அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அமிரேமில்லத்தின் அறவுரை

மெக்காவிலிருந்து மெதினாவுக்குத் துரத்தப்பட்ட நபிகள் நாயகத்தின்மீது வீசப்பட்ட கற்கள், இஸ்லாமியக் கோட்டைக்கு அஸ்திவாரக் கற்களாக மாறின! அவருடைய உடலிலே எழும்பிய தழும்புகள், அவருடைய கொள்கைகளை உலக மக்களில் பல கோடி பேரின் இருதயத்திலே பதிய வைத்தன. அரபு நாட்டு மணலிலே சிந்திய இரத்தம் வீண் போகவில்லை. உலகிலே வேறு எந்த மார்க்ககர்த்தாவும் சாதித்துக் காட்டாத, சகோதரத்துவத்தை, நபிகள் நாயகம் நிலைக்கச்செய்து விட்டார். நிந்தனைக்கும் கொலைக்கும், கேலிக்கும் முள் வேலிக்கும், முரடரின் ஈட்டிக்கும் மூடர்களின் சாட்டைக்கும், பயந்து விடுவோர், உலக உத்தமராக முடியாது! கல்லடிபட்ட கலீலியோ, கடுவிஷங்குடித்த சாக்ரடீஸ், சிலுவையில் அறையப்பட்ட ஏசு ஆகியோர், இன்றும், உலகில்அறிவு உள்ளளவும் போற்றப்படுவர். கொள்கைக்காகப் பயந்தால், கொள்கை நிலைக்காது. சுறாவுக்கும் சுழலுக்கும், பாறைக்கும் படுகுழிக்கும் பயந்தால், முத்து, எடுக்க முடியுமா? மூடரும் கேடரும் முகாமதைத்துகொண்டு, தலையை உருட்டுவோம் என்று தாக்கீது விடுத்திடக்கண்டு திகில் கொண்டால், தனது இனம் வாழ வழிகண்ட வீரன் என்ற நிலை எங்ஙனம் இருக்க முடியும்! இந்த உண்மையினை, ஜனாப் ஜின்னா அவர்கள், தமது ஈத்பிரசங்கத்திலே, அழகாக எடுத்துக்காட்டி இருக்கிறார். முஸ்லீம் லீகை முறியடிக்க மூடர்கள், தலைவர்களைக் கொன்றால் போதும் என்று கருதுகிறார்கள், அது நடவாது, தலைவர்களின் தலை கீழே உருளலாம், ஆனால் லீக் உடையாது, என்று உருக்கமாகப் பேசியுள்ளார். ஜனாப் ஜின்னாவின் பச்சை இரத்தம், பாகிஸ்தானுக்காகவே பரிமாறப்பட்டது. அந்தப் பாகிஸ்தான் எனும் இலட்சியத்தையும் ஈத்திரு நாளன்று, அவர் நினைவூட்டினார். அது மட்டுமன்று! திராவிடர் போலவே இஸ்லாமியரும், இன்று, கூலிகளாய், பாட்டாளிகளாய், வாழுகிறார்கள். ஆட்சிப் பீடத்திலே அவர்களுக்கு உயர் பதவிகள் இல்லை என்பது மட்டுமன்று, சமுதாயத் துறையிலே அவர்களை இன்னமும், ஜாதி இந்துக்கள் பேதமாக நடத்துகிறார்கள் என்பது மட்டுமன்று இந்து மகாசபைக்காரர்கள், முஸ்லீம்கள் வெளி நாட்டவர், அவர்கள் இந்து ஆட்சியிலே அடங்கித்தான் வாழ வேண்டும் என்று இறைச்சலிடுகிறார்கள் என்பது மட்டுமன்று, பொருளாதாரத் துறையிலே, மிகமிகப் பின்னணியிலே நின்று தவிக்கின்றனர். இந்த உபகண்டத்திலே உள்ள முக்கியமான வியாபாரத்துறை, மார்வாரிகளிடம், பனியாக்களிடம் இருக்கிறது! பெரிய, மேனாட்டு முறையுடன் கூடிய அமைப்புள்ள தொழிற் சாலைகள், வட நாட்டு இந்துக்களிடமே உள்ளன. இலாபகரமானதும், பல இலட்சம் பாட்டாளிகளின் உயிருக்குப் பொறுப்பானதும், கோடிக்கணக்கிலே வருவாய் தரக்கூடியதும், நாட்டு நிலையைத் திருத்தி அமைக்கக் கூடியதுமான பெரிய தொழிற்சாலைகள், பனியாக்களிடமே உள்ளன. பிரிட்டிஷார் ஆளுகின்றனர், பார்ப்பனர் ஆத்மீகத்தைக்காட்டி வாழுகின்றனர், பனியாக்கள் வியாபாரத்தால் கொழுக்கின்றனர், திராவிடரும் இஸ்லாமியரும், மூவருக்கும் முறிச் சீட்டு எழுதிக்கொடுத்துவிட்டு, எலும்பு தேய உழைத்து, இருதயம் கெடக் கவலைகொண்டு, இகத்தின் சுகமிழந்து, பரலோகப் பிராயணச் சீட்டுக்குப் பணம் கிடைக்குமா, என்று காத்திருக்கும் நிலையில் உள்ளனர். திராவிடரிலும் இஸ்லாமியரிலும் சீமான்கள் சிலர் உள்ளனர்! நவாபுகள் சிலர் இருக்கலாம், ஆனால் பத்து கோடி இஸ்லாமியரிலே, அவர்கள் சிறு துரும்பு!

இந்நிலையை ஜனாப் ஜின்னா எடுத்துக் காட்டி, இஸ்லாமியர்கள், தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும், வியாபாரக்கோட்டைகள் அமைக்க வேண்டும் என்று ஈத்திருநாளன்று கூறினார்.

காந்தியார், குடிசைத் தொழிலில் ஈடுபடச் சொல்லுவார் ஆனால் அவருடைய இனமான பனியாக்களோ, விண்ணை முட்டும் புகைகூண்டுகள் கொண்ட தொழிற் சாலைகளை அமைத்து, ‘துரைமார்களை’ வேலைக்கு அமர்த்திக் கொள்ளும் முதலாளி களாகத்தான் வாழுகிறார்கள். மேனாட்டு தொழில் முறையைக் குறை கூறும் பிரச்சாரத்துக்குப் பனியாக்கள் தாராளமாக நன்கொடை வழங்குவர்! கைக்குத்தரசிக் கடையின் திறப்பு விழாவாற்றுவர், கதர்க்கடையின் ஆண்டு விழாவுக்குப் பிரசன்னமாவர், ஆனால் மிகத் தந்திரமாக, திறமையாக தொழில் வளர்ச்சித்துறையினைக் கைப்பற்றிக் கொண்டு முதலாளிகளாகி, ஆட்சியாளரை மிரட்டும் செல்வாக்கும் செருக்கும் பெற்று, செந்நிற வெள்ளையராக மாறி விட்டனர்! பொருளாதாரத்துறை இங்ஙனம் ஓர் இனத்தின் போகக் கருவியாவதைத் தடுக்கவே, அமிரேமில்லத் இந்த அற உரை புகன்றார். திராவிடரும் இஸ்லாமியரும், ஜனாப் ஜின்னாவின் மொழி வழி நிற்க வேண்டுகிறோம். பேரீச்சம்பழக் கடையும், புலிமார்க் பீடிக் கம்பெனியும், பழைய பித்தளைப் பாத்திரக்கடையும், பச்சரசிக் கிடங்கும், விறகுத் தொட்டியும் நமக்கு. பனியாக்களிடமோ, பருத்தி, இரும்பு, தங்கம், வைரம், முதலிய முக்கியப் பொருள்கள், விமானம் மோட்டார், இயந்திரச்சாலை முதலிய தொழிற்சாலைகள், என்றுள்ள இந்தக் கேவலம் மாற வேண்டும். லங்காஷயருக்கும், மான்செஸ்டருக்கும் அடிமைப்பட்டோம் என்று கூறி அழுத கண்களைத் துடைத்துக் கொண்டு, நமது மக்கள் இன்றைய நிலையைக் கவனிப்பரேல், ஜம்ஷெட்பூருக்கும் ஷோலாப்பூருக்கும், பம்பாய் நகருக்கும் பொருளாதாரத்துறையிலே நாம் அடிமையாகி இருப்பதை உணரமுடியும்! இந்த அடிமைத்தளையை உடைத் தெறியுமாறு தான் ஜனாப் ஜின்னா ஈத்திருநாளன்று கூறினார்.

10.10.1943