அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அண்ணா, சிறைத்தண்டனை ஏற்றார்!

மண்டபத்தின் உள்ளேயும், வெளியேயும், தாழ்வாரத்திலும் தருக்களின் நிழலிலேயும், பரந்த மைதானத்திலும் பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்து நின்ற மக்கள் கூட்டம் ஆத்திரத்தையும், ஆவேசத்தையும் வாட்டத்தையும் வருத்தத்தையும், திகைப்பையும், திகிலையும், கண்ணீர்த்துளியையும், கனல் பொறியையும் சிந்திக்கொண்டிருக்க, ஒரே ஒரு முகம் மலர்ந்த தோற்றத்தோடு மகிழ்ச்சியைத் தழுவிக்கொண்டிருக்கும் அரியதொரு காட்சி, இன்று திருச்சியிலே காணப்பட்டது!

இன்றைய ஆணவ அடக்கு முறை அரசாங்கம் நடத்திக்காட்டிய தர்பார் ‘காட்சிகளிலே’ ஒன்றுதான், மேலே தீட்டிக் காட்டப்பட்டிருப்பது.

ஆரியமாயை” யின் நூலாசிரியரான சி.என்.அண்ணாதுரை இ.பி.கோ. 153 ஏ பிரிவுப்படி குற்றவாளி என்று கருதப்படுவதால், அவர் ரூ.700 அபராதம் செலுத்தவேண்டும். அப்படிச் செலுத்தத் தவறினால் ஆறுமாதம் வெறுங்காவல் சிறை தண்டனை ஏற்கவேண்டும்” என்ற சொற்கள், இன்று மாலை 3.15 மணிக்கு, திருச்சி சப்டிவிஷனல் மாஜிஸ்டிரேட் கோர்ட்டில், மாஜிஸ்டிரேட்டால் உச்சரிக்கப்பட்டபோதுதான், அந்த அரிய காட்சி தோற்றமளித்தது.

மக்கள் வேதனைப் புயலிலே சிக்கிக் கிடந்த அந்த நேரத்தில்தான், திராவிடம் ஆவலோடு கூவி அழைக்கும் ‘அண்ணா’ மலர்ந்த முகத்தோடு, புன்முறுவலைத் தூதனுப்பி, தண்டனையை ஏற்கத் தயாராக இருக்கிறேன் என்று கூறினார்கள்.

தோழர் சி.என்.ஏ. அவர்கள் மீது தொடுக்கப்பட்டிருந்த “ஆரியமாயை வழக்”கில் இன்று தீர்ப்பளிக்கப்படுகிறது என்ற செய்தியை அறிந்து திருச்சியின் பல பகுதிகளைச் சேர்ந்த மக்களும், திரா‘டத்தின் பல பாகங்களைச் சேர்ந்த மக்களும், காலையிலிருந்தே திருச்சி சப்டிவிஷனல் மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் வந்து கூட ஆரம்பித்து விட்டார்கள்.

கோர்ட் மைதானத்தில் நிழல் கண்ட இடங்களிலெல்லாம் மக்கள் கூட்டங் கூட்டமாகக் கூடி நின்று அண்ணாவின் வரவைக் காலை 11 மணியிலிருந்தே எதிர்பார்த்து நின்றனர்.

அண்ணா அவர்கள் ‘ஆரியமாயை’ வெளியிட்ட தோழர் கண்ணப்பனுடன், காலை 11.30 மணிக்குத் தோழர்கள் நெடுஞ்செழியன், பராங்குசம், தர்மலிங்கம், புட்டாசாமி, சாம்பு.கே.கோவிந்தசாமி ஆகியவர்களோடு கோர்ட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.

தீர்ப்பின் விளையை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த மக்கள் படை சூழ்ந்து நின்று ஆரவாரித்தார்கள். தீர்ப்பு மாலை 3 மணி அளவிற்குத்தான் வழங்கப்படப் போகிறது என்ற செய்தியைத் தெரிந்து கொண்டவுடன் அண்ணா அவர்கள் தம்மிடத்திற்குத் திரும்பிவிட்டார்கள்.
சோழவந்தானில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக மத்திய செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டபடி அபராதம் போட்டால் செலுத்துவதில்லை, சிறைத் தண்டனை விதித்தால் ஏற்றுக்கொள்வது என்ற திடமான முடிவுடன், அண்ணா அவர்களும் மற்றைய தோழர்களும் சரியாக மாலை 3 மணி அளவிற்கு நீதி மன்றத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.

அண்ணா அவர்கள் வந்து சேரும்போது நீதிபதி சப் டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட் வீற்றிருக்க வழக்கறிஞர்களும் போலீஸ் அதிகாரிகளும் அமர்ந்திருக்க, போலீஸ் ரிஸர்வ் காவல் பலமாக இருக்க, உள்ளும் புறமும், மைதானத்திலும் ஏராளமான மக்கள் நெருக்கிக் கொண்டு நின்றிருந்தார்கள்.

அண்ணா அவர்கள் வந்தவுடன், நேரே மண்டபத்தின் உள்ளே சென்று அவருக்கென்று போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தார்கள். அவரைத் தொடர்ந்து தோழர்கள் நடிப்புப் புலவர் கே.ஆர்.ராமசாமி, ஈ.வே.கி.சம்பத், இரா.நெடுஞ்செழியன், கே.கே.நீலமேகம், கே.கோவிந்தசாமி, அமிர்தலிங்கம், புட்டாசாமி, சி.வி.இராசகோபால், முத்துக்கிருஷ்ணன், கண்ணப்பன் ஆகியோர் சென்று உடன் அமர்ந்தார்கள். வழக்கைக் காணுவதற்காக தோழர்கள் எஸ்.வி.லிங்கம், என்.சங்கரன், என்.சாம்பு மற்றும் பல கழக முக்கியஸ்தர்களும் வந்திருந்தனர்.

“பெரியாரின் பொன் மொழிகள்” வழக்கில் ஈடுபடுத்தப் பட்டிருந்தவர்கள் முன்னரே வந்து வீற்றிருந்தார்கள். முதலில் அவ்வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதனை அடுத்து , “ஆரியமாயை” வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

நூலை எழுதிய அண்ணாவுக்கு ரூ.700 அபராதம் அதனைக் கட்டத் தவறினால் ஆறுமாதம் வெறுங்காவல் தண்டனை என்றும், நூலை வெளியிட்ட தோழர் கண்ணப்பருக்கு ரூ.500 அபராதம் என்றும், கட்டத்தவறினால் நான்குமாதம் வெறுங்காவல் தண்டனை என்றும், சப்டிவிஷனல் மாஜிஸ்டிரேட்டால் தீர்ப்பளிக்கப்பட்டது.

அண்ணா அவர்கள் முதலில் தான் அபராதம் கட்டப்போவதில்லை என்றும், சிறைத் தண்டனை ஏற்கத் தயாரென்று கூறினார்கள். நூலை வெளியிட்ட தோழர் கண்ணப்பர் அபராதம் செலுத்திவிட இசைந்தார்.

பெரியார் அவர்களுக்காக வழக்காடிய தோழர் தி.பொ.வேதாசலம் அவர்கள் பெரியாரிடம் சிறிது நேரம் கலந்து பேசியதற்குப் பின்பு, பெரியாரும் அபராதம் கட்டப் போவதில்லை என்றும், சிறை தண்டனை ஏற்கத் தயாராக இருக்கிறார் என்றும் கூறினார்.

பிறகு அண்ணா, பெரியார் இருவருக்கும் வாரண்ட்கள் ‘சர்வ்’ செய்யப்பட்டன.

போலீஸ் இன்ஸ்பெக்டர் முதலில் அண்ணா அவர்களை அழைத்துச் சென்று போலீஸ் லாரியில் ஏற்றினார். அப்பொழுது கூடியிருந்த மக்கள் “அண்ணா வாழ்க” அடக்குமுறை ஆட்சி ஒழிக” என்ற ஒலி முழக்கங்களை எழுப்பியவண்ணம் இருந்தார்கள்.

பெரியார் அவர்கள் பிறகு லாரியில் ஏற்றப்பட்டவுடன் லாரி மத்தியசிறைச்சாலை நோக்கி புறப்பட்டது.

அண்ணாவோடு வந்திருந்த முக்கிய தோழர்கள் தனிக்காரில் ஏறிக்கொண்டு லாரியைத் தொடர்ந்தார்கள். சிறைச்சாலையின் அருகில் லாரி சென்று சேருவதற்கு முன்பே இவர்கள் சென்று காத்துக்கொண்டு நின்றார்கள்.

அண்ணா, பெரியார் ஆகிய இருவரும் சிறைக்கதவினருகில், லாரியை விட்டு இறங்கி உள்ளே நுழையும்போது, தோழர்களான கே.கே.நீலமேகம், கே.ஆர்.ராமசாமி, இரா.நெடுஞ்செழியன், ஈ.வே.கே.சம்பத், கே.கோவிந்தசாமி, புட்டாசாமி, சி.வி.இராசகோபால் ஆகியவர்கள் எதிர் நின்று கைகூப்பி வணக்கஞ் செலுத்தி வழியனுப்பி வைத்தனர்.

அண்ணா அவர்கள் கடைசிவரையில் யாதொரு கலக்கமுமின்றி, “மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எம்மை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை” என்ற எண்ணத்தை உள்ளத்தில் ஏந்தியவரைப்போல், மலர்ந்த முகத்தோடு, மகிழ்ச்சி கொப்பளிக்க சிறைக் கோட்டத்தினுள் புகுந்தார்கள்.

அண்ணா அவர்கள் சிறைக்கோட்டம் புகுவததற்குமுன்பு, முக்கியத் தோழர்களிடம் அமைதி. கட்டுப்பாடு, ஒழுங்கு ஆகிய கடமையுணர்ச்சிகளினின்றும் கழகத்தோழர்கள் தவறிப்போகாமல் பார்த்துக்கொள்ளும்படியும், சிவகங்கை மாநாட்டைச் சிறப்பான முறையில் நடத்தும்படியும், மத்திய சர்க்கார் மத்திரிகளுக்குக் கறுப்புக்கொடி பிடிக்கும் திட்டத்தை அமைதியான முறையிலே வெற்றிபயக்கும் விதத்தில் அவர்கள் வரும் வரை ஊர்தோறும் நடத்தும்படியும் சொல்லிச் சென்றார்கள்.

மாலை 4.20 மணி அளவிற்கு, அரசாங்கத்தின் அடக்குமுறை அம்புக்கு ஆளான, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரான ‘நம் அண்ணா’வை சிறைகோட்டத்தின் கதவுகள் திறந்து வரவேற்றன. புன்சிரிப்போடு அண்ணா புகுந்தார்! கூடியிருந்தோர் இதய்களெல்லாம் குலுங்கியது!! சிறைக் கதவும் மூடிக்கொண்டது!!!

(திராவிடநாடு 24.9.50)