அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அமீர்சந்து காலம்முதல்!

பெட்டியிலே வைரம், வைடூரியம், முத்து, பவளம், பொன், நகைகள், வராகன்கள் வேறு. வேறோர் பெட்டியிலே வீடுவாசல் சொத்துக்களின் உரிமைப் பத்திரங்கள் உள்ளன. இடை அணிகள் அலங்கார வகைகள் அடுக்கடுக்காகக் குவிக்கப்பட்டு உள்ள பேழைகள் வேறு. மாடியிலே இவைகள் இருக்க, கூடத்திலே இவ்வளவு இருக்க, கூடத்திலே இவ்வளவு செல்வம் படைத்த சீமான் இறந்து கிடக்கிறான். இறந்தவனின் இன்பவல்லி இருதயம் பிளந்துவிட்டதென அழுகிறாள். அவன் மீது புரண்டு. சீமானின் செல்லப்பிள்ளைகள் மருண்டு, மனம் உடைந்து கோவெனக் கதறித் துடிக்கின்றனர். ஊரார் கூடுகின்றனர். அதே வேளையிலே சூதும் சூழச்சியும், உள்ள குடும்பம் நிலை குலைந்து நிற்கிற நேரம் இது என்பது அறிந்தவருமான உற்றார் உறவினரில் சிலர், மெள்ள பேழைகளைத் திருடுவதும், பூட்டுகளை உடைப்பதும், அகப்பட்டதைச் சுருட்டுவதுமாக இருக்கின்றனர். இழவு வீட்டிலா இது? எனக் கேட்பீர்கள், எத்தனையோ வீடுகளில் நடந்த சேதி!

சீமான் செத்ததுடன் சொத்து இருந்த இடம் தெரியாது மறைய, மக்களை வைத்துக் கொண்டு, இழந்த செல்வத்தை எண்ணி எங்கும் விதவையாரும், அவர்தம் சிறு பிள்ளைகளும் பராரியாகியோ, இந்தப் பாதகத்துக்குக் காரணமாக இருந்த பந்துவின் பராமரிப்பை நாடியோ, அண்டிப் பிழைக்க வேண்டி வந்ததுண்டு.

வீட்டின் கதை நாட்டினுக்கும் பொருந்தும், நாதனற்ற தங்களை நாதியிழந்து நிற்பதுபோல், நலன்கள் பிறரால் சூறையாடப்பட்டுக் கஷ்டமடைவதுபோல் நாடுகளுக்கும் நேரிடுவதுண்டு. குடும்பத் தலைவன் இறந்து வாரிசுதார் மைனர்களாக இருக்க நேரிட்டால், குடும்பச் சொத்து கொள்ளை போவது போல, நாட்டில் நெருக்கடி, வெளிநாட்டுப் படை எடுப்பு, அந்நியரிடம் சிக்குதல் ஆகிய அவதிகள் நேரிடும் காலத்தில், நாட்டு நலன்கள், உரிமைகள், பதவிகள், முதலிய செல்வத்தை, வலுத்தவன், சூழ்ச்சிக்காரன், தன் வசப்படுத்திக் கொண்டு சூது எதுமறியாதாரைப் பராரியாக்கி, பஞ்சையாக்கி, பாட்டாளியாக்கிவிடுவான்.

இந்நிலை உலகிலே எத்தனையோ நாடுகளுக்கு நேரிட்டது என்ற போதிலும், இந்தியாவில் ஏற்பட்டதைப் போல எங்கும் நெஞ்சு வேகும் அளவுக்கு நேரிட்டதில்லை.

நாட்டுச் சுதந்திரம், வீட்டுச் சீமான் மாள்வதுபோல் பிளாசி யுத்தத்திலும் அதற்குப் பிறகு நடைபெற்ற போர்களிலும், பறிபோன போது நாட்டிலே அலங்கோலம் இருந்த நேரம் பார்த்து இங்கிருந்த சூழ்ச்சிக்காரர்கள், நலன்கள் பதவிகள் உரிமைகள் ஆகியவற்றைத் தம் வசப்படுத்திக்கொண்டு உண்மை வாரிசுதாரரான நாட்டுப் பழம்பெருங்குடி மக்களை, பாட்டாளிகளாக்கிவிட்டனர். சீமானின் செல்வச் சிறார்கள்போல் ஆன்றிருந்த மக்கள் தமது உரிமை எனும் செல்வம் பிறரால் பறிபோகிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியாத நிலையில் - பருவத்தில் இருந்தனர். இன்றே பருவம் முதிர்ந்து பக்குவம் ஏற்பட்டு தான் யார்? தனது முன்னாள் நிலை யாது? இந்நாள் இங்ஙனமிருக்கக் காரணம் என்ன? என்பனவற்றைப் பற்றி எண்ணிப்பார்க்கவும் தனது உரிமையைக் கேட்கவும் ஆரம்பித்துள்ளனர். இந்தப் புரட்சியின் பொறிகள்தான் இன்று ஆரியர் - திராவிடர் கிளர்ச்சி சூழ்ச்சிக்காரக் கூட்டம் பதறுவதற்குக் காரணம் இதுவே.

தந்தை மரணப் படுக்கையில் இருக்கையில் தனதாக வேண்டிய சொத்தைப் பிறர் களவாடிய சேதியை அதாரத்தோடு கேட்ட, “வாரிதாரன்” மேஜரானதும் “அந்தப் புஞ்சை நிலம் விற்பனையானதாக இருக்கும் பத்திரம் செல்லாது, அதிலே காணப்படுவது எங்கள் தாயின் கை எழுத்தல்ல, கள்ளக் கையொப்பம்! மேலும் சொத்து பிதுராஜ்ஜிதம், ஆகவே எமக்கே உரியது” என்று வழக்குத் தொடுக்கிறான்.

அதுபோல “நாங்கள் அறியாப் பருவத்தில், இருந்தபோது ஆநீதிகள் இழைக்கப்பட்டன. உரிமைகள் பறிக்கப்பட்டன இன்று நாங்கள் பரிகாரம் கேட்கிறோம். உரிமைகளைத் திரும்ப அடையவேண்டும்” என நாட்டுப் பழங்குடி மக்கள் பகுத்தறிவு மன்றத்திலே வழக்குத் தொடுத்துள்ளனர். நாட்டிலுள்ள நானாவிதமான கிளர்ச்சிகளுக்கும் காரணம் இதுதான் தன்னை அறிந்து தனது உரிமை கேட்பவர் தன்மானம் பெற நடத்தும் போர் இது.

குடும்பக் கார்டியனாக நியமிக்கப்படுபவனாவ கூர்த்த மதியுடன் காரியம் நடத்தி, சொத்து சூறையாடப்படாமல் பார்த்துக்கொண்டாலும் பாதகமில்லை. அதுவுமில்லை, கார்டியனின் கண்ணெதிரிலேயே சூதுக்கார பந்து அகப்பட்டதைச் சுருட்டுகிறான். கார்டியன் கண்டுங் காணாததுபோல் இருந்தால் உலகம் என்ன கேட்கும், “உனக்கு என்ன பங்கு கொடுக்கப்படுகிறது” என்றுதானே கேட்கும்.

அதுபோல் நாட்டைப் பரிபாலிக்கும் பொறுப்பிலமர்ந்த பிரிட்டன் நாட்டு உரிமைகள், செல்வம், சீர், சூழ்ச்சிக்காரக் கூட்டத்தால் சூறையாடப்பட்டபோது அதனைத் தடுத்து இருக்கவேண்டும். கார்டியன் என்ற முறையிலே, பரிட்டிஷ் சர்க்கார் அங்ஙனம் நடந்தனரா? இல்லை என்று அழுத்தந் திருத்தமாகக் கூறுவோம். நாட்டிலே யாருடைய உரிமை யாரால் பறி போகிறது. யாருடைய உழைப்பு ஏவருக்குச் சுகம் தருகிறது. ஏவருடைய சொத்தை எவர் தின்று எப்பம் விடுகிறார்கள். யார் ஊழுகிறார்கள் யார் ஆறுகூடையை அனுபவிக்கிறார்கள், என்பதை அறிய பிரிட்டன் முயற்சிக்கவில்லை. உண்மை தானாக வெளிவந்தபோதும் இந்தச் சூறையாடு தலைத் தடுக்க சிறு விரலையும் அசைக்கவில்லை. ஏன்? அதுதான் ஏகாதிபத்தியக் குணம்!

நாட்டின் ஆட்சியைப் பிரிட்டன் ஏற்றபோது யாரார் எதெதைத் தமது எனக் கொள்ளமுடியுமோ அவைகளை எல்லாம் எடுத்துப் பத்திரப்படுத்திக் கொண்டனர். சிற்றரசர்கள் சிறு பூபாகங்களையும், சீமான்கள் செல்வத்தையும், பண்ணைகûளுயம், பார்ப்பனர்கள் மத மிராசு, உயர் ஜாதி உரிமை முதலியனவற்றையும் தமதாக்கிக் கொண்டதை பிரிட்டன் தெரந்து கொள்ளவில்லையா? தெரிந்தும், நடப்பது நடக்கட்டும் என்றுதானே இருந்துவிட்டது.

பிரிட்டன் நமக்கு இழைத்த பெரும் பிழைகளிலே இதனையே முக்கியமானதாகவும், முதன்மையானதாகவும் நாம் கூறுவோம். நாட்டைப் பிடித்ததும் உள்நாட்டுச் சூதுக்காரரன் வேட்டைக்காடாக நாடு ஆனபோது, பிரிட்டிஷார் வேடிக்கை பார்த்துக்கொண்டும், பெரிய கோட்டையைச் சுற்றிச் சிறு சிறு கோட்டைகளும் அகழியும் இருப்பின் பெரிய கோட்டைக்கு ஆபத்து விரைவில் வராது என்ற ஆசையில் தந்திரத்தின் பொருட்டும், தன்னைச் சுற்றிலும் இத்தகைய கோட்டைகள் எழும்புவது கண்டு வாளாவிருந்தனர் அங்ஙனம் எழும்பிய கோட்டைகளிலே பார்ப்பனியம் பலமானதார் கோட்டை.

தமது நாட்டினுடைய சீரும் சிறப்பும் வீரமும், சமுதாயத்திலே இழிவுகள் போக்கப்பட்டு ஒரே சமூகமாகிக் கட்டுப்பாட்டின் மூலம் பலம் பெற்றதனால் கிடைத்த பலன் என்பது தெரியாதா? இலண்டனிலே “பார்ப்பனரும் பறையரும் இருந்தனரா? ரோமாபுரி சாம்ராஜ்யத்தில் பெட்ரீஷியன் (Patrician) எனும் உயர்குல உரிமை பேசியோருக்கும் பிளபியன் (Plebian) எனும் தாழ்ந்த குல மக்கள் என்று கூறப்பட்டு அழுத்தப்பட்டவருக்கும் நேரிட்ட கடும் போராட்டம் பிரிட்டிஷ் மக்கள் படித்ததில்லையா? இதைவிடக் கோரமானதோர் சமுதாய நிலைமையை இந்நாட்டிலே பிரிட்டிஷ் ஆட்சி ஏற்பட்டதும் பலப்படுத்தப்பட்டபோது பார்த்துக்கொண்டிந்தது நீதியா?

இந்நாட்டுக் கொடுமைகள் எதுவுமே அவர்களின் கண்களுக்குத் தென்படவில்லை என்று கூறிவிட முடியுமா? தக்கர் எனும் கொள்ளைக் கூட்டம் சதி அல்லது உடன்கட்டை ஏறுதல் எனும் கொடிய பழக்கம் அவர்கள் கண்ணுக்குத் தெரிந்து அவைகளை ஒழிக்கவில்லையா? அதைப்போலவே மக்களின் மனத்தையே சிதைத்துவந்த பார்ப்பனியம் தென்படவில்லையா? கண்களுக்கு! என்றுதான் கேட்கிறோம். அதை வளர விட்டதும், அது தம்மை வாயார (மனதார அல்ல!) புகழ்ந்தபோது மகிழ்ந்ததும், “நாட்டை நீர் ஆளும் மக்கள் மனத்தை நான் ஆண்டு, அவர்களைக் கூன் உள்ளம் கொண்டோராய் அக்கிவிடுகிறேன்” என்று கூறி அங்ஙனமே நடக்கப் பார்த்துக் கொண்டிருந்ததும் பெரும் பிழை அல்லவா என்று கேட்கிறோம்.

ஆரம்ப கால முதல் பிரிட்டிஷார் இந்தப் போக்கில்தானே இருந்தனர்.

நாட்டைக் காட்டிக் கொடுத்தார் மீர்ஜாபர் என்று கூறும் தேசியப் பத்திரிகைக்காரர்கள் மீர்ஜாபருக்கும் பிரிட்டிஷாருக்கும் இடையே நின்று மீர்ஜாபரின் மனத்தைக் கலைத்த தரகன் யார் என்பதை அறிவார்களா? அங்கில - ஆரிய ஒப்பந்தம் முதல் முதலாவதாக அப்போதுதானே ஏற்பட்டது.

சரிதம் என்ன? வங்காளத்திலே சுராஜ்-உட்-ஆவுலா (Suraju-d-daula) நவாபாக இருந்தார். அதுபோது கிளைவ் (Clive) இங்கு இருந்தார். நவாப் பரிட்டிஷாரைத் திகைக்கவேண்டி நேரிட்டது. பிறகு சுராஜ்-உட்-ஆவுலாவுக்கும் கிளைவின் படைகளுக்கும் போர் நடந்தது. போரிலே தோற்றார் சுராஜ்! காரணம் அவருடைய படைத் தலைவராகிய மீர்ஜாபர் அவரைக் காட்டிக் கொடுத்ததால்! இது தேசியத் தோழர்கள் கூறும் கதை! ஆனால், இடையிலே பொதிந்துள்ளதும் எடுத்துக் கூறினால் இளைஞர்கள், யார் குறறவாளி என்பதை உணர்ந்து கொள்ளக்கூடியதுமான சேதி இருக்கிறது. அதை வெளியே கூறுவதில்லை எடுகள்.

நவாபுக்குத் துரோகமாக மீர்ஜாபர் கிளம்புவதற்குத் தூண்டித் தரகு பேசி, பிரிட்டிஷ்காரரான கிளைவிடம் தனது தரகு வேலைக்குப் பணமும் பெற்றுக் கொள்ளப்பத்திரம் எழுதிப் பெற்றவர் யார் தெரியுமா? அமீர்சந்த் (Amirchand) என்ற ஓர் பார்ப்பனர்.

கிளைவிடம் இந்தக் கங்கைக் கரைப் பார்ப்பனர் சென்று “வங்க நவாபை வீழ்த்த நானோர் உபாயம் கூறுகிறேன் கேளும் துரையே! வங்க நவாபின் வலது கை போன்றுள்ள மீர்ஜாபருக்கு நான் தூபமிட்டுத் துரோகம் புரியச் செய்கிறேன். மீர்ஜாபரே, படைத்தலைவன். அவனை நமதாளாக்கிக் கொள்ளின், பிறகு நவாபு பக்கிரியாவான்!” என்று யோசனை கூறினான்.

அதுபோலவே மீர்ஜாபரிடம் சென்று “ஜனாப்ஜீ! உமது வீரமன்றோ வங்க நவாபுக்குக் கவசம்! படைத்தலைவர் நீர் இருக்க, பாராள, சுராஜா? ஈதோ பிரிட்டிஷாருக்கும் சுராஜ÷க்கும்போர் மூண்டுவிட்டது. இந்த நேரத்திலே நீர் ஏனோதானோ என்று இருந்துவிடும். மறுகணம் வங்கநாட்டு முடி உமக்குத்தான்! நீரே நவாபு” என்று இசைமொழி புகன்று மயக்கியதும் அமீர்சந்த் எனும் அந்தணரே!

வங்க நவாபு வதைபடும் படலத்தில் தரகராக நின்று வங்கத்தை உள்ளபடி காட்டிக்கொடுத்தவர் அந்தப் பார்ப்பனரே! எய்தவன் ஏய்தால் அம்பு என்ன செய்யும்! எய்தது அமீர்சந்த்! அம்பு மீர்ஜாபர்! அம்பை இன்று கண்டிக்கின்றனர் எய்தவனை மறைத்துவிட்டது அந்த வர்க்கம்.

அமீர்சந்த் செய்த தரகுக்கு 30 இலட்சம் ரூபாய் கூலி! இந்தப் பெரும்பொருள் தருவதாகக் கிளைவிடம் கையொப்பமிட்டுப் பத்திரம் எழுதி வாங்கிக்கொண்டார் ஆரிய அமீர்சந்த்! ஆனால், ஆங்கிலேயக் கிளைவ் ஆரியனுக்கும் “பெபே” என்று கூறவேண்டி சிவப்பு மையினால் பத்திரத்தில் கையொப்பமிட்டு அதைச் செல்லாததாக்கி, அமீர்சந்தின் பேராசையில் பிடிமண் போட்டார்.

காட்டிக் கொடுத்தும் கைக்கூலி வாங்கியதும் யார்? ஆங்கிலேயருக்கு வங்கம் சிக்க வேலை செய்தது யார்? அமீர்சந்த் காலம் முதற்கொண்டு ஆச்சாரியார் காலம் வரையிலே, இந்த அங்கிலோ ஆரிய ஒப்பந்தம் அடிக்கடி நடைபெறுவது காண்கிறோம்.

“நமது ஜென்ம பூமி” எனப் பூரிப்போடு பாடி ஆடும் தோழர்கள், கண்களை அகலத் திறந்துகொண்டு பார்த்துக் கூறட்டும், ஜென்ம பூமியின் நிலைமையை!

அதோ தெரிகிறதே சேரி அங்குதான் ஜென்ம பூமியின் ஆதிக்குடிகள் இருக்கின்றனர். அவர்களுடன் இருப்பது வறுமை, வாட்டம், பஞ்சம், பிணி, சேறு, செந்தேள் - சிறகொடிந்த பறகைள் போல், கண்ணிழந்த கன்றுகள்போல், உள்ளனரே, அந்த ஆதித்திராவிடர்கள், ஈதோ இருக்கும் குளத்திலே நீர் மொள்ளக்கூடாது, தேவாலயம் செல்லக்கூடாது - அங்ஙனம் ஏதேனும் செய்யத் துணிந்தார் “முதலியார்வாள்! இதென்ன கலிகாலம்! பாழாகிறதே! பஞ்சமர் உள்ளே வரலாமா! மகா பாபம், பாபம்!” என்று சாஸ்திரியார் தூண்டுவார். முதலியார் ஆடுவார், முடிவிலே சேரி மக்கள் சேரியிலேயே சிந்தை நொந்து வாழ்வர்!

இதை ஒழிக்க சட்டம் ஏற்பட்டிருக்கிறது இன்று பல காலமாகச் செய்யப்பட்ட கிளர்ச்சிக்குப் பிறகு.
இதோ, முதலியார், நாயுடு, நாயக்கர், கவுண்டர், முக்குலத்தார் முதலிய மற்றவர்களைத்தான் நோக்கு! என்ன அவர்களின் நிலைமை? மாடி வீட்டில் இருக்கிறார்கள், பண்ணை இருக்கிறது என்று கூறுவாய். ஆம்! சிலருக்கு! ஆனால் உப்பரிகையின் பக்கத்திலேயே இருக்கும் குடிசைகளைப் பார் அதோ கட்டை வெட்டும் தோழனைப் பார் அவனது கந்தல் உடையைக் கவனி! கஞ்சிக் கலயத்தோடு வரும் அவனது மனைவியைப் பார்! காசநோய் அவளுக்கு!

செல்வம் படைத்தவரும், வறுமையில் நெளிபவரும் ஓலைக்குடிசையின் ஒண்டியுள்ளவரும், ஒன்று சேர்ந், அதோ, அந்தப் பஞ்சாங்க பார்ப்பனரின், பாதம் பணிகின்றனர் பார்! பருப்பும் கரியும் பணமும் தட்சணையாகத் தருவது ஏன் என்று கேள்! பார்ப்பனன், இடது கையால் “ஆசி” கூறுவதைக் கவனி. அந்த ஒரு சமூகம் மட்டும், மேனி வாடாது வாழ்வது எப்படி முடிகிறது. ஆசானாய், குருவாய், தலைவனாய், “கண்கண்ட தெய்வமாய்” இருப்பதன் காரணம் என்ன?

அதோ மலர் சூடி, மஞ்சள் பூசி, திலகமிட்டு, தலையில் நரையும், முகத்தல் நகையும் துலங்க, இருந்து கணவரின் காலப் பிடித்துக் கொண்டே, பேசும், அம்மையின், மகள், மங்கலமிழந்து, மஞ்சளிழந்து, மலர் அணிய உரிமையற்று, மங்குகிறாள்! மறுமணம் புரியலாமே! தாலி போன அன்றே அவளது இளமையும் அதற்கேற்ற இயல்பும் உணர்ச்சியும், போகவில்லையே, ஏன் காட்டு ரோஜா போல் கன்னி கவனிப்பார் ஆற்றுக் கிடக்கவேண்டும் என்று கூறிப்பார். அடுக்கடுக்காக சாத்திரம், வண்டி வண்டியாக வேதம், புராண இதிகாச மேற்கொள் புறப்படும்! ஜாதியைக் கெடுக்காதே, ஆச்சாரத்தைப் பாழாக்காதே, சாஸ்திரத்தை இழக்காதே, சண்டாளனாகாதே, நாத்திகம் பேசாதே - நாயக்கர் கோஷ்டியில் சேராதே - சுடச் சுட சொல் அம்புகள் கிளம்பும்! இதுதான் தோழா ஆரியம்! இதனைப் போக்கத்தான் நாம் பாடுபடுகிறோம். இதுவும் உனக்குச் சம்மதமில்லையா?

இந்தச் சமுதாயத்தை இதிலுள்ள இழி தன்மைகளைப் பார்க்குந்தோறும் பயங்கரமானதோர் புரட்சி ஏற்பட்டு அந்தக் கொடுமைகள் அடியோடு அழிக்கப்பட்டு, பேதங்கள் தரைமட்டமாக்கப்பட்டுப் புத்தம் புதியதோர் புனிதமான பேதமற்ற சமத்துவ சமுதாயம் ஏழாதா என்ற எண்ணம் எவர் மனத்திலும் எழும். வன்னெஞ்சமுள்ளாரே இந்தச் சமுதாய நிலையை மாற்றி அமைக்க முன் வாரார்!

ஒரு அரசன் கொடுங்கோலனாக இருக்கிறான் என்றால் அவனை உருட்ட புரட்சி கிளம்புவதைக் காண்கிறோம்.

ஒரு சில செல்வமான்கள் செருக்குடன் வாழுவது கண்டால் அவர்களின் ஆட்சியை அழிக்க, அகோரப் புரட்சி கிளம்புவதைக் காண்கிறோம்.

வண்டியில் பூட்டிய மாடு, வலி தாங்காது, காலால் ஊதைத்து, வாலால் அடித்து முரண்டிப்படுத்துக்கொண்டோ, மூலை வாரியோ, பள்ளத்தில்; வண்டியை உருட்டியோ புரட்சி நடத்துவதைப் பார்க்கிறோம்.

புழுவும் கால் மதித அதிகமானால் துடித்துக் கடிக்கக் காண்கிறோம்.

இந்தச் சமுதாயத்திலே மட்டுமந்தானே ஒரு வகுப்பு அந்தநாள் தொட்டு இன்றுவரை, அத்திரி ஆகத்தியர் காலந்தொட்டு, ஆச்சாரி சாஸ்திரி காலம் வரையிலே மற்ற வகுப்பினரை இழி மக்கள் எனக் கூறி அந்தப்படியே நடத்திவரக் கண்டும், அதன் கொடுமை ஏககாலத்திலே இருதயத்திலே எண்ணாயிரம் உடட்டிகள் குத்துவது போன்று இருக்கக் கண்டும், உலக நாகரிகம் அறிவின் வளர்ச்சி மனிதத் தன்மையின் மேம்பாடு உலக நிகழ்ச்சிகள் எனும் அறிவுச்சுடரக்ள் அனேகம் வீசியும், நீங்காது குறையாது குன்றாது நிலைத்திருக்கக் கண்டும் புரட்சிப் பொறிகள் கிளம்பாது. இருக்கும் நிலை ஊளது. எங்கேனும் ஏவரேனும் புரடசிப் பொறிகளைக் கிளப்பினால், அதனை அணைக்கப் பலர் வருகின்றனரே! என்னே துர்ப்பாக்கியம்! என்றுதான் பெருங்குடி மக்களுக்கு விடுதலை கிட்டுவது?

அவயவத்தைக் குலைத்து அங்க ஹீனராகவும் அவலட்சணர்களாகவும் செய்வதையே, “தொழிலாகக் கொண்ட ஒரு கூட்டம் ஐரோப்பாவிலும இங்கிலாந்திலும் மூன்று நூற்றாண்டுக்கு முன்னால் வரையில் இருந்தது. அக்கூட்டம், ஸ்பெயின் நாட்டிலே அதிகமாக நடமாடியதால், அவர்கள் தொழிலுக்கு, ஸ்பானிய மொழியிலேயே பெயர் தரப்பட்டது. கொம்ப்-ரா-ஷி-கோ என்ற கோரமான பெயர் அக்கொடுந்தொழிலுக்கு! அவர்கள் வேலை, சிறு குழந்தைகளை விட்டு விடுவது சீமான்களுக்குள் விரோதம் எனில், ஒரு சீமான் வீட்டுச் சிறானை மற்றொரு சீமானிடம் கூலிபெற்று, இங்ஙனம் அக்கொடியோர்கள் செய்வர் கொம்ப்-ரா-ஷி-கோ எனும் கொடுமைக்கு ஆளாகிவிட்டால், கமலக்கண் குழந்தை கோட்டான் கண்ணாகிவிடும்! பவளவாய்க் குழந்தைக்குப் பன்றிவாய் போல் உருவம் ஏற்பட்டுவிடும்! அதிரூப சௌந்தரியாக வேண்டிய குழந்தை அகோர ரூபியாவாள்! முல்லைச் சரிப்பழகியாக வேண்டியவன் மூதேவித் தோற்றம் பெறுவாள். மூக்கே வராதபடி செய்வர், நாக்கு ஆறும்படி செய்வர். உதடு தொங்கும் பலலே வராது குழல் போன்ற குரல் போய் குலைக்கும் நாய்க் குரல் போன்றது வரும்! இங்ஙனம் அங்கத்தைப் பின்னப்படுத்துவர். குழந்தை வளரும், அத்துடன் கூடவே, கொடியவர்கள் செய்த கோணல், சேட்டையின் பயனும் கூடவே வளரும். பிறந்தபோது அழகுதான், வளர வளர வக்கிர ரூபம் வரும்.

இந்த முறை போன்றதுதான் ஆரியம்! கொம்ப்-ரா-ஷி-கோ அங்கத்தை மட்டுமே, இங்ஙனம் பங்கப்படுத்தும், ஆரியமோ, மனத்தை இங்ஙனம் சிதைத்துவிடுகிறது. கொடியோரிடம் சிக்கிய குழந்தை தன் இயற்கை அழகை இழந்து கோர உறு பெறுவது போலவே ஆரியத்திடம் சிக்கிய திராவிடர் கெட்டனர்.

(திராவிட நாடு - 13-7-47)