அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அன்பழைப்பு

மதவேடம் புனைந்துள்ள மகாத்மாவை, வியாபாரக் கோமான்களும், அரசியல் சூதாடிகளும், பயன்படுத்திக் கொள்கின்றனர்.

அவர்களின் பண மூட்டைகளே கோட்டைச்சுவராக, காங்கிரஸ் எனும் கட்சிக்கு அமைந்திருக்கிறது.
காங்கிரஸ் என்ற கட்சி, ஆதி நாட்களிலே, ஜனநாயகம் பேசிக்கொண்டிருந்தது; பிறகு நாளாவட்டத்தில் அது ஒரு சர்வாதிகாரச் சதிகாரர் கூடமாகிவிட்டது.

பிற கட்சிகள், இலட்சியக்காரர்கள் ஒருவரையும், ஆட்சியாளராக இன்றுள்ள அன்னியர், பொருட்படுத்தக்கூடாது என்பது, காங்கிரசின் திமிர் வாதம்.

நாட்டிலே காங்கிரசே பெரிய கட்சி; இந்துக்களே மெஜாரிடி, ஆகவே காங்கிரஸ் கூறுகிறபடி நடந்து, ஜனநாயகக் கொள்கையின் படி, பெருவாரியான மக்களாக உள்ள இந்துக்களிடம் கட்சியை ஒப்படைக்க வேண்டும் என்பது காங்கிரசின் கிளர்ச்சிக் குரல்.

மேனாட்டுச் சமுதாய அமைப்பு, ஒரு நாட்டிலே ஒர் இனம் பெருவாரியாக இருக்கும் விதமாகவும், சமுதாயத்திலே அந்த இனத்துக்குள் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, என்ற இழிந்த மனப்பான்மை கொண்ட பேதங்கள் இல்லாத விதத்திலும் இருக்கிறபடியால், அங்கு, எங்கு, பெருவாரியாக எந்தக்கூட்டம் இருக்கிறதோ, அக்கூட்டத்திடம் அரசாளும் உரிமையைத் தருவதான ஜனநாயக முறை, ஏற்றதாகவும், நடைமுறையில் வசதி தருவதாகவும் இருக்கிறது.

பார்லிமெண்டரி ஜனநாயக முறை எனும், இந்த ஏற்பாடு, இந்தியாவுக்குப் பொருந்தாது; ஏனெனில், இந்தியா பல இனம் கொண்ட ஒரு கண்டம். எனவே இங்கு, பார்லிமெண்டரி ஜனநாயக ஆட்சி முறை, சரியாக வேலை செய்யாது.

இனத்திற்கோர் இடமென்று பிரிக்கப்பட்டு, அந்தந்த இடத்து மக்களுக்குச் சுயநிர்ணய உரிமை தரப்பட்டு, ஆட்சி அமைக்கப்பட வேண்டும்.

காங்கிரசோ, இதனை மறுக்கிறதுடன், பார்லிமெண்டரி ஜனநாயக ஆட்சி வேண்டுமென்று கிளர்ச்சி செய்கிறது.

அந்தக் கிளர்ச்சியை, இந்தியாவைச் சுற்றி எதிரிகள் உலவும் பயங்கர வேளையிலே, பிரிட்டிஷாரின் பிடி, பர்மா, மலாய், பகுதிகளிலே தளர்ந்தது தெரிந்ததும், கிளர்ச்சியை வலுவாக்கிக் கொண்டு, வெள்ளையனே! வெளியே போ! என்ற இயக்கமாக மாற்றி அமைத்தது.
விஷமத்தைத் தடுக்க, காங்கிரஸ் தலைவர்கள் சிறைப்படுத்தப் பட்டனர்.

உடனே, நாட்டிலே, பல்வேறு இடங்களிலும், மிக முன்னேற்பாடு, பணச் செலவு, ஆள் அம்பு அமைப்பு ஆகியவைகளுடன் கூடிய, நாச வேலை நடந்தது; குழப்பம், கொலை, கொள்ளை, தீ மூட்டுதல், அடிதடி, ஆகியவைகள் நடக்கலாயின. சர்க்கார் இவைகளை அடக்கக் கடுமையான முறைகளைக் கையாண்டனர்.

காந்தியார் உண்ணாவிரதமிருந்தார், விடுதலை செய்க என்ற கிளர்ச்சி நடந்தது; பலிக்கவில்லை; காந்தியாரின் உண்ணாவிரதம் வெற்றிகரமாக முடிந்தது; காங்கிரசே, கலவரத்துக்குப் பொறுப்பாளி என்று, சர்க்கார் குற்றப் பத்திரிகை வெளியிட்டுள்ளனர்.

இவைகளையே முக்கியமான அம்சங்களாகக் கொண்டு, இந்தியா மந்திரி அமெரி பார்லிமெண்டிலே பேசினார்; காங்கிரசார் கோபிக்கின்றனர். அமெரி கூறியபடி, இதற்கு முன்பே, வேறு பலரும் கூறியுமுள்ளனர்.

இவைகளிலே எதை எதை ஆதாரபூர்வமாக மறுத்து வாதிட, எந்தத் தேசீயத் தோழர் விரும்பினாலும், “திராவிட நாடு” “ஊரார் உரையாடல்” என்ற தனிப்பகுதியில் அவர்கட்கு இடமளிக்கவும், பதில் உரைக்கவும், தயார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம். வீணான சந்தேகமோ, அனாவசியமான சஞ்சலமோ, ஒருவருக்கொருவர் கோபமோ கொண்டு குமுறிக் கிடப்பதைவிட, வெளிப்படையாக விவாதித்து, பொது அறிவைத் துலங்க வைத்துக் கொள்வதுடன், அபிப்பிராய பேதங்களை நீக்கிக்கொள்வது நலம் என்ற கருத்தைக் கொண்டே, இந்த அன்பழைப்பை விடுக்கிறோம். நாட்டு நண்பர்கள் இதனை ஏற்றுக்கொண்டு, அடுத்த இதழுக்கே தமது விளக்கம், கேள்வி சந்தேகம், மறுப்பு ஆகிய எதை வேண்டுமானாலும் அனுப்பக் கோருகிறோம். இவை எம்மிடம் இல்லை, கேலி, கிண்டல், தூற்றல், அசைவு ஆகியவைகளே உண்டு என்று கூறி, அவைகளையே அனுப்புவதானாலும், சரியே, பெரிய குப்பைத் தொட்டியும் இருக்கிறது, எம்மிடம் ஓர் அகராதியும் இருக்கிறது.

இஷ்டப்படி செய்யட்டும்!

11.4.1943