்டினாலும், சில சமயங்களில், நமது சேவைகளை அவர் புகழ்ந்ததும் உண்டு. எழுத்துத்துறையில் நமது இயக்கம் உண்டாக்கியிருக்கும் மறுமலர்ச்சி, பல தேசீய எழுத்தாளருக்கு – எரிச்சலையும் கோபத்தையும் உருவாக்கியிருக்கிறது, ஆனால், கல்கி வரவேற்றார் – மகிழ்ந்தார். அதேபோல, மாற்றாரிடம் இருக்கும் சில நற்பண்புகளை, அவர் பாராட்ட தயங்கியதில்லை! வாழ்த்தப் பயந்ததில்லை!! இதனால்தான், அவருடைய மறைவு, இன்று பலருக்கும் வருத்தத்தைக் கொடுக்கிறது. அதிலும், எரிச்சல் எனும் புகைமண்டலத்தின் மத்தியிலே மிதக்கும் நமக்கு, அவரது மறைவு உண்மையில் வேதனையைத் தருகிறது! அவர், மாற்றாரைத் தாக்கும்போது கையாண்ட கண்ணியம் கவனத்துக்கு வருகிறது!! அத்தகையவர், இவ்வளவு விரைவில், இறந்ததை எண்ணி உண்மையிலேயே வருந்துகிறோம். திகைத்துக் கிடக்கும் அவரது குடும்பத்தாருக்கும், ‘கல்கி‘ நிலையத் தோழர்களுக்கும், எழுத்தாளர் உலகுக்கும் நமது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். எழுத்து வானில், அவரும், ஒரு அழியாத நட்சத்திரம்! அது போய் விட்டது!! புகழ் என்றும் நிலைத்திருக்கும்!!

திராவிட நாடு – 12-12-54