அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அந்த மந்திரம் அறியேன்!

ஒரு மாதத்தில் ‘திராவிட நாடு‘ பெற்றுத் தருவேன் என்ற கருத்துப்பட, நான் சேலம் மாநாட்டிலே பேசியதாக ‘தினத்தந்தி‘ தெரிவித்திருக்கிறது! மந்திரக்கோல் கொண்டவன் பேசுவது போல இருக்கிறது. அந்தப் பேச்சு! நான் அந்த மந்திரம் அறியேன், ஒரு மாதத்தில் திராவிடநாடு பெற்றுத்தர இயலும் என்று நான் கூறவில்லை – நிருபர், எப்படி இந்த விசித்திரமான பேச்சைத் தயாரித்தாரோ, தெரியவில்லை!

‘திராவிட நாடு‘ – மந்திரத்தில் முளையும் மாஞ்செடி அல்ல!!

இன எழுச்சி, குறிப்பிடத்தக்க அளவு ஏற்பட்டு, விடுதலைப்போரின் பல கட்டங்களையும் சமாளிக்கும் வலிவு கிடைத்து, தியாகம் பல செய்து பெறவேண்டிய திருநாடு! - இதை ஒரு மாதத்தில் பெற்றுத் தருவதாக நான் பேசினதாக வெளியிடுவது, என்னையல்ல, திராவிட நாடு பிரச்சினையைக் கேலி செய்வதாகும். அதனாலேயே, நான், அந்தச் செய்தி கண்டு வருத்தப்பட்டேன்.

தி.மு.கழக ஏடுகளிலே வெளிவந்தாலொழிய, இத்தகைய செய்திகளை, நம்பமாட்டார்கள் தோழர்கள் என்பதை நான் நன்கு அறிவேன், எனினும் பொதுமக்கள், இப்படியும் நான் பேசினேனோ என்று எண்ணிவிடப் போகிறார்கள் என்பதை எண்ணியே, இந்த விளக்கம் வெளியிட்டேன். செய்திகள் வளரட்டும்! வதந்திகள் குறையட்டும்!

அன்பன்
அண்ணாதுரை

திராவிட நாடு – 9-5-54