அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அங்கே அப்படி! இங்கே இப்படி!
ஜெய்ப்பூர் மாநாடு முடிந்துவிட்டது. அந்நிய ஆட்சி அகன்றபின் கூடிய காங்கிரஸ் முதல் மாநாட்டில், பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்பதற்கான- வழி வகைகள் வகுக்கப்படுவதற் கான பல முக்கிய தீர்மானங்கள், விஷயா லோசனைக் கமிட்டியினரால் கொண்டு வரப்பட்டு நிறைவேறியுள்ளன! காங்கிரஸ் காரர்களிடையே ஒழுக்கம், நாட்டின் பொருளா தாரம் ஆகிய தீர்மானங்கள், விஷயாலோசனைக் கமிட்டியாரின் கவனத்தில் பெரும் பகுதியைக் கவர்ந்துவிட்டன.
நாடு விடுதலை அடைந்ததன் பயன், காங்கிரஸ்காரர்களிடையே ஒழுக்கக் குறைவை உண்டாக்கிவிட்டதென்பதை ஜெய்ப்பூர் மாநாடு படம் பிடித்துக் காட்டிவிட்டது.
காங்கிரசில் ஒழுக்கக் குறைவு அளவுக்கு மிஞ்சிவிட்டது என்று நாம் கூறினால், காங்கிரஸ் கண்மூடி அன்பர்கள் நம்மீது சீற்றங் கொண்டு இது எதிர்க்கட்சிக்காரர்கள் காங்கிரஸ் மீது சுமத்தும் `அபாண்டம்' என்று வாய் கூசாது கூறுவர், என்ற போதிலும், உண்மையை உணர்ந்து ஒப்புக்கொள்ள வேண்டுமென்ற உயர்ந்த பண்பினர், ஜெயபுரி மாநாட்டின் நடவடிக் கைகளைக் கருத்தோடு படித்துப் பார்க்கும்போது, இது எதிர்க்கட்சிக்காரர் நம்மீது சுமத்தும் அபாண்டமல்லவென்பதையும், நம்முடைய கட்சியின் முக்கியஸ்தர்களே கூறும் உண்மை என்பதையும் உணர்வர். எனவே, எதிர்க்கட்சிக் காரராகிய நாம் இதுபற்றி விளக்கம் எதுவும் கூற வேண்டிய அவசியமில்லை என்ற போதிலும் ஜெய்ப்பூர் மாநாட்டு நடவடிக்கைகளின் அட்டவணையாக இதனை எடுத்துக்காட்டாமல் இருக்க முடியவில்லை.
இந்நாட்டின்அரசியல் மொழியாக இந்தி தான் அமைய வேண்டுமென்று ஜெய்ப்பூர் மாநாட்டில் பேசப்பட்டதாகவும், தெரிகிறது. பேசப்பட்ட விபரம் பத்திரிகைகளில் விளக்கமாக வெளியிடப்படவில்லை என்றபோதிலும், இந்தி ஆதரிப்பாளரின் கூக்குரல் கேட்டுப் பண்டித நேரு அவர்கள் மிகவும் வேதனைப்பட்டார் என்பது மட்டும் பத்திரிகைகளில் இடம் பெற்றுள்ளது.
``இந்தி அரசியல் மொழியாக ஆக்கப்பட வேண்டுமோ என்பது வேறு விஷயம். அதை ஆதரித்து ஏன் கிளர்ச்சி நடைபெற வேண்டுமென் பது எனக்கு விளங்கவில்லை. முன்னர் இதுபோன்ற செய்கைகளை நான் எதிர்த்திருக் கிறேன். இன்றும் எதிர்க்கிறேன். நாளையும் அதை எதிர்ப்பேன். என்றும் அதை எதிர்த்து வருவேன்.''
என்று பண்டித நேரு பேசியிருக்கிறார். எங்கே? ``இருபத்திரண்டு கோடி மக்கள் இந்தியைப் பேசுகிறார்கள். எனவே இந்தியை நீங்கள் கற்றாக வேண்டும்'' என்று நமது மாகாண முதல்வர் ஒரு குக்கிராமத்தில்- உத்தரமேரூரில் - ஒரு பத்து ஐம்பது பேர் முன்னிலையில் சின்னாட்களுக்கு முன்னர் பேசினாரே! அது போன்றதா பண்டிதரின் பேச்சும் இடமும்? ஆமென்று எந்த ஆரவா முதர்களும் கூறமாட்டார்களே! பண்டித நேரு பேசியது ஜெய்ப்பூரில்! காங்கிரஸ் மாநாட்டில்! இரண்டு இலட்சம் மக்கள் கூடியிருந்த இடத்தில்! இந்தியே இந்நாட்டின் பொது மொழியாக வேண்டுமென்று போர் முரசு கொட்டுபவர்கள் முன்னிலையில்! விடுதலை பெற்ற நாட்டின் எதிர்கால வேலைத் திட்டங்களை எப்படி எப்படித் தீட்டுவது என்ற யோசனைகளைக் கூறவும்- பெறவும் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில்தான் பண்டித நேரு அவர்கள், இந்தி ஆதரிப்பை,
எதிர்த்திருக்கிறேன்
எதிர்க்கிறேன்
எதிர்ப்பேன்
என்றும் எதிர்த்தே வருவேன்
என்று முழக்கமிட்டிருக்கிறார். இவ்வள வோடு அவர் நிற்கவில்லை. இந்தி ஆதரிப் பாளர்களுக்கு அவர் மேலும் சரியான சாட்டை கொடுத்திருக்கிறார்.
``இந்தி இயக்கத்தினருக்குச் சரியான இடத்தில் சரியான அழுத்தத்துடன் சரியான பதில் அளிப்பேன்.''
என்றும் பேசியிருக்கிறார். பண்டிதரின் இந்தப் பேச்சுக்கள், இந்தி ஆதரிப்பைப், பொறுத்த வரையில், எவ்வளவு வேதனையை உண்டாக்கி யிருந்தால், அவர் இவ்விதம் பேசியிருக்கக் கூடும் என்பதனை இங்குள்ள இந்தி ஆதரிப்புச் சர்தார்களும் பிறரும் எண்ணிப் பார்க்க வேண்டு கிறோம்.
மழைக்குக் கூடப் பள்ளிக்கூடத் தாழ்வாரத் தில் ஒதுங்காத இங்குள்ள இந்தி ஆதரிப் பாளர்களின் ஆவேசப் பேச்சுப் போன்றதென்று பண்டிதரின் பேச்சை எண்ணிவிட முடியுமா? அல்லது கேட்பார் பேச்சைக் கேட்டு ஏமாந்து பேசிவிட்டார் என்றுதான் கருத முடியுமா? நாட்டின் இன்றைய ஆட்சிப் பொறுப்பு அவர் கையில் இருக்கிறது. நாட்டை ஆள்வதற்கு எதெது கருவியாக அமைய வேண்டுமென்பது அவருக்குத் தெரியாது. எனவேதான், நாட்டின் பொது மொழியாக இந்தியை ஏற்கப் பண்டிதர் மறுக்கிறார் என்று எந்தக் காங்கிரஸ்காரராவது கூற முடியுமா? நாட்டை ஆளும் பொறுப்பை ஏற்றுள்ள பண்டிதருக்கு, எப்பவோ ஒரு சமயத் தில், நாடு விடுதலை பெற்றுவிட்டால், அப் பொழுது இந்நாட்டின் பொது மொழியாக இந்தியைத்தான் அமைக்க வேண்டுமென்று காங்கிரஸ் நிறைவேற்றிய தீர்மானம் இப்போது ஏன் தேவையற்றதாகவும்- விரும்பத்தகாததாக வும் தெரிகிறதென்பதைக் காங்கிரஸ் அன்பர்கள் எண்ணிப் பார்க்க வேண்டாமா?
விடுதலை பெற்ற நாட்டின் ஆட்சிப் பொறுப்பு, பண்டிதரின் கையில் விழுந்துவிட்டது. அவருக்கு, விடுதலை பெறுவதற்குமுன் நாடு இருந்த நிலையும், விடுதலை பெற்ற பின் நாடு உள்ள நிலையும் நன்கு தெரிகிறது. தெரிவத னாலேதான், அவர் `இந்தி அரசியல் மொழியாக ஆக்கப்பட வேண்டுமா என்பது வேறு விஷயம்' என்று கூறுவதன் வாயிலாக அதன் கிளர்ச்சிக் காரர்களுக்கு அறிவுரை புகட்டுகிறார், வேண்டாம் இந்த வேலை உங்களுக்கு என்று. மீறி இந்தக் கிளர்ச்சியில் இறங்கினால், இதுவல்ல இடம் உங்களுக்குப் பதில் அளிக்க, வேறு இடம் இருக்கிறது, அங்கே சரியான அழுத்தத்துடன் சரியான பதில் அளிப்பேன் என்று எச்சரிக்கை செய்கிறார். ஜெய்ப்பூரிலோ- விஜயவாடாவிலோ, கூவம் நதிக்கரையிலோ, வேறு எந்த இடத்திலோ, காங்கிரஸ்காரரால் தீர்மானிக்கப்படும் எந்தத் திட்டமும் உருவாகி நடைமுறையில் கொண்டு வருவதற்கு உரிய ஒரு இடம் இருக்கிறது, அந்த இடத்தில் இந்த இந்தி ஆதரிப்புக்குச் சரியான பதில் அளிப்பேன் என்று பண்டித நேரு கூறுகிறார்.
ஆனால், இங்கு நடப்பதென்ன? இந்தி தான் இந்நாட்டுப் பொதுமொழி என்று பிரசாரம் செய்யப்படுகிறது. பிரசாரத்தோடு நிற்கவில்லை இவர்கள். இங்குள்ள பள்ளிக்கூடங்களில், இந்தி யையே, கட்டாயப் பாடமாகவும் ஆக்கிவிட்டனர். இவ்வளவோடும் இவர்கள் நிற்கவில்லை. இந்தி எதிர்ப்பாளர்களைச் சிறையில் வைக்கவும், தடியடி நடத்தவும், தங்களுக்குக் கிடைத்த `அருமையான' அதிகாரத்தைப் பயன்படுத்து கின்றனர். இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை வகுப்பு வாதக் கிளர்ச்சி என்று வாய்கூசாது கூறுகின்றனர். காங்கிரஸ் சர்க்காரைக் கவிழ்க்கும் கபடச் செயல் என்று இங்குள்ள கருத்தில் உரமற்ற காங்கிரஸ் காரர்கள் கூறுகின்றனர்.
அங்கே, ஜெய்ப்பூரில், பண்டித நேரு, இந்தி ஆதரிப்பாளர்களைக் கண்டித்து எச்சரிக்கை செய்கிறார்.
அதேபோது, அல்ல, அதே நாளில்,
இங்கே, கும்பகோணத்தில், பெரியார் இராமசாமி இந்தி ஆதரிப்புக்கு எதிராகப் பேசுகிறார்- இந்தி எதிர்ப்புக் கூட்டத்திற்கு விதித்த தடையை மீறுவதென்று முடிவு செய்யத் தலைவர்களை அழைத்துப் பேசுகிறார்.
வடநாட்டுத் தலைவர் அங்கே இந்தி எதிர்ப்புப் பிரசாரம் செய்கிறார்.
தென்னாட்டுத் தலைவர் இங்கே அதே பணியைச் செய்கிறார்.
ஆனால்...!
அங்கே அவருடைய பேச்சுக்குக் கரகோஷம்! ஆரவாரம்!
இங்கே இவருடைய பேச்சுக்குக் கையில் விலங்கு! தடியடி தரையில் சாயும் அளவுக்குத் தரப்படுகிறது!
அங்கே அப்படி!
இங்கே இப்படி!
எப்படி இருக்கிறது, விடுதலை பெற்ற சுயராச்சிய சர்க்காரின் ஆட்சிமுறை!
யோசிக்க வேண்டாமா இங்குள்ள அவி னாசியார்களும், பிறரும். ஏன் பண்டித நேரு இந்தி ஆதரிப்பாளர்களை இவ்வளவு வன்மையாகக் கண்டிக்கிறார் என்று.
`இந்தி இந்நாட்டின் அரசியல் மொழியாக ஆக்கப்பட வேண்டுமா என்பது வேறு விஷயம்' என்று பண்டித நேரு ஏன் இதனை அவ்வளவு அலட்சியப்படுத்திப் பேசினார் என்பதனையா வது இங்குள்ள இந்தி விரும்பிகள் எண்ணிப் பார்க்க வேண்டாமா?
நாட்டின் சமாதானத்தில் அக்கறையோடு, அரசியல் அறிவு சிறிதளவு இருப்பவர்கள் கூட இதனை எண்ணிப் பார்க்காமல் இருக்க முடி யாதே! நாட்டுக்கு ஒரு பொது மொழி வேண்டு மென்றால்- அதற்கு இந்தி தான் உகந்த மொழிஎன்றால், நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தும் பண்டித நேரு அவர்கள், இந்தியை ஆதரியாததுடன், அதனை ஆதரிப்பவர்களை யும் கண்டிக்கிறாரே! இந்த நிலையில் நாம் இங்குப் பண்டிதரின் கண்டனத்துக்கு உட்பட்டிருக்கும் இந்தியையன்றோ கட்டாயப் பாடமாக்கி இருக்கிறோம்! இதுமட்டுமல்ல, நமது தலைவரின் கண்டனத்துக்குரிய இந்தியை எதிர்ப்பவர்களைத் தானே நாம் சிறையில் தள்ளுகிறோம்! தடியால் அடிக்கிறோம்! நாடு கடத்திக் காட்டில் கொண்டு போய் விடுகிறோம்! ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும், கண்ணையும், கருத்தையும் மூடிக்கொண்டு கண்டபடி வைகிறோம்! ஜெய்ப் பூரில், பண்டித நேரு நிகழ்த்திய இந்தி எதிர்ப்புப் பேச்சையும், அதே சமயத்தில் கும்பகோணத்தில், இந்தி எதிர்ப்பாளர்கள் மீது நடத்தும் அடக்கு முறைக் கோர நிகழ்ச்சியையும் ஒரே சமயத்தில்- ஒரே பத்திரிகையில் படிக்கும் பிற நாட்டு அரசியல்வாதிகள் எங்களைப் பற்றி என்ன எண்ணுவார்கள்! என்பன போன்றவைகளை யாவது நம் மாகாண அரசியல் அறிஞர்கள் எண்ணிப் பார்க்க வேண்டாமா?
இன்று நாடுள்ள சூழ்நிலையில், இந் நாட்டுக்கு ஒரு பொது மொழி தேவையா? அப்படித் தேவைப்பட்டாலும், அதற்கு எதனைப் பொது மொழியாக்கலாம்? இப்போது நடை முறையில் பொது மொழியாக இருக்கும் ஆங்கிலமே போதாதா? புதிதாக ஒரு பொது மொழி எந்தெந்த வகையில், எந்தெந்த இடத்தில் பயன்படும்? பொதுமொழியென்றால் நம்முடைய தேவைகள் அனைத்திற்கும் பயன்படக் கூடியதாக இருக்கவேண்டுமே! வெளிநாட்டுத் தொடர்புக்கு ஒரு பொது மொழி! உள்நாட்டுத் தொடர்புக்கு ஒரு பொது மொழி, மாகாணங் களுக்கு வேறு தனித்தனி மொழிகள்! என்று இப்படி மொழிகள் இருந்தால், மக்கள் எந்த மொழியைக் கற்றுக் கொள்வது? எத்தனை மொழிகளைக் கற்றுக் கொள்வது? என்பன போன்றவைகளை எப்படி வரையறுப்பதென்ற குழப்பமான நிலையிலேயே மத்திய சர்க்கார் இன்னும் இருப்பதால்தான், பண்டித நேரு அவர்கள்,
``இந்தி அரசியல் மொழியாக ஆக்கப்பட வேண்டுமா என்பது வேறு விஷயம்.''
என்பதாக ஜெய்ப்பூர் மாநாட்டில் கூறி, இந்தி ஆதரிப்பாளர்களைக் கண்டித்தார்.
நமக்கு ஆங்கிலேயர் பகைவரா? ஆங்கிலம் பகையா? ஆங்கில ஆட்சி முறை பகையா? முன் இரண்டுமல்ல, பின்னதே நமக்குப் பகை என்பதை உணரும் எவரும், இப்போது நடைமுறையில் பொதுமொழியாக இருக்கும் ஆங்கிலத்தையே இனியும் பொதுமொழியாக வைத்துக் கொள்ள வேண்டுமென்று விரும்புவர். பண்டித நேரு அவர்களும், இதனை உணராமல் இருக்க முடியாது. நமக்கு விடுதலை பெற்றுத் தந்த மொழி இந்தியா? ஆங்கிலமா? என்பதனை இங்குள்ள இந்தி ஆதரிப்பாளர்கள் உணர முடியாவிட்டாலும், பண்டித நேரு போன்றவர்கள் ஆங்கிலத்தையும், அதனால் நாம் அடைந்த அடைகின்ற- அடையப்போகும் நன்மைகளை யும் உணராமல் இருக்க முடியாது.
ஆங்கிலம், அஞ்ஞான உலகத்தை விஞ்ஞான உலகமாக மாற்றி விட்டதென்பதை யார் தான் மறுக்க முடியும்!
இந்தி, விஞ்ஞான உலகத்தையே அஞ்ஞான உலகமாக மாற்றி விட்டதென்பதை யார்தான் மறுக்க முடியும்!
பண்டித நேரு அவர்கள் இந்த உண்மை களை நன்கு உணர்ந்ததால் தான், மக்களை அஞ்ஞான உலகிற்கு அழைத்துச் செல்லும் இயல்போடு கூடிய சமஸ்கிருதக் கலப்பான இந்தி மொழி இந்நாட்டின் பொதுமொழியாக ஆக்கப் படுவதைத் தாம் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒப்புக்கொள்ள முடியாதென்று அவர் சென்னைக்கு வந்திருந்தபோது கூடக் கூறினார்.
இந்தச் சமஸ்கிருதக் கலப்பான இந்தி மொழி, இந்நாட்டின் பொதுமொழியாக ஆக்கப்பட வேண்டுமென்று யாராவது சட்டசபையில் தீர்மானம் கொண்டுவந்தால், அப்போது அவர் தம்முடைய முழுப் பலத்தையும் கொண்டு எதிர்ப்பதாகக் கூறினார். இதைவிட இன்னும் அதிகமாகவும், காரசாரமாகவும் ஜெய்ப்பூர் மாநாட்டிலே பேசியிருக்கிறார்.
இந்தி இயக்கத்தினருக்குச் சரியான இடத்தில் சரியான அழுத்தத்துடன் பதிலளிப் பேன் என்று பண்டிதரின் இந்தப் பேச்சை இங்குள்ள இந்தி விரும்பிகள் எந்தவகையில் பொருள் கொண்டு விளங்கிக் கொள்வார்களோ நாம் அறியோம். ஆனால், பண்டிதரின் இந்தப் பேச்சு சமஸ்கிருதம் இந்நாட்டில் நடமாடுவதை அறவே விரும்பவில்லை என்பதையும், சமஸ் கிருதத்தால் இந்நாடு அடைந்துள்ள கீழ் நிலை மையும் நன்கு விளக்கிக் காட்டி விட்ட தென்பதையும் சமஸ்கிருதமே இந்நாட்டின் பொது மொழியாக வேண்டுமென்று பாடுபடும் தோழர் சி.ஆர்.ரெட்டி போன்றோரும் உணராமல் இருக்க முடியாது.
சமஸ்கிருத அறிவோ அல்லது அதன் வளர்ப்புப் பிள்ளையான இந்தி அறிவோ, நாட்டு நலன் குறித்துச் செய்யப்படும் எந்தப் பணிக்கும் ஏற்புடையதல்ல என்பதனாலேயே, உயர்ந்த, உண்மையான கருத்துக்கள் எவையும் சமஸ் கிருதத்தை வேறாகக் கொண்டு முளைத்த எந்த மொழிகளிலும் இல்லை என்றும், அவற்றைப் பரப்பும் முயற்சிக்குத் தாம் எதிரியாகவே இருப்பேன் என்றும் ஒளிவு மறைவு இன்றிப் பண்டித நேரு வெளிப்படையாகவே கூறிவிட் டார்.
ஆனால், இங்கு? ``எனக்கு மந்திரி சபை யில் இடம் கிடைக்காவிட்டால் நான் கடலில் விழுந்து சாகவேண்டியதுதான்'' என்று அச்சுறுத்தி மந்திரி யாகும் அளவுக்குத் தங்கள் பதவி மோகத்தைக் காட்டிக்கொண்டவர்கள், தங்கள் பதவிக்குப் பாதுகாப்பளிப்பது இந்திப் பிரசாரம் ஒன்றுதான் என்று எண்ணிக்கொண்டு, இந்தி இருபத்திரண்டு கோடி மக்களால் பேசப்படுகின் றது. எனவே, நீங்களும் இந்தியைப் படியுங்கள். அப்போதுதான் மத்திய சர்க்காரில் வேலை கிடைக்கும் என்று கூக்குரல் போடுகிறார்கள்.
மத்திய சர்க்காரில் இந்தி பற்றிய தீர் மானமே கொண்டுவரக்கூடாது. அப்படிக் கொண்டு வந்தால், அந்தத் தீர்மானத்தைத் தம்முடைய முழுப் பலத்தையும் கொண்டு எதிர்ப்பேன் என்று பண்டித நேரு கூறுகின்றார். ஆனால், இங்கே இந்தி படித்தால் மத்திய சர்க் காரில் வேலை கிடைக்கும் என்று கூறுகிறார்கள். கூச்சமின்றி! அங்கே பண்டிதரின் இந்தி எதிர்ப் புக்கு கரகோஷம்! இங்கே,
பெரியார் இராமசாமி யின் இந்தி எதிர்ப்புக்குக் விலங்கு! தடியடி! அங்கே அப்படி! இங்கே இப்படி!

(திராவிட நாடு - 26.12.1948)