அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அங்கேயும் புகுந்தது

ஆரியர் - திராவிடர், என்று, பெரியார் ஒருவர் ஓயாது பேசிப் பேசிக் கிடந்து என்ன பயன்? யார் கேட்கிறார்கள்? நாற்சந்திகளிலே ஒரு சத்தம் அது! சர்க்கார் பீடங்களிலே அதைச் சட்டை செய்பவர் கிடையாது. செத்த பாம்பை அடிப்பது போன்றது இது வென்று, பல “சர்கள்” கருதுகின்றனர், என்றெல்லாம் பலர் பேசிடக் கேட்டோம். நமது இயக்கப் பிரமுகர்கள் பலர், ஆரியர் - திராவிடர் பிரச்னை விஷயமாகப் பெரியாரின் கருத்தை ஆதரித்துப் பேசாது மௌனவிரதம் பூண்டிருப்பது கண்டு நாம் ஆச்சரியங்கலந்த துக்கம் கொண்டதுண்டு. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் - என்பது பழமொழி. பெரியார், அம்மொழியைக் கூடத் துணை கொள்வதில்லை. நகர்ந்தால் நமக்கென்ன, நகராவிட்டால்தானென்ன, சம்மட்டி தூக்கி அடிக்கும் சக்தி உள்ளவரையில் அடிப்பது நம் கடன், என்பார். அதுபோலவே, யார் ஆதரிக்கின்றனர், எந்தெந்தத் தலைவர் துணைக்கு வருகின்றனர், என்பது பற்றிய, கவலையைவிட்டு, கருமமே கண்ணானார்! பலன் என்ன? படியுங்கள் மேலே!

சென்ற ஆண்டு, அகில இந்திய முஸ்லீம் லீக் காரியதரிசி, நவாப் சாடாலியாகத் அலிகான்; டில்லி சட்டசபையிலே, திராவிடஸ்தான் தந்தாக வேண்டும் என்பதுபற்றிப் பேசினார். பிறகு, வைசிராய் நிர்வாக சபை அங்கத்தினர், சர். பிரோஸ் கான்நூன் அவர்கள், ஒரு கல்லூரியில் பேசுகையில், “திராவிட நாடு” - தனிநாடாக வேண்டியதன் அவசியத்தை வற்புறுத்தினார்.

அந்தக்காலத்திலும், நமது இயக்கப் பிரமுகர்கள், திராவிடஸ்தான் பற்றியோ, ஆரிய - திராவிட பேதம் பற்றியோ, பேசாமன்னராக இருந்தனர்! பெரியார், இதுகண்டு, சும்மா இருந்து விடவில்லை. அடிமேல் அடி கொடுத்தபடியே இருந்தார்.

சின்னாட்களுக்கு முன்பு டில்லி ராஜாங்க சபைக்கூட்டத்திலே, இந்து சட்டத்திருத்தம் பற்றிய விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தில் கலந்து கொண்ட, சர். ஏ.பி. பாத்ரோ அவர்கள், இந்து சட்டத்திலே திருத்தங்கள் தேவைதான், ஆனால், தென்னாடு, திராவிட நாடு - அங்கு திராவிட கலாசாரமே இருத்தல் வேண்டும் - ஆரிய சட்ட திட்டங்களோ, கலாசாரமோ அங்கு நிலவுதல் கூடாது - என்று பட்டவர்த்தனமாக எடுத்துக் கூறினார்.

நாலாண்டுகளுக்கு மேலாக நடுவீதிச் சத்தம் என்று, நையாண்டி செய்த தோழர்கள், இதுபோது, டில்லி ராஜாங்க சபையிலும், அந்த நாதம் நுழைந்து விட்டதை உணரட்டும் என்றுரைக்கிறோம். டில்லி சபையில் மட்டுமா, பிரிட்டிஷ் பாராளும் மன்றத்திலும், பட்டவர்த்தனமாக இப்பிரச்னை பேசப்பட்டே தீரும். நாட்கள் பலவாக இருக்கலாம் - தாமதம் ஏற்படலாம் - தடை பலசில உண்டாகலாம். ஆனால், ஆரிய - திராவிடக் கிளர்ச்சியை இனி அடக்கிவிட முடியாது, அது அழிந்தொழிந்த அரவு என்று அரற்றும், அவிவேகிகளின் “ஆரூடம்” கவைக்குதவாது!

5.9.1943