அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அஞ்ச மாட்டோம்!

ஆட்சி மாறிவிட்டது. ஆனால் ஆளும் முறை துளியும் மாறவில்லை. ஆங்கில ஆட்சி யின் போது என்னென்ன கொடுமைகள் நடந்தனவோ, அவையெல்லாம் இன்றைய ஆட்சியிலும், அளவிலும் தன்மையிலும் உரம் போட்டு வளர்ப்பது போல் வளர்ந்து கொண்டே போகின்றன. வெள்ளைக்காரனை வெளியே போகும்படி செய்தது வேறொன்றுக்காகவுமல்ல. ``நீ செய்கின்ற காரியங்களை எல்லாம் நாங்கள் இன்னும் அதிகத் திறமையுடனும் உரிமையுடனும் செய்யக் கூடியவர்களாக இருக்கும் போது, நீ இங்கு இருக்க வேண்டிய இன்றியமையாமை எதுவுமே இல்லை, நாங்கள் செய்கின்ற காரியங் களைக் கண்டு நீயே ஆச்சரியப்படுவாய், ஆங்கில ஆரியனே அஞ்சாதே! நாங்களும் உன் இனம்தான், எனவே இனம் இனத்தைக் காக்கும். கவலை வேண்டாம். சற்று வெளியே இருந்து வேடிக்கைப் பார்!'' என்று கூறி வெள்ளை யனுடைய வேலையை இன்னும் விறுவிறுப்பாகச் செய்வதற்காகவே இன்று நம்மை ஆளுவோர் ஆங்கிலேயனை வெளியேற்றினர்.

இதனை மக்கள் அறிவதற்கு அதிக காலத்தை உண்டாக்குவது முறையல்ல என்று கருதியோ என்னவோ, ஆங்கிலேயன் ஊர் போய்ச் சேர்வதற்குள்ளாகவே அவனுடைய வேலைகளை நம்முடைய தலைவர்கள் செய்யத் தொடங்கிவிட்டனர். வஞ்சம் தீர்த்துக் கொள்ள எண்ணுகிறவர்கள், எப்போது எங்களுக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கும் என்று ஆவலோடு எதிர் பார்த்து அந்த வாய்ப்புக் கிடைத்தால் அளவு கடந்த ஆனந்தம் உண்டாவது போல், காங்கிரஸ் தலைவர்களுக்கு ஆளும் வாய்ப்புக் கிடைத் திருக்கிறது. எனவே ஆளுகிறார்கள். ``என் னவோ என்று நினைத்தாயே இதே பார். உன்னுடைய ஆட்சி முறை கூட எங்கள் ஆட்சி முறையிடம் பிச்சை வாங்க வேண்டும்'' என்று ஆங்கிலேயனை நோக்கிக் கூறும் முறையில்,

ஆங்கிலேயர்கள், தங்களுடைய ஆட்சிக் காலத்தில் காங்கிரஸ்காரர்கள் நடத்திய உரிமைப் போராட்டங்களை எல்லாம் தடை செய்தனர். தடியடி, தர்பார் நடத்தினர். சிறையில் தள்ளினர். தொண்டர்களைத் திசை தெரியாத நாடுகளில் கொண்டு போய்விட்டனர், இன்னும் பலப் பல கொடுமைகளைக் கொஞ்சமும் கூசாமல் செய்தனர். இவையெல்லாம் அன்று காங்கிரஸ் காரர்களால் மட்டுமல்ல, நாட்டு நலனில் நாட்டங் கொண்ட அனைவராலுமே கண்டிக்கப்பட்டன. ஆனால், இன்று நடப்பதென்ன? அன்று எதெது கண்டனத்துக்குரியதாக இருந்ததோ அதெல்லாம் இன்று கையாள வேண்டிய நல்ல முறையாக நாடாள்வோரால் கருதப்படுகின்றது.

அன்று அயல் நாட்டுத் துணிகளை வாங்காதீர்கள் என்று காங்கிரஸ்காரர்கள் கூறி யதைக் குற்றமாகக் கருதிய ஆங்கில அரசாங் கம் அவர்களைக் காடுகளில் கொண்டு போய் விட்டது. இன்று அயல்நாட்டு மொழிகளை இன்றைய ஆரிய ஆட்சிக்கு அடிபணிந்து நிற்கும் சென்னை அரசாங்கம் காடுகளில் கொண்டு போய்விடும் `கண்யமான' செயலையே பின்பற்றுகின்றது.

இந்தி எதிர்ப்பாளர்களைக் கைது செய்யா மல் காடுகளில் கொண்டு போய் விடுவதால் அந்த இயக்கத்தை அழித்துவிடலாம் என்று இன்றைய அரசாங்கம் கருதுமானால், அது, தன்னுடைய பழைய கால நிகழ்ச்சிகளை மறந்து விட்டது என்றுதான் பொருள். அன்று ஆங்கிலே யர் கையாண்ட அடக்கு முறைகள் எல்லாம் நாட்டின் விடுதலையை விரைவில் பெறுவதற்கு வழிகோலினவேயன்றி, அடக்குமுறைகள் அவர் களுடைய எண்ணத்தை நிறைவேற்றவில்லை என்பதைக் காங்கிரசன்பர்கள் தங்களுடைய அதிகாரப் போதையில் இதற்குள் மறந்துவிட்டா லும் நாம் அதனை மறக்கவில்லை.

எனவேதான், தமிழுக்கும், தமிழ்க் கலாச் சாரத்துக்கும் ஊறுண்டாக்கும் இந்தி நுழைவை, எந்தவிதமான கொடுமைகளையும் பொருட் படுத்தாமல் எதிர்க்கிறோம். காடுகளில் கொண்டு போய் விடுவதாலோ, இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதாலோ உரிமைப் போராட்டத்தை உருக்குலைந்துவிடலாம் என்று ஆளவந்தார்கள் கருதுவார்களானால் உண்மை யிலேயே அவர்கள் ஏமாற்றத்தைத்தான் பல னாகக் காண்பர்.

இந்தி எதிர்ப்பாளர்களைக் காடுகளில் கொண்டுபோய் விடும் முறையைக் கண்டித்துச் சில நாட்களுக்குள் முன் `தினசரி' ஒரு தலை யங்கம் `சரியான வழிகள்' என்ற தலைப்போடு எழுதி, அதில், போலீசாருக்குப் பழைய புத்தி இன்னும் போகவில்லை என்று குறிப்பிட்டிருந் தது. போலீசார்தான் இந்தி எதிர்ப்பை அடக்கு வதற்கு வேண்டிய முறைகளைத் தாங்களாகவே செய்கின்றனர் என்று `தினசரி' தன்னுடைய தினப் புத்தியால் அறிந்திருக்கிறது போலும்! சர்க்காரின் வேலைத் திட்டங்களில் ஒரு பகுதியைப் போலீசார் சர்க்காரின் உத்தரவுகளுக்கேற்ப நடத்திக் கொடுக்கும் ஊழியர்களே என்பதைக் கூட அறிய முடியாத அறிவைப் பெற்றிருக்கும் `தினசரி' போலீசாரே இந்தி எதிர்ப்பு நடவடிக்கை களை அடக்கும் பணியினைச் செய்கின்றனர் என்று எழுதியதைக் கண்டு நாம் ஆச்சரியப் படவில்லை.

இந்தி எதிர்ப்பாளர்களைக் காடுகளில் கொண்டு போய் விடும் முறையைச் சர்க்கார் கையாள்வது, இந்தி எதிர்ப்பு இயக்கத்திற்கு இன்னும் அதிக வலுவை உண்டாக்குமென்றே நாம் கருதுகிறோம். இந்தி எதிர்ப்பு இயக்கம் பரவாத இடங்களில் கூட அது நன்றாகப் பரவுவதற்கு இந்த முறை பெரிதும் பயன்படு மேயன்றி சர்க்கார் கருதுவது போல் இந்தி எதிர்ப் பியக்கம் தளர்வடையவோ, தொண்டர்களுக்கு இதனால் சலிப்பை உண்டாக்கவோ, முடியா தென்பதைச் சர்க்கார் உணர வேண்டும்.

எனவே, இந்தி எதிர்ப்பியக்கத்தை அடக்குவதற்குச் சர்க்கார் இப்போது கையாளும் முறைகள் எல்லாம், இதற்கு முன் ஆங்கிலச் சர்க்காரால் கையாளப்பட்டுப் பழக்கப்பட்ட முறைகள் தான் என்பதையும், அந்த முறைகள் எல்லாம் சர்க்காருக்குத் தோல்வியையும் மக்களுக்கு வெற்றியையுமே தந்தன என்பதை நாம் நன்கறிவோமாதலால், சர்க்காரின் எந்தவித மான அடக்குமுறையைக் கண்டும் நாம் அஞ்சவோ, சலிப்படையவோ மாட்டோம் என்பதை, ஆள் மாற்றத்தை மட்டும் மேற்கொண்டு ஆட்சி முறையில் எவ்வித மாற்றத்தையும் கொள்ளாத- கொள்ள விரும்பாத இன்றைய சர்க்காரின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

(திராவிட நாடு - 5.9.48)