அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அந்தக் கணபதிக்கு..!

“அந்தக் கணபதிக்குத் தொந்தி பெருத்தவிதம் அறியச் சொல்லும் எந்தன் முன்னே, முன்னே.”

“அந்தக் கணபதிக்குத் தொந்தி பெருத்தவிதம், கொழுக்கட்டை தின்னதினால் அண்ணே, அண்ணே.”
இந்த விகடப் புரட்டை, நகைச்சுவை விருந்தூட்டும் நண்பர் என்.எஸ். கிருஷ்ணன், தாம் நடித்த திருநீலகண்டரிலே பாடக் கேட்டிருப்பீர்கள். கொழுக்கட்டை தின்றதால் கணபதிக்குத் தொங்கு வயிறு ஏற்பட்டது என்பதனைக் கூறுமுன் அவர் தத்தளிக்கக் கண்டிருப்பீர்கள். சரியான பதில் கூறு முடியாமல் அவர் அவ்விதம் தவிக்கிறார் என்றே எண்ணி இருப்பீர்கள். எனக்கு அவ்விதம் தோன்றவில்லை. கணபதியின் வயிறு அவ்விதம் வீங்கிக் கிடப்பதன் காரணத்தைப் புராண ஆதாரத்தன்படி கூறலாமா, கூடாதா, கூறினால் மக்கள் என்ன நினைப்பார்களோ என்று யோசித்துக் கொண்டிருந்ததாலேயே என்.எஸ். கிருஷ்ணன் பதில் பாட்டுப்பாட அவ்வளவு நேரம் பிடித்தது என்று கருதுகிறேன். உண்மையாகவே கொழுக்கட்டை தின்றதால், கணபதியின் வயிறு பெருத்து விட்டதாகக் கூறுவதைவிடப் புராண ஆதாரத்தைக் கூறியிருந்தால், வேடிக்கை வேந்தனே விலா நோகச் சிரித்தாக வேண்டும், அவ்வளவு விசித்திரமான வரலாறு இருக்கிறது புராணத்திலே.

கணபதியின் தொந்தி பெருத்திடக்கூடிய சம்பவம் ஒன்று நடந்தது. அதாவது, ஒரு கொடிய அரக்கன், பிள்ளையாரின் வயிற்றிலே கிடப்பதால், தொந்தி பெருத்துவிட்டது. அந்த அரக்கன், சாமான்யமானவனல்லன், தேவரை வாட்டி வந்தவன். குடிப் பிறப்போ உயர்தரமானது, யமனுக்கும் திலோத்தமைக்கும் பிறந்தவன் அந்த அசுரன். எப்போது இந்தத் திருமணம் நடந்தது என்று ஆராயத் தொடங்கி எமது அடுத்த படம் “திலோத்தமை திருமணம்” என்று பட முதலாளிமார்கள் எவரேனும் விளம்பரப்படுத்துவார்களோ, என்னமோ நானறியேன். ஆனால் புராணத்தின்படி பார்த்தால், யமனுக்கும் திலோத்தமைக்கும், திருமணம் நடக்காமலேயே, இந்த அசுரக் குழந்தை பிறந்ததாகத் தெரியவருகிறது. எங்ஙனம்? சரி, அதனை நான் கூறினால், இப்படி ஆபாசங்களைச் சொல்லாதே பரதா! என்று என்மீது அன்பர்கள் கோபித்துக் கொள்ள வேண்டாம், நான் கூறுவது, புராணம், பக்தகோடிகளின் சிரவணாபரணம்!

ஒருநாள், தேவநடன மாதர்களிலே ஒருவளும், மகாசுந்தரியும், லலிதமான குணவதியும், நடனக் கலையிலே வல்லவளுமான திலோத்தமை, யமனுடைய தர்பாரிலே நடனமாடிக் கொண்டிருந் தாள். அன்று அவளுடைய ஆடல், அழகு, அழிவுத் தேவனின் மன உறுதியை அழித்துவிட்டது. திலோத்தமையின் சுழலும் கண்கள், யமனுடைய மனதைச் சுழலவைத்தது. அவன் மோகவயத்தனானான். காமக்குரோதிகளை அடக்குவதுதானே ஞான மார்க்கம், சத்புருஷர்கள் செய்யவேண்டிய காரியம் என்று கேட்பீர்கள். ஆமாம் தோழர்களே! ஆனால், அது, நரருக்கு! தேவர்களுக்கு, தேவ மாதருடன், லீலாவிநோதமாக இருப்பது உரிமை!! எனவே, யமன், திலோத்தமையின் அழகிலே சொக்கியது, தேவருலகச் சட்டப்படி குற்றமாகாது! அங்கே, இதைவிட விபரீதமான சம்பவங்கள் நடந்ததாகக் கூறுவர், தண்டனை கிடையாது, ஏதேனும் இருப்பினும் சாதாரணமானதாக இருக்கும், இந்தியன் பினல்கோட் அங்கு கிடையாது. நடன சுந்தரியாம் திலோத்தமையைக் கண்டு காமங்கொண்ட யமன், எவர் மீதும் பாசக்கயிறு வீசும் தன்மீது, திலோத்தமையின் அழகெனும் பாசம் வீசப்பட்டது கண்டு, நெஞ்சு நெகிழ நின்றான். நின்றதும், வீரியம் வெளிப்பட்டது. வெளிப்பட்டதும், ஒரு குழந்தை ஜெனித்தது. அக்குழந்தையே அரக்கன். அவன் பிறகு செய்த அக்ரமத்தைக்கண்ட விநாயகர், அவனைத் தூக்கி, விழுங்கி விட்டார். கணபதிக்குத் தொந்திவந்த விதம் இது! புராணத்திலிருப்பது, மகா ஆபாசம், என்பீர்கள், கேவலம்; கேட்கவே பிடிக்கவில்லை, என்று கூறுவீர்கள். செவிச்சுவை உணராத உங்களுக்கு எப்படி இவை இனிக்கும். நீவிர் வெறும் வாயுணர்வின் மாக்கள் என்று முன்பே முத்தமிழ் கற்ற பக்தர்கள் கரந்தையில் கூறிவிட்டனரே! கடவுட்கொள்கையுணராத நமக்கு இக்கதைகளின் சுவை தெரியாது, அந்தக் கல்விமான்கள் அறிவர், இத்தகைய புராணங்களின் சுவையை!!

தோழர்களே! இவைபோன்ற எண்ணற்ற நிகழ்ச்சிகளைப் புராண ஏடுகள், வெண்பாவாகவும், விருத்தமாகவும், அறுசீர் எழுசீர் அகவல் அந்தாதி, கொச்சகக் கலிப்பா என்று பல்வேறு விதமான உருவங்களுடன் தாங்கிக் கொண்டுள்ளன. என்ன பேதமை ஐயா! இப்படி ஒரு தேவலோகமா! நடனமாடுபவளைக் கண்டதும், விந்து வெளிப்படுவதா, அது குழந்தையாக மாறுவதா, அது கொடுஞ்செயல் புரிவதா, அதனை மூலக்கடவுளின் மூத்த மகன் வாழைப்பழம்போல எடுத்து விழுங்குவதா இத்தகைய ஆபாசம் எவ்வளவு அணி சிறந்த பாக்களால் அமைக்கப்பட்டிருப்பினும், அதைப்படித்து அறிவு என்ன பெறக்கூடும்? என்று நாம் கேட்கிறோம். செவிச்சுவையைச் தேடிடும் செந்தமிழன்பர்களோ, அறிவுச்சுவைபற்றி அக்கரைகாட்ட மறுக்கின்றனர். ஆண்டவனைப்பற்றி இவ்வளவு ஆபாசமான கதைகளிருக்கின்றனவே, என்று தெரிந்து, வெட்கத்தால் தலை குனிந்து துக்கத்தால் கண் துடைத்துக் கொண்டு, வெளிநாட்டு விரோதிகள் முன்நிற்கக் கூசி வேதனைப் படவேண்டிய நமது அன்பர்கள், “இவனென்ன கண்டான் கவிச்சுவையை! கதையைக் கூறினானே
யன்றி, கவி இலட்சணத்தைக் கண்டானோ, அணியழகைத் தெரிந்து கொண்டானோ, இவன் செவிச்சுவை உணராதவன்” என்று கூறி நம்மீது சீறுகின்றனர். இவர்களை என்னென்பது தோழர்களே! இத்தன்மையான இழிவும் மடைமையும், ஆபாசமும் அறிவீனமும், கடவுட் கதைகளாக்கப்பட்டுள்ளனவே, என்று இவர்கள், வெட்கித் தலை குனிந்து, அந்த ஏடுகளை வீசித் தீயிலிட்டாலன்றி, இந்த நாட்டிலே அறிவு ஆட்சி செய்ய முடியுமா கூறுங்கள். அறிவு ஆட்சி செய்யாமுன்பு ஆண்மை இருக்குமா? ஆண்மை இல்லையேல், வேறு எது இருந்தும் என்ன பயன்? ஏன், இவர்கள் இதனைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை என்று கேட்கிறேன். ஒரு கடவுளுக்கேனும், ஒழுங்கான, யோக்யதையான, ஆபாசமில்லாத, நீதிநெறிக்கேற்ற கதையைக் கூறினரோ! ஒரு கடவுளையேனும், கட்குடியன், காமச் சேட்டைக்காரன், கள்ளன், பிறன்மனைவிழைபவன் எனும் கொடிய குற்றங்கள் செய்தவனாகவன்றி, வேறு, சத்புருஷனாக்கிக் காட்டியுள்ளனரோ. உண்மையில் பார்க்கப்போனால், கவிதா இலட்சணத்துக்காக என்ற சாக்குக்காகவாகிலும் புராண இதிகாசங்களைப் படித்தால், படித்தவனின் மனம், மான ரோஷத்தை மதிக்கக்கூடிய நிலையிலே இருக்குமானால், அவன், இத்தகைய புராணங்களை “என் மார்க்க ஏடுகள் - என் கடவுள் காதைகள் - என் இலக்கியங்கள்” என்று கூறக்கூசுவான். அவ்வளவு அநாகரிக ஆபாசங்கள், புராணங்களிலே நெளிகின்றன. அவைகளைக் கைவிட, இவர்களுக்கு மனமில்லை, இவர்களை என்ன வென்று கூறுவது!
* * *

ஆமாம் தம்பீ! இப்படிப் புராணங்களிலுள்ள ஆபாசங்களை எடுத்துக் கூறிக்கொண்டே இருப்பதால், கோரின பலன் கிடைக்குமா? மக்கள் ஏதேனும் ஒரு கருத்தைத்தானே தழுவிக் கொள்வர். நீங்கள் கம்ப இராமாயணம் கூடாது, பெரிய புராணம் கூடாது, என்று புராண இதிகாசங்களைக் கண்டித்து ஒதுக்கித்தள்ளச் சொன்னால் போகாதே! சரி இவைகள் வேண்டாமென்றால், வேறு எதனை நாங்கள் கொள்வது, எங்களுக்கு ஏதேனும் வேண்டுமே, என்று மக்கள் கேட்பரே அதற்கென்ன செய்வீர்! என்று என் நண்பரொருவர் என்னைக் கேட்டார். அவர், அக்கேள்வியை மிகச் சமர்த்தானதென்றுதான் கருதியிருப்பார், இல்லை என்றால் அக்கேள்வியைக் கேட்கும்போது அவருடைய முகத்திலே ஒரு களையும், கண்களிலே பூரிப்பும் ஏற்பட்டிருக்காதல்லவா!
* * *

ஒரு கதை! கண்கள் கொல்லைப் பழமாகக் காணப்பட்டது, குடிவெறியால். வைதீகனின் மந்திர ஒலி தமிழருக்கு எங்ஙனம் புரியாதோ, அதுபோல யாருக்கும் புரியமுடியாதபடி அவன் குளறினான், போதை தலைக்கேறியதால் சக்தியைத் தோற்கடித்து அவர் ஆடினாராமே, இவன் அந்தத் தில்லையம்பலத்தான்போல் ஆடினான், ஆனந்தத்தால். கன்னத்தில் கையை வைத்துக் கலங்கி நின்று கொண்டிருந்த அவன் மனைவி, புருஷன் நிலை தெரிந்து கொண்டாள், சற்று அடக்கமாகவே பேசினாள். அவன் ஏசினான். அவள் காதில் போட்டுக்கொள்ளவில்லை. பொழுது விடிந்தால், அவன் பூனையாவான் என்பது அவளுக்குத் தெரியும். இலை போட்டாள். ஏற இறங்கப் பார்த்தான். எச்சிலை உமிழ்ந்தான், என்ன இது? என்று கேட்டான்.

“இலை.”
“உன் தலை.”
“உட்காருங்கள்.”
“நீ சொன்னதை நான் செய்யணுமா.”
“வேண்டாம், அப்படியே எவ்வளவு நேரம் நிற்கிறீர்களோ, நில்லுங்கள்.”
“ஏண்டி! மணி பனிரண்டாகுதே, பசிக்காதா.”
“அதைத் தெரிஞ்சதான் இலை போட்டேன்.”
“நான் என்னடி மாடா, இலையைத் தின்ன.”
“உட்காருங்கள், சாதம் போடுகிறேன்.”

இந்தப்பல்லவிக்குப் பிறகு அவன் உட்கார்ந்தான். சாதம் வட்டித்தாள், கீரை கடைந்திருந்தது, அதை இலையில் இட்டாள்.

வந்தது கோபம், குடிகாரக் கணவனுக்கு. “இதுதானா? வேறு கறி கிடையாதா?”
“இருந்தால் வைக்க மாட்டேனா?”
“நீ குடித்தனமாடி செய்கிறே.”

“இல்லை, இல்லை, நீங்கள் சம்பாதித்த சீமையிலே துரைத்தனஞ் செய்கிறேன். கிடைத்த காசைக் குடிச்சுத் தீர்த்து விட்டு, வெறிச்சி கிடக்கிறதுக்கு, இதுவும் பேசுவிங்கோ, இதற்கு மேலேயும் பேசுவிங்கோ. நீங்களா, பேசறிங்க இப்ப.”

“வேறே ஏதாகிலும் இருக்கா, இல்லையா.”
“இல்லை, இல்லை.”
“கீரை வேண்டாம்.”
“அதுதான் இருக்கு, அதுவும், நம்ம தோட்டத்திலே கிடைத்தது. மூன்றணா கொடுத்து விட்டீர்களே, போதுமா குடும்பத்துக்கு.”

இந்த அநுபல்லவிக்குப் பிறகு, குடியன், கோபமாகக் கீரையை இலையிலிருந்து வழித்தான். வீசி எறிந்தான் எதிரே இருந்த சுவரின் மீது! இலையை முறைத்தான், மனைவியை முறைத்தான், கணைத்தான், குளறினான், கொண்டு வா வேறே கறி என்று கூவினான். இருந்தால்தானே அவன் எடுத்துவர. நெடுநேரத்துக்குப் பிறகு நிலைமை தெரிந்து, மனைவியைக் கூப்பிட்டான், “சொரணை கெட்டவளே! சுவரிலே இருக்கும் கீரையை வழித்து வையடி இலையிலே” என்று உத்தர விட்டான். சொரணை யாருக்கு இல்லை, உனக்கா, எனக்கா, என்று அந்த மாது கேட்கவில்லை; கேட்பானேன், நமக்குத் தெரியவில்லையா, அந்தக் குடியனின் சொரணை கெட்ட தன்மை.

சுவரிலிருக்கும் கீரையை வழித்துப் போடச் சொன்ன கதைபோல, அவர், சுயமரியாதை இயக்கக்கொள்கைகளை ஜீரணிக்காத நேரத்தில், ஆத்திரத்தை மட்டும் கொண்டு, கீரையை வீசி எறிந்தவன் போலப் புராணங்களை வீசி எறிந்தனர். குடியனுக்கு வேறோர் கறியும் கிடைக்காததால், வீசி எறிந்ததை வழித்து வைக்கச் சொன்னான், இந்தத் தோழர்கள், காரணத்தை வெறுத்துத் தள்ளிய பிறகு, வேறோர் பொருளையும் பெறாததால், மீண்டும், வழித்துவா, என்று கூறின குடியன் போல, பழையபடி புராணத்தைத் தூக்கிக் கொண்டு பாராயணம் செய்கின்றனர்.
என்னைக் கேள்விகேட்ட தோழர் ஒரு காலத்திலே ஓங்காரக் கூச்சலிட்டு, ஒழிப்பேன் மதத்தை! உடைப்பேன் வைதிகத்தை! பொசுக்குவேன் புராணாதிகளை! என்று முழக்கமிட்டவர். இப்போது, சுவர்க் கீரையை வழித்துவைத்துக் கொண்டார். ஏதோ கதை சொன்னேன் என்பதற்காக உவமானத்தைக் கடைசிவரை வளர்த்திக்கொண்டே போய் அப்படியானால், அவர் சொரணை கெட்டவரா? வெறியரா? என்று கேட்டு விடாதீர்கள். உவமானம், எதற்கென்றால், கீரை தவிர வேறு கறி கிடைத்திருந்தால், சுவரிலே ஏறிய கீரை மறுபடியும் சோற்றுக்குச் சேர்ந்திராது என்பதுபோல, புராணதிகளைக் குப்பை மேட்டிலே வீசிவிட்ட அந்த என் நண்பருக்கு, புத்துலகக் கருத்துரைகள் கிடைத்திருந்தால், அவர் மீண்டும், பழைய ஏடுகளைக் கட்டிப் புரண்டிருக்க மாட்டார் என்பதைக் கூறவே கதை கூறினேன்.

ஆகவேதான், என் நண்பர், மக்கள் பற்றிக்கொள்ள ஏதேனும் வேண்டுமே, அதற்கென்ன தருகிறீர். ஏதுந்தராவிடில், நீங்கள் எஎக்காளமிட்டுப் பயன் என்ன? இது வேண்டாம், அது வேண்டாம் என்று கூறினால் மட்டும் பயன் வருமோ, என்று என்னைக் கேட்டார். வெறும் வசனத்தோடு விட்டார் என்று எண்ணிவிடாதீர்கள், பதிகமும் பாடினார், “பற்றுக, பற்றற்றான் தாளினை” என்று பக்தர் ஒருவர் பாடினாராம், அதை மேற்கோள் காட்டினார், கேள்விப் பாணத்தைப் பூட்டினார்.

“தோழரே! நாங்கள், இது வேண்டாம், அது வேண்டாம் என்று கூறுகிறோம், இதன் பயனாகத் தமிழருக்கு ஆகாத பண்டங்கள் ஒழிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், மக்கள் பற்றிக்கொள்ள, ஆபாசமற்ற, அறிவுக்குப் பொருத்தமான, அநாகரிகமற்ற, புத்துலக வாழ்வு தரக்கூடிய கவிதை, காவியங்களை முத்தமிழ்கற்ற விற்பன்னர்கள், இயற்றி அளிப்பதை யார் தடுக்கிறார்கள்? ஏன் அவர்கள் அக்காரியத்தைச் செய்யக்கூடாது. குண்டு வீச்சினால் ஏற்படும் சேதத்தைப் பரிகாரம் செய்ய ஏ.ஆர்.பி. இருக்கிறது. இதில் என்ன பயன், குண்டு வீசாமலே இருக்க வழி செய்தால்தானே சுகங்கிடைக்கும் என்று கேட்கும் ஐந்தாம் படையின் பேச்சுப் போலிருக்கிறதே உமது வாதம். நாங்கள் நாட்டு மக்களை நாசமாக்கும் நச்சுக்கொள்கை ஏடுகளை ஒழிக்கிறோம், நற்றமிழைக் கற்று நாவலராயுள்ள நீவிர், நாலாறு நூல் இயற்றுவதுதானே?” என்று நான் கேட்டேன். அவர், அதற்கு என்ன கூறினார் பதில்!

“நாங்கள் செய்வது கிடக்கட்டும், புராணாதிகளைக் குறைகூறும் நீங்கள், வேறு இலக்கியத்தை தயாரித்து விட்டுத்தானே, இக்காரியத்திலே இறங்க வேண்டும்” என்று சொன்னார்.

“நண்பா! வீணாக எம்முடன் வாதிட்டு நரிக்குண இனத்த வருக்குத் துணையாக நிற்கும், (மனமின்றி நிற்கும்) தமிழ்ப் புலவர்கள், இச்சமயத்திலே எதுகைமோனை போய்விடுமோ எழுசீர் விருத்தம் வீழ்ந்திடுமோ, அம்மானையும் அந்தாதியும் அழிந்திடுமோ என்று எண்ணி வீணாக வருந்துவதைவிட, ஆபாசத்தை அழிக்க தன் மதிப்பு இயக்கத்தார் பாடுபடட்டும், நாம், அவர்கள் அழிக்கும் நேரத்திலேயே, பாழ்வெளி உண்டாகாத விதத்திலே, புதிய கருத்துடன்கூடிய அருங்கலைகளை இயற்றுவோம், என்று மட்டும் மனமுவந்து எண்ணி, அந்தத் துறையிலே இறங்கினால், இரண்டு துறைகளிலும், வேலை அழகுற நடக்குமே, என்று நான் சற்று ஏக்கத்துடன் சொன்னேன். என் நண்பர், இதோ பார்! இந்துமதக் கோட்பாடு சரியில்லை, விக்ரக வணக்கம் கூடாது, புராணம் கூடாது, என்று கூறினார்கள், கிருஸ்தவர்கள். இவைகளை நம்பாதீர்கள், இதோ எமது மெய்ஞான வேதமாம், பைபிள் இருக்கிறது, படித்துப் பயன் பெறுங்கள், என்று கூறினர். அதுகேட்ட மக்கள், “சரி! பழையமதம் வேண்டாம், இப்புது நெறி புகுவோம்” என்று கூறினர், புதுக்கருத்தும் கிருஸ்தவமும் வளர்ந்தது. அதைப்போலவே, மற்றவை வேண்டாம், கொரானை ஓதுங்கள் என்று முஸ்லீம்கள் சொல்லக் கேட்டுப் பலர் புதுமார்க்கம் தழுவினர். அதுபோல சுயமரியாதைக்காரர், ஏதேனும் ஒரு நூலைக் காட்டவேண்டாமா?” என்று கேட்டார்.

“நல்ல கேள்வி நண்பா நீ கேட்டது! கிருஸ்தவ மார்க்கமும், இஸ்லாமும், ஏற்பட்டபோது, பைபிளையும், கொரானையும் கையிலே, ஏசுவும், முகமதுவும் ஏந்திக்கொண்டு, மக்களைப் பார்த்து, “ஏ! மக்களே மற்ற மத ஏடுகளை விட்டொழியுங்கள். அவை மாசு படிந்தன. இதோ எமது வேதம், இதைப்படித்து இம்மை மறுமை இரண்டிலும் சுகம் பெறுக! ஓம், சாந்தி, சாந்தி, சாந்தி! என்றா போதித்தனர். கொரானும், பைபிளும் முறையே முகமது, ஏசு, ஆகியோர், அவர்கள் காலத்திலே மக்கள் கொண்டிருந்த காட்டு மிராண்டிக் கருத்தை அழித்த பிறகு ஏற்பட்ட அரிய விளைவு! அது போலவே, சுயமரியாதைக்கார் இன்று ஆரியக் கள்ளியை அழித்த பிறகு அந்த நிலத்திலே அறிவெனும் விதை ஊன்றி, கல்வி எனும் நீர்ப் பாய்ச்சி, கற்பனை எனும் களை முளைத்தால் களைந்துவிட்டு, வீணர் மொழி எனும் விலங்கினம் புகாதபடி பாதுகாத்தால், புதுக்கலை எனும் கதிர் காணலாமே! இதைத் தடை செய்பவர், யார்? என்றேன்.

“என்ன இருந்தாலும்....” என்று என் தோழர் இழுத்தார். வாதம் முடிந்து விட்டது, பிடிவாதம் பிறந்து விட்டது என்று கண்டு கொண்டேன். அவரும், நமது நோக்கத்தை நாம், அச்சம் தயை தாட்சணியமின்றிக் கூறுகிறோம் என்பதைக் கண்டு கொண்டார்.

இதுபோன்ற குறுக்குக் கேள்வியிலே காலந்தள்ளும் குணாளர்கள், எந்தக் காவியத்தின் குளிர்ச்சியிலே சொக்கிக் கிடக்கின்றனரோ, அக் காவியங்கள், கடவுள், மதம், மக்கள் கடமை, பக்தி, நீதி எனும் இலட்சியங்களுக்குத் தரும் இலட்சண விளக்கம், இந்த இருபதாம் நூற்றாண்டிலே அறிவு உலகிலே, எவரேனும் ஏற்பரோ என்பதை யோசிக்க வேண்டுகிறேன். இன்னமும் அந்த கணபதிக்குத் தொந்தி பெருத்த விதத்துக்கு” ஆதாரம் தேடவும், அந்தாதி பாடவுமே நம்மவர் அறிவு பயன்பட்டு வருமானால், நாம், மற்ற மக்கள்போல் மண்ணையும் விண்ணையும் அடக்குவது என்று! மானமும் வாழ்வும், மணமும் மலரும்போல் கலந்திடக் காண்பது என்று!

16.5.1943