அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்!
அமெரிக்க நாட்டிலே, ஒரு பாரதிதாசன்! புதுக்கவி என்றம் புரட்சிக்கவி என்றும் கொண்டாடப்படுவர். ஆனால் தமிழரின் தன்மானக் கோட்பாடுடையவர் புரட்சிக்கவி பாரதிதாசனைத் துவக்கதிலேயே பாராட்டினர். அமெரிக்க நாட்டுப் பாரதிதாசனுக்கு, ஆரம்பக் காலத்திலே அஃதும் இல்லை. இன்றும் நமது கவியை இங்குள்ள ஏடுதாங்கிகள், ஏதேனும் கூறிடுவர், இறுமாப்புடன் அன்று, அமெரிக்கநாட்டுக் கவிஞனையும் அவ்விதமே ஏளனம் செய்தனர். பின்னரோ! புகழுரையைப் பொழிந்தனர்.

புரட்சி கவிஞர், வால்ட் விட்மன் என்பாரையே, நாம், அமெரிக்க நாட்டுப் பாரதிதாசன் என்றறோம். அவர், கவி எப்படி இருத்தல் வேண்டும், என்பது பற்றித் தமது கருத்தைப் பல சமயங்களிலே கூறியிருக்கிறார். ஒருகவி, கவியின் இலட்சணத்தை விளக்குவது, அவரை நாம் அறியவும் அவர் மூலம் பொதுவாகவே கவிதாமணிகள் எவ்வணணம் இருப்பர் என்ற தெரியவும், ஓர் வாய்ப்பளிக்கிறது. இதோ வால்ட் விட்மன், படப்பிடிப்பு! பாருங்கள், கவியின் உருவம் கவர்ச்சியுடன் காட்சி அளிப்பதை.

வால்ட் விட்மனின் கருத்துக்கள், பல, பாரதிதாசனுடையது போன்றே, பழைய கட்டுகளை உடைத்தெரியும் வெடிகுண்டுகள் போன்றுள்ளன. மக்களின் மேம்பாடே, விட்மனுக்குக் குறிக்கோள், மத தத்துவார்த்தங்களிலே அவர் மயங்கவில்லை. அவருடைய கனிமொழிகளிலே, சில இங்கு தருகிறோம்.

பழைய கட்டுப்பாடுகளையும் முட்டுப்பாடுகளையும் உடைத்தெறிந்து, கவிதைக்கும் வசனத்திற்கும் புதிய சுதந்தர ஓட்டந்தருகிறேன். ஆசான் எனினும் பாரேன்; அவன் எழுதிய வழக்கமான கருத்துக்களைத் தகர்த்தெறிவேன்.

உள்ளத்தை வெளிப்படையாக, சீர் தளைகளுக்குக் கட்டுப்படாமல், தைரியமாகச் சொல்பவனே கவிஞன் அவன், எதுகைமோனையின் அடிமையல்லன். சொல்லிற்கும், யாப்பிற்கும் இலக்கணத்திற்குங்கூட அவன் அடிமையல்லன் அவன் அவற்றின் தலைவன்; கருத்தின் முதல்வன் அவன் ஒரு சிருஷ்டி கர்த்தா!

எந்தப் பழைய வழக்கத்திற்கும் கொத்தடிமையல்லன். பழைமைக் குட்டையில் பாசிபடர்ந்து பழக்கங்களை ஒழித்து, அவன் வாழ்விற்கு உட்டமளிக்கிறான்.

உண்மைக்கவி ஒரு தீர்க்கதரிசி. அவன் பழங்கவிகளின் எதிரொலியல்லன்; பழைய வழக்கத்தின் பின்பாட்டுக்காரன், அல்லன்.

கவி, வெறும் நீதிப் புரோகிதன் அல்லன், உவமையணிகளிலும், வர்ணனைகளிலும் விளையாடிக் காலங்கழிப்பவன் அல்லன்.

கவிகள், பிறர் அறிய முடியாத அருளாவேசத்தை விளக்குவோர், நிகழ்காலத்திற் படிந்த மகத்தான எதிர்காலச் சாயலின் பண்ணாடிகள், அங்கீரமன்றி உலகிற்கு அறமளிப்போர் கவிகளே!

மனிதா! நீ யாருக்கும் தலை வணங்காதே; நிமிர்ந்து நட; கைவீசிச் செல்; உலகைக் காதலி! காதலின் கூசாதே! செல்வச் செருக்கரை, கொடுங்கோல் அரக்கரை, மதவெறியரை ஒதுக்கித் தள்ளி, மனச்சாட்சியைத் துணைகொண்டு நட ஏழைகளிடம் இரக்கம் காட்டு. தொழிலாளருக்கு ஆறுதலளி. பாட்டாளியிடம் பரிவு கொள் தாராளமாக உதவு. இழைப்பை மதி; ஊருக்கு உதவு! உனக்கு எட்டாத கடவுளைப் பற்றித் தெரிந்ததாகப் பிதற்றாதே!

எதையும் சிந்தித்துப் பார்! யாருக்கும் நீவிர் தாழ்ந்தவரல்லீர்! எவர்க்கும் அடிமையல்லீர்! நீவிரே தலைவர்! தலை நிமிர்ந்திடுக!

பண்டு நடந்த அற்புதங்கள்? வெறும் பொய்கள், நம்பாதீர்! அகம்பாவக் கொடுங்கோலரை வீழ்ந்துவீர், வீழ்ந்தோரை உயர்த்துவீர்!

இனி உலகில் புரோகிதர், சாமியார் அதிகாரம் நடக்காது. அவர்கள் காலம் மலையேறிப் போய்விட்டது. ஒவ்வொருவனும், தன்குக்தானே உபதேசியாக விடுவான். உள்ளம் உணர்ந்து உரத்துடன் வாழ்வான். பழைய கட்டுப்பாடுகள் ஒழியும்!

மனிதா! எதற்கும் அஞ்சாதே! ஆற்றலுள்ள வெற்றி வீரனென, விளங்கு, வாழ்வை நடத்த முனைந்து நில்!

நமது இன்றையச் சமுதாயம், பூச்சழகில், வெளிவேடத்தில், தன்னலப் போட்டிப் பொறாமையில், கலகலத்துபோன அந்த நாள் வழக்கங்களில், மோகம் கொண்டு, உள்ளே உரமற்று, ஒன்றுமின்றிக் கிடக்கிறது. இந்நிலை மாற வேண்டும்.

நம் இலக்கியங்கள், வெறும் வார்த்தைக் கோவையாக உள்ளன. இலக்கியமே, நாட்டினருக்கு ஊட்டமளிப்பது. இலக்கியம் வாழ்வின் விளக்கமாய், உயிருடன் ஒட்டுவதாய் இருத்தல் வேண்டும். உடலுறுதி, உள்ள உரம், கருத்துப் பொலிவு, கருத்து விடுதலை, கலைப் பண்பு, பயன்தரும் தொழில் ஊக்கம், நல்ல நட்பு, ஈகை, சுரண்டுவதற்குப் பயன்படாத (மனிதத்) தொடர்பு, சாதிமத்ப் பிடிவாதமற்ற வீறுநடை, பணத்திமிரற்ற உறவு, இவைறே குடி அரசின், குணங்கள்! குடிறயரசு பொருளைவிட, மனிததை மேன்மையாக மதித்திட வேண்டும். நான் உலக மக்களில் ஒருவன்! செருக்கற்றவன்! கள்ளமற்ற வெள்ளை உள்ளம்! எவருடனும் செல்லேன் கைகோர்த்து! களிப்புடன் வானத்தை நோக்கி வணங்கி வரம் கேட்பதில்லை. உழைத்து வாழ்கிறேன். ஊரை ஏய்த்தல்ல. இருப்பதைக் கொடுக்கிறோம் மற்றவர்க்கும். மக்களின் தோழன் நான். புலவரிடமல்ல பாடங்கேட்பது, எனக்கு ஆசிரியர் எளியோர். அவர் தரும் பாடத்தைப் பேராசிரியர்குளுக்கு நான் போதித்கிறேன்.

காற்று எங்கும் வீசும் நானும் அப்படியே, எங்கும் உலவுவேன். ஏழை பணக்காரன், புண்யமூர்த்தி பாபாத்மா, பத்தினிபரத்தை, ஆண்டான் அடிமை என்று வேறுபாடு எனக்கு இல்லை. பருவ மழைபோல் பலருக்கும் பயனளிப்பேன்.

மனிதரனைவரும் எனக்கு ஒன்றே! எவருக்கும் அஞ்சேன், எதற்கும் அழேன், எதையும் தொழேன், சடங்கும் சாமி கும்பிடுதலும் எனக்கில்லை. என்னை நான் உணர்ந்தேன்! தொல்லையில்லாத விடுதலை பெற்றவன் நான்! எந்தக் குருவிடமும் மன்னிப்புக் கேள்கத் தேவையில்லை. நான் மோட்சந் தேடவில்லை.

எனக்குத் தெரிந்து உலகம் ஒன்றே, அஃது அகண்ட உலகினும் பெரிய உலகம் அது நான்! நானே!
முணு முணுப்பதில்லை எதற்கும். பாபத்திற்கு அழுவதில்லை, யாரையும் தொழுவதில்லை, கடவுளையும் குருக்களையும் பற்றிப் பேசிக் காதைத் துளைப்பதில்லை. இல்லை என்ற கவலை இல்லை. சேர்த்துப் பூட்டும் பித்தமில்லை. முன்னோருக்குப் பணிவதில்லை. சடங்கு சங்கடம் எனக்கில்லை.

எனக்குக் கட்டில்லை; தாவவில்லை, சட்ட திட்டமில்லை.

பிறர் புண்ணானால் நானும் புண்ணாவேன், மற்றவர் மகிழ, நானம் மகிழ்கிறேன்.

தத்துவ ஏடுகளைவிட, என் பலகணியருகே காலக்கதிரோன் பூத்திடுவது எனக்குக் களிப்பூட்டுகிறது.
போனவை போகட்டும்! புத்துலகு, பேருலகு காண்போம். நாம் காண வேண்டிய உலகு, தொழில் உலகு! உறுதி உலகு! அதற்கு வழி காண்பீர்!

நரகம் எனும் பூச்சாண்டி எனக்கு வெறும் தூசி மோட்சம் எனும் மாயவலை எனக்கு அணுமாந்திரம்!
உயரிய கருத்துகளே!
மனிதக் குறிக்கோள்களே!
வீரமே! ஆரவமே! ஆற்றலே!
நீவிர், எனக்கு ஆண்டவராகுக!

-------

இதுபோலப் பரம்பரைக்காரர் பயந்தோடும்படிப் பாடினார், புரட்சிக் கவிகளை, விட்மன்! அவரை ஒரு கவி என்று ஏற்க மறுத்தனர். கவலை கொள்ளவில்லை. கொடுமையைச் சாய்ந்தார்! மடைமையைச் சாடினார்! மணிமொழியை வீசினார்! ஏழ்மைகண்டு பயந்தாரில்லை ஏளனம் கண்டு சலித்திடவில்லை! எதிர்ப்புக்கு அஞ்சவில்லை.

வால்ட் விட்மன் ஒரு வம்பன் என்றனர், வாதாடவில்லை! அவன் ஓர் அபாயக் குறி என்றனர்! ஆம்! என்றான். அவனை வெறுத்தனர், கண்டித்தனர், ஆனால் அவனைத் தங்கள் உள்ளங்களிலிருந்து மட்டும் பெயர்த்தெடுத்துவிட முடியவில்லை. அவனுடைய கவிதைகள், உள்ளத்திலே, ஊடுருவிச் சென்றுவிட்டன. தம்மையுமறியாமல், அவன் வயத்தாராயினர்.

அத்ததைய வால்ட் விட்மன் அமெரிக்காவில் எளியகுடியல் 1819-ல் பிறந்தார், 1892-ல் இறந்தார், இடையே பல்கலைக் கழகத்திலே படித்தாரில்லை, அவருடைய கவிதைகளை பல்கலைக் கழகங்களுக்கு அளித்தார், செல்வத்தைச் சேர்த்திடவில்லை, செல்வத்தை ஈந்தார், செருக்குற்று அவரிடம் சீறினோரும், பின்னர், அவர் கவிதைகளின் சிறப்பை உணர்ந்தனர், வால்ட் விட்மனின் கவிதை புரட்சிப் பொலிவுடன் இருக்கக் கண்டு போற்றினர்.

அமேரிக்கா, அங்கு தோன்றிய பாரதிதாசனைப் போற்றலாயிற்று, அவனுடைய 120-ம் ஆண்டுவிழாவை ஆனந்தமாகக் கொண்டாடிற்று. நியூயார்க்கில் வால்ட் விட்மனுக்குச் சிலை அமைத்தனர்!

நாம், நமது பாரதிதாசனுக்குச் செய்தது என்ன? ஏதும் செய்ய வகையற்றவரா நாம்? என்னை நான் இக்கேள்வி கேட்டுக்கொள்ளுகிறேன், உங்களையும் கேட்கிறேன். ஒரு கணம் எண்ணிப் பாருங்கள், பாரதிதாசன், அங்கு பிறந்திருந்தால்!
(திராவிடநாடு - 01.04.1945)