அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அந்த மனோலயம்
சென்னை மாகாணத்திலே அரசியல் கட்சிகளே வேலை செய்வதில்லை அரசியல் தேக்கமாகிவிட்டது. இது நல்லதன்று, ஜனநாயக வளர்ச்சிக்கு உகந்ததன்று, மக்களின் நல்வாழ்க்கைக்கு வசதிதரக்கூடியதன்று-ஆங்கில மெயில், இதுபோல, அரசியல் கிளர்ச்சி தேக்க
மடைந்து விட்டதே என்று அழுகுரல் கிளப்பி, ஒரு தலையங்கம் எழுதுகிறது. காங்கிரசார் காடாளச் சென்றனர், மற்றக் கட்சிகள், காங்கிரசுக்கு மாறுபாடான கொள்கை கொண்ட கட்சிகள், ஏன் பணியாற்றக்கூடாது, அவைகள் மூலையிலே முடங்கிக் கிடக்கின்றனவே என்று முகாரி பாடுகிறது.

சூட்சுமம் என்னவென்றால், ஜஸ்டிஸ் கட்சி ஏன் வேலை செய்வதில்லை என்ற கேள்வியை, வேறுவிதமான வாசகத்திலே, மெயில் கேட்கிறது. மெயிலுக்கு ஜஸ்டிஸ் கட்சியிடம் அன்பும் அக்கறையும் பிறந்ததால், இதுபோல் கேட்கவில்லை. ஆங்கிலேயரே எங்கும் ஆளும் நிலைமை இருப்பதற்கு காரணம், ஜஸ்டிஸ் கட்சி ஒதுங்கிக் கெண்டதுதான் என்று, நையாண்டி செய்ய இது ஒரு சந்தர்ப்பம் என்று மெயில் இவ்விதம் எழுதுகிறது. ஏதோ, ஜஸ்டிஸ் கட்சியை நையாண்டி செய்யவாகிலும் நினைப்பு வந்ததே. ‘காருண்ய துரையவாளுக்கு’ அதுவரை, வந்தனங்கூற வேண்டும் போலும்!

மெயில் பத்திரிகை பேசுவதுபோல நமது இயக்கத் தோழர்களில் கூடச் சிலர், ஜஸ்டிஸ் கட்சி எங்கே? ஜஸ்டிஸ் கட்சி என்ன செய்கிறது? என்று கேட்பது, தமது மேதாவித்தனத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு என்று கருதுகின்றனர். சர்க்காரிலேகூட இத்தகைய ஒரு மனப்பான்மை உண்டு. ஜஸ்டிஸ் கட்சித் தலைவரும், தொண்டர்களும் இவ்விதமான நையாண்டிகளைக்கேட்டு வெட்கி, ‘என்ன சார்! செய்யச் சொல்கிறீர்கள்? நீங்கள் சொல்கிறபடி கேட்கிறோம்’ என்று அஞ்சலி செய்து கூறிடுவர், என்று கருது கின்றனர் பாபம்! ஜஸ்டிஸ் கட்சித் தலைவரும் தொண்டர்களும் இன்று, இத்தகைய நையாண்டிகளைக்கேட்டு, உடனே விழுந்தடித்தழும் நிலையிலே இல்லை. குற்றங்கூறுவோரின் விழியிலே உள்ள பழுது தெரிந்து, நகைக்கிறது ஜஸ்டிஸ் கட்சி.

ஜஸ்டிஸ் கட்சி நன்றாக வேலை செய்கிறது - என்ற சர்ட்டிபி கேட், சர்க்காரிடமிருந்து எப்போது கிடைக்குமென்று எண்ணு கிறீர்கள்! “நல்ல குதிரை! கொள்ளும் போட வேண்டியதில்லை. எவ்வளவு சவாரிக்கும் சளைக்காது, உதைக்காது, மூலை போகாது, சொன்னபடி கேட்கும்” என்று குதிரைக்குச் சர்ட்டிபிகேட்டு கொடுக்க வண்டியோட்டி எப்போது தயாராவான், குதிரை அவனுடைய சவுக்குக்கு முதுகு காட்டிக் கொண்டு உழைத்துக் கொண்டிருந்தால் தான்! அதுபோலத் தான், “வெள்ளைக்கார சர்க்கார், விஷ்ணு அவதாரமாச்சே! காருண்யம் பொருந்திய துரைமார் துரைத்தனமல்லவா அது. கடவுளே பார்த்து அனுப்பிவைத்த தர்மகர்த்தாக்களல்லவா” என்று ராஜபக்தி கீதம்பாடி, கவர்னர் தரிசனம் கலெக்டரின் கைகுலுக்கு, கான்ஸ்டெபிளின் சலாம், ஆகியவைகளுக்குப் பூரித்து, குனிந்த திருமேனியாய், கும்பிட்டு நிற்கும் பக்தனாய் இருந்தால், “ஆஹா! ஜஸ்டிஸ் கட்சி, நன்றாக வேலை செய்கிறது” என்று வெள்ளை வேதியர்களும் அவர்களின் ஏடும், கூற முன்வரும். ஜஸ்டிஸ் கட்சியை, “வா” என்று அழைத்ததும், சர்க்கார் மாளிகைக்குள் ஓடவும், “போ” என்றால், வெளியே போகவும், சித்தமாக இருந்தால் மட்டுமே வெள்ளை வர்க்கம் புன்சிரிப்புடன், “ஜஸ்டிஸ் கட்சி நன்றாக வேலை செய்கிறது” என்று பேசும். மனுகாலந் தொட்டு இருந்து வரும் அநீதிகளை ஆதரிக்கிறீர்களே என்று ஜஸ்டிஸ் கட்சி, சர்க்காரைக் கேட்கக் கூடாது. நாகரிக ஆட்சி, நல்லாட்சி, ஜனநாயக ஆட்சி என்ற பட்டம் இருக்கிறதேயொழிய, ஆட்சித் திட்டம், ஆரியருக்கு அனுகூலமானதாகத்தானே இருக்கிறது. எங்களின் சமுதாய இழிவுகள் போக வழி செய்யவில்லையே! எங்களை ஆரியமத சமுதாய விலங்கிலிருந்து விடுவிக்கவில்லையே. அந்த விலங்குகள் முறியாதிருக்கத்தானே உமது முறை பயன்படுகிறது - என்று சர்க்காரைக் கேட்கக்கூடாது. நாட்டுக்குப் பழங்குடி மக்கள் நாங்களாயிற்றே. எங்களின் கோரிக்கைதானே, ஆட்சி மன்றத்திலே அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று வாதாடக்கூடாது. வரி செலுத்த நாங்கள், ஆட்சிப்பரி ஏற ஆரியரா? என்று உரிமை முழக்கம் புரியக்கூடாது. உத்தியோக மண்டலம், பார்ப்பன மயமானாலும், சட்ட திட்டங்கள் மனு மாந்தாதா காலத்துக் கோட்பாடுகள் கொண்டதாக இருப்பினும், ஜஸ்டிஸ் கட்சி சர்க்காரைக் கண்டிக்கக்கூடாது, சலாமிடத் தவறக்கூடாது. அப்போதுதான் துரைமார்களின் துரைத்தனம், “ஜஸ்டிஸ் கட்சி நன்றாக வேலை செய்கிறது” என்று வாயாரக்கூறும் - மனமார அது எண்ணுவது என்ன என்று தெரியாது; ஜஸ்டிஸ் கட்சி, இத்தகைய “நல்ல காரியத்தைச் செய்ய” இன்று இசையவில்லை. ஆகவேதான் ஜஸ்டிஸ் கட்சி வேலையே செய்யக் காணோமே என்று மெயில் கேட்கிறது. ஜஸ்டிஸ் கட்சியின் போக்கும், மனப்பாங்கும், இன்று எப்படியாவது ஆளவேண்டும் என்ற விதத்தில் இல்லை! ஆட்சி பெறுவதற்காக, ஆங்கிலர் அடிவருடவோ, ஆரிய ஆங்கிலேய ஆலிங்கனத்துக்கு லாலி பாடவோ, கூப்பிட்ட குரலுக்குப் பதில்கூறிப் பில்லை அணியவோ, மறுக்கிறது. தயவு, தாட்சண்யம் என்பவைகளைவிட, உரிமை, நீதி என்பவைகளையே முன்னணி நிறுத்திவிட்டது. பதவியைவிட, தன்மானப் பதக்கமேமேல் என்று கூறுகிறது. இடம் பிடிப்பதைவிட, சமுதாய மன இயலை மாற்றி அமைப்பதே முக்கியமான காரியம் என்று கருதுகிறது. இனிக்கப்பேசி இலாபம் பெறத்துடிப்பதைவிட, இன எழுச்சிக்காகப் பணியாற்றி இடுக்கண் வரினும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மன நிலையில் இருக்கிறது. இது ஆங்கிலருக்கு ஆனந்தமூட்டாது என்பது தெரியும். ஆகவேதான், ஜஸ்டிஸ் கட்சி வேலை செய்யக் காணோமே! என்று மெயில் கேட்கிறது.

ஜஸ்டிஸ் கட்சிக்கு எவ்வளவு சிக்கலான அரசியல் திட்டத்தைத் தந்தாலும் செம்மையாக ஆளத் தெரியும் என்பது, இரட்டையாட்சியைத் திறம்பட நடத்திக் காட்டியதிலிருந்தே புத்தியுள்ள வருக்குப் புலனாகியிருக்கும். ஆனால், ஆளத் தெரிந்ததுடன், ஆட்சி முறையை மாற்ற ஒருபெரும் மனப்புரட்சியையும் உண்டாக்க ஜஸ்டிஸ் கட்சிக்குத் தெரியும் என்பதைக் காட்டவே இன்று, ஜஸ்டிஸ் கட்சி எங்கே? என்று மெயில் கேட்க வேண்டியவிதத்திலே, ஜஸ்டிஸ் கட்சி ஒதுங்கி நிற்கிறது. ஒதுங்கி நிற்கிறது என்றால் ஒடிந்து விட்டது என்று ஓட்டை மண்டைகள் உளறட்டும். ஒதுங்கி நிற்கிறது என்றால் அதன் உண்மைப்பொருள், அரசியலைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக எத்தகைய இழிவுகளையும் ஏற்றுக்கொள்ள மறுத்து, ஆட்சி செய்யும் நிலையைப் பெறுவதற்கோர் காலம் வரும், இன்று, ஆட்சி முறை நமது இன முன்னேற்றத்துக்கான விதத்திலே மாற்றுவதற்காகச், சமுதாயத்திலே ஒரு புதுசக்தியை உண்டாக்கும் பணியாற்றுவோம் என்ற நோக்கத்துடன் பணியாற்றுகிறது என்பதே பொருள். இது மந்தமதியினருக்குச் சுலபத்திலே புரியாது.

ஜஸ்டிஸ் கட்சி என்றால், ராஜபக்தியாட வேண்டிய கட்சி என்று தவறான கருத்தை எப்படித் துரைமார்கள் கொண்டுள்ளனரோ, அதுபோல் ஜஸ்டிஸ் கட்சியினருட் சிலர், கட்சி என்றால், பதவி, இல்லையேல் கௌரவ நிலை அதுவுந் தவறினால் அதிகாரிகளிடம் பழகும் அந்துஸ்து, அதுவும் இல்லையேல், கண்டிராக்டு! அவ்வப்போது பட்டம்! இதுதான் கட்சி வேலை செய்கிறது என்பதற்கு அத்தாட்சி என்று கருதுகின்றனர்! இப்போது ஜஸ்டிஸ் கட்சியின் இவைகளைப்பெற முடியாது. ஒரு நல்ல புடவை உண்டா! போட்டுக்கொள்ள நகை உண்டா! கைச்செலவுக்குப் பணம் உண்டா! என்ன சுகங்கண்டேன், உன்னைக்கட்டிக் கொண்டு, என்று, கைபிசைந்து, கண்ணீர்விடும் சில ‘பத்தினிகள் பாதி ராத்திரி வேளையில் பிறர் பக்கமேவி ‘பாவிமதனன் செய்யும் தீமை’யைப் போக்கிடும் பண்புடன் இருப்பதுண்டு. அதுபோல, ‘என்ன சார் சௌகரியம் ஜஸ்டிஸ் கட்சியிலே சேர்ந்து ஒரு நாமினேஷன் உண்டா! ஒரு ராவ்பகதூர் உண்டா? ஒரு பென்சு மேஜிஸ்டிரேட் வேலை உண்டா? ஒரு சின்னக் கண்டிராக்டாவது கிடைக்கிறதா? என்று சலித்துக்கூறும் சில சமயசஞ்சீவிகள் அரசியற் சோரம் போகவோ, சொல்லை விற்கவோ, தயங்கினதில்லை என்பதை நான் கூறமுடியும். ஏன்! என் நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர், ‘ஜஸ்டிஸ் கட்சி இப்போது என்ன வேலை செய்கிறது? அதற்கு இருந்த யோக்யதையே போய்விட்டது’ என்று புலம்பினார் என்னிடம். ‘என்ன’ என்று கேட்டேன். ‘அதை ஏன் கேட்கிறாய்! முன்பெல்லாம் இதே சென்னையிலே எத்தனை டீபார்ட்டிகள், நடக்கும்! எவ்வளவு அருமையான விருந்துகள் இருக்கும்! ஒரு எலெக்ஷன் வந்துவிட்டால், எத்தனை பிளஷர் பறக்கும், எவ்வளவு பணம் குவியும், அந்த ஜோரே ஜோர்! இப்போது ஒன்றுமில்லையே! மகாநாடு பிரசங்கம், பே, என்று இதிலே வந்துவிட்டது, கட்சியிலே ஒன்றுமில்லையே” என்றார். ஜஸ்டிஸ் கட்சி என்றால், கேளிக்கை, விருந்து குஷி இவைகளுக்குச் சந்தர்ப்பம் தரும் சாதனம், என்பது அந்த நண்பரின் நினைப்பு, இன்றைய ஜஸ்டிஸ் கட்சியிலே இவை கிடையாது, ஆகவே, அவருக்கு ஜஸ்டிஸ் கட்சி போய்விட்டது என்று தோன்றுகிறது, துயருறுகிறார்.

ஜஸ்டிஸ் கட்சியின் மூலம், யாரார் எதை எதைப் பலனாகப் பெறமுடியும் என்று எண்ணுகிறார்களோ, அவர்கள் யாவருக்கும், இன்று, ஜஸ்டிஸ் கட்சி ஒரு வேலையும் செய்யவில்லை என்றே தோன்றும்! ஜஸ்டிஸ் கட்சி ஒரு வேலையும் செய்யவில்லை என்று அவர்கள் கூறுவதிலே புதைந்துள்ள பொருள், ‘எனக்கு இலாபந்தரக் கூடிய ஒரு வேலையையும் ஜஸ்டிஸ் கட்சி செய்யக் காணோமே’ என்பதுதான். சுகபோகத்துக்காக ஜஸ்டிஸ் கட்சியின் விசுவாசிகளாக இருப்பவர்களுக்கு இன்று ஜஸ்டிஸ் கட்சியிலே ‘சுவை’ நிச்சயம் இருக்காது. ஆனால் ஒரு கட்சியின் ஜீவ சக்தி அத்தகைய சுகபோகிகளின் ஆதரவினால் வளர்வதல்ல. சிலருடைய உழைப்பும் உறுதியும், இரத்தமும் கண்ணீரும் வியர்வையுமே, ஒரு கட்சிக்கு ஜீவசக்தி தரும் அந்தப் பணியில் ஈடுபடும் பேர்வழிகள் ஜஸ்டிஸ் கட்சியிலே இருக்கிறார்கள், அவர்கள்தான், ஜஸ்டிஸ் கட்சி, சுகபோகத்துக்காக ஜஸ்டிஸ் கட்சியை விசுவாசிக்கும் அன்பர் குழாத்துக்குப் பலன் அளிக்கும் விதத்திலே, ஜஸ்டிஸ் கட்சி வேலை செய்வதைவிட, வேலை செய்யாதிருப்பது மேல் என்று கருதுகின்றனர்.

‘அந்தக் காலத்திலே சார்! பனகலைப்போய்ப் பார்த்து, ஒரு மகாநாடு போடப்போகிறோம் என்று சொன்னால் போதும், உடனே அவர், சந்தோஷப்பட்டு, செக்புக்கிலே ஒரு ஏடு கிழித்து, இதைச் செலவுக்கு வைத்துக்கொள்ளப்பா என்று சொல்லுவார்! இப்போது எங்கே நடக்கிறது! பெரியாரிடம் சொன்னால், சரி, தேதியைத் தெரிவியுங்கள் வருகிறேன் என்று சொல்கிறாரே தவிர, ஆதரிக்கவில்லையே’ என்று குறை கூறும் சிலர் எனக்குத் தெரியும். நான், அவர்களை ஆமோதித்து விட்டு, வாயைக் கிளறிப் பார்ப்பது வழக்கம். கிளறினால் வருமே, பனகலின் பணம் மாநாட்டுக்குச் செலவாயிற்றா, இந்தக் கட்சி அபிமானியின் களிப்புக்கும் கூத்துக்கும் செலவாயிற்றா என்ற உண்மை.

“திண்டுக்கல்லிலே மாநாடு போட வேண்டுமென்று சொன்னோம். சரி என்றார், செக் கொடுத்தார், மாற்றினோம். நேரே மதுரைக்குப் போனோம். அங்கே நமது கட்சிக்காரரைப் பார்த்துவிட்டு, ஒரு வாரம் தங்கினோம். அடடா! எவ்வளவு ஜோர் தெரியுமா! ஒரே சீட்டாட்டந்தான். இராத்திரியிலே ரசபானம்! செக்தொகை காலியாகிவிட்டது. பார்த்தோம், உடனே ஒரு கமிட்டி போட்டு, பனகல் சொன்னார் பணம் திரட்டச் சொல்லி என்று, இரண்டு நாள் மதுரையிலே வசூல் செய்தோம், பணத்துக்கு என்ன பஞ்சமா? காண்டிராக்ட் கட்டாயம் வாங்கித் தருகிறோம் என்று சொன்னோம். பணம் கிடைத்தது. பிறகு ஒரு ஜெமின்தாரிடம் போனோம், மகாநாட்டுக்கான சாப்பாட்டு வசதிகளை உங்களைத்தான் செய்யும்படி, ராஜா சொன்னார் என்றோம், அவர் போட்டார் பெரிய கொட்டகை, ஜாம் ஜாமென்று சமையல், பாரேன் மாநாடு பல ஜோர்!” - இது தான், ஜஸ்டிஸ் கட்சி நன்றாக வேலை செய்த காலம் என்று கூறிக்கசியுந் தோழர்களின் நினைவுகள்! பாவம்! இன்று மாநாடு என்றால், சொற்பொழிவுடன் முடிகிறது - அவர்கள் விரும்புவது, பலரசங்கள் - அதற்கு இடமளிக்காத கட்சியும் ஒரு கட்சியா, என்று கதறுகிறார்கள்.

“கட்சியின் நிலை கிடக்கட்டுமய்யா, நீர் அதற்காகச் செய்த வேலை என்ன, இப்போது செய்யும் காரியம் என்ன, அதைக்கூறுமே” என்று கேட்டுப்பாருங்கள் அந்தத் தோழர்களை. ‘இதுதானே உங்கள் துடுக்குத்தனம், நான் வேலை செய்கிறேன், இல்லை, அதைப்பற்றிப்பேசாதே. கட்சி ஏன் மந்தமாகி விட்டது’ என்று கேட்பர். தனித்தனியாக ஆட்கள், தத்தம் சுகபோகம் கட்சியிலே கிடைக்கவில்லை என்று குறை கூறிக்கொண்டு, கட்சிக்காக ஒரு சிறு காரியமும் செய்யாதிருந்தால் அவர்களின் இயல்புக்கு அகராதி என்ன பதத்தைத் தருகிறது என்று தேடாமல் இருக்க முடியுமா கூறுங்கள்!

ஆளும் சந்தர்ப்பங்கள் ஏற்படும்போது, ஜஸ்டிஸ் கட்சியிலே சந்தடியும் சந்தோஷமும், இருந்துவிட்டு, காரியம் முடிந்ததும், கடுகடுத்த முகமும் கல்லறைக்காதையும், கட்சிக்காகவா இதை எனக்குத் தந்தார்கள், என் திறமைக்காக என்ற வறட்டுப் பேச்சும், வரசித்தி விநாயகரின் தயவு, சர்வசக்தி தாயத்தின் மகிமை, இளையராஜாவின் தயவு இன்னாரின் சிபார்சு என்று கட்சி தவிர மற்ற எதை எதையோ காரணமாகக் காட்டுவதுதானே பலரின் பண்பாகிவிட்டது. இதைக் கட்சித் தொண்டர்கள் கண்டு கசிந்து கண்ணீர் பெருக்கின வெள்ளத்திலேதான் நாம் இன்று மிதக்கிறோம். இந்நிலை வந்ததன் காரணம் என்ன? எப்படியோ கட்சிக்கு உயிர் இருக்க வேண்டுமானால், பதவிகளைப் பிடித்துப் பலருக்குப் பலதானம் தரவேண்டும் என்ற பித்த முதிர்ச்சியல்லவா! ஜஸ்டிஸ் கட்சித் தளபதிகள், பலர்! அவர்களுக்கும் கட்சிக்கும் உள்ள தொடர்புகளின் ரகம், பலப்பல! அவர்களிலே நீறு பூசிகள், நாமதாரிகள், உண்டு. அவர்களிலே யாரை எந்தப் பதவியில் அமரும்படி செய்தால், எந்தவிதமான பலன் தமிழருக்குக் கிடைக்கும் என்று நிச்சயமாகக் கூறமுடியாது! எத்தனையோ முறை நமது கட்சியினர் ‘இவரா இப்படிச் செய்தார்?’ என்று ஆச்சரியமும் ஆயாசமும் கலந்த குரலில் கேட்கும் விதத்திலே, கட்சியால் இடம் பெற்ற தோழர்கள் காரியங்களைச் செய்துள்ளனர். காரணம் என்ன? சர்க்கார், கட்சிக்கும் தனக்கும் நேரான தொடர்பை வைத்துக் கொள்ளாமல் இருப்பதுதான்.

இந்த யுத்த காலத்தைக் கவனியுங்கள். காங்கிரஸ் ஒத்துழைக்க மறுக்கிறது. சர்க்காரின் கடமை என்ன? ஒத்துழைக்கும் ஜஸ்டிஸ் கட்சியிடம் யுத்த ஆதரவுக்கான அலுவல்களை ஒப்படைக்க வேண்டியதுதானே. ஆள் பிடிக்கும் வேலையிலே, சர்க்கார் இறங்கு வானேன்? ஆள் பிடிக்கும் வேலையிலே சர்க்கார் இறங்கினால், எந்த ஏணி, சர்க்கார் மாளிளைகச் சுவரைத் தாண்ட உதவி செய்யும் அளவு உயரமாக இருக்கிறதோ அந்த ஏணியிடம் கும்பல் கூடுகிறது! யார், யாரால் பலன் பெறுகிறார்களோ, அவர்கள் கட்சியைவிட, அந்தத் “தூக்கிவிடுபவர்” தனக்குச் சிலாக்கியமானவர் என்று துதிபாடத் தொடங்குகின்றனர், கட்சியிடமே, அந்த “உரிமைகள்” தரப்பட்டிருக்க வேண்டும். சர்க்கார் அதைச் செய்யாததால்தான், நமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியவைகள், ஏதோ தயவுக்காகக் கிடைப்பது போலக் கிடைக்கின்றன! உரிமையைப் பெற பிச்சைக்கிண்ணி ஏந்த எல்லோரும் சம்மதிப்பதில்லை. இச்சமயம் தவறினால் மறு சமயம் வாய்ப்பதரிது என்ற கருத்துடையோரும், படமுடியாதினித் துயரம் நான் பட்ட தெல்லாம் போதும் என்ற மனப்பான்மையினரும், மேலாடை கீழ் விழ ஓடிச் சென்று, கிடைத்ததை எடுத்துத் தின்று, தமது அரசியல் ஆரோக்கியத்தைப் பாழாக்கிக்கொண்டு, நொந்து போகின்றனர்.

ஜஸ்டிஸ் கட்சிக்குச் சர்க்கார் சலுகைகள் காட்டத் தேவை யில்லை. நியாயமான உரிமைகளை வழங்குவதை மறக்காதிருப்பின், கட்சியின் நிலையே இன்று வேறுவிதமாகி இருக்கும். இன்று கட்சிக்காகக் கண்ணீர் விடும் மெயில் இதுவரை, ஜஸ்டிஸ் கட்சியின் முறையீடுகளைக் கவனித்ததுண்டா? ஜஸ்டிஸ் கட்சிக் கிளர்ச்சிகளை வெளியிட்டதுண்டா? மாநாடுகளையும் பொதுக் கூட்டங்களையும் மக்களறியும்படி, விஷய விளக்கம் செய்ததுண்டா? ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களின் சொற் பொழிவுகளைச் சரியாகப் பிரசுரிக்கிறதா? ஏதோ தயவுக்காகத் தாட்சணியத்துக்காகச் சிற் சிலருக்குச் சில சமயம் இடந் தருகிறதேயல்லாமல், கட்சிக்குக் காட்டவேண்டிய “நீதி” என்ற விதத்திலே மெயில் எப்போதாவது நடந்ததுண்டா? மகாசனங்களின் மனோபீஷ்டங்களும், அல்லாடிகளின் அலுவல்களும், ஆச்சாரியாரின் குட்டிக் கதைகளும், அம்முகளின் அலங்காராதிகளும், அடையாறு விசேஷாதிகளும், மைலாப்பூர் மாண்புகளும், திருவல்லிக்கேணி திருவிழி நோக்குகளும், மாம்பல மான்மீயங்களும், மெயிலுக்கு இனிக்கிறது, இடமிருக்கிறது இவைகளைப்பற்றி எழுத, பெரியார் பேசினால், ஏச என்றைக்காவது எடுத்தாள நினைக்கிறதே ஒழிய, குமாரராஜா பேசினால், சர்க்காரை அவர் ஆதரிக்கிறார் என்ற சந்தனத்தை அவருக்குப்பூச முன் வருகிறதேயொழிய ஒரு முக்கியமான கட்சியின் கருத்துகளைக் கட்சியின் தலைவர்கள் தெரிவிக்கிறார்கள் என்ற முறையிலே, அவைகளைப் பிரசுரித்ததுண்டா? அவ்வளவு உதாசீனம் செய்யும் மெயிலுக்கு இன்று உருக்கம் ஏற்படுவானேன்?

வெள்ளையர் மனப்பான்மை ஒன்றுண்டு. காங்கிரசைக் கண்டிக்க ஜஸ்டிஸ் கட்சி இருக்க வேண்டும், அதற்கு மேல் ஜஸ்டிஸ் கட்சி வேறொன்றும் செய்யக்கூடாது. ஏன்? காங்கிரசைப் பற்றி வெளியுலகம் கேட்கும்போது, இதோ ஜஸ்டிஸ் கட்சி காங்கிரசைக் கண்டிக்கிறது என்று காட்ட மட்டும் ஜஸ்டிஸ் கட்சி பயன்பட வேண்டும். ஆனால், ஜஸ்டிஸ் கட்சி காங்கிரசைக் கண்டிப்பதுடன், சர்க்காரின் போக்கையும் கண்டித்து, உண்மையான உரிமைப்போர் முழக்கமிட்டு, இன எழுச்சிக்கான காரியம் செய்யத் தொடங்கினால், ஜஸ்டிஸ் கட்சியிடம் சர்க்காருக்குக் கோபம்ஜஸ்டிஸ் கட்சி ஆனால் துரைமார்களின் கோபத்தைக்கண்டு, ஜஸ்டிஸ் கட்சி, தன் மூலாதார உரிமைகளை இழக்க முடியுமா!

முஸ்லீம் லீக், இந்தத் துறையிலே தன் நிலையை மிகச் சரியாகப் பக்குவப்படுத்தி விட்டது. அதன் சவுக்கு, காங்கிரசின்மீது, விழுமளவு, சர்க்கார் மீதுந்தான் விழுகிறது. ஆகவேதான், லீக் என்றால், வெள்ளையர் முகம் பயத்தால் வெளுத்துவிடுகிறது. இஸ்லாமிய இனத்தின் கட்டுப்பாடு, லீகின் தலைவருக்கு, ஆயிரம் “இந்து” பத்திரிகைகள், பத்தாயிரம் பஜாஜ் பிர்லாக்கள், பல இலட்சம் ஆச்சாரியார்கள், சேர்ந்து தரக்கூடிய பலத்தை இரண்டாண்டுகளிலே தந்துவிட்டது.. ஜஸ்டிஸ் கட்சி எந்தத் தமிழருக்காக உழைக்கிறதோ, அந்தச் சமுதாயத்திலே, கட்டுப்பாட்டைக் கெடுக்கும் மனப்பான்மையே மதமாக, ஒற்றுமைபெறும் நிலையைக் கெடுப்பதே கலையாக இருக்கிற காரணத்தால், சமுதாயம் இருப்புக் கோட்டையாகவில்லை. இந்தக் குறையைப் போக்கும் மிக முக்கியமான அடிப்படையான காரியத்தையே இன்று ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் செய்து வருகிறார். அதனால்தான், துரைமார் களுக்குத் துயரமும், சுகபோகிகளுக்குச் சலிப்பும், உண்டாகிறது! என் செய்வது, விழலுக்கு நீர் பாய்ச்சுவதைவிடக் கழனியைத் திருத்தி அமைப்பதல்லவா முக்கியம்! அதுதான் இப்போது நடைபெற்று வருகிறது.

ஜனாப் ஜின்னா, சென்னைக்கு வந்திருந்தபோது, அவரைக்காண ஜஸ்டிஸ் கட்சித் தலைவரும், தளபதிகளுமாக இருபத்தி இரண்டு பேர் சென்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் திறமையும் பண்பும் உடையவர்களாக இருப்பது கண்ட ஜனாப் ஜின்னா “இவ்வளவு பெரிய பெரிய தலைவர்கள் இருக்கும் போது, என்ன குறை தமிழருக்கு” என்று கேட்டார். பெரியார் சொன்ன பதில், நமது நெஞ்சைப் பிளக்கக்கூடியது. ஏன் வெற்றி கிடைக்கவில்லை என்று சலித்துக்கொள்வோரின் கண்களைத் திறக்கக்கூடியது. என்ன சொன்னார் பெரியார்? “ஜின்னா அவர்களே தமிழர் சமுதாயத்திலே ஒற்றுமை உண்டாவது சுலபத்திலே முடியாது. நாங்கள் 22 பேரும் ஒரே கட்சியினர். ஆனால், இந்த 22 பேரும் 22 வேறு வேறு பிரிவினர்! ஜாதியிலே!” என்று கூறினார்.

ஜஸ்டிஸ் கட்சி என்ன வேலை செய்கிறது என்று கேலிக்கோ, சலித்தோ கேட்கும் அன்பர்கள், இதைத்தான் யோசித்துப் பார்க்க வேண்டுகிறேன். ஜஸ்டிஸ் கட்சி, துரைமார் மனங் குளிரவோ, சுகபோகிகளின் ஆசை தீரவோ, வேலை செய்வது சரியா, அந்தக் காரியத்தைவிட்டு இன எழுச்சிக்கான காரியத்தைச் செய்வது சரியா என்பதைக் கூறுங்கள்! இந்த இன எழுச்சியை உண்டாக்க, இன்னின்ன பதவிகளைப் பெற்றால்தான் முடியும் என்று யார் கூறுவர்! இதை எவரும் செய்யலாம்! ஆனால் சிலரே செய்கின்றனர்! அந்தச் சிலரையும் நையாண்டி செய்வதே சமூக சேவை என்று “சில சீலர்கள்” எண்ணுகின்றனர். கடமையைச் செய்யும் எவனும், கடமை உணராதானின் கபட எண்ணம், தன் கால் மண்ணுக்குச் சமம் என்றே கருதுவான், கடனாற்றுவான், பணியாற்றுவான். அந்தப் படைக்கு இப்போது ஆட்கள் வேண்டும். நீர் சேரத்தயாரா! அந்தப் படையினருக்குப் புத்துலகக் கவி, பாரதிதாசன் இதோ இப்பாடலை தருகிறார்.

“தாயின்மேல் ஆணை
தந்தைமேல் ஆணை
தமிழகமேல் ஆணை
தூய என்தமிழ்மேல்
ஆணையிட்டே நான்
தோழரே உரைக்கின்றேன்.
நாயினும் கீழாய்
செந்தமிழ் நாட்டார்
நலிவதை நான் கண்டும்
ஓயுதல் இன்றி
அவர்நலம் எண்ணி
உழைத்திட நான் தவறேன்”

ஆம்! நாயினும் கீழாய் நலியும் செந்தமிழ் நாட்டாருக்கு விடுதலை, நாலாறு பேருக்கு நல்ல பதவிகளும், பத்தாறு பேருக்குப் பானக வாழ்வும் கிடைக்கும் விதமாக ஒரு கட்சியை நடத்திச் செல்வதால் கிடைக்காது. இன எழுச்சியே அதற்கு வழி! அதைச் செய்ய அதிகார பீட அலங்காரங்கள் தேவையில்லை. தாலமுத்துகளும் நடராஜன்களும், தலையும் வயிறும் காய்ந்திருந்தாலும், இன மானமும் உரிமை ஞானமும் காயாது உள்ளம் கள்ளச்சிந்தனையின்றி உள்ள வாலிபர்களும் வேண்டும். அவர்களுக்கே, பாரதிதாசன் மனோலயத்திலே அக்கீதம் அமைத்தார்.

4.4.1943