அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அண்ணாமலை நகர் மாணவர்கள் மீது வழக்கு!

பெரியார் வேண்டுகோள்!

1947 ம் ஆண்டு அக்டோபர் 6 ந“ தேதியில் சிதம்பரம் அண்ணாமலை நகர் கல்லூரி மாணவர்கள் ஒரு விழா கொண்டாடிய சமயத்தில் அக்கல்லூரியில் உள்ள காங்கிரஸ் உணர்ச்சி உள்ள மாணவர்கள் சிலர் திராவிடர் கழகக் கொடியைப் பலவந்தமாக இறக்க முயற்சித்த தன் பொருட்டு ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாகப் போலீசார் இருதரப்பு மாணவர்கள் மீதும் அதாவது கழக உணர்ச்சி மாணவர்கள் 5 பேர்கள் மீதும் காங்கிரஸ் உணர்ச்சி மாணவர்கள் 12 பேர் மீதும் வழக்குத் தொடுத்தார்கள்.

இவ்வழக்கு சுமார் 2.3 மாதகாலம் நடந்து சில சாட்சிகள் விசாரிக்கப்பட்ட பின் காங்கிரஸ் உணர்ச்சி மாணவர்கள் மீது குற்றம் ஏற்படுவதைக் கண்ட சிதம்பரம் காங்கிரஸ் தோழர்கள் மந்திரியிடம் அணுகியதில் மந்திரியார் அந்த 12 மாணவர்கள் மீதுள்ள வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ளும்படி போலீசுக்குக் கட்டளையிட போலீசார் வாபஸ் வாங்கிக் கொண்டார்கள்.

அது போலவே கழக உணர்ச்சி உள்ள மாணவர்கள் 5 பேர்கள் கல்வி மந்திரியாரைக் கேட்டதில் மந்திரியார் வாபஸ் வாங்க மறுத்துவிட்டதோடு மாணவர் கழகத் தலைவர் தோழர் மதியழகன் பரீட்சைக்கு உட்காரக் கூடாது என்றும் தடை விதித்து தடுத்தும் விட்டார். அதன் பிறகு மேற்கண்ட வழக்கை சிதம்பரம், பரங்கிப்பேட்டை ஆகிய ஊர் மாஜிஸ்ரேட் கச்சேரிகளில் ஒரு ஆண்டாக நடக்கும்படி ஏற்பட்டு சுமார் 30 வாய்த்தாக்களுக்கு மேல் ஒத்திப்போட்டு இழுக்கடித்து, வழக்குக்கு ஆக ரூ.2000 க்கு மேல் செலவும் ஏற்பட்டு கடைசியாக திராவிட கழகத் தலைவருக்கு 6 மாதம் கடினகாவல் தண்டனையும் மாணவர்களுக்கு மொத்தம் ரூ.500 வரை அபராதமும் விதிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த வழக்கு சம்பந்தமான தீர்ப்பு நியாயமான தீர்ப்பு அல்ல என்று மாணவர்களும் வக்கீல்களும் கருதுவதாலும் அத்தீர்ப்பு மாணவர்களின் பின் வாழ்வைப் பாதிப்பதாலும் தீர்ப்பின் மீது அப்பீல் செய்ய வேண்டி இருக்கிறது.

மாணவர்கள் இவ்வழக்குக்கு ஆக சொந்தக் கைப்பொறுப்பில் இதுவரை 2000 ரூபாய்க்கு மேல் செலவு செய்து இருக்கிறார்கள். ஆனதால் தற்காலம் அவர்களது நிலைமை அப்பீல் வகையில் செலவுக்குக் கண்டிப்பாய்ப் பொதுமக்கள் ஆதரவு தேட வேண்டியதாக இருந்துவருகிறது. எனவே அப்பீலுக்குப் பொது ஜனங்கள் அருள் கூர்ந்து பொருளுதவி செய்ய வேண்டியது மிகுதியும் தேவையான காரியம் என்று கருதுவதால் பொதுமக்கள் தங்களாலான உதவி செய்ய வேண்டுமாய் வேண்டிக்கொள்கிறேன்.

நன்கொடை: ஈ.வே.இராமசாமி 100.0.0

ஈ.வே.இராமசாமி
(திராவிடநாடு-20.2.49)