அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அமெரியின் அக்பர் பூஜை!
மாளிகையிலே அழு குரல், மாரடிதுக் கொண்டு மாதர்கள், மண்டையிலடித்துக் கொண்டு ஆடவர், கூக்குரலிட்டுக் கொண்டு ஆடவர், கூக்குரலிட்டுக் கொண்டு குழந்தைகள், கோவெனக் கதறிக்கொண்டு பணியாட்கள், கோரமான காட்சி. வீட்டுக்குடையான், வேற்படையான்! அனைவரையும் அடக்கி ஆண்ட ஆண்மையாளன், சாய்ந்து விட்டான், செல்வமும் சுகமும் விட்டு, சுற்றமும் நட்பும் விட்டு, வீட்டினர், அவனை நம்பி வாழ்ந்தவர், அவனாதரவில் இருந்தவர்கள், களத்திலே போரிட்டு மாள்கையில் கண்ணிழந்தார் கலங்குவதுபோல், இனி எங்ஙனம் வாழ்வோம், எவ்வாறு உய்வோம் என்று திகைத்து திக்கெட்டும் கேட்குமாறு அழுகின்றனர்.

மாண்ட மறவனின் முன்னவன், முதுமை எனும் முற்றத்திலே முடங்கிக் கிடக்கிறான், செயல் சிந்தனை மறந்து, கண்ணில் ஒளி இல்லை, கைகளிலே வலி இல்லை, கருத்திலே குழப்பம், உயிர் மட்டும் ஊசலாடுகிறது.

திவான் சாய்ந்ததும் மாளிகையிலே மாநிதி ஏராளம், நிலபுலன்களும் அதிகம். அபலைகளும், பால்மனம் மாறாப் பாலரும், படுத்த படுக்கையாளரும், கிழவருமே இருந்தனர். பஞ்சாயத்துத்தாரராகச் சிலர் நுழைந்தனர்களே. சொத்துக்களைக் கண்காணிக்க போகாதிருக்க, நிர்வாகம் செய்ய. அதே நேரத்தில் மாளிகையின் நிலை தெரிந்தவர்கள், அகப்பட்டதைச் சுருட்டினர், ஆளுக்கொரு தடி தூக்கினர், பட்டங்கள் பறிபோயின. பணியும் பட்டும் கொள்ளையாயின, பண்ணையாள் வயலுக்குடையோன் நானே என்றான், பலரும் பலவகையிலும், பரிதாபத்துக்குரிய அந்தக் குடும்பச் சொத்தைக் கொள்ளையிட்டனர். வந்த பஞ்சாயத்துக்காரர் சொத்துக் குடையானிடம் அன்பும், நீதி நேர்மையிலே நாட்டமும் கொண்டவராக இருப்பின், என்ன செய்ய வேண்டும்? அமளியைச் சாக்காகக் கொண்டு அகப்பட்டதைச் சுருட்டும்வரை அடக்கி, சொத்தைப் பாதுகாத்து, உரிமையாளரிடம் தரவேண்டும். ஆனால், திடீர் மரணத்தால், திணறிப் போகும் குடும்பத்திலே, பெரும்பாலான இடங்களிலே, பஞ்சாயத்துக்காரர், இந்தப் பண்பைக் காட்டினதில்லை. ஒரு குடும்பத்தின் வேதனை, வேறு பலருக்கு விருந்தாகவும், ஒரு சொத்துக் குடையானின் அழிவு, வேறு பலரின் கொள்கைக்கும் இடமளிப்பதை, நாட்டிலே, பலமுறை நாம் கண்டிருக்கிறோம். இதனால் சிந்திய மூக்கினர் சிரிக்கும் சீமானானதையும், சீமானின் குடும்பம் செல்லறித்துப் போவதையும் கண்டுள்ளோம். பஞ்சாயத்துக்காரர் மட்டும், பக்குவமாக ஒழுங்காக நடந்திருப்பரேல், சொத்து இப்படியா சூறை போயிருக்கும், என்று சோகிப்பதைக் கண்டோம். கதறுவதைக் கேட்டிருக்கிறோம்.

பாதுஷா பக்கிரியானால்!
வட நாட்டிலே யிருந்த இஸ்லாமிய அரசகுடும்பத்தின் கடைசி நாட்களின் கதி, இது போலத்தானாயிற்று. ஷா ஆலம் கண்ணிழந்து கதியிழந்து, முன்னாளில் முடிதரித்திருந்த மொகலாயரை எண்ணி எண்ணி ஏங்கி, புலிகள் வாழ்ந்த இடத்திலே, கிலி குடி கொண்டதைக் கண்டு கதறி, மொகல் குடும்பம் சிதறுண்டு, சின்னாபின்னமாகி விட, தாஜ்மஹாலைக் கட்டிய பரம்பரை, தங்கும் விடுதிக்கே தர்மசாலைகளைத் தேடுவது காண, மனம் குழம்பிக் கிடந்தார். அந்த நேரம் பார்த்து, முன்னம் ஒடுங்கிக் கிடந்தவர்கள் ஆர்ப்பரிக்கலாயினர். கொஞ்சினவர்கள் கர்ஜித்தனர், சலாமிட்டு நின்றவர்கள் யுத்த சன்னத்தராயினர்; ஆம்! பாதுஷா பக்கிரியானால், குலாமும் குனிந்து சலாமிடானன்றோ! மொகல் குடும்பத்தின் நிலையும் அஃதே போலாயிற்று. அந்த நேரத்தில் விந்தையான சீமைச் சாமான் வாங்கல்லையோ ஐய்யே! என்று விலைகூறி விற்க வந்த ஆங்கிலர், பஞ்சாயத்துதாரர் ஆயினர். ஆனால் வழக்கமாக நடைபெறும் வல்லடி நடந்ததேயன்றி, வடநாடு எனும் குடும்பம், மொகலாயர் சொத்து, அதை அவர் வசம் மீட்டுத் தருவதே பஞ்சாயத்தார் கடமை என்ற முறையிலே ஆங்கிலேயர் நடந்து கொள்ளவில்லை. இந்த ஆரம்பக் கோளாறு, மூல நோயே இன்று வரை நாம் காணும் பலவிதமான அரசியல் தொல்லைகட்கும் காரணம். வாழ்ந்து கெட்ட வல்லரசு மொகல் அரசு, வளைந்து கெட்டது திராவிட அரசு, இரண்டுக்கும் கை கொடுத்திருக்க வேண்டியதே பிரிட்டிஷ் அரசின் கடமை! நீதி! ஆனால் வஞ்சனைக்காரர், வல்லரசுகளின் வாரிசுகளாகினர், அதற்கு ஆங்கில வியாபாரிகள் வந்தோம், பொருள் விற்றோம், இலாபம் பெற்றோம் என்று இருப்பதே நமது கடமை என்று எண்ணி இடமளித்தனர், இடர் வளர்த்தனர்.

அமெரியின் பூஜை
அன்று, அக்பர், ஹாஜஹான், அவுரங்கசீப் முதலியோருடைய நினைப்பும், ஆங்கிலருக்கு இல்லை! பாண்டியன், சேரன், சோழன் என்ற பெயர்களைப் பட்டியலேயும் சேர்த்தனரில்லை. பரந்த இந்த உபகண்டம், பராமரிப்பாரற்றுப் பரிதவிக்கும் நிலைமை தெரிந்ததேயன்றி, இந்தப் பாதகத்துக்குக் காரணர் யார் என்பதைக் காணவேண்டு மென்ற நினைப்பும் இல்லை. புல்லுருவிகள் ஆங்கிலரைச் சுற்றி நின்று புன்னகை புரிந்தன! பூரண கும்பங்களைத் தாங்கிய பூசுரக் கூட்டத்தைக்கண்டுச் சீமையினர் பூரித்தனர்.

இரு இனமும் இன்று எழுச்சி பெற்றிருக்கிறது, “எமது அரசு எமக்கு” என்று கூறுகின்றன. இந்த நேரத்திலே அமெரி துரைக்கு, திடீரென்று, அக்பர் மீது அன்பு, இந்தியா ஒரே நாடாயிற்றே என்று ஆர்வமும் பிறக்கிறது! பாருங்கள், நமக்கெல்லாம் இல்லாத நாட்டுப்பற்று, அமெரி துரைக்கு!! அக்பர் விழாவாம் சீமையிலே, அதிலே அமெரியின் சொற்பொழிவாம்! இங்கு ஆண்ட அக்பரின் பரம்பரை, ஆண்டிகளாகிக் கிடக்க, அவர்களை ஈடேற்ற ஒரு தலைவர் ஓயாது உழைக்க, அங்கே அமெரி துரை அக்பருக்கு அர்ச்சனை செய்கிறார், அது கேட்டு, இந்துத் தலைவர்கள், சந்தோஷிக்கின்றனர். ஏன், பிறந்தது, அக்பர் மீது இத்துணை அன்பு? எதற்காகக் கொண்டாடினர், அக்பர், விழாவை? அக்பர், எவ்வண்ணம், இந்தியாவை ஒரே நாடெனக் கருதினாரோ, அது போல் இதுபோது, இநதியா ஒரே நாடென்று கருதவேண்டுமாம், இன அரசு கேட்பது கூடாதாம். உபதேசத்தைப் புரியவே, அக்பர் விழாவைப் பயன்படுத்திக் கொண்டனர்.

சிவாஜி விழா கொண்டாடி இந்து - முஸ்லீம் பிணக்கை வளர்க்கும் சீலர்கள் போல், ரஞ்ஜித்சிங் விழா கொண்டாடி முஸ்லீம் - சீக்கியர் மண்டை மோதுதலுக்கு அச்சாரம் கேட்கும் அன்பர்கள் போல், அங்கே அமெரி துரை, அக்பர் விழா கொண்டாடி, பாக்கிஸ்தான், திராவிடஸ்தான் பிரச்னையைப் படுகுழியில் தள்ளப் பார்க்கிறார். இந்து - முஸ்லீம் எனும் இரு இனத்தையும் ஒன்றெனக் கொண்டு கோலோச்சினராம் அக்பர். அவர்போல், இரு இனத்தையும் ஒன்றெனக் கருதும் உயர்ந்த இலட்சியம் தேவையாம்!

அந்த நாள் அஜாத்!
ஐயா, ஊர்க்குபதேசியாரே! உத்தமமான கொள்கை என்று கூறினீரே உம்மைக் கேட்கிறோம், நீரும், இங்குள்ள ஆரியரும் அக்பரை, அண்டம் முட்டப் புகழ்வது ஏன்? அவருடைய சமரச ஞானத்தைப் போற்றும் அன்பர் குழாமே! அவர் வழி நின்றீரா நீவிர்! அவ்வளவு ‘திராசாட்சி’ நடத்திய, திலக மிட்ட அக்பருக்கு அந்தக் காலத்திலே இந்து மன்னர்கள், தொல்லை தராமற் போயினரா? அவர் காலத்துக்குப் பிறகு, மொகல் அரசைச் சிதைக்க முகாம்கள் போட மறந்தனரா? அக்பரின் முயற்சி, முறியடிக்கப்பட்டதைச் சரிதம் காட்டுகிறதே யன்றி, வெற்றி பெற்றதையா காட்டுகிறது? வெற்றி பெற்றிருந்தால், இன்று வடநாடு முழுவதும் பிறைக் கொடியின் பெருமித ஆட்சியின் கீழ் இருந்திருக்குமே! ஏன் நடக்கவில்லை அது!

அக்பர், புகழப்படுவதற்குக் காரணம் என்ன? இந்து மன்னர்களை அவர் முறியடிக்க வில்லையா? இந்து மண்டலங்களை மொகல் ராஜ்யத்திலே இணைத்துக் கொள்ள வில்லையா? ரஜபுத்ர வீரர்களை ரணகளத்திலே சந்திக்கவில்லையா? அமளி இல்லையா? அக்பரின் ஆட்சியை ஏற்க மறுத்த எந்த இந்து மன்னனையும் அவர் சமரச ஞான கீதம்பாடித் திருப்பி விடவில்லை, சமரில் திறம் காட் டியே வென்றார், வென்றபிறகு, அவருக்கு அம்மன்னர்கள் வெண் சாமரம் வீசினர். அக்பர், சக்தியாலும், யுக்தியாலும், அளவிட வேண்டும் என்ற எண்ணத்திலே அவருக்கு ஆழ்ந்து கிடந்த பக்தியாலும், தமது ஆட்சியை ஸ்திரப்படுத்தினார். அவருடைய தந்திரத்தைப் பாராட்ட லாம், வெற்றிகள் கண்டு விருதுகள் தரலாம், ஆனால், அவரே சமரச தூதுவர், அவர்போல் இனி பாகிஸ்தானிகள் ஆகவேண்டும் என்று ரைப்பது, அக்பரிடம் கொண்ட அன்புக்கு அறிகுறியன்று, அக்பரின் இனத்தவரை இளித்த வாயராக்க வேண்டும் என்ற எண்ணம் என்று ரைப்போம், இல்லையேல், இந்து மன்னர்களை முறியடித்ததில் எந்த மொகலாயருக்கும் குறையாத, அக்பரை மட்டும் புகழ்வது ஏன்? வெற்றிகள் பெற்ற பிறகு, அவர், ஆட்சி சுமுகமாக நடக்க அபுல்கலாம் ஆஜாது ஆனார்! ஆரியரும் ஆங்கிலரும் அகம் குழை வதன் மர்மம் அதுதான். இந்துத் தலைவர்களைத் தட்டிக் கொடுத்து தர்பாரில் இடமளித்தார். முஸ்லீம்களுக்கு உள்ள இன அன்பு எப்படி இருப்பினும் தனக்குத் துணை செய்யும், எனவே, அவர்களை ஆதரிக்க வேண்டியது மில்லை, எதிர்க்கும் இந்துக்களுக்கு, இரண் டோர் பதவிகள் கொடுத்தால் அவர்கள் அடங்கிக் கிடப்பர் என்ற தந்திரத்திட்டம் வகுத்தார், ரஜபுத்ர ரசவல்லிகளை ஜனானாவிலே உலவவிட்டார், அதன் பயனாக ரஜபுத்ர வீரர்களின் எதிர்ப்பை அடக்கினார். இவ்வளவுடன் மற்றோர் காரியம் செய்தார், ஆரியத்தை ஆதரித்தார். அவரிடம் சவர்க்கார்களும், சர்க்கார் அதி காரிகளும் அன்பு காட்டுவதும் அவருக்குப் பத்திரிகை உலகம் தலையங்கம் சூட்டுவதும், இக்காரணம் பற்றியே. அக்பருக்கும் மற்ற மொகல் மன்னர்களுக்கும் வித்யாசம் வேறு எதிலுமில்லை; மற்றவர் கள் ஆரியத்தை ஆதரிக்க வில்லை, அக்பர் ஆரியத்தை ஆதரித்தார். ஆகவே தான் வார்தா வாசியான ஆஜாதுக்கு அக்ரகாரம் அன்பு காட்டுவது போல, அக்பருக்கு ஆரியரும் ஆங்கிலரும் அன்பு காட்டு கின்றனர், அவர் நாமம் வாழ்க என்றுரைக்கின்றனர் அவர் வழியே மெய்வழி என்று செப்புகின்றனர்.

ஆங்கில உபதேசி
இங்ஙனம் செய்தலே முறை என்று ஆங்கிலருக்கு, ஓர் ஆங்கில ஆசிரியர் நன்னூல் கூறியுமுள்ளார்.

ஈ.பீ. ஹாவல் என்ற ஆசிரியர் பிரிட்டிஷாரும் ஆள நினைக்கும் பேர்வழிகளும், அக்பர் எங்ஙனம் ஆரியக் கோட்பாட்டின்படி ஆள முயற்சித்தாரோ, அவ்வழியே ஆட்சி செய்ய முயலுவது சரியாகும் என்று எழுதியுள்ளார்.

அமெரி துரைக்கு ஹாவலின் வாசகம் அரிச்சுவடி! எனவே அவர், ஆரிய வழக்கப்படி ஆள முனைந்த அக்பரைப் புகழ்கிறார், சமயம் கிடைத்ததால், ஆரிய வழிப்படியே, அமெரியே பாதுஷா
வாகவும் இசைவார்!

பதின்மூன்றாம் வயதிலே பட்டத்துக்கு வந்த அக்பர், பரந்த சாம்ராஜ்யத்தின் பாதுஷாவாகப் பரிமளத்தோடு ஆண்டார்; காரணம் பக்குவமாக ஆரியரை சரிப்படுத்தி வைத்துக் கொண்டதுதான்.

சுழல் அக்பரின் ஆட்சியின் ஆரம்ப ஆபத்து சூழ்ந்தது. தகப்பனார் இறந்ததும், தன்னைச் சுற்றிலும் எதிரி கூடாரமடித்திருப்பதைக் கண்ட அக்பர், ராஜஸ்தானத்தில், பாய்மரமிழந்த மரக்கலம் போலிருந்த மண்டலங்கள் முறுக்கு மீசை மன்னர்கள் கிளம்பினர். மாளவம், கூர்ஜரம், ஒரிய நாடு முதலியன ஓங்காரக் கூச்சலிட்டு, சுதந்திரக் கொடிகளை உயர்த்தின. கடலோரத்தில் போர்த்துகீசியர், பொருளைக் காட்டி, ஏசுவின் அருள் மொழி பேசியும், கால் ஊன்றத் தொடங்கினர். இது மட்டுமா!

சூர் வகுப்பினர், சுறாவளி போல் கிளம்பி, அக்பரின் ஆட்சி எனும் மரத்தை அடியோடு பெயர்த்தெடுப்போமென சூள் உரைத்தனர். டில்லி, ஆக்ரா என்ற இரு நகர்களும் சூர் வகுப்பினரிடம் அடங்கின. தலை நகரிலே தாயாதிகள்! சுற்றிலும் சூரர்கள். கடலோரத்தில் வென்றார்! ரஜபுதனத்தில் ரகளை! இவ்வளவு சுழலுக்கிடையே, சுந்தரமான ஓர் வாலிபன், அவன் மனதிலே சாம்ராஜ்ய கனவு.

பணியா புரட்சி
சுழலுக்கு மூலமாக இருந்த சூர் வகுப்பினருக்குத் துணிவும் வலிவும் தந்தது யார் என்று எண்ணுகிறீர்கள்? இந்து, பணியா!! ஹெமு என்ற பணியாவின் உதவி கொண்டே, சூர் வகுப்பினர் புரட்சிப் புயலைக் கிளப்பினர். சூர் வகுப்பினரிடம் வேலைக்கமர்ந்த இந்த பணியா, மொகல் படைகளை டில்லியிலே முடியடித்தான். ஹேமு, சூர்வகுப்பை மூலைக்கு அனுப்பிவிட்டு, ஜெயக்கொடி நாட்டி, விக்ரமாதித்யன் எனப் பெயரிட்டுக்கொண்டு, ஆளத் தொடங்கினான். தர்பார் என்ன! நாணயவாரிகள் விக்கிரமர் என்ற விருது என்ன! விருந்தென்ன, வேடிக்கை என்ன, பணியாவுக்குப் பட்டம் கிடைத்த பார்ப்பனருக்குக் கொண்டாட்டந்தானே!

பைராம்கான் என்ற படைத்தலைவன், அக்பருக்கு அரண்போல் விளங்கினான். அவனுடைய அரிய திறமை வாலிப வேந்தரைச் சூழ்ந்திடும் காட்டை அழிக்க உதவிற்று. பானிபட்டிலே, பைராம்கான், விக்ரமனை வீழ்த்தினான், இளைஞனை அழைத்து “இதோ ஹேமு! இவன் தலையை வெட்டி வீசு” என்றான் பைராம்கான். இந்து முஸ்லீம் சமசர சன்மார்க்கராம் அக்பர், என்ன செய்தார்? இந்துவும் மனிதனாயிற்றே என்று இதோபதேசம் பேசினாரா? இல்லை! ஹேமுவின் தலையைத் துண்டித்தெரிந்தார். ஆகவே, அக்பரின் சமரசக் கட்டடத்திற்கு அஸ்திவாரக் கல் நாட்டு விழாவுக்கு ஒரு பணியாளனின் இரத்தமே அபிஷேகிக்கப்பட்டது. குவாலியர், ஆஜ்மீர், ஜான்பூர், தீவார், கூர்ஜரம், வங்கம், காஷ்மீர், என்ற பல்வேறு மண்டலங்களையும், அக்பர் போரிட்டு வென்று, மொகல் அரசின் அடி பணியவைத்தார்.

சித்தூர் கோட்டையின் முற்றுகை, உதயசிங் ஓட்டம், ஜெயமாலின் வீரம், ராஜபுதனமாதரின் தியாகம், ஆகியவைகள், “சமரச சன்மார்க்கி” இந்து அரசுகளின் மீது போரிட்ட போது நடந்த மயிர் கூச்செறியும் மகத்தான் நிகழ்ச்சிதானே!

பாவம் மாறாது
ஆரியரின் கூத்து காரிய மின்றி நடவாது. இந்து அரசர்கள் சிலர் சுதந்திரமிழந்தனரே தவிர, ஆரியரின் வாழ்வுக்குக்குறை ஏதும் வரவில்லை. யார் அழிந்தாலென்ன, எத்தனை அகழிகளிலே தலைகள் உருண்டாலென்ன, கோட்டைகள் தூளானாலென்ன, தமது வாழ்வுக்கு வழி கிடைத்தால் போதும் என்ற எண்ணம் ஆரியரின் மாற்ற முடியாத சுபாவம், சிறுத்தையின் புள்ளி மாறினாலும், இந்தச் சீலரின் வாழ்வுப் பற்று மாறாது, பாம்பு சீறிட மறந்தாலும் இந்தப் பண்பாளர்கள் தம் பண்பை மறவார்! அக்பர், இஸ்லாத்தை வாழ்க்கை வழிகாட்டியாகக்கொண்டு, இருந்திருப்பரேல் இறந்த ஜெயபாலின் கல்லறை மீது ஆரியரின் கண்ணீர் வெள்ளம் புரண்டிருக்கும்!

ஆனால், எந்த பைராம்கான், இளம்பாதுஷாவுக்குப் பட்டமும் ராஜ்யமும் நிலைக்கச் செய்தாரோ, அவரே, அக்பரால் விலக்கப்பட்டார். அரசனுக்கு ஊழியம் செய்து அலுத்த அவர், ஆண்டவனுக்கு ஊழியம் செய்ய மெக்கா சென்றார், வழியிலே, கொன்று போடப்பட்டார். வீர இஸ்லாமியத் தலைவனான பைராம்கானை அக்பர், வேலையை விட்டு நீக்கியது, இந்து வட்டாரத்துக்கு விலைமதிக்க முடியாத ஓர் விருந்து! மொகலாய வீரர்களின் இரத்தத்தை ரஜபுதனக் களத்திலேயும், கங்கைக் கரையிலேயும் சிந்தவைத்துச் சித்தரித்த மொகல் தர்பாரிலே, யாருக்கு முதல் தாம்பூலம்? யாரை அக்பர் முக்கியமான வேலைகளிலே அமர்த்தினார்? படியுங்கள் பட்டியை! ஆரியர்கள் அக்பர் விழா கொண்டாடும் காரணம் விளங்கும்! ராஜா பகவான்தாஸ், ராஜாமான்சிங், தோடர்மால், பீர்பால்! இவர்கள் அரும்பணியாற்றினர் என்பதை நாம் மறக்கவில்லை. ஆனால் இவர்கள், மொகல் ஆட்சியிலே இடம் பெற்ற இந்துக்கள் என்பதையும் மறக்க மறுக்கிறோம். உதயபுரி போனாலென்ன, மேவார் வீழ்ந்தாலென்ன, சித்தூர் சரிந்தாலென்ன, தர்பாரிலே இருப்பவர், நம்மவர்தானே! என்பதே ஆரியரின் பூரிப்பு.

தீன் - இலாஹி
ஜனாப் துரானி எம்.ஏ.எல்.பி., அக்பருக்குக் கொரானில் நம்பிக்கை குறைவு என்றும் கலிமாவையே அவர் ஏற்றுக் கொள்வதில்லை என்றும், கூறுகிறார்.

தாரா சந்த் என்ற இந்து ஆசிரியரொருவர், அக்பர் காலத்து முஸ்லீம் ஆசிரியர்கள், தமது நூலுக்கு முதலில், பிஸ்மில்லா என்று பொறிப்பதற்குப் பதிலாக, ஸ்ரீ ராம், ஸ்ரீ சரஸ்வதி ஹரி ராதா கிருஷ்ணஜீ” என்று பொறித்தனர் என்று கூறுகிறார்.

அபுல் அலா மவு தூதி, எனும் லாகூர் முஸ்லீம் பிரமுகர், “இவ்வளவு ஏனப்பா, அக்பர் படத்தைப் புத்தகங்களிலே பாருங்கள், நெற்றியிலே திலகத்தோடு இருப்பார்” என்று கூறுகிறார்.

இங்ஙனம், இஸ்லாமிய நெறியினையே கடைப்பிடிப்பது என்ற கட்டு நீக்கி, எம்மதமும் சம்மதம் என்று இருந்தார் அக்பர்! ஆரியரின் பூரிப்புக்குக் காரணம் அதுதான். யாருக்கு எந்த ராஜ்யமிருப்பினும், தங்கட்கு “மதராஜ்யம்” இருக்க வேண்டும்; மற்ற ராஜ்யங்களின் வருமானத்தை விட, மதராஜ்யத்திலே அதிகம் என்பது ஆரியருக்குத் தெரியும்! இதற்கு அக்பர் இடமளித்தார், எனவே தான், அக்பரை ஆரியர் ஓர் ஆழ்வாராகக் கருதினர். அக்பர் தர்பாரிலே இந்து பண்டிதர்களும், பாவாணரும், சிற்பியும், ஓவியக்காரரும் வாழ்ந்தனர். பதினேழு ஓவியக்காரராம் அவர் தர்பாரிலே, அவர்களில் பதின்மூவர் இந்துக்கள்! சமஸ்கிருதத்தை அக்பர் ஆதரித்தார், வடமொழி கிரந்தங்களான பாரதம், இராமாயணம், ஆகியவற்றைப் பெர்ஷிய மொழியிலே பதிப்பிக்கச் செய்தார். இஸ்லாம் எதற்கு, ஓர் கதம்பம் தயாரிப்பேன் என்று கூறி, அபுல் பாஜல் என்பாருடன் கலந்து அக்பர், தீன் இலாஹி என்ற புதிய மார்க்கமும் ஏற்படுத்திப்பார்த்தார். முஸ்லீம் அறிவாளிகளை மூலையில் துரத்தினார். தனது ஒன்றுவிட்ட சகோதரனான முகமத் ஹக்கீம் என்பவர் காபூலில் ஆண்டிருந்தபோது, அக்பராட்சியிலே வெறுப்புகொண்டு அங்கு சென்று முஸ்லீம் பிரமுகர்கள் தங்கினதற்காக ஹகீமைக் காபூலை விட்டு விரட்டினார்.

அமெரி மறந்தார்
1575ஆம் ஆண்டு வரையிலே, அக்பர், ஓர் நல்ல முஸ்லீமாக இருந்தார், குரான் வாசித்து, தொழுகை செய்து கொண்டிருந்தார். பிறகு மாறி விட்டார்” என்று எம்.எஸ். ராமசாமி ஐயங்கார் எழுதியிருக்கிறார் பள்ளிப் பிள்ளைகளுக்குத் தயாரித்த பாட புத்தகத்திலே!

ஆரியத்தை ஆதரித்தால், அந்த மன்னர்களைத் தேவாம்சம் என்று புகழ்வதும், மக்களைத் துதிக்கச் சொல்வதும் ஆரியத்தைக் கருவறுப்பின் அவர்களை அசுராம்சம் என்று திட்டுவதும், மக்களை அவர்களுக்கெதிராகக் கிளப்பி விடுவதும், ஆரியர் ஆதிகால முதற்கொண்டு செய்து வரும், ராஜ தந்திரம். ஆரியத்தை ஆதரித்து, ஆட்சியை நிலைக்கச் செய்வது என்ற நியதி அக்பருக்கு. அவ்
வழியைப் பின்பற்றும்படி ஆசிரியர்கள் கூறியதை மறவாது, அமெரி துரை, அக்பர் விழாக் கொண்டாடினார் போலும்! ஆனால், இப்போது இஸ்லாமிய சமுதாயம் தீன் இலாஹி கேட்டுத் திருப்தி கொள்ளும் பருவத்திலில்லை! அமெரி அதைத்தான் மறந்து விட்டார்!!

சிவாஜியை சத்ரபதி என்று பூஜித்தனர் ஆரியர், அதன் பலன், மராட்டிய சாம்ராஜ்யம், பீஷ்வாக்கள் எனும் பார்பனரிடம் போனதுதான், சீக்கியரைச் சீலமுடையோரே! சிங்கங்களே! என்று ஆரியர் புகழ்ந்தனர், அதன் பலன், சீக்கியரும் இஸ்லாமியரும் பகைத்து நிற்பதே! ரஜபுத்திரரை, சூரிய குலம் சந்திர குலம் என்று துதித்தனர், அதன் பலன், அம் மன்னர்களின் இரத்தம் மணல் வெளியிலே புரண்டதுதான், செந்தமிழ் நாட்டிலோ, அவர்கள் பரமபாகவதன்! பக்திமான்! மனுநீதி தவறாத மன்னன்! என்று நமது மறத்தமிழரைப் புகழ்ந்து வைத்தனர், அதன் பலன், மூவேந்தர் வரலாறே மூடுமந்திர மாக்கப்பட்டு, முச்சங்கம் அழிந்து, மும் முரசு கெட்டு, மூவரின் பின்னோர் மூட்டைதூக்கிகளானதே! ஆரியத்தை நம்பினால் அழிவோம் என்ற பாடம் தெரிந்தவர், அமெரி துரையின் பூஜை கண்டு மயங்கார், அதனை மதியார்!!

(13.12.1942)