அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அங்கு போகுமுன்...!

பன்னெடுங்காலமாகப், பிறர், தம்மை ஆளும் கொடுமைக்கு இலக்காகித்தங்கள் வாழ்வும் - வளமும் - உரிமையும் - உணர்வும் பிறவும் இழந்து அடிமைப்பட்டு அல்லலுற்ற ஒவ்வொரு நாடும், இன்று விழிப்புற்றுத், தன்னிலையுணர்ந்து, தலைநிமிர்ந்து, தன்னைத்தானே ஆளவேண்டுமென்ற ஆண்மையைப் பெற்றுத், தம்மை ஆட்டிப் படைப்போரின் அசைக்க முடியாத ஆணவத்தின் ஆணிவேரை அடியோடு பெயர்த்தெறிந்து, அந்த இடத்திலே சுதந்தர வித்திட்டு வருகின்றன. பிறர், தம்மை அடக்கி ஆளும் கொடுமைக்குத் தங்கள் மடைமையை வித்திடும் மதியீனம் இனி உலகின் எந்தப் பாகத்திலும் இருக்க முடியாதென்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும். இது, பிறரை அடக்கி ஆளும் பித்தம் கொண்டோரின் பேராசையைச் சுட்டெரிக்கும் பெருநெருப்புமாகும்.

இப்பொழுது, ஜாவாமக்கள், தங்கள் நாட்டைத் தாங்களே ஆளுதல் வேண்டுமென்ற உணர்ச்சியைப் பெற்றுத் தங்கள் உரிமைக்காகப் போராடி வருகின்றனர். இதில் அவர்கள் வெற்றிபெற வேண்டுமென்பதே எமது பெருவிருப்பமாகும். தன்னைப் பிறர் அடக்கி ஆள்வதை விரும்பாத ஒருவன், தன்னைப் போலவே, பிறம் இன்னொருவரால் அடக்கி ஆளப்படுவதைவிரும்பவேமாட்டான். ஜாவா நாட்டின் சுதந்தரத் தலைவரான டாக்டர் சுகர்ணா அவர்கள், தம்முடையசுதந்தரப் போருக்குத் துணைபுரியும்படி தோழர் ஜவஹவர்லால்நேரு அவர்களுக்கு அழைப்பு அனுப்பியிருப்பதாகத் தெரிகிறது. தோழர் நேரு அவர்களும் டாக்டர் சுகர்ணாவின் அழைப்பை ஏற்று அங்கு போவதற்கு வேண்டிய முயற்சிகளைச் செய்து வருவதாகவும் தெரிகிறது.

தம்முடைய நாட்டுக்குச் சுதந்தரத்தைப் பெறுவதற்குத் துணைபுரியவேண்டுமென்று தோழர் நேரு போன்றவர்களை டாக்டர் சுகர்ணா அழைப்பதை நாம் தவறாகக் கருதவில்லை. ‘அக்கரை மாட்டுக்கு இக்கரைபச்சை’யாகத் தெரிவதுபோல், டாக்டர் சுகர்ணாவுக்குத் தோழர் நேரு அவர்கள் தோன்றியிருக்கலாம். அதிலும் தவறில்லை. இந்தியாவைச் சுதந்தர நாடாக்குவதற்குத் தோழர் நேரு போன்றார் போடும் கூச்சலை டாக்டர் சுகர்ணா பத்திரிகைகளில் பார்த்த அளவிலேயே அவர்களைப் பற்றி எடைபோடக் கூடிய மாதிரியில் இங்குள்ள தேசியத் தாள்கள் விளம்பரம் செய்துவிடுகின்றன என்பதைப் பிறநாட்டவர் எப்படி அறியமுடியும்? ஆனால், தம்முடைய நாட்டுக்கு வந்து அந்நாட்டின் நிலையைத் தெரிந்து கொண்டு போகும்படி அழைப்புவிடுத்த டாக்டர் சுகர்ணா, ஒருமுறை இந்நாட்டுக்கு வந்து இங்குள்ள நிலைமையைப் பார்த்துப் போயிருந்தாரானால், உண்மையிலேயே அவர் தம்முடைய அழைப்புப் பிரகடனத்தில் தோழர் நேரு அவர்களைச் சேர்த்திருக்கமாட்டார்; தோழர் நேரு போன்றார் போடும் சுதந்தரக் கூச்சல் உண்மையிலேயே இந்நாட்டுக்குப் பொருத்தமல்ல வென்பதையும் உணர்ந்திருப்பார். இவ்வுபகண்டத்திலே, பத்துக்கோடி முஸ்லீம்களும், எழுகோடி தாழ்த்தப்பட்டவர்களும், நாலரைக் கோடி திராவிடர்களும், பிற சிறுபான்மை இனமக்களும் தனித்தனி கலைநாகரிகங்களோடு இருக்கின்றனர் என்பதும், இவர்கள் அனைவருக்கும் புறப்பான கலை - நாகரிகத்தோடு இந்துக்கள் என்றஓர் பிரிவினர் இருக்கின்றனர். என்பதும், இவ் இந்துக்களும், பல திறப்பட்ட பிற இனமக்களும் எந்தக் காலத்திலும் ஒன்றாக இணைந்து வாழ முடியாதென்பதும், ஆகவே இவர்கள் அனைவரையும் ஒன்றுசேர்த்துப் பிணைத்துச் சுதந்தரம் கேடப்வர்கள், உண்மையிலேயே மக்களின் நல உரிமைகளைப் பாதுகாக்கும் முறையில்பணி செய்பவர்கள் அல்ல என்பதும் சரித்திரத்தைச் சரியான முறையில் படித்தவர்களுக்கும், இங்குள்ள நிலைமைகளை நேரில்பார்த்தவர்களுக்குமே தெரியும்.

பிரச்சார பலத்தாலும் பத்திரிகைகளின் ஆதரவாலும் ஒரு நாட்டின் உண்மையான நிலைமை மறைக்கும் போக்கு இங்கன்றி வேறெங்கும் தலைகாட்டமுடியாது. பத்துக்கோடி முஸ்லீம்களின் ஏகோபித்த கோரிக்கையான ‘பாகிஸ்தானை’ப் மபகற்கனவென்று பகடிவித்தை செய்யும் தோழர் நேரு அவர்கள் - நாலரைக் கோடி திராவிடர்களின் நியாயமான திராவிடநாட்டு பிரிவினையைப் பிறநாட்டவர் அறியமுடியாதபடி பிரச்சாரம் செய்யும் ஒருகூட்டத்தின் தலைவரான தோழர் நேரு அவர்கள், ஜாவா நாட்டு மக்களின் சுதந்தரத்திற்குத் துணைபுரியப் போகு முன்னர், தாம் இவ்வுபகண்டத்தைப் பற்றிக் கொண்டுள்ள பொருந்தாக் கருத்தை மாற்றிக் கொள்ள முன் வரட்டும். முஸ்லீம், திராவிடர் ஆகியவர்களின் கோரிக்கையை ஒப்புக் கொள்ளட்டும். விளம்பரபலத்தால், ஒரு நாட்டின் விழுமயி உண்மைகளை மறைக்கும் மனப்பான்மையினரை மாநிலம் வெறுக்கும் நாள் தொலைவில் இல்லை என்பதைத் தோழர் நேருபோன்றார் உணர வேண்டுகிறோம்.

(திராவிடநாடு - 14-10-1945)