அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அந்த நாளில்!
ஆட்டவாவிலே, நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார் பிரிட்டிஷாரின் குலமாக இருநது நாட்டுக்குத் துரோகம் செய்துவிட்டார் நாட்டைக் கெடுத்த சண்முகத்துக்கு ஓட்டளிக்காதீர் என்று ஆரியர் ஆரப்பரித்து, அறிஞர் சர்.ஆர்.கே.சண்முகம் அவர்கள் மீதும் சீறிப் பாய்ந்தது சில ஆண்டுகளுக்கு முன்பு.

இந்திய சர்க்காரின் பிதிநிதியாக, கனடா நாட்டிலே ஆட்டவா என்ற நகரிலே நடைபெற்ற மாநாட்டுக்குச் சென்றிருந்தார். பொருளாதார நிபுனரும் அரசியல் அறிஞரும் சுயமரியாதைத் தலைவருமான சர்.ஆர்.கே.சண்முகம் சுற்றிலும் ஆரியம்! எங்கம் ஆரியப் பத்திரிகைகள்! ஆரியத்தின் ஆட்சி! இதனிடையே உலவினார் சர். சண்முனம். தமது திறமையால் எதிர்ப்புகளை முறியடித்தார், திராவிடனுக்குத் தக்கதோர் பணிபுரியத் தெரியுமென்பதை ஆரியருட்படச் சகலரும தெரிந்து கொள்ளுமாறு வேலைசெய்தார், வெற்றிபெற்றார். இதைக்கண்ட ஆரியத்தின் குலை நடங்காதிருக்குமோ! சர்.சண்முகத்தைச் சாய்க்காமல் தூங்குவதில்லை என்று சபதமிட்டது, சல்லடம் கட்டிக்கொண்டு வெளிப்பட்டது, மேடை அதிரப் பெசிற்று, பத்திரிகைகள் வழிய எழுதிற்று, சர்.சண்முகத்தைக் கண்டித்து.

பொருளாதாரத் துறையில் சர்.சண்முகத்தின் போக்கு நாட்டுக்குக் கேடு பயக்கக் கூடியது என்று பேசியவர்களுக்கு, மாநாடு வடிய இடத்தின் பெயர் ஆட்டவா, என்ற சரியாக உச்சரிக்கவும் தெரியாது. ஓட்டாவா என்று உளறினர். அந்த உளறலால் ஊரை ஏய்க்கவும் முடிந்தது. தற்குறித்தனம் அதிகம் உள்ள இந்நாட்டிலே, மக்கள் உரத்த குரலோரின் உளறலால், ஏமாறுவது சகஜம். சர்.சண்முகத்தின் எதிரிகள் வெற்றி பெற்றதும சகஜமே!

ஆட்டவா, போல இதுபோது ஓர் மாநாடு கூட இருக்கிறது. அமெரிக்கக் குடியரசாட்சித் தலைவர், ரூஸ்வல்ட் வாஷிங்டன் நகரிலே உலக நாணயத் திட்ட மாநாடு கூட்டுகிறார். இதற்குச் சர்.சண்முகமும், ஷராப் என்ற பிரமுகரும், பிரதிநிதிகளாகச் செல்கின்றனர். போருக்குப் பிறகு உலகில் பல்வேறு நாடுகளிலே, பொருறாதாரத் திட்டம், குறிப்பக நாணயச் செலாவணித் திட்டம், எவ்வாறு இருத்தல் வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான பொறுப்பு, இம்மாநாட்டிலே உளது. இதற்குத் தகுதி வாய்ந்தவரே சர்.சண்முகம் ஆனால் என்ன இருந்தாலும் அவர் ஐயரல்லவே!! எனவே ஆரியத்திற்குக் கசப்பகத்தான் இருக்கும், பொறாமையைக் கக்கித்தான் தீரும், பொச்சரிப்பைக் காட்டிக் கொள்ளாதிருக்க முடியாது.

இதனை நன்கறிந்த சர்.சண்முகம் கோவையிலே சென்ற கிழமை பேசுகையிலே, அந்நாளிலே ஆட்டவாவிலே நான், நாட்டுக்குக் கேடு செய்தேன் என்று நாப்பறை அறைந்தனர். அதனை எண்ணும்போது, மறுபடியும் ஒரு மாநாட்டுக்குச் செல்லவேண்டி இருக்கிறதே. என்னென்ன பழிச்சொல் வருமோ என்று எண்ணி நடுங்கவேண்டி இருக்கிறது. நல்ல வேளையாக, நிபுணர் ஷராப் அவர்கள் உடன் வருகிறார் என்று கூறினார். ஆரியத்திடம் திராவிடத் திருமகனார்கள் எவ்வளவு அஞ்சவேண்டி இருக்கிறது என்பதற்குச் சர்.சண்முகத்தின் பேச்சு சரியானதோர் எடுத்துக்காட்டாகும்.

நாட்டுக்கு உகந்தது என்ற பட்டதை நான் செய்வேன், நிந்தனை, நாவாணிபரின் தூற்றல் ஆகியவற்றைப் பொருட்படுத்தப் போவதில்லை என்று வீரமுழக்கம் புரிந்தார், வியாபார வேந்தர் சர்.சண்முகம். திராவிடப் பண்பு அச்சொல்லிலே மிளிரக் காண்கிறோம். அச்சம், தயை தாட்சணியம் என்பவைகளைப் பொருட்படுத்துவோரால் அணுவளவும் நற்காரியம் புரிய முடியாது. புகழ்தேடித் தொண்டு புரியப் புறப்படுவது மலர்தேடி மலையுச்சி ஏறுவதை ஒக்கும். கடமையைச் செய்கையிலே கை குலுக்குவோர் எதிர்ப்படினம் சரியே கட்கத்தால் மார்பினைப் பிளந்திட வரும் மாற்றார் எதிர்ப்படினும் சரியே, கலங்கலாகாது என்பது சர்.சண்முகத்துக்குத் தெரியும். ஆட்டவா மாநாட்டுச சமயத்திலே ஆரியம் அவரை நாக்கிலே நரம்பின்றிக் கண்டித்தபோது, அவர் நிலை குலையாது நின்றார்.

இதுபோது அவர் ஆற்றவேண்டிய கடமையும் அவர் அறிந்ததே இந்தப் போரின் பயனாக, இரத்தமும வியர்வையும் சிந்தி, இராப்பட்டினி பகல்பட்டினி கிடந்து, இந்த உபகண்டத்துககு மக்கள் உழைத்ததன் பலனாகச் சுமார் 1500 கோடி ரூபாய் பிரிட்டன், இந்தியாவுக்குத் தரவேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. பிரிட்டன் இந்தியாவின் கடன்கார நாடாக இருப்பதா என்ற எண்ணம், பல பிரிட்டிஷாருக்குக் கவலையையும் சிலருக்குத் துவேஷத்தையும் உண்டாக்கிவிட்டது. கீன்ஸ் பிரபுபோன்ற பிரிட்டிஷ் பொருளாதார நிபுணர்கன் பேச்சிலே பொச்செரிப்புக் காணப்படுகிறது. வாஷிங்டனில் கூட இருக்கும் மாநாட்டிலே, இந்தக் கடன் எந்த விதத்திலே பைசல் செய்யப் படவேண்டும் என்பது பற்றிய பிரச்சனை பேசப்படும். இதுகுறித்து முன்போர் முறைநாம எழுதுகையிலே, நாட்டுத் தொழில் வளத்தைப் பெருக்கக்கூடிய இயந்திர சாதனைகளைப் பெற இப்பெருந்தொகையைப் பயன்படுத்த வேண்டும், வெறும்போகப் பொருள்கள் பெறுவதற்கு இதனைச் செலவிடுதல் நாட்டின் எதிர்காலத்தை மிகவும் பாதிக்கும் என்று எடுததுக்காட்டினோம். பாரிஸ் பவுடரும், மான்செஸ்டர், மஸ்லீனும், ஈஜிப்ட் சுட்டும் இலண்டன் சரக்குகளும் பெறுவதற்கு. பிரிட்டம், இந்தியாவுக்குத் தரவேண்டிய கடனைச் செலவிட்டால், மகத்தான கேடுதான். எனவே பிரிட்டன் இந்தியாவுக்குச் சேர வேண்டிய 1500 கோடி ரூபாய்க்கும், உயர்தரமான, தொழில் வளத்தைத் தரக்கூடிய இயந்திர சாதனங்களும் விஞ்ஞானப் பொருள்களும் பெற வேண்டும். இதற்கான முறையைச் சர்.சண்முகம், வாஷிங்டனில் எடுத்துரைக்க வேண்டும். அது மட்டும போதாது! எங்ஙனம், உலக அமைப்லே ஒரு நாடு தொழில் வளத்திலே மிக மிக முன்னேறி மற்ற நாடுகள் முன்னேறாதிருப்பது கஷ்ட நஷ்டம் தருகிறதோ, அது போலவே உபகண்டமாகிய இந்தியாவை, ஒரே நாடு என்ற பித்தலாட்டமாகப் பேசிக் கொண்டு, வடநாடு வளமாகிக் கொண்டே வரவும் தென்பகுதி அதன் மார்க்கெட்டாகவுமான நிலைமை இன்று இருக்கிறதே இது ஒழியவேண்டும். திராவிடத்தின் இயற்கை வளமும் தொழில் திறமும், மாற்றாந்தாயிடம் சிக்கிய மக்கள் போன்று இருத்தறைச் சர்.சண்முகம், அறியாதவரல்லர் அந்த நெஞ்சுநோகும் நிலையை, உணர்ந்து, இந்தியாவிலே தொழில் வள்ரச்சிக்கான திட்டங்கள் தயாரிக்கப்படும்போது, திராவிட நாட்டின் தனி நிலையை நன்கு கவனித்து, இங்க தொழில் வளம் பெருக வழிவகை செய்யவேண்டும். இதனைச் சர்.சண்முகம் செய்யாது இருப்பின், வேறு யார் இருககிறார்கள் செய்திட! வாஷிங்கனில் சர்.சண்முகம், வாடிக்கிடக்கும் திராவிட இனத்தின் விடுதலைக்கான விதத்திலே நடந்துகொள்ள வேண்டுகிறோம். ஆரியர் எதிர்க்கத்தான் செய்வார்கள். குள்ளநரிச்செயல் புரியும் கூட்டத்தின் கூற்றமென விளங்கும் ஆற்றல் உண்டு சர்.சண்முகத்துக்கு. அவர் ஆரியத்தின் அடிவருடிய கம்பனின் இராமாயணத்தை ஆதரிக்கிறாரே! கஸ்தூரிபாய் நிதிக்குப் பணம் தருகிறாரே, என்பதற்காக ஆரியம் அவரை வாயாரப் புகழுமே தவிர, மனமார எண்ணுவது வேறு விதமாகத்தான் இருக்க முடியும்! சமயம் பார்த்துச சாய்க்க வேண்டும் என்றே ஆரியம் இருக்கும். ஆனால் அந்த நாளிலே எங்ஙனம் ஆரியம் அவரை எதிர்த்தபோது, சுயமரியாதை இயக்கம் சர்.சண்முகத்தின் பக்கநின்று பணிபுரிந்து ஆரியத்தின் கொட்டத்தைத் தாக்கிட உதவிற்றோ அதுபோலவே இன்றும் இருக்கும் என்பதைச் சர்.சண்முகம் அறிய வேண்டுகிறோம்.

சர்.சண்முகம் வேண்டுமானால் வேதியர் புகழும், ஆரியர் மகிழும், இராமாயணத்தைத் தாங்கவும், திராவிடத்தை அழிக்கும் தருக்கருக்கு உதவிடும் காங்கிரசுக்குக் கஸ்தூரிபாய் நிதி என்ற பெயரால் திரட்டப்படும் நிதிக்குத் துணைபுரியவும் முற்படுவாரே திரத் தன்மான இயக்கத் தோழர்கள் மட்டும, என்றும், சர்.சண்முகத்தை மட்டுமல்ல, வேறு எந்தத் திராவிடர் மீதும் ஆரியம் போர் தொடுத்தால், திராவிடரின் படையாகவே நிற்கும். இது தன்மானத் தோழர்களின் தளராப்பண்பு திராவிட இன எழுச்சியின் மாண்பு!

வாஷிங்டன் சென்று, வாகை சூடித் திரும்புக என்று வாயார மனமார நாம் சர்.சண்முகத்திற்குக் கூறுகிறோம்.

(திராவிடநாடு - 18.06.1964)