அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


‘அன்பு‘ காட்டுவீர்!

“செக்-புத்தகம் எங்கே? எடு! இந்தா, பத்தாயிரம்!“ என்று வாரி வீசுமளவுக்குச் செல்வம் கொழிப்பதுமல்ல – சீமான்கள் நிறைந்தது மல்ல தி.மு.க.

ஏதாவது, பணம் தேவையென்றால் “எங்கே நாடகப் பாடம்? தடவு வேஷத்தை! வா, மேடைக்கு!! என்று, தன்னையே நம்பி, தவழ்ந்து கொண்டிருக்கும் இயக்கமென்பதை எல்லோரும் அறிவர். எனினும், புயலால் பாதிக்கப்பட்டோருக்குத் தன்னாலான உதவிகளைச் செய்வதென, முன்வந்திருக்கிறது.

இந்த முடிவுக்குக் காரணம் மக்கள் பாலுள்ள பாசம்தான் காரணம். பாச உணர்ச்சியால் வாழ்த்தி வளர்க்கும் மக்களுக்கு, அல்லலேற்பட்டபோது சும்மாயிருப்பதும், ‘வேறு யாராவது செய்வார்கள்‘ என்று விட்டுவிடுவதும், தி.மு.வுக்குப் பிடிக்காத போக்கு. ஆகவேதான், தன்னை எதிர்நோக்கும் சொந்தச் சங்கடங்களை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, இத்திருப்பணியீலிடு பட்டிருக்கிறது.

இந்த முயற்சியின் முதல் கட்டமாக, வரும் ஜனவரி முதலிரண்டு தேதிகளில் சென்னை மக்களின் ஒத்துழைப்பை நாடுவதென, புயல் நிவாரண நிதிக்குழுவினர் முடிவு செய்து, இரு நாடகங்களை நடத்துவதெனத் திட்டமிட்டுள்ளனர். வண்ணாரப் பேட்டை தியாகராயர் கல்லூரித் திறந்த வெளி அரங்கில், முதல்நாள் ‘சந்திரோதயம்‘ நாடகமும், இரண்டாவது நாள் ‘சந்திரமோகன்‘ நாடகமும் நடத்துவதென ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‘சந்திரோதயம்‘! நிகழ்ச்சியை நடத்துவதென்பது எளிதல்ல வென்றாலும், மக்களின் வேதனையைப் போக்க உதவ வேண்டு மெனும் ஆர்வம், புயல் நிவாரணக் குழுவினரை மோதிக் கொண்டிருப்பதுதான் காரணம் சென்னை மேயர் தோழர் டி.செங்கல்வராயன் தலைமையில் நடைபெறும் ‘சந்திரோதயம்‘. நாடகத்தில், தோழர்கள் அண்ணாதுரை, மு.கருணாநிதி, மதியழகன் நெடுஞ்செழியன், வில்லாளன். சி.வி.எம். அண்ணாமலை ஆகிய பல கழக வீரர்களும், நடிகமணிகளும் பங்கு கொள்கிறார்கள். மறுநாள் !வெள்ளி) நடைபெறவிருக்கும் ‘சந்திரமோகன்‘ நாடகத்தில் நடிப்புப் புலவர் கே.ஆர்.ராமசாமி சந்திரமோகனாகவும் ‘சிவாஜி‘ என்று செல்லப் பெயரிட்டு அழைக்கப்படும் ‘பராசக்தி‘ புகழ் கணேசன் சிவாஜியாகவும் மற்றும் ராஜேந்திரன் போன்ற நடிக மணிகளும், சி.என்.ஏ. நெடுஞ்செழியன் முதலிய பல கழகத் தோழர்களும் பங்கேற்று நடிக்க இருக்கிறார்கள். அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் டாக்டர் மணவாளராமானுஜம் தலைமை வகிப்பார். இரு நாடகங்களும் தினசரி மாலை 6-30 மணிக்கு ஆரம்பமாகும் திறந்தவெளியில் மக்கள் வசதியாக, குறைந்த கட்டணத்தில் பார்க்க வேண்டுமெனும் நோக்கத்தில், ஆதரவாளர் ரூ.5, நுழைவு டிக்கட் எல்லோருக்கும் அணா 8 என்றே முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

நல்லதோர் காரியத்துக்காகத் துவக்கப்படும் இந்தப் பணிக்குத் தம் கையில் கிடைப்பதையெல்லாம் வழங்க வேண்டுமெனச் சென்னைத் தோழர்களைக் கேட்டுக் கொள்கிறோம். சீமான்களும், பூமான்களும் நம்மிடம் இல்லையென்றாலும் கவலையைப் போக்கும் மாமருந்தாக மக்கள் செல்வமிருக்கிறது என்ற துணிவே, நம்முடைய பக்கபலமாகும். அந்தப் பலத்தைக் காட்டிக் கொள்ளும் நல்லதோர் சந்தர்ப்பமாகக் கழகத் தோழர்கள், காட்டிக் கொள்ள வேண்டும். இரண்டு நாட்களும் திரளான மக்கள் வந்து, சீர்திருத்த நாடகங்களைக் காணவும் அதன்மூலம் புயல் நிதிக்கு உதவுமாறுச் செய்ய வேண்டிய கடமை, ஒவ்வொரு தோழருக்கும் இருக்கிறது.

புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சைக்கும், திருச்சிக்கும், விரைவில் நிதி அனுப்பித்தர வேண்டுவது அவசியம். ஆகவே, ஆங்காங்குள்ள தோழர்கள் தத்தமது சக்திக்கேற்ற அளவு, புயல் நிவாரண நிதிக்குகுழுச் செயலாளர் மு. கருணாநிதியின் முகவரிக்கு நிதி உதவி அனுப்பலாம் – தக்க சமயத்தில் செய்யும் உதவியே உதவியாகும்! வதைபடும் மக்களுக்கு உதவி செய்யும், இந்த வாய்ப்பை எல்லோரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வெளியூர் தோழர்கள், மணியார்டர் மூலம், அனுப்பித் தரலாம்.

சென்னைத் தோழர்கள் டிசம்பர் 1, 2 தேதிகளில் தங்களது ஆர்வத்தைக் காட்டிக் கொள்ளும் அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கண்ணீரைத் துடைக்கும் பணி சாதாரண மானதல்ல! ஆனால் மனித இதயம் என்று காட்டிக் கொள்ளவும், அன்புள்ளங் கொண்டோர் என உணர்த்தவும், கண்ணீரைத் துடைக்கும் விதமூலம்தான் உணர்த்த முடியும். அவதிப்படும் மக்கள் கூட்டத்தைக் கண்டு, கவலைப்படாத உள்ளம் படைத்தோரல்ல, தென்னாட்டவர்கள் எனினும், தொலைகள் பிடித்திழுக்கலாம் – அதையும் தாங்கிக் கொண்டு இந்த ‘அன்புப்பணி‘க்குத் தங்களாலியன்ற ஒத்துழைப்பையும் நன்கொடையையும் வழங்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். பணம் – உருண்டோடக் கூடியது! ஆனால், கண்ணீரைத் துடைக்க அதைப் பயன்படுத்தும்போதுதான், அதற்கு மதிப்பும், கௌரவமும் ஏற்படும். எனவே, இந்த நற்பணிக்கு, ஏராளமான மக்கள் வழங்குமாறு, எல்லோரும் பணியாற்ற வேண்டும் நிதி மிகுந்தவர், கிடையாது, நம்மிடம்! - நிதி குறைந்தவர்கள்தான், நாம் எல்லாம். எனினும், அதில் ஒருதுளியை இந்த நற்பணிக்கு ஒதுக்குங்கள்! சிறுதுளி - பெரு வெள்ளம்! - இதனை மனதிலிருத்தி, இதற்கான ஒத்துழைப்புகளை பெருந்தொகை ரூபத்தில் – காட்டக் கோருகிறோம். அன்புதான் நமக்குத் துணை! - அதனை ஆராதனை செய்யும் கட்டம் இது! ஆகவே, தவறாதீர்!

செய்தி – திராவிட நாடு – 28-12-52